கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, January 21, 2011

சி.ஐ.ஐ. மாநாட்டில் துணை முதல்வர் உரை


தொழில் உற்பத்தியில் தமிழ்நாட்டை முதன்மை இடத்தில் நிலைநிறுத்துவது குறித்த
சி.ஐ.ஐ. மாநாட்டில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.


அவர், ‘’தொழில் துறையின் உற்பத்தியைப் பொறுத்தவரை தமிழ்நாடு இந்தியாவில் முன்னிலை வகிக்கிறது. இந்த முதன்மை நிலைக்கு காரணம் நமது மாநிலத்தில் இயற்கையாகவே அமைந்துள்ள சாதகமான நிலவியல் அமைப்பு, இந்த அரசின் ஆக்கப்பூர்வமான, தொழில் வளர்ச்சிக்கு உகந்த கொள்கைகள், சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள், பல ஆண்டுகளாக சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ள தொழில் பூங்காக்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், வெளிப்படையான அணுகுமுறை, தொழில் அமைதி, குறைவான செலவில் கிடைக்கக்கூடிய சிறந்த மனிதவளம் போன்றவையாகும்.


எனினும், தொழில் துறையில் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி சலுகைகளை அளித்து தொழில் முதலீட்டினை ஈர்த்து தமது மாநிலத்தை தொழில் உற்பத்தியைப் பொறுத்து முதலிடம் வகிக்கும் மாநிலமாக உருவாக்க நமது நாட்டிலுள்ள பல மாநிலங்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன.


இந்த நிலையில் தமிழ்நாட்டை தொழில் உற்பத்தியில் தொடர்ந்து முன்னிலையை தக்க வைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்திட கூட்டப்பட்டுள்ள இந்த மாநாட்டில் பங்குபெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.


இந்த மாநாடு நடத்த இது மிகவும் உகந்த நேரம் என்பதில் யாருக்கும் ஐயமிருக்க முடியாது.

பாரம்பரியமாகவே தமிழகம் பல தொழில்களில் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வந்துள்ளது.


ஐவுளி உற்பத்தி, கைத்தறி, தோல் பொருட்கள் உற்பத்தி, தங்க ஆபரண உற்பத்தி, நடுத்தர மற்றும் இலகு ரக பொறியியல் பொருட்கள் உற்பத்தி, மோட்டார் பம்புகள், கனிமவளம் சார்ந்த உற்பத்தி, ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, மரம் சார்ந்த கைவினைப்பொருட்கள், விவசாய உற்பத்தி பொருட்கள், மருந்துகள், இரசாயனப் பொருட்கள், போன்ற பாரம்பரிய தொழில்கள் தமிழகத்தில் மிகச் சிறந்து விளங்கிவருகின்றன.


தற்போது சமீப காலமாக தமிழகம் பல்வேறு புதிய தொழில்களிலும், அவை சார்ந்த உற்பத்தியிலும் முன்னிலை வகிக்கும் மாநிலமாக உருவாகி வருகிறது. உதாரணமாக, மின்னனு பொருட்கள் உற்பத்தி, உயிர் தொழிலியல் சார்ந்த உணவு உற்பத்தி, உணவு பதப்படுத்தும் தொழில்கள், இரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, சுற்றுலாத் தொழில், மருத்துவ சேவை தொழில், நிதிச் சேவை தொழில், வர்த்தக நடவடிக்கை சேவைகள் போன்றவற்றில் முன்னோடி மாநிலமாக உருவாகி வருகிறது.


இவ்வாறு தமிழகம் முன்னனி நிலையைப் பெறுவதற்கு முக்கிய பங்கு தமிழக தொழில் முனைவோர்களான உங்களையும் சாரும்.


இந்திய தொழில் துறையில் தமிழகத்தின் பங்கு மிகவும் சிறப்பானதாக அமைந்துள்ளது. நாட்டில் அமைந்துள்ள மோட்டார் வாகன உதிரிப்பொருள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் 350 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இது மொத்த உற்பத்தியில் 35 சதவீதம் ஆகும். தொழில் உற்பத்தி மதிப்புக் கூட்டும் பணிகள், தொழிற்சாலைகளின் எண்ணிக்கை, தொழிலாளர்களின் எண்ணிக்கை, முதலீடுகளை ஈர்த்தல், போன்ற பல்வேறு அம்சங்களில் முதல் இடம் வகிக்கும் 3 மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது.


