கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, January 17, 2011

தமிழக அரசால் தேர்வு செய்யப்படும் சிறந்த நூல் ஆசிரியருக்கு ஸீ30,000 பரிசு - முதல்வர் கருணாநிதி அறிவிப்பு




தமிழக அரசால் தேர்வு செய்யப்படும் சிறந்த நூல் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பரிசு தொகை ஸீ20 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
தமிழக அரசின் சார்பில் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா வள்ளுவர் கோட்டத்தில் நேற்று (16.01.2011) நடந்தது. விழாவிற்கு நிதியமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கினார்.
திருவள்ளுவர் விருது&பா.வளன்அரசு, பெரியார்விருது& கோ.சாமிதுரை, அம்பேத்கர் விருது&டி.யசோதா எம்.எல்.ஏ., அண்ணா விருது&து.ரவிக்குமார் எம்.எல்.ஏ., காமராஜர் விருது& ஜெயந்திநடராஜன் எம்.பி, பாரதியார் விருது& நா.மம்மது, பாரதிதாசன் விருது& இரா.இளவரசு, திரு.வி.க.விருது& அ.அய்யாசாமி, கி.ஆ.பெ.விசுவநாதம் விருது& இரா.மதிவாணன் ஆகியோருக்கு 1 லட்ச ரூபாய் பொற்கிழி வழங்கி தங்க பதக்கத்தையும் அணிவித்து முதல்வர் கருணாநிதி பாராட்டினார். சிறந்த நூல் ஆசிரியர்களுக்கு ஸீ20 ஆயிரமும், பதிபகத்தாருக்கு ஸீ5 ஆயிரமும் பரிசுகள் வழங்கினார்.
சிறந்த தமிழ் மென்பொருள்களுக்கு கணியன் பூங்குன்றனார் பரிசு வழங்கினார். மேலும், அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு நிதி உதவி ஆணைகளையும் வழங்கினார்.
பின்னர் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

முதலில் தொகுப்புரையைப் பற்றிய ஒரு குறிப்பு. என்னை அவர்கள் இங்கே விளித்துப் பேசும்போது, திருவள்ளுவரின் மறுஉருவமாக நான் இருக்கிறேன், வாழும் வள்ளுவராக இருக்கிறேன் - என்றெல்லாம் மிகைப்படுத்திச் சொன்னதற்காக மிகவும் வருந்து கிறேன்.

ஏனென்றால், 1330 குறட்பாக்களை இந்த தமிழகத்திற்கு மாத்திரமல்லாமல், தரணிக்கே வழங்கிய பெறமுடியாத பெருஞ்செல்வத்தை இலக் கிய உலகத்திற்கு மாத்திரமல்ல, அறிவுலகம், கலை யுலகம், தமிழுலகம் அனைத்தும் பெற்றிடுகின்ற வகையில் பெரும்புகழ் பெற்ற வள்ளுவர் எங்கே, அந்த ஈரடியில் ஓரடி கூட எழுதத் தெரியாத நான் எங்கே - என்பதை நான் எண்ணிப்பார்த்து நான் சுதா சேஷய்யன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

நிகழ்ச்சியில் தாங்கள் தொகுப்புரை ஆற்றும் பொழுது என்னை வள்ளுவருக்கு ஒப்பிட்டு, வாழும் வள்ளுவர் என்றோ அல்லது வள்ளுவரின் அவதா ரம் என்றோ பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால், சிலர் வள்ளு வரை விட்டுவிடுவார்கள். வள்ளுவருடைய கொள்கை என்ன, வள்ளுவருடைய குறள் நயம் என்ன, குறள் பொருள் என்ன, அவரது வாழ்க்கையில் அவர் எடுத் துச் சொன்ன கருத்துகள் என்ன - இவைகளைப் பற்றியெல்லாம் விட்டுவிட்டு, இவர் என்ன வள்ளு வரா? என்ற அந்த வாதப் பிரதிவாதங்களில் சிலர், வள்ளு வரைக் கூட அரசியலாக்கி விட எண்ணுவார்கள்.

புகழுரைக்குப் பொருத்தமானவன் அல்லன்

ஆகவே, வள்ளுவரைக் காப்பாற்ற வேண்டுமே யானால், குறிப்பாக அரசியல்வாதிகளிடமிருந்து நாம் காப்பாற்ற வேண்டுமேயானால், வள்ளுவரை அல்லது வள்ளுவரோடு என்னை ஒப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன். பரிவோடு கேட்டுக் கொள்கிறேன். இது தேவையில்லாத ஒரு வாதத்தை உருவாக்கும் என்பதற்கு மாத்திரமல்ல, நானே அந்தப் புகழு ரைக்கு பொருத்தமானவன் என்று என்னை எடுத்துக் கொள்ளவில்லை.

நான் வள்ளுவர் பால் அன்பு காட்டுவது, வள்ளுவத்தை தமிழகத்திலே மாத்திர மல்ல, தரணியெங்கும் பரப்ப வேண்டும் என்று கருதுவது இவையெல்லாம் வள்ளுவருக்காகத்தானே தவிர, எனக்காக அல்ல. ஏனென்றால், வள்ளுவம் பரவினால்தான் இந்த வையம் சமதர்ம நோக்கோடு, சமத்துவ நோக்கோடு, அன்புள்ளம் பெற்ற மக்களோடு வாழுகின்ற ஒரு நிலை பெற முடியும். அதற்காகத் தான் வள்ளுவரை நாம் பாராட்டுகிறோம். என்னைப் பொறுத்த வரையில், இங்கே நாம் அமர்ந்திருப்பது வள்ளுவர் கோட்டம்.

