காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ போளூர் வரதன் நேற்று (27.01.2011) காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் போளூர் வரதன்(58). சென் னை அடையாறு காந்தி நகரில் வசித்தார். கடந்த சில நாட்களாக அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தது. இதையடுத்து, சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று (27.01.2011) காலை போளூர் வரதனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
போளூர் வரதன் விவசாய குடும்பத்தில் பிறந்து, வக்கீல் படிப்பை முடித்துள்ளார். மூன்று முறை எம்எல்ஏவாக பதவி வகித்தவர். இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்கரிகாத்தூர். இவருக்கு மனைவி, ராஜு என்ற மகன் உள்ளனர். ராஜு, இளைஞர் காங்கிரசில் பொறுப்பில் உள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் மாநில பொதுச்செயலாளர், இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரசில் தலைவர் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவு தலைவராகவும் பதவி வகித்தவர் வரதன். அவரது உடல் காந்தி நகரில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டா லின் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது மகன் மற்றும் மனைவி பிரேமாவுக்கு ஆறுதல் கூறினர். அதை தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, கோ.சி.மணி, துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, தமிழரசி, மதிவாணன் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கார்த்தி சிதம்பரம், எம்எல்ஏ அருள் அன்பரசு மற்றும் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். இறுதி சடங்கு இன்று (28.01.2011) காலை பெசன்ட் நகர் மயானத்தில் நடக்கிறது.
No comments:
Post a Comment