கொள்கை முடிவை எடுக்கும்பொழுது இழப்பைப்பற்றி பேசவேண்டியதில்லை. நாம் சுவாசிக்கும் காற்றை நாள் ஒன்றுக்கு தலைக்கு ஒரு ரூபாய் என்று வரி விதித்தால், ஆண்டு ஒன்றுக்கு ரூ.36,500 கோடி கிடைத்திருக்கும்; அவ்வாறு செய்யாததால், அந்தத் தொகை நட்டம் என்று கூட சொல்லுவார்களோ என்ற கேள்வியை இணைய தளத்தில் எழுப்பியவரின் ஆதாரத்தை எடுத்துக்காட்டியும், எக்னாமிக் டைம்ஸ் ஏட்டில் வெளிவந்த கட்டுரையை எடுத்துக்காட்டியும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தொலைத்தொடர்புத் துறையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சம்பந்தமாக, தி.மு.க.வைச் சேர்ந்த (முன்னாள்) அமைச்சர் ஆ.இராசா அவர்கள்மீது எதிர்க்கட்சிகளால் சுமத்தப்பட்ட குற்றச்சாற்றுகள் ஒவ்வொன்றும் ஆதாரமற்றவை; அரசியல் நோக்கம் கொண்டவை என்பது ஒவ்வொரு நாளும் வெளியாகும் பல உண்மைகள்மூலம் அம்பலமாகி வருகின்றன.
தந்தை பெரியார் அன்றே சொன்னார்
1971 இல் நடந்த தேர்தலின்போது இப்படி ஊழல், ஊழல் என்றே தி.மு.க. மீது பழி சுமத்தி அது வெற்றி பெறாமல் செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள்பற்றி, தந்தை பெரியார் அவர்கள் தொலைநோக்கோடு ஒன்றைக் குறிப்பிட்டார்கள்.
தி.மு.க. மீது பார்ப்பனர்களாலும், பார்ப்பனப் பத்திரிகைகளாலும் திட்டமிட்டுப் பழி தூற்றப்பட்டு வருகின்றது. மலைபோல வரும் இவை பனிபோல் கரைந்து ஒன்றுமில்லாததாகும் என்று சொன்னார்.
இன்றும் (2011 இலும்) அது பொருந்துகிறது. இப்போது பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வருகின்றன.
பிரணாப் முகர்ஜியின் கருத்து
மேற்கு வங்கத்தில் பேசிய, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் இரண்டு முக்கிய கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளார். பிரதமருக்கு அடுத்தபடி முக்கியத்துவம் வாய்ந்தவர் அவர். சுமார் 15, 16 குழுக்களின் (ஊடிஅஅவைவநந) தலைவராக இருந்து மத்திய அரசை வழிநடத்துபவர். நாடாளுமன்றத்தின் அவை முன்னவராக உள்ளவர். நீண்ட நாள் அனுபவம் வாய்ந்த நாடாளுமன்றவாதியாவார்.
1. பிரதமர் எங்களைக் கலந்தாலோசிக்காமலேயே அவரே முன்வந்து, பொதுக்கணக்குக் குழு (ஞஹஊ) முன் தான் ஆஜராகத் தயார் என்று கூறிவிட்டார்; அது தேவையற்றது. பிரதமர் என்பவர் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே பதில் கூறக் கடமைப்பட்டவர். ஜே.பி.சி. என்ற நாடாளுமன்றக் கூட்டுக் குழு பற்றி நாடாளுமன்ற சட்ட விதிகளில் எதுவுமே இல்லை. எனவே, அந்தக் கோரிக்கை அர்த்தமற்றது. (அதற்கு தண்டிக்கும் அதிகாரம் - சுப்ரீம் கோர்ட்போல ஏதும் இல்லாதபோது, வீண் பிரச்சாரத்திற்காகவே அப்படி கேட்கப்படுகிறது என்று முன்பும் குறிப்பிட்டுள்ளார்).
2. அமைச்சர் ஆ. இராசா அவர்கள் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கவில்லை; எந்தத் தவறையும் செய்யவில்லை. அவர் முந்தைய பா.ஜ.க. வகுத்த முடிவினைத்தான் செயல்படுத்தியுள்ளார். கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு பா.ஜ.க. கல்லெறியக் கூடாது என்று பிரணாப் முகர்ஜி மிகச் சரியாகக் கூறியுள்ளார்.
தலையிருக்க வால் ஆடுவதா?
தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ்காரர்களில் சிலர் - விளம்பரந் தேடிடுவோர் தலையிருக்க வால் ஆடுவதைப்போல, தேவையற்று தி.மு.க. மீது பழி தூற்றுவது, தி.மு.க.வுடன் கூட்டணியே கூடாது என்று அதிகப் பிரசங்கம் செய்வதை நிறுத்திக் கொள்ளவேண்டும். இதனால் காங்கிரஸ் கட்சிக்கும், தலைமைக்கும்தான் கெட்ட பெயரை அத்தகையவர்கள் உருவாக்குகிறார்கள் என்பது பொதுநிலைப் பார்வையாளர்கள் கருத்தாகும்.
தி.க., தி.மு.க. போன்ற மேடைகளில் நடைபெறும் உண்மை விளக்கப் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளின்மூலம் மலைபோல் வைக்கப்பட்ட குற்றச்சாற்றுகள், சொல்லப்பட்ட பழிகள் பனிபோல் கரையத் தொடங்கிவிட்டன!