வள்ளுவருக்கு எங்கே அவர் நினைவாக ஒரு மண்டபம் அமைப்பது என்று எண்ணியபோது, நான் முதலில் மயிலைப் பகுதியிலே வள்ளுவர் பிறந்தார், அங்கேதான் வாழ்ந்தார் என்ற ஒரு கூற்றினை அடிப்படையாக வைத்து, அப்பொழுது முதலமைச்சராக இருந்த பெரியவர் பக்தவத்சலனார் அவர்களிடத்தில் அதுபற்றிக் கலந்து பேசினேன். அவர்கள் சொன்னார்கள் - மயிலாப்பூரிலே வள்ளுவர் வாழ்ந்தார் என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால், அங்கே ஒரு கோயிலைக் காட்டி, அது வள்ளுவர் பிறந்த இடம் என்றெல்லாம் சொல்லு கிறார்கள். இருந்தாலும் நீங்கள் ஆராய்ந்து பாருங் கள் என்று என்னிடத்திலே பக்தவத்சலனார் அவர் கள் குறிப்பிட்டார்கள். ஒரு குழு அதற்காக அமைக்கப்பட்டு, அது பற்றி நாங்கள் கலந்தாலோசித்தபோது, பெரியவர் பக்தவத்சலனார் அவர்கள் மீண்டும் என்னை அழைத்து, வள்ளுவருடைய பெயர் நிலைக்க, அவரு டைய குறள் பரவிட நீங்கள் எடுத்துக் கொண்டிரு கின்ற முயற்சிகளுக்குப் பாராட்டுகள். ஆனாலும் ஒரு பெரிய ஞானி - அவருடைய புகழைப் பரப்பிட, அவரை வழிபடுகின்ற மக்கள் தவறாக எதுவும் கருதிவிடக்கூடாது என்ற சூழ்நிலையில், அதை அமைக்க வேண்டும் என்று எனக்கு அவர்கள் எடுத்துச் சொன்னார்கள்.

பிறகு நான், பதவிப் பொறுப்பிற்கு வந்துவிட்ட காலம். அவரிடத்தில் நீங்கள் அந்தக் குழுவிலே இடம்பெற வேண்டும் என்று கேட்டபோது, தாரா ளமாக இடம்பெறுகிறேன் என்று சொன்னார்கள். பிறகு அந்தக் குழு கூடி, வள்ளுவர் வாழ்ந்த இடம் எது என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு, அந்த ஆராய்ச் சிக்கே முடிவில்லாமல் போய், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அது கைவிடப்பட்டு விட்டது. வள்ளுவர் படத்தை சட்டமன்றத்தில் வைக்க...
அதற்கு முன்பே நான் சட்டமன்றத்திலே எதிர்க் கட்சியிலே துணைத்தலைவராக இருந்தபோது, அப்பொழுது முதலமைச்சராக பக்தவத்சலனார் இருந்த காலத்தில், திருவள்ளுவருடைய படத்தை சட்டமன்றத்திலே வைத்தால் என்ன - என்று கேட்டேன். அவர்களும் உடனடியாக எனக்குப் பதிலளித்தார்கள்.

வள்ளுவர் படம் வைப்பதிலே எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. கனம் உறுப்பினரே, (அப்பொழுதெல்லாம் மாண்புமிகு கிடையாது, கனம் என்றுதான் சொல்வோம்.- எல்லோரும் இலேசாக இருந்தால்கூட எல்லோரும் கனமாகத் தான் இருந்தோம்) அவருடைய செலவிலே ஒரு படத்தை வாங்கிக் கொடுத்தால், நாங்கள் மாட்டு வதற்குத் தயார் - என்று பெரியவர் பக்தவத்சலம் அவர்கள் சொன்னார்கள்.

நான் அந்தப் படத்தைத் தயாரிப்பதற்காக முயற்சி கள் எடுத்துக்கொண்டபோது, வேணுகோபால் சர்மா என்ற ஒரு ஓவியர் வள்ளுவருடைய படத் தைத் தீட்டி, அதை எல்லாக் கட்சித் தலைவர்களையும் அழைத்து - வள்ளுவர் படம் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள் என்று கேட்டபோது, எல்லாக் கட்சித் தலைவர்களும், அப்போது பேரறிஞர் அண்ணா அவர்கள் உயிரோடு இருந்தார்கள். அவர்களும், மற்றக் கட்சித் தலைவர்களும் சென்று அந்தப் படத்தைப் பார்த்து, இந்தப் படமே வள்ளுவர் படம் என்று நாம் நாட்டிலே அறிமுகப் படுத்தலாம். ஏனென்றால் வள்ளுவருக்கு இதுவரையிலே ஏதேதோ உருவங்கள் முனிவரைப் போல, தவசியைப் போல அமைத்திருக்கிறார்களே அல்லாமல், இதுதான் வள்ளுவர் என்று யாரும் சொல்லுகின்ற அளவிற்கு வள்ளுவர் உருவம் இல்லை என்ற போது, வேணுகோபால் சர்மா ஒரு படத்தை வரைந்து, இதை நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியுமா என்றார்கள்.

அண்ணா சென்று பார்த்தார், நான் சென்று பார்த்தேன், காமராஜர் சென்று பார்த்தார். எல்லோ ரும் பார்த்து விட்டு சரி என்று கூறி விட்டோம். சில பேருக்கு ஒரு குறை - வள்ளுவர் படங்களில் குறுக்கே ஒரு பூணுல் இருக்க வேண்டுமே, அவர் பிராமணர் அல்லவா, 1330 குறட்பாக்களை அவ் வளவு அருமையாக எழுதுவதென்றால், அவர் சாதா ரண மனிதராக இருந்திருக்க முடியுமா? அவர் பிரா மணர் அல்லவா என்று சிலபேர் பேசிக் கொண்டது எனக்குத் தெரியும்.

நூல் போடப்பட்டிருந்த இடத்தில் சால்வை

பிராமணராக இருந்த காரணத்தினால்தான் அவரால் திருக்குறளே எழுத முடிந்தது என்று குறிப்பிட்டதும் எனக்குத் தெரியும். எல்லோருக்கும் தெரியும். அதற்காக அதை வலியுறுத்துவதற்காக அந்த உருவத்தின் குறுக்கே ஒரு நூலினைப் போட்டு முன்பெல்லாம் வரைந்திருந்தார்கள்.

