
தமிழகத்துக்கு வெள்ள நிவாரணமாக ரூ.1,832 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று மாநில நிதியமைச்சர் க.அன்பழகன் வலியுறுத்தினார்.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக மாநில நிதியமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் டில்லியில் புதன்கிழமை (19.01.2011) நடை பெற்றது. இந்த மாநாட்டில் தமிழக நிதியமைச்சர் க.அன்பழகன் பேசியதாவது: தமிழகத்தில் அண்மையில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பலத்த பொருள் சேதமும், உயிர்ச் சேதமும் ஏற்பட்டது.
மாநில அரசு உடனடியாக வெள்ள நிவாரணம், மறுவாழ்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசிடம் ரூ.1,832 கோடி நிவாரண நிதி கோரி தமிழக அரசு பரிந்துரை அனுப்பியது. மத்தியக் குழுவினர் வந்து வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு அறிக்கை அளித்துள்ளனர்.
வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். அதேபோல், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளைத் தடுப்பதற்கு சிறப்பு திட்டம் ஒன்றைத் தமிழக அரசு உருவாக்கி வருகிறது. இந்த திட்டத்துக்கும் மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்.
இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் ஏழைகள் அனைவருக்கும் வீடு கட்டித்தர பல ஆண்டுகள் ஆகும். எனவே, தமிழகத்தில் உள்ள 21 லட்சம் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற கலைஞர் வீட்டு வசதி திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 6 ஆண்டுகளில் 21 லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளன. பேரூராட்சிகளில் உள்ள ஏழைகளுக்கு 2.5 லட்சம் வீடுகளும், நகர்ப்புற ஏழைகளுக்கு 8 லட்சம் வீடுகளும் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தை குடிசைகளே இல்லாத மாநிலமாக மாற்றும் இதுபோன்ற திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி உதவி அளிக்க வேண்டும். விலைவாசியைக கட்டுக்குள் வைத்திருக்க ஒவ்வொரு மாநிலத்திலும் மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் ரூ.100 கோடி விலைவாசி கட்டுப்படுத்தும் நிதி உருவாக்க வேண்டும்.
இதற்குத் தேவையான நிதியை மத்திய அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். விலைவாசி உயரும்போது, இந்த நிதியிலிருந்து கூட்டுறவு சங்கங்களுக்கு வட்டியில்லாத கடன் வழங்க வேண்டும். குளிர்சாதன கிடங்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி பொருள்களின் விலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.
தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்பு திட்டம், பெண்ணையாறு, செய்யாறு நதிகள் இணைப்பு திட்டம் ஆகியவற்றின் மூலம் வெள்ளப் பாதிப்புகளைத் தடுப்பதோடு,பாசனப் பகுதி களையும் அதிகரிக்கலாம். எனவே, இந்த திட்டங் களுக்கு தேசிய வளர்ச்சிக் கவுன்சில் உதவ வேண்டும். கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம்
மத்திய அரசின் நிதியுதவியோடு சென்னை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த மத்திய பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்க வேண்டும். மெட்ரோ ரயில் திட்டத்தை திருவொற்றியூர் வரை நீட்டிப்பது தொடர்பான பரிந்துரையும் மத்திய அரசுக்கு அனுப்பப்பட் டுள்ளது.
அதற்கும், புதிய பாதைகளில் திட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு உதவ வேண்டும்' என்றார் நிதியமைச்சர் க.அன்பழகன்.
No comments:
Post a Comment