இந்தியாவின் ஏற்றுமதியில் ஏறக்குறைய 18 சதவீதம் தமிழகத்திலிருந்துதான் செய்யப்படுகிறது. அதேபோல், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி பொருட்களில் பெரும்பங்கு தமிழகத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.


இந்திய பொருளாதாரம் தாரளமயமாக்கப்பட்ட பின்பு தமிழகம், தொழில் உற்பத்தியில் தொடர்ந்து முன்னனியில் இருந்து வருகிறது. பல புதிய தொழில் முதலீடுகள் இன்று தமிழகம் நோக்கி வந்துகொண்டிருக்கின்றன.


கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 43 பெரிய தொழில் திட்டங்கள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு அதன் மூலம் 50,615 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளோம்.


நோக்கியா, மோட்டரோலா, சீமென்ஸ், ஃபாக்ஸ்கான், டெல் கம்பியூட்டர்ஸ், ஃபிளஸ்க்டிரானிக்ஸ், சான்மினா, பி.ஒய்.டி., உறவாவி, போன்ற பல முன்னனி மின்னனு சாதன உற்பத்தி நிறுவனங்கள் இன்று தமிழகத்தில் தங்களுடைய தொழிலை தொடங்கி சிறந்த முறையில் நடத்தி வருகின்றன. இது மின்னனு பொருட்கள் உற்பத்தியில் தமிழகத்திற்கு முதலிடத்தை அளித்துள்ளது.


காற்றாலை மின்சாரம் தமிழகத்தில் ஒரு புதிய தொழிலாக தொடங்கியுள்ளது. உலகளவில் புகழ்பெற்ற வெஸ்டார்ஸ், உறான்சன் டிரைவ் போன்ற நிறுவனங்கள் தமிழகத்தில் தங்களது உற்பத்தி தொழிற்சாலைகளை அமைத்துள்ளன.


இதேபோல, மருத்துவ சேவை, ஜவுளித் தொழில், நிதிச்சேவை, தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் போன்றவற்றிலும் தமிழ்நாடு முன்னனி நிறுவனங்களை ஈர்த்து, தொழில் உற்பத்தியில் முதலிடம் பெற்றுள்ளது என்பது நமக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாகும். எனினும் நமது மாநிலத்தின் முதன்மை நிலையை தொடந்து தக்கவைத்துக்கொள்ள அதற்கு தேவையான பல நடவடிக்கைகளை அனைத்து தரப்பினரும் எடுத்திட வேண்டும் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது.



தமிழக அரசு தொழில் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக தொழில் முனைவோருக்கு வழிகாட்டக் கூடிய அமைப்பினை ஏற்படுத்தி, தொழில்நுட்ப தகவல்கள், வர்த்தக புள்ளி விவரங்கள் ஆகியவற்றை வழங்குகிறது.


சிறு, நடுத்தர மற்றும் தொழில் கூட்டமைப்புகளுக்கும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதேபோல், மூலதன பொருட்கள், இயந்திரங்கள், பற்றாக்குறையாக மற்றும் அரிதாக உள்ள மூலப்பொருட்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்ய உதவி அளிக்கப்படுகிறது.


இரசாயனம், உலோகம், மின்சார உபகரணங்கள், மின்னனு பொருட்கள் போன்றவற்றை ஆய்வு செய்ய வசதி அளிக்கப்படுகிறது. தரச் சோதனை மற்றும் தரச்சான்று பெறுவதற்கு உதவி அளிக்கப்படுகிறது.


தொழில் திறனை மேம்படுத்தவும், தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் தேவையான பயிற்சிகள், கருத்தரங்கங்கள் போன்றவற்றிற்கு அரசு உதவி அளிக்கப்படுகிறது.


மூலதன மானியம், ஜெனரேட்டர் மானியம், மின் கட்டண மானியம், வட்டியில்லா வணிக வரி தள்ளுபடி, நலிவடைந்த தொழிற்சாலைகளுக்கு ஊக்கத்தொகை, ஏற்றுமதி ஊக்குவிப்பு போன்ற நிதி சார்ந்த உதவிகள் அளிக்கப்படுகின்றன.


மனித ஆற்றலை பொறுத்தவரையில் இன்று தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொறியியல் பட்டதாரிகள் பட்டம் பெறுகின்றனர்.