வேணுகோபால் சர்மா அவர்கள் நமக்கேன் அந்த வம்பு, அந்த நுலை நாம் போட்டால் அவர் பிராமணர் என்று சொன் னதை நாம் ஏற்றதாக ஆகிவிடும், போடாவிட்டால் அவர் பிராமணர் அல்ல என்று சொன்னதாக ஆகிவிடும், ஆகவே நூல் போடப்பட்டிருந்த இடத் தில் ஒரு சால்வையை போர்த்தி, நூல் உண்டா இல் லையா என்பதே தெரியாத அளவிற்கு வள்ளுவரை பிரச்சினைக்கு இடம் இல்லாமல் அந்தச் சித் திரத்தை அப்போது வரைந்து கொடுத்தார்.

நான் எங்கேயாவது போர்த்தியிருக்கின்ற இடத்தில் நூல் வெளியிலே தெரிகிறதா என்று பார்த்து, தெரிந்தால் பரவாயில்லை, அதை உடனே அழித்து விடுங்கள் என்று அவருக்குத் தெரிவித்து, அவரும் அவ்வாறு செய்து அந்த வள்ளுவர் படம் தயாரானது.

முதலமைச்சராக இருந்த பக்தவத்சலனார் இடத்தில், வள்ளுவர் படம் தயாராகிவிட்டது, என் சார்பில் அதை வாங்கித் தர வேண்டுமென்று சொன் னீர்கள், நான் தயார் என்று சட்டசபையிலேயே சொன்ன போது,

பக்தவச்சலம் விழித்துக் கொண்டார்

பெரியவர் பக்தவத்சலம் விழித்துக் கொண்டார். அவர் எப்போதுமே ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பவர். இவன் படத்தை வைத்து விட்டு, பிறகு நான் வைத்த படம் என்று ஊர் எல்லாம் தி.மு. கழகத்தார் சொல்லிக் கொண்டிருப்பார்கள் என்ப தால், இல்லையில்லை, நாங்களே வைத்து விடுகி றோம் என்று சொல்லி, அவர் அன்றைய அரசாங் கத்தின் சார்பாக படத்தை வைப்பதற்கு ஒத்துக் கொண்டு படத் திறப்பு விழாவும் நடைபெற்றது.

எங்களுக்கு எப்படியோ காரியம் நடந்தால் சரி, அதை தி.மு.க. வைத்தால் என்ன, காங்கிரஸ் வைத் தால் என்ன, தமிழ்நாடு சட்டசபையில் வள்ளுவர் படம் இருந்தே ஆக வேண்டும் என்ற எங்களுடைய எண்ணம் பலித்த காரணத்திற்காக பக்தவத்சலனார் அவர்களுக்கு நான் அப்போது நன்றி தெரிவித்தேன்.

மாணவர்கள் போராட்டக் காலத்திலே தான் அவருக்கும் எங்களுக்கும் மன வருத்தம் ஏற்பட்டதே அல்லாமல் நிருவாகத்தில் தமிழகத்தை நிருவகித் துச் சென்ற அந்தச் செயலில் அவரிடத்திலே நாங் கள் என்றைக்கும் வேறுபட்டதில்லை.

நான் பல முறை சட்டமன்றத்திலே எதிர்க்கட்சி வரிசையிலே நானும் சொல்லியிருக்கிறேன், நம்மு டைய பேராசிரியரும் பேசியிருக்கிறார். நிருவாகப் பொறுப்பில் அவரை யாரும் குறை சொல்ல முடி யாது என்று அன்றைக்கு நாங்கள் பேசியிருக்கிறோம்.

நான் அழைத்தவுடன் திருக்குவளைக்கு வந்தார்


அப்படிப்பட்டவரை எங்கள் ஊரில், நான் பிறந்த திருக்குவளையில் என்னுடைய தாயார், தந்தை பெயரால், ஒரு தாய் சேய் நல விடுதி அமைத்து, அதைத் திறந்து வைக்க நீங்கள் வரவேண் டுமென்று கேட்ட போது, சட்டசபையிலேயே கேட்டேன், உடனே சொன்னார், தாய் சேய் நல விடுதியைத் திறந்து வைக்கிறேனோ இல்லையோ, நான், நீங்கள் பிறந்த ஊரைப் பார்க்க விரும்பு கிறேன், ஆகவே வருகிறேன் என்று சொல்லி விட்டு பக்தவத்சலம் அவர்கள் வந்தார்கள். இதெல்லாம் அந்தக் காலத்து அரசியல் நாகரிகம். (கைதட்டல்).

அவர் வரும்போது கூட சில பேர் வரக் கூடாது என்று தடுத்தார்கள். கருணாநிதி உங்களை அழைத் துப் போய் அந்தத் தாய் சேய் நல விடுதியைத் திறக் கக் கூடாதென்றெல்லாம் கூடச் சொன்னார்கள். அதையும் மீறி அவர் வந்தார். அப்போது கூட சில பேர் அவருக்குக் கறுப்புக் கொடி பிடித்தார்கள். அவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் அந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டார்கள்.

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், தி.மு.க. சார்பாக கேட்டோம், ஆகவே வைக்க முடியாது என்று அன்றைய காங்கிரஸ் அமைச்சரவை சொல்ல வில்லை. முதலில் தயங்கி, பிறகு நாங்களே வைக் கிறோம் என்று சொல்கிற அளவிற்குத் தான் இருந் தார்கள். அப்படி வைக்கப்பட்ட படம் தான் வேணு கோபால் சர்மா அவர்களால் வரையப்பட்டு, அழகுறு சட்டமன்றத்திலே மாட்டப்பட்டிருக்கின்ற வள்ளுவருடைய படம் ஆகும்.

அதற்குப் பிறகு ஆட்சி மாறி, அண்ணா அவர் களுடைய அமைச்சரவையில் நான் போக்குவரத்துத் துறை அமைச்சராக ஆனதும் ஓடுகின்ற எல்லா பேருந்துகளிலும், திருவள்ளுவருடைய படத்தை யும், திருக்குறளையும் எழுதச் செய்தேன். அந்த நேரத்தில் பேரவையில் கருத்திருமன் அவர்கள் யாகாவாராயினும் நா காக்க என்ற குறளை பேருந்தில் எழுதி வைத்திருக்கிறீர்களே, அது யாருக் காக என்று கேட்டார்.

