மு. கருணாநிதி
முதல் அமைச்சர்
தலைமைச் செயலகம்
சென்னை - 600 009
நாள்: 04-01-2011
திராவிடர் கழகம், விஜயவாடா நாத்திகர் மய்யம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் இணைந்து, உலக நாத்திகர் மாநாட்டை திருச்சிராப்பள்ளியில், ஜனவரி 7 ஆம் நாள் முதல் 9 ஆம் நாள்வரை நடத்த ஏற்பாடு செய்துள்ளதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
மாபெரும் சமூகப் புரட்சியாளரான தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்களின் பகுத்தறிவுக் கருத்துகளால் தமிழ்நாடு பக்குவப்படுத்தப்பட்டுள்ளது. சுயமரியாதை இயக்கம், பின்னர் திராவிடர் கழகம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகங்களினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்படி, சமூக முன்னேற்றச் சட்டங்கள் பல தமிழ்நாட்டில் தி.மு.க. அரசினால் இயற்றப்பட்டுள்ளன. நமது பேரன்புக்குரிய தலைவரும், பெரியார் அவர்களின் தலைமைச் சீடருமான பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் 1967 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று அமைக்கப்பட்ட ஆட்சியால், பெரியாரால் அறிமுகப்படுத்தப்பட்ட, மதச் சடங்குகள் அற்ற சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்பதற்கான சட்டமியற்றப்பட்டது. 1929 இல் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, பெற்றோரின் சொத்துகளில் பெண்களுக்கும் சமபங்கு பெற உரிமை உண்டு என்பதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. சமூக நீதிக் களத்தில், ஒட்டு மொத்த இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் தொடர்ந்து வழிகாட்டும் முன்மாதிரியான மாநிலமாக விளங்குகிறது.
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள இத்தகைய அரிய சமூக மாற்றங்களுக்கும், கல்வியில் தமிழ்நாடு பெற்றுள்ள முன்னேற்றத்துக்கும், பெரியார் அவர்களும், அவரால் தொடங்கப்பட்ட இயக்கமும் பெரும் அளவு காரணமாகும். தந்தை பெரியார் அவர்களின் மனிதநேயக் கொள்கைகளுக்காகவும், பணிகளுக் காகவும் தி.மு.க. ஆட்சியே அவருக்குக் காணிக்கையாக்கப்பட்டுள்ளது.
இந்த உலக நாத்திகர் மாநாடு தந்தை பெரியார் அவர்களின் மண்ணில் நடத்தப்படுகிறது. கடவுள் மற்றும் மதத்தின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்கள் தமிழ்நாட்டில் விழிப்புணர்வு பெற்று உயர்வு பெற்றுள்ளதற்குப் பெரிதும் காரணமாக அமைந்தது தந்தை பெரியார் அவர்கள் கண்ட இயக்கமேயாகும். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக தந்தை பெரியார் அவர்களின் பெருமைக்குரிய கருத்துகள் பல்வேறு நாடுகளிலும் பரவ வேண்டும். நாத்திக நன்னெறி வாழ்க்கையே அனைத்து மக்களின் சமத்துவத்திற்கும், அவர்களுக்கான சம வாய்ப்புகளுக்கும் அழைத்துச் செல்லும் பாதையாகும். பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கருத்துகள் உலக மயமாக்கப்பட வேண்டும். இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பல்வேறுபட்ட அனைத்துலக, அகில இந்திய நாத்திக, பகுத்தறிவாளர், மனித நேய அமைப்புகளின் தலைவர்களும், பேராளர்களும், மனித குல முன்னேற்றத்திற்கான மனிதநேயக் கொள்கை களைப் பரப்பும் தூதுவர்களாக செயல் படவேண்டும்.
பயன்நிறைந்த முற்போக்குக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் இந்த மாநாட்டின் நோக்கத்தை வெற்றி பெறச் செய்ய இருக்கும் அனைத்துப் பேராளர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியான இம்மாநாட்டினை நடத்தும், எனது அருமை இளவல் திராவிடர் கழகத் தலைவர் திரு.கி.வீரமணி அவர்களுக்கும், ஒட்டு மொத்த நாத்திகச் சகோதர அமைப்புகளுக்கும், தலைவர்களுக்கும், பேராளர்களுக்கும் எனது இதய பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- மு.கருணாநிதி
No comments:
Post a Comment