அடை யாறு பூங்காவுக்கு ‘தொல்காப்பிய பூங்கா’ என்று பெயர் சூட்டி, முதல்வர் கருணாநிதி நேற்று (22.01.2011) திறந்து வைத்தார்.
அடையாறு முகத்துவார பகுதியில் 58 ஏக்கரில் முதற்கட்டமாக ரூ.23 கோடியில் அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதில், மூலிகைகள் உள்ளிட்ட 172 வகைகள் கொண்ட 1.37 லட்சம் செடிகள், 27 வகை மீன்கள், 91 பறவை வகைகள் உள்ளன.
இந்த பூங்கா திறப்பு விழா நேற்று (22.01.2011) மாலையில் நடந்தது. விழாவுக்கு, முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கி, கல்வெட்டு திறந்து, பூங்காவை பொது மக்களுக்கு அர்ப்பணித்தார். அப்போது கருணாநிதி பேசியதாவது:
அடையாறு சுற்றுச்சூழல் பூங்காவுக்கு தொல்காப்பிய பூங்கா என்று பெயர் சூட்டுகிறேன். இனி, இந்த பூங்கா இந்த வட்டார மக்கள், வெளியூர் மக்கள், தமிழக மக்களால் தொல்காப்பிய பூங்கா என்றே அழைக்கப்படும். பழந்தமிழர்களின் பழந்தமிழர் தொல்காப்பியர். அவருக்குப் பிறகுதான் வள்ளுவரும், மற்ற ஞானிகளும் தமிழகத்தில் தோன்றி நமக்கு ஞானப்பால் வார்த்தனர். முதல் தமிழன் தொல்காப்பியர் பெயரை இந்த பூங்காவுக்கு சூட்டுவதில் பெருமை அடைகிறேன். தமிழன் என்ற பெருமிதத்தோடு இந்த பெயரை சூட்டி மகிழ்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.
பின்னர், பூங்காவில் முதல்வர் கருணாநிதி மரக்கன்று நட்டார். பூங்காவை பேட்டரி காரில் சுற்றிப் பார்த்தார். பூங்கா பற்றிய புகைப்பட தொகுப்பு, குறும்படத்தை முதல்வர் பார்வையிட்டார். பார்வையாளர் பதிவேட்டில் குறிப்பு எழுதினார். கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
பூங்கா கையேட்டை முதல்வர் கருணாநிதி வெளி யிட துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். விழாவுக்கு, துணை முதல்வர் மு.க.ஸ் டாலின் முன்னிலை வகித் தார். வரும் 15ம் தேதி முதல் இந்த பூங்கா பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்படும்.
No comments:
Post a Comment