சட்டமன்றத்தில் அப்போதெல்லாம் இப்படிப் பட்ட நேர்மையான, புதுமையான, சிக்கலான கேள்விகளைக் கேட்பது வழக்கம். அதன்படி கருத் திருமன் கேட்டவுடன், அண்ணா எழுந்து, நாக்கு இருப்பவர்களுக்காக (பலத்த கைதட்டல்) யார் யாருக்காக நாக்கு இருக்கிறதோ, அவர்கள் எல்லாம் நா காக்க வேண்டுமென்பதற்காக என்று அண்ணா சொன்னார்.

ஏன் இதை நினைவுபடுத்துகிறேன் என்றால், வள்ளுவருடைய படத்தை வைப்பது மாத்திரம்,- வள்ளுவருக்கு நாம் செய்கின்ற சிறப்பு அல்ல. அவர் என்னென்ன கருத்துகளை சொன்னாரோ, அந்தக் கருத்துகள்படி நடப்பது நம்முடைய கடமை.

அந்தக் கடமையை வள்ளுவர் வழியிலே செய்வதற் காகத் தான் தி. மு. கழக அரசு பல திட்டங்களை நிறைவேற்றி, அதைச் செயல்படுத்தி மக்களுடைய ஆதரவைப் பெற்று வருகிறது. அப்படிப்பட்ட அந்த அரசின் சார்பிலே தான் வள்ளுவருக்கு விழா எடுப்பது,- வள்ளுவருக்கு கோட்டம் அமைப்பது, வள்ளுவருக்கு சிலை எடுப்பது என்ற பல பெரிய காரியங்கள் தமிழகத்திலே தமிழ் வளர்ச்சிக்காக, தமிழர்களுடைய கலாச்சாரத்தை இன்று மாத் திரமல்ல, வருங்காலத்திலும் எதிர்காலத்திலும் படித்த இளைஞர்கள், வாலிபர்கள், மாணவர்கள், வழித்தோன்றல்கள் புரிந்து கொண்டு நம்முடைய இனம் என்ன, நம்முடைய மொழி என்ன, நம்மு டைய கலை, கலாச்சாரம், நாகரிகம் என்ன என் பதைப் புரிந்து கொள்ள இவைகள் எல்லாம் பயன் பட வேண்டும் என்பதற்காக அன்றைக்கு அமைக் கப்பட்ட சின்னங்களிலே ஒரு சிறந்த சின்னம்தான் இந்த வள்ளுவர் கோட்டம்.
ஒவ்வொரு கல்லும் என்னுடைய பார்வையிலே வைக்கப்பட்டது

இந்த வள்ளுவர் கோட்டத்தை நான் முதலமைச் சராக இருந்தபோது அமைத்தேன். இங்கேயுள்ள ஒவ்வொரு கல்லும் என்னுடைய பார்வையிலே தான் வைக்கப்பட்டது. காலை, மாலை, இரவு என்று இங்கேயே நான் ஒரு சிறிய குடிசையைப் போட்டுக் கொண்டு அதிலே படுத்துறங்கி, வள்ளுவர் கோட்டத்தின் திருப்பணிகள் நடை பெறுகின்ற காட்சியைக் கண்டு களித்தவன் நான்.

ஆனால் இந்தக் கோட்டம் திறக்கப்பட்ட அந்த நாளில் நான் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ஏன் என்று உங்களுக்குத் தெரியும். அதையெல்லாம் விவரிக்க நான் விரும்பவில்லை. வள்ளுவர் கோட்டத் திலே அதைக் கட்டியவன் நுழைய முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்ட காலத்தில் தமிழ்ப் புலவர்கள் எல்லாம் கொதித்தார்கள். இங்கேயே நடைபெற்ற ஒரு விழாவில் தமிழ்ச் சான்றோர்கள் தங்களுடைய சினத்தை, எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இதைப் புரிந்து கொண்டு நான் அவர்களை யெல்லாம் சமாதானப்படுத்தி வள்ளுவர் கோட் டத்திலே வள்ளுவருடைய சிறப்பை செய்வோம், வள்ளுவர் பெயரால் நாம் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளக் கூடாது, அது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல என்று எடுத்துக் கூறி பிறகு - நம்முடைய மூப்பனார் போன்றவர்கள் எல்லாம் வந்து கலந்து கொண்ட பெரிய விழாவாக திருவள்ளுவருடைய சிலை திறப்பு விழாவினை குமரி முனையிலே நடத்தி, அந்த விழாவிலே பல அறிவிப்புகளைச் செய்து அந்த அறிவிப்புகளின் படி இன்றைய தினம் புத்த கங்கள் எழுதியவர்களுக்கு பரிசு, விருது, வள்ளு வருடைய வரலாறு எழுதியவர்களுக்கு பரிசு, விருது - வள்ளுவரைப் பற்றி ஆய்வு செய்தவர்களுக் கெல்லாம் பரிசு, விருது, அவர் நினைவாக பலருக்கு இப்போதும் நிதியளிப்புகள் - திருக்குறள் முழு வதையும் மனப்பாடம் செய்து ஒப்படை செய்பவர் களுக்கு சிறப்பு விருதுகள் - அந்த மாணவர்களுக்கு பாராட்டு - படிப்பிலே தேர்ச்சி - நிதி உதவி என்று இப்படிப் பல காரியங்கள் வள்ளுவர் பெயரால், வள்ளுவரைப் பாராட்டுகின்ற வகையில், வள்ளு வருக்கு சிறப்பு செய்கின்ற வகையில் இன்று வரையில் நடைபெற்று வருகின்றன.

கோ.சாமிதுரையின் வைரம் பாய்ந்த உள்ளம்

அப்படி நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளிலே ஒன்றாகத் தான் இன்று இந்த விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றிருக்கிறது. இதிலே நம்முடைய தந்தை பெரியார் பெயரால் அமைந்துள்ள விருதை திரு. கோ. சாமிதுரை பெற்றிருக்கிறார் என்றால்,- அவர் இந்த நிலையிலும் உடல்நிலை பெருமளவிற்கு ஆரோக்கியமாக இல்லாவிட்டாலும், வைரம் பாய்ந்த உள்ளம் கழகத்தைப் பொறுத்தவரையில், திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரையில், பெரி யாருடைய கொள்கைகளைப் பொறுத்தவரையில் உள்ளவர் என்ற காரணத்தினால் பெரியார் விருது அவருக்கு இன்றைக்கு வழங்கப்பட்டது.