பாலிடெக்னிக்குகள், ஐ.ஐ.டிக்கள் மூலமாகவும் ஆயிரக்கணக்கான பட்டய தொழில்நுட்ப கல்வி பயின்ற வல்லுநர்களையும் நாம் உருவாக்கி வருகின்றோம். இருப்பினும், பயிற்சி நிலையங்களிலிருந்து வெளிவரும் பட்டதாரிகளும், பட்டயகாரர்களும் தொழில் முனைவோர் எதிர்பார்க்கும் திறனை பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். இதற்கு தொழில் நிறுவனங்களும் தேவையான உதவிகளை செய்திட வேண்டும்.


தொழில்கல்வி, பொறியியல் கல்வி அளிக்கும் நிறுவனங்களும் தங்களது பாடத்திட்டத்தை தொழில் துறையின் தேவைக்கு ஏற்றவாறும், நவீன தொழில்நுட்ப உத்திகளை உள்ளடக்கியதாகவும், உலகளாவிய போட்டியை சமாளிக்கக்கூடியதாகவும், அமைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.


இதை கருத்திற்கொண்டு, தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு சமீபத்தில் ரூபாய் 50 கோடி மதிப்பிலான படித்த இளைஞர்களின் தொழில் திறனை வளர்க்க திட்டம் தீட்டி, செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம், வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய நிறுவனங்களே படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தேர்வுசெய்து, அரசு செலவில் பயிற்சி அளிக்கும் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


இந்த திட்டத்தின் செயல்பாடுகளை உங்களின் தேவைக்கேற்ப எதிர்காலத்தின் மாற்றி அமைக்கவும், தேவைப்படின் கூடுதல் நிதியை ஒதுக்கவும், தலைவர் கலைஞர் தலைமையிலான தமிழக அரசு தயாராக உள்ளது.


தமிழகத்தை பொறுத்தவரையில், இந்த அரசு தேவையான அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் செய்து தர பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில், மின்உற்பத்தியை பொறுத்தஅளவில், ரூபாய் 33 ஆயிரத்து 20 கோடி முதலீட்டில் மின் திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் துவக்கி செயல்படுத்தி வருகிறோம்.


இத்திட்டங்களின் மூலமாக 2012ஆம் ஆண்டு முதல் மின்வெட்டு இல்லாத ஒரு நிலையை தமிழகம் அடையும் என எதிர்பார்க்கலாம்.


இதேபோல், தமிழகத்திலுள்ள சாலை வசதிகளை மேலும் மேம்படுத்தவும், சென்னை, எண்ணூர் போன்ற துறைமுகங்களை விரிவுபடுத்தும் பணிகளும், சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.


இவை தவிர சட்டம் ஒழுங்கை பொறுத்த அளவில், தமிழ்நாடு இன்று அமைதிப் பூங்காவாக விளங்கி வருகிறது என்பதை யாரும் மறுக்க இயலாது. இது போலவே தொழில் அமைதியை பேணுவதிலும், தமிழகம் இன்று சிறந்து விளங்குகிறது.

ஓரிரு இடங்களில் ஏற்பட்ட ஒரு சில தொழில் தாவாக்களும், அனைத்து தரப்பினரும் ஏற்கும் வகையில், சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளன.


தமிழகம், எதிர்வரும் காலங்களிலும், தொழில் உற்பத்தியில் முதன்மை இடத்தை தொடர்ந்து வகிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க இந்த அரசு உறுதி பூண்டுள்ளது.


இவ்வாறு தமிழக அரசு எடுத்துவரும் பல நடவடிக்கைகளோடு தொழில்திறன் உற்பத்தியில் முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ள தமிழகத்தில் செயல்பட்டு வரும் உங்களைப்போன்ற நிறுவனங்களும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.



இன்று தொழில் போட்டி மிகவும் அதிகமாகிவிட்டது. ஆகவே, நீங்கள் சந்தை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து, மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப நுகர்வோருக்குத் தேவையான வகையில் உற்பத்திப் பொருட்களின் தரத்தையும், தன்மையையும் மாற்றி அமைக்க வேண்டும்.


புதிய தொழில்நுட்பங்கள், தொழில் மேலாண்மை, தொழிலாளர் ஈடுபாடு போன்றவைகளுடன் மொத்த செலவினத்தையும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபடவேண்டும்’’ என்று உரையாற்றினார்.



No comments:

Post a Comment