இணையத்தில் வெளிவந்த தகவல்கள்
பல்வேறு தகவல்களைப் பதிப்பித்துவருபவரும், அமெரிக்காவிலிருந்து திரும்பிய வருமான பத்ரிசேஷாத்ரி என்பவர் (பார்ப்பனர்தான்). இணையத்தில் அவர் எழுதியுள்ள பல தகவல்கள் - உண்மைகள் நிச்சயம் வெளியாகும், பொய்கள் தானே பொசுங்கும் என்பதை நிரூபிப்பதற்கு மற்றொரு உதாரணம் ஆகும். (இதற்காக அவரையும் தாக்கப் புறப்பட்டுள்ளார்கள்).
அதில் ஒரு பகுதி இதோ:
ஏன் இந்த 2ஜி அலைப் பரவலை வெறும் கட்டணத் துக்கு விற்றார்கள்? ஏன் ஏலத்துக்கு விடவில்லை?
இதற்கான பதிலை அமைச்சர் ஆ.இராசா தெளி வாகவே சொல்லியிருக்கிறார். ஆரம்பத்தில் (1991, 1992) 2ஜி உரிமத்துக்கு என்று அதிகமான உரிமத் தொகை வசூலிக்கப்பட்டது. பிறகு இது வருமானத்தில் ஒரு பங்கு என்று மாற்றப்பட்டது.
யுனிவர்சல் லைசென்ஸ் என்ற பெயரில் உரிமம் பெற ஒரு குறிப்பிட்ட கட்டணம் மட்டுமே கட்டவேண்டியி ருந்தது. இது கடந்த சில வருடங்களாக இருந்து வருவது. இதில் அமைச்சர் இராசா வந்து ஏதோ குழப்படி செய்து, அரசு வருமானத்தைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கினார் என்பது அபத்தமான பொய்.
ஒரு கொள்கை என்று இருந்தால், அதன்படித்தான், செயல்பட முடியும். கொள்கையை நடுநடுவே மாற்றினால், முன்னால் வந்தவர்களுக்கு வசதியாகவும், பின்னால் வருபவர்களுக்குக் கஷ்டமாகவும் ஆகிவிடலாம் அல்லவா?
மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.இராசாமீது அநியாயமான தாக்குதல்கள்!
...சும்மாவாவது அடிஅடி என்று ஒருவரைப் போட்டு அடிப்பது நியாயமல்ல.
...அவர் தவறு செய்தார் என்பதற்கு வலுவான சாட்சியங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையே!
கொள்கை முடிவு எடுக்கும்போது இழப்பைப்பற்றி பேசவேண்டியதில்லை. பெட்ரோல் மானியத்திலும், உர மானியத்திலும் பல கோடி ரூபாய்களை இழக்கிறது அரசு. அது விரும்பி இழக்கப்படும் தொகை.
செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு ஏலம் இல்லாமல், குறிப்பிட்ட கட்டணத்துக்கு ஸ்பெக்ட்ரம் அளிக்கப்படும் என்று அரசு முடிவு எடுத்தால், அதனால் ஏற்படுவதை இழப்பு என்று சொல்லக் கூடாது. அதனால்தான் இன்று இந்தியாவில் செல்ஃபோன் கட்டணம் இவ்வளவு குறைவாக உள்ளது. எண்ணற்ற ஏழை மக்கள் பயன் அடைகிறார்கள் (பணக்காரர்கள் பெரிதாக ஒன்றும் பயன் பெறுவதில்லை).
டாரிஃப் குறைந்தால் அதன் பயன் ஏழைகளுக்கு அதிகம் சென்றடையும். இத்தனை ஸ்பெக்ட்ரத்தையும் ஏலம் விடாமல், 1,76,000 கோடி ரூபாய் அரசுக்குக் கிடைக்கும் என்று கணக்கீட்டாளர் ஒருவர் கணக்கிட்டால், அதையும் நம்புகிறீர்களே!
சுவாசிக்கும் காற்றுக்குக்கூட விலை பேசுவார்களோ!
நாம் சுவாசிக்கும் காற்றை நாள் ஒன்றுக்கு தலைக்கு ஒரு ரூபாய் என்று வரி விதித்தால், அரசு சம்பாதிக்கும் தொகை நாள் ஒன்றுக்கு ரூ.100 கோடி; ஆண்டுக்கு 36,500 கோடி ரூபாய். அதை இலவசமாகக் கொடுத்து, அத்தனை கோடி ரூபாயை இழந்த பிரதமர் மன்மோகன்சிங் ஊழல்காரர் என்றும் அடுத்து சொல் வார்களோ என்று கூறியுள்ளார்.
- இவர் மட்டுமல்ல, நடுநிலையாளர்கள் பலரும் கூறுகின்றனர்.
எகனாமிக் டைம்ஸின் குற்றச்சாற்று
எகனாமிக் டைம்ஸ் நாளேட்டில், சென்ற டிசம்பர் 4 ஆம் தேதி (ஒரு மாதம் முன்பே) அன்று ரிசர்வ் வங்கியினால் நடத்தப் பெறும் அய்.அய்.எம். (I.I.M) Chair Professor வி. ரங்கநாதன் என்பவர் எழுதிய கட்டுரையில், அமைச்சர் ஆ.இராசாமீது பழி தூற்றுவது அபாண்டம் என்று விளக்கி ஒரு பெரிய கட்டுரையே எழுதியுள்ளார்!
ஆடிட்டர் கணக்குத் தணிக்கை அறிக்கை என்பது திட்டமிட்டே - ஆ.இராசாமீது பழி போடவே தயாரிக்கப் பட்டதோ என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. இல்லை யானால், நாளேடுகளில் வருவது மாதிரி பெட்டிச் செய்தி (Box) அயிட்டங்களாக அவர் பிரித்துப் போட்டிருப்பாரா? வேறு எந்த ஒரு தணிக்கை அதிகாரியும் இப்படிச் செய்ததாக வரலாறே இல்லை!
மேலும் உண்மைகள் விரைவில் வெளியாகும்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
03.01.2011
No comments:
Post a Comment