அதே போல அம்பேத்கர் விருது பற்றி திரு மதி யசோதா அம்மையார் அவர்கள் இங்கே சொன் னார்கள். சுருக்கமாகச் சொன்னார்கள். மராட்டி யத்தில் அம்பேத்கருடைய பெயரால் ஒரு பல்கலைக் கழகத்தை உருவாக்க இருந்து, சட்ட மன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றி, 11 ஆண்டுகள் கழிந்த பிறகும் அந்தத் தீர்மானத்தை செயல்படுத்தாமல், அம் பேத்கர் பெயரால் பல்கலைக் கழகம் அங்கே அமைக்கப்படாமல் இருந்ததைச் சுட்டிக்காட்டி பத்திரிகையிலே ஒரு செய்தி போட்டிருந்தார்கள். அன்றைய தினமணி நாளிதழ் என்று கருதுகிறேன், அதிலே இந்தச் செய்தி வந்திருந்தது. அப்போ தெல்லாம் தினமணி போன்ற பத்திரிகைகளில் இத்தகைய நல்ல செய்திகளை வெளியிடுவார்கள்.

அதைப் பார்த்தவுடன், ஆகா, அம்பேத்கருடைய பல்கலைக் கழகத்திற்கு அனுமதி கிடைத்தும், பதி னோரு ஆண்டு காலமாக நிறைவேற்றவில்லையா, என்ற கொந்தளிப்போடு நான் உடனே ஒரு அறிக்கை வெளியிட்டேன். அம்பேத்கர் பெயரால் அமைய வேண்டிய பல்கலைக்கழகம் சட்டமன்றத்திலே தீர்மானம் நிறைவேற்றியும்கூட இன்னும் மராட் டியத்திலே நிறைவேற்றப்படவில்லை, ஆகவே நம் முடைய கழகத்தைச் சேர்ந்தவர்கள், தமிழ்நாட்டிலே உள்ள மக்கள் அம்பேத்கர் பெயரால் அன்பு கொண் டவர்கள் அத்தனை பேரும், மராட்டிய மாநில முதலமைச்சருக்கு அந்தப் பல்கலைக் கழகத்தை உடனே நிறுவ வேண்டும் என்று தந்தி கொடுங்கள், தந்தியின் நகலை அங்கேயிருந்த ஆளுநர் அலெக் சாண்டருக்கும் அனுப்புங்கள் என்று அறிக்கை நான் விடுத்து, பல்லாயிரக்கணக்கான தந்திகள் தி.மு. கழகத்தின் சார்பிலும் மற்றும் தமிழ் மக்கள் சார் பிலும், ஆதி திராவிட அமைப்புகள் சார்பிலும் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்தத் தந்திகள் சென்ற ஒரு வாரத்திற்குப் பிறகு, அங்கேயிருந்த ஆளுநர் அலெக்சாண்டரிடமிருந்து, அவர் இங்கேயிருந்து அங்கே சென்றவர், ஒரு கடிதம் வந்தது. அம்பேத்கர் பல்கலைக் கழகம் குறித்து நாங் கள் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம், விரை வில் நல்ல செய்தி சொல்வோம் என்று எனக்கு தகவல் அனுப்பியிருந்தார். நான் அதற்கு மகிழ்ச்சி தெரிவித்து பாராட்டி நன்றி தெரிவித்து பதில் கடிதம் எழுதினேன்.

பிறகு நான்கு நாள்களுக்கெல்லாம் அம்பேத்கர் பல்கலைக் கழகம் அமைப்பதற்கான அரசு உத்தரவு எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பார் பார் நாங்கள் அந்த உத்தரவையெல்லாம் பிறப்பித்து விட்டோம், ஆகவே பல்கலைக் கழகம் வந்தே தீரும் என்று எனக்கு எழுதினார்கள்.

அதை நான் பத்திரிகையிலே வெளியிட்ட, அதற்குப் பிறகு அதற்கான கிளர்ச்சி கைவிடப் பட்டது. அம்பேத்கர் பல்கலைக் கழகம் இன்றைக்கு மராட்டியத்திலே மகோன்னதமாக நடந்து வருகிறது என்றால், அதற்கு நாம் எடுத்துக் கொண்ட முயற்சி தான் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

மராட்டியத்தில் மாத்திரமல்ல; அம்பேத்கர் பெயரால் முதன் முதலாக சட்டக் கல்லுரி ஒன்றை தமிழகத்திலே, சென்னை மாநகரத்திலே அமைக்கப் பட்டது - இந்தியாவிலே வேறெங்கும் இல்லை, இங்கேதான் சட்டப் பல்கலைக்கழகம் அமைத்து விட்டு, அந்தப் பல்கலைக்கழகத்திற்கான அலுவல கத்தை எங்கே அமைப்பது என்ற போது, பொதுப் பணித் துறை அமைச்சராக அப்போது தம்பி துரைமுருகன் இருந்தார், அவர் தன்னுடைய முயற்சி யினால் ஒரு அலுவலகத்தை, பிரமாண்டமாக அமைத்து என்னை அழைத்துச் சென்று காட் டினார்.

இது எதற்கு என்று கேட்டேன். அவர் சொன்னார், முதலமைச்சருக்கான வீடு என்றார். முதலமைச்சருக்கு வீடு தான் தேவையே தவிர, மாளிகை தேவையில்லையே என்று நான் கூறிய போது, இல்லையில்லை, இங்கே தான் நீங்கள் தங்க வேண்டும், அது தான் உங்கள் உடம்புக்கு நல்லது, பாருங்கள் எப்படி காற்று வருகிறது என்றெல்லாம் சொன்னார்.

காற்று வரட்டும், வராமல் இருக்கட்டும், ஆனால் இவ்வளவு பெரிய இடம் நான் ஒருவன் இங்கே குடும்பம் நடத்துவதற்குத் தேவையில்லை, அம்பேத் கர் பெயரால் உள்ள சட்டப் பல்கலைக் கழகத்திற்கு அலுவலகம் வைக்க இடம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள், ஆகவே இதை அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் அலுவலமாக ஆக்கி விடு என்று நான் சொல்லி, அந்த அலுவலகமாக அது ஆக்கப்பட்டது.

