உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிக இடங்களை திமுக கைப்பற்றியது.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் 523 இடங்கள் காலியாக இருந்தன. இதற்கான மனு தாக்கல் கடந்த 22ம் தேதி தொடங்கி நடந்தது. இதில், 1,053 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். 41 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 321 மனுக்கள் திரும்ப பெறப்பட்டன. 67 இடங்களுக்கு யாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லை. 320 வார்டுகளுக்கான உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மீதியுள்ள 136 இடங்களில் மொத்தம் 372 பேர் போட்டியிட்டனர். இந்த வார்டுகளுக்கான தேர்தல் 10ம் தேதி நடந்தது. இதில், மொத்தம் 65 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகள் 12.01.2011 அன்று 89 ஊரக உள்ளாட்சி மையங்கள், 22 நகர்ப்புற உள்ளாட்சி மையங்களில் எண்ணப்பட்டன. மதியம் நிலவரப்படி 2 மாநகராட்சி வார்டுகளை திமுக கைப்பற்றியது. ஈரோடு மாநகராட்சி வார்டு 5ல் சுயேச்சை வேட்பாளர் எம்.விவேகானந்தன் 776 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அடுத்தபடியாக, காங்கிரஸ் வேட்பாளர் 644 வாக்குகள் பெற்றார்.
அதேபோல், நகராட்சி வார்டில் 2 இடங்களில் திமுகவினரும், ஒரு சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றனர். 3ம் நிலை நகராட்சியில் திமுக 2 இடங்களிலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர். டவுன் பஞ்சாயத்தில் 18 இடங்களில் திமுகவினரும், 10 இடங்களில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர். மீதியுள்ள வார்டுகளிலும் திமுகவினரே அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிகிறது.
திருவள்ளுர், காஞ்சியில் திமுக, காங்கிரஸ் வெற்றி
காஞ்சிபுரம் வார்டு 10க்கு நடந்த தேர்தலில் 1,451 வாக்குகள் பதிவாகின. இதில், காங்கிரஸ் வேட்பாளர் ஏ.பானுப்பிரியா 730 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அடுத்தபடியாக, சுயேச்சை வேட்பாளர் ஆர்.தமிழ்செல்வி 721 வாக்குகள் பெற்றார்.
திருவள்ளுர் மாவட்டம் பூந்தமல்லி மூன்றாம் நிலை நகராட்சி வார்டு 4க்கு நடந்த தேர்தலில் 1,411 வாக்குகள் பதிவானது. இதில், திமுக வேட்பாளர் ஏ.பாத்திமா 796 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அடுத்தபடியாக, சுயேச்சை வேட்பாளர் இ.காயத்ரி 420 வாக்குகள் பெற்றார்.
No comments:
Post a Comment