கிஞ்சிற்றும் மறக்காமல்...

அதற்குப் பக்கத்திலே தான் அம்பேத்கருடைய பெயரால் ஒரு மண்டபம் நான்கு கோடி ரூபாய் செலவில் அப்போது அமைக்கப்பட்டது,- அப் போது நான்கு கோடி, இப்போது எவ்வளவு ஆகும் என்று தெரியாது. அவ்வளவு பெரிய மண்டபத்தை அம்பேத்கர் பெயரால் அங்கே அமைத்தோம். இப்படி அம்பேத்கர் பெயரால் எத்தனையோ திட்டங்களை, எத்தனையோ மண்டபங்களை, எத்தனையோ கொள்கைகளை நிறைவேற்றி வருவது தான் இந்தக் கழக அரசு. எப்படி ஜவகர்லால் நேரு அவர்கள் அம்பேத்கர் இடத்திலே அன்பு வைத்து அவருக்கு மரியாதை செய்தாரோ, அதே அளவில், அவர் வழியிலே நின்று தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும் அம்பேத்கர் இடத்திலே கொண்டிருந்த அன்பு, மரியாதை, அவருடைய அறிவைப் போற்றிய அந்தத் தன்மை ஆகியவற்றை கிஞ்சிற்றும் நான் மறவாமல் அவரு டைய நினைவைப் போற்றிக் கொண்டிருக்கிறேன். அந்த அம்பேத்கருடைய பெயரால் உள்ள இந்த விருதை சட்டப் பேரவை உறுப்பினர் திருமதி யசோதா அவர்களுக்குத் தரப்பட் டிருப்பது ஒரு தொண்டு உள்ளத்திற்குக் கிடைத்த பரிசு என்றே நான் கருதுகிறேன். (கைதட்டல்).

ஏனென்றால் அவர் வெற்றி பெற்றிருக்கின்ற தொகுதியில் தமிழ்நாட்டிலே எது நடந்தாலும், அது அங்கே நடக்க வேண்டுமென்று எண்ணுகின்ற வர் திருமதி யசோதா அவர்கள். அப்படிப்பட்ட அம்மையார் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசாதவர். உண்மையாக அந்த இயக்கத்திற்கு உழைத்துக் கொண்டிருக்கின்ற மகளிர் படையின ரில் அவர் ஒருவர். அப்படிப்பட்டவருக்கு அம்பேத் கர் விருதை இன்றைக்கு வழங்கியிருக்கிறோம்.

பேரறிஞர் அண்ணா விருதைப் பெற்றவர் அருமைச் சகோதரர் ரவிக் குமார், எம்.எல்.ஏ., அவர்கள். விடுதலை சிறுத்தைகளின் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட தளபதிகளிலே ஒருவர் ஆவார் அவர். அவரை தளபதி என்று நான் சொல் வதை நம்முடைய திருமாவளவன் ஏற்றுக் கொண் டிருப்பார் என்றே நான் கருதுகிறேன். திருமா வளவன் கையொலி செய்வதிலிருந்தே அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். ரவிக்குமார் அவர்கள் பல நூல்களை எழுதியவர். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு நுல்களா, நாமே இவ்வளவு எழுதவில்லையே என்று. அவ்வளவு நுல்களை, உலகத்திலே உள்ள பல தலைவர்களைப்பற்றி, பல கருத்துகளைப் பற்றி விமர்சனங்களையெல்லாம் எழுதியவர் அவர். இன்னும் சொல்லப் போனால் ஆரம்ப காலத்தில் அவர் எங்களைத் தீவிரமாக எதிர்த்தவர். தீவிரமாக எதிர்த்தால் தான் பிறகு தீவிரமாக ஆதரிப்பார்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும் (கைதட்டல்).

எனக்கு அவரிடம் எப்போதுமே அவருடைய பேச்சில், அவருடைய நடவடிக்கையில், அவருடைய எழுத்தில் மயக்கம் உண்டு. இவர் நம்மிடமே இருக்க வேண்டுமே என்று கருதியிருந்தேன். பிறகு பார்த்தால் அவர் சிறுத்தைகளிடம் இருந்தார். அதுவும் நம் இடம் தான் (கைதட்டல்) என்று அதிலே ஒரு ஆறுதல் கொண்டேன். வீரமணி-பாரதியாரை நேரடியாக ஒத்துக் கொள்ளாதவர்

பெருந்தலைவர் காமராசர் விருது பெற்ற திருமதி.ஜெயந்தி நடராஜன் அவர்கள், அவருடைய குடும்பத்தைப்பற்றி குறிப்பிட்டார்கள். அவர்களு டைய குடும்பத்தைப் பற்றியும், அக்குடும்பத் தலைவர் பக்தவத்சலம் அவர்களைப் பற்றியும், அவர் கட்டிக்காத்த அரசியல் நாகரிகம் பற்றியும் கூறி யிருக்கின்றேன். அன்று பெருந்தலைவர் காமராசர் கட்டிக்காத்த அரசியல் நாகரிகத்திற்கும், என்னு டைய குடும்பத்திலே இருந்து ஒரு உதாரணம் சொல்ல வேண்டும்.

அவரை நான் எந்த அளவிற்கு அரசியல் ரீதியாக எதிர்த்தேன் என்பது உங்களுக் கெல்லாம் தெரியும். அதைப்போல அவரும் என்னை எந்த அளவிற்கு அரசியல் ரீதியாக விமர்சனம் செய்தார் என்று உங்களுக்கெல்லாம் தெரியும். ஆனால், ஸ்டான்லி மருத்துவமனையில் என்னு டைய தாயார் மறைந்து விட்டார் என்று கேள் விப்பட்ட அவர், நான் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வருவதற்குள் அவர் என் வீட்டு முகப்பிலே எனக்காகக் காத்திருந்தார். துக்கம் விசாரிப்பதற்காக வந்து காத்திருந்தார். அந்த அளவிற்கு, என் தாயார் மீதிருந்த பாசத்தினால் என்று சொல்லுவதை விட, அரசியல் நாகரிகத்திலே, பண்பாட்டிலே அவ்வளவு அக்கறை வைத்திருந்தார் என்பதற்கு அது ஒரு உதாரணம்.

அப்படிப்பட்ட பெருந்தகையாக இருந்தவர் பெருந்தலை நாம் உயர்கல்விப் படிப்பு என்று அங் கெங்கெல்லாம் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என நிரம்பத் தொடங்கிக் கொண்டிருந்தாலும்கூட, இவற்றிற்கெல்லாம் வித்திட்ட மகான் பெருந் தலைவர் காமராஜர் என்று சொன்னால் அது மிகை யாகாது. அப்படிப்பட்டவர் பெயரால் மிகப் பொருத்தமாக திருமதி. ஜெயந்தி நடராஜன், எம்.பி., அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.

அய்யன் திருவள்ளுவர் விருதைப் பெற்றிருப் பவர் முனைவர் பா. வளன்அரசு. அவருடைய இயற்பெயர் என்ன என்று நான் ஆராய முற்பட் டேன். ஏனென்றால், தமிழகத்திலே தமிழ் இயக்கம் வளர்ந்த பிறகு, பலரும் பெயரை மாற்றிக் கொண் டார்கள். அந்தப் பெயர்களில் ஒன்றுதான் ராமையா என்பது அன்பழகனாக ஆயிற்று என்று அறிவீர்கள். நாராயணசாமி என்பது நெடுஞ்செழியனாக ஆயிற்று என்று அறிவீர்கள். இந்த முனைவர் பா. வளன்அரசு, ஜோசப் ராஜ் என்ற பெயருடையவர். அவர் வளன்அரசு என்று இந்தத் தமிழ் இயக்கத்தின் சார்பாக எடுக்கப்பட்ட முயற்சியின் காரணமாக தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டு, திருவள்ளு வருடைய கருத்துகளை, தமிழிலக்கியங்களை வளர்த்து வருகின்றவர். அவர் இன்று விருதைப் பெற்றிருக் கின்றார்.

மகாகவி பாரதியார் விருதினை திரு. நா. மம்மது அவர்கள் பெற்றிருக்கின்றார்கள். அவரும் முகம்மது ஆக இருந்து மம்மது ஆக ஆகியிருப்பார் என்று கருதுகிறேன். அதுதான் சரியாக இருக்கும் என்று எண்ணுகின்றேன். அவர்கள் மகாகவி பாரதியார் விருதைப் பெற்றிருப்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சி தரக்கூடியது. பாரதியாரைப் பற்றி, கருத்து சொல்லும்போது நம்முடைய தமிழர் தலைவர் திரு. வீரமணி அவர்கள் இங்கே இருக்கிறார்கள். அவர் கள் எல்லாம் பாரதியாரை நேரடியாக ஒத்துக் கொண்டவர்கள் அல்ல. ஏனென்றால், பாரதியாருடைய சமுதாயத்தை புரிந்து கொண்ட காரணத்தால், என்னதான் பாரதி யாராக இருந்தாலும், அவரும் அங்கே பிறந்த வர்தானே - என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டு.

பார்ப்பானை அய்யர் என்ற காலம் போச்சே

ஆனால், எங்களுக்கு அந்தப் பாரதியார் பார்ப் பானை அய்யர் என்ற காலம் போச்சே என்று சொன்ன பாரதியார்தான் எங்கள் உள்ளம் கவர்ந்தவர். சீர்திருத்த பாரதியார், சுயமரியாதை பாரதியார் - அந்தப் பாரதியார் எங்களுக்கு உகந்தவர். எந்த ஒரு புலவருடைய வாழ்க்கையிலும், எந்த ஒரு தலைவருடைய வாழ்க்கையிலும், அதை பகுதி பகுதியாகப் பிரித்துப் பார்த்தால், சில பகுதிகள் மெஜாரிட்டி பகுதிகள் நம்முடைய கொள்கை களைக் கொண்டதாக இருக்கும். சில பகுதிகள் நமது கொள்கைகளுக்கு மாறானதாக இருக்கும். அவைகள் எல்லாம் காலத்தை வைத்துப் பார்க்கும் பொழுது - முற்காலமா, பிற்காலமா என்று பார்க்கும் பொழுது, சுப்பிரமணிய பாரதியாரைப் பொறுத்த வரையில், அவர்கள் ஒரே குலம், ஒரே கடவுள் என்ற கொள்கையை வலியுறுத்திப் பாடிய பாடல்கள் பல உண்டு.

பேய், பிசாசு என்ற மூடக் கொள்கைகளை எல்லாம் வேரறுக்க வேண்டும் என்று கருதி எழுதிய கவிதைகள் பல உண்டு. அந்த வகையிலே, பாரதியா ருடைய விருதை திரு. மம்மது அவர்கள் பெறுவது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விருதை முனை வர் இரா. இளவரசு அவர்கள் பெற்றிருக்கிறார். பாவேந்தர் பாரதிதாசன் பாரதியாரை எந்த அளவிற்குப் புகழ்ந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். தன்னுடைய குருவாக பாரதியாரை ஏற்றுக் கொண்டவர். அப்படிப்பட்ட குரு பக்தி யுடையவர் ஆசிரியரிடத்தில் பக்தியுடையவர். அவருடைய வழியிலே பின்பற்றிய, இடையிலே பெரியாருடைய தலைமையில் தம்மை ஒப்படைத் துக் கொண்டாலும்கூட, பாரதிதாசன் தமிழுக்கு, தமிழக மக்களுக்கு ஆற்றியிருக்கின்ற தொண்டு கொஞ்ச நஞ்சமல்ல. அப்படிப்பட்ட பெரும் புரட்சிக்காரராக அவர் விளங்கினார்.

அதனால்தான் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் என்ற பெயர் அவருக்கு நிலைத்தது. யார் யாரோ அந்தப் புரட்சியை வைத்துக் கொண்டு பெயர் சொல்லிப் பார்த்தாலும் கூட, அது நம்முடைய கவிஞரை விட்டு இன்னும் பிரியவில்லை, பிரியவும் பிரியாது, பிரியவும் முடியாது.

தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது - தமிழை நேசித்தவர் மாத்திரமல்ல; பூசித்தவராகவும், தமிழுக்கு தனிப்பெரும் சிம்மாசனம் போடப்பட வேண்டும் என்று கருதியவராகவும், அதே நேரத்திலே தொழிற்சங்கங்களில் ஈடுபாடு உள்ளவராகவும் இருந்து, தேசியத்திலே பெரும் பற்றுக் கொண்டு விளங்கியவர் தமிழ்த் தென்றல் திரு.வி. கல்யாண சுந்தரனார். அந்தத் தென்றல் பெயரை கொண்ட விருதை பேராசிரியர் அ. அய்யாசாமி அவர்கள் பெற்றிருக்கின்றார்கள். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் பெயரால் உள்ள விருது முனைவர் இரா. மதிவாணன் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. முனைவர் மதிவாணன் அவர்களை நான் அவ ருடைய நூல்களின் மூலம் அறிவேன். நான் எழுதிய காலப் பேழையும், கவிதைச் சாவியும் என்ற இலக்கியம் போன்ற ஒரு வரலாற்று நூல் - வரலாறென்றால் ஆரம்ப காலம் உலகம் தோன்றியது முதல், இதுவரை உள்ள நிலைகளைச் சித்தரிக்கும் நூல் காலப் பேழையும், கவிதைச் சாவியும். காலத்தைப் பேழையாக ஆக்கி, என்னுடைய கவிதைகளைச் சாவிகளாக ஆக்கி, அதைத் திறந்து திறந்து எடுத்துத் தந்த பல கருவூலங்கள் அந்தப் புத்தகத்திலே உண்டு.

அதற்கு எனக்குப் பெரும்பகுதி உதவியவர், நேரடியாக அல்ல, அவர்கள் எழுதிய நூல்களின் வாயிலாக உதவியவர். அந்த நூல்களில் இருந்துதான் நான் மேற்கோள் காட்டியிருக்கின் றேன். முனைவர் இரா. மதிவாணன் அவர்களுக்கு முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் பெயரால் உள்ள விருதை வழங்குகின்றோம்.

பரிசுத் தொகை அதிகரிப்பு

விருது பெற்றவர்களையெல்லாம் நான் வாழ்த்து கின்றேன். பொதுவாக ஒவ்வொரு திருவள்ளுவர் நாளிலும், புதிய அறிவிப்புகள் சிலவற்றை அரசின் சார்பில் செய்வது உண்டு. அது விருது பெற்ற வர்களுக்கு சற்று ஆதாயமாக, மகிழ்ச்சி தரக்கூடிய தாக, பெருமகிழ்ச்சி என இல்லாவிட்டாலும், மகிழ்ச்சி அரும்பக்கூடியதாக அமையும் என்பதால் அவைகளை நான் நிதியமைச்சருடைய, ஏனென்றால் நிதியைக் கேட்காமல் எதுவும் செய்ய முடியாது - கருத்தினை அறிந்து அதன் வாயிலாகச் சொல்லு கிறேன்.

நூலாசிரியர்களுக்கு 72ஆம் ஆண்டு 2000 ரூபாயாக இருந்தது,
1991ஆம் ஆண்டு அந்தத் தொகை 5000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
1998 இல் பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தப் பட்டது.
2008 இல் இருபதாயிரம் ரூபாயாக உயர்த்தப் பட்டது.

இப்படிப் படிப்படியாக உயர்த்திய இந்த அரசு, இனி, இன்று முதல் சிறந்த நூலாசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இருபதாயிரம் ரூபாய் என்பதை மேலும் பத்தாயிரம் ரூபாய் உயர்த்தி, முப்பதாயிரம் ரூபாயாக வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். (கைதட்டல்).

அந்த மேலும் பத்தாயிரம் ரூபாய் என்பதை நாளைக்கே அவர்களுக்கு காசோலை மூலமாக வழங்கப்படும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

நூல்களை வெளியிடுகின்ற பதிப்பகத்தாருக்கு 5000 ரூபாய் தான் இப்போது வழங்கப்பட்டு வருகிறது. இப்போதெல்லாம் நூல்களை அச்சடிக் கின்ற பதிப்பகத்தார் வெளிநாட்டுப் பதிப்பகங் களுக்கு நிகராக தமிழ்நாட்டிலே உள்ள பதிப்ப கங்கள் மெருகேறியிருக்கின்றன. அவ்வளவு அழ காக புத்தகங்களை வெளியிடுகின்றன.

முன்பெல் லாம் ஒரு அட்டை, உள்ளே பழுப்பு நிறத்திலே தாள் - இதை வைத்துக் கொண்டு புத்தகம் தயாரித்து ஒரு ரூபாய்க்கு, இரண்டு ரூபாய்க்கு விற்ற புத்தகங்கள் இன்றைக்கு கொஞ்சம் விலை அதிகமானாலும் நிலை உயர்ந்து பளபளப்பு கூடி படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை உருவாக்குகின்ற அளவுக்கு மாண வர்களும் மகளிரும், பெரியவர்களும் விரும்பிப் படிக்கின்ற அளவிற்கு புத்தகங்கள் இன்றைக்கு வெளி வருகின்றன. அந்த அளவில் பதிப்பகத்தா ருக்கு இப்போது வழங்கப்பட்ட பரிசுத் தொகை 5000 ரூபாய் என்பதை 10000 ரூபாயாக இனி வழங்கப்படும் (கைதட்டல்) என்பதையும் தெரி வித்துக் கொள்கிறேன்.

இப்படி பரிசுகளை வழங்கியும், விருதுகளையும் வழங்கி அவர்களை யெல்லாம் கவுரவப்படுத்தியதாக அவர்கள் கருதிக் கொள்ளக் கூடாது. எங்களை நாங்கள் கவுரவப்படுத்திக் கொள்வதற்காக இந்தக் காரியத்தைச் செய்தோம், செய்கிறோம் என்பதை எடுத்துக் கூறி

இந்த விழாவிலே கலந்து கொண்டு மலர்ந்த முகத்தோடு இந்த விழாவை சிறப்பித்த உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்து விடைபெறுகிறேன்.

வ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார். செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி வரவேற்றார், செய்திதுறை செயலாளர் சிவகுமார் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment