கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, January 26, 2011

2ஜி அலைக்கற்றைப் பிரச்சினை மக்கள் நலனுக்கான திட்டங்கள் இழப்பாகுமா? - அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் முதலமைச்சர் கலைஞர் கடிதம்


மக்கள் நலனுக்காகச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான செலவை இழப்பு என்று கூற முடியுமா என்ற வினாவை எழுப்பியுள்ளார் முதலமைச்சர் கலைஞர்.

2 ஜி அலைக்கற்றை தொடர்பாக முதலமைச்சர் கலைஞர் முரசொலியில் 25.01.2011 அன்று எழுதியுள்ள கடிதத்தில் எழுதியுள்ளதாவது:

உடன்பிறப்பே,

ஸ்பெக்ட்ரம் விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் பா.ஜ.க தலைவர் தலைமையிலே உள்ள பொதுக் கணக்குக் குழுவும் அதைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கின்றது. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட நீதியரசர் சிவராஜ் பட்டீல் தலைமையிலான குழுவும் அதைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கின்றது.

மத்திய அரசின் சி.பி.அய். பிரிவும், அமலாக்கப் பிரிவும் உச்சநீதி மன்றத்தின் கண்காணிப்பில் தனித்தனியாக இது பற்றி விசாரித்துக் கொண்டிருக்கின்றன. அதற் கிடையில் பலரும் அதைப்பற்றி கருத்துத் தெரி விக்கின்றார்கள். இந்த நிலையில் இதைப் பற்றி பெரிய அளவில் நான் எந்தக் கருத்துகளையும் தெரிவிக்காத நிலையில், சிலபேர் அதைப் பெரிது படுத்திக் கூறுகிறார்கள், எழுதுகிறார்கள்.

இந்தப் பிரச்சினையை மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரித்து வரும் நிலையில் - வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ள சூழ்நிலையில் நாமாக வலிந்து எதையும் தெரி விப்பது நல்லதல்ல என்ற எண்ணத்தோடுதான் நான் இதிலே எதையும் சொல்லாமல் இருந்தேன்.

ஆனால் எதிர்க்கட்சிக்காரர்கள் இந்தப் பிரச் சினையை பூதாகரமாக்கி அரசியல் நடத்த விரும்பி, மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்திப் பிரச்சாரமாகச் செய்ய நினைப்பதால், அதற்குப் பதில் சொல்ல நினைக்கிற கழக உடன்பிறப்புகள், இதிலே தெளிவாக இருக்கவேண்டுமென்பதற்காக சில வற்றை விளக்கிட விரும்புகிறேன்.

வெறும் அனுமானம்


தணிக்கைக் குழு அறிக்கையில் - 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு என்று சொல்லும்போதே -அனுமானத்தின் அடிப்படையில்தான் அந்த அளவிற்கு இழப்பு என்றுதான் presumptive என்ற வார்த்தையையே சொல்லியிருக்கின்றது.

ஆனால் உடனே எதிர்க் கட்சிக்காரர்கள் அந்தத் தொகை யையே லஞ்சம் என்றும், ஊழல் என்றும் பிரச்சாரம் செய்தார்கள், செய்கிறார்கள். இப்படி நடந்திருந்தால், அரசாங்கத்திற்கு இவ்வளவு வருவாய் வந்திருக்கக் கூடும் என்று - சில மேற்கோள்களைக் காட்டி, ஊழல் என்கிறார்கள். ஓர் உதாரணம் கூறுகிறேன்.

24-1-2011 அன்று சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளர், அறநிலையத் துறை அமைச்சர் தம்பி பெரியகருப்பன் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டேன்.

திருமணம் நடந்த இடம், பெருந் தலைவர் காமராஜர் பெயரால் உள்ள காமராஜர் அரங்கம். அந்த விழாவில் நம்முடைய முன்னாள் அமைச்சர் தம்பி செ.மாதவன் மணமக்களை வாழ்த்தும்போது,

பெரியகருப்பனுக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டும் வகையில் இதோ, இந்த மண்டபத்தில் லட்சோப லட்சம் மக்கள் கூடியிருக்கிறீர்கள் என்று குறிப்பிட்டார். அப்போது நான் என்னருகே அமர்ந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு ப.சிதம்பரம் அவர்களிடம் சிரித்துக் கொண்டே சொன்னேன்.

இப்படித்தான் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையிலும் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் என்றெல்லாம் சொல் கிறார்கள். உலகமறிந்த, படித்துத் தெளிந்த முன்னாள் அமைச்சர் நண்பர் மாதவனே இந்த அரங்கத்திலே மக்களை அடைத்து வைத்தாலும் பத்தாயிரம் பேருக்கு மேல் நிற்க முடியாது என்பது தெரிந்திருந்தும் கூட - பேசும்போது லட்சோப லட்சம் பேர் என்று இங்கே கூறுகிறார். இப்படித் தான் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையிலும் லட்சம், ஆயிரம், கோடி ஊழல் என்று உத்தேசமாக எண்ணிக்கையைப் பெருக்கிக் கூறுகிறார்கள் போலும் என்று சொன்னேன்.

மத்திய அமைச்சர் கபில்சிபல் அவர்கள் திட்ட வட்டமாக 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இந்த அளவிற்கு இழப்பே இல்லை என்று சொல்லியிருக்கிறார். அவர் கூறும்போது, 1999ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது,

பா.ஜ.க. ஆட்சியில் அவர்கள் கொண்டு வந்த தொலைத் தொடர்புக் கொள்கையால், ஏலம் விடாமல், உரிமம் வழங்கியதால் அரசுக்கு ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அதிகாரப் பூர்வமாகத் தெரிய வந்துள்ளது என்றார். இதே கருத்தைத்தான் திட்டக் குழுவின் துணைத் தலைவராக உள்ள திரு.மாண்டேக்சிங் அலுவாலியா அவர்களும் தெரிவித்திருக்கிறார்.


ஏலத்தில் விட்டிருந்தால், இந்த அளவிற்கு வருவாய் வந்திருக்கும் என்று அனுமானித்து குற்றச்சாற்று சொல்லப்படுகிறது. ஏலத்தில் ஏன் விடப்படவில்லை என்பதற்கான விளக்கமும் பலராலும் தரப்பட்டுவிட்டது. தொலைத் தொடர்புத் துறையிலே மக்களுக்கு சலுகைகளை அளிக்க வேண்டாம் என்று கருதியிருந்தால் - யாராவது ஏலம் எடுத்து மக்களிடமிருந்து அதிகத் தொகையை வசூலிக்கட்டும் என்று நினைத்திருந்தால் - அலைக் கற்றை ஒதுக்கீட்டின் வாயிலாக இந்த இழப்பு வந்திருக்காது. மாறாக லாபம் கூட வந்திருக்கும்!

மக்கள் நல அரசின் செயல்பாடுகள்


மக்கள் நல அரசு என்கிறபோது அந்த அரசு வணிக நோக்கத்தோடு, லாபம் ஈட்டுவதையே நோக்கமாகக் கொண்டு நடைபெறாது. சமூக நன்மையைக் கருத்தில் கொண்டு அரசு நடைபெற வேண்டுமே தவிர; நிதி இழப்பு - மிச்சம் என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு நடைபெறுவது நல்லதல்ல. உதாரணமாக ஆறாவது ஊதியக் குழுவினை மத்திய அரசு அறிவித்தபோது அதை முதன்முதலாக தமிழ்நாட்டில் நடை முறைப்படுத்தினோம். அதற்கான செலவு மட்டும் 5500 கோடி ரூபாய்.

ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் போன்ற திட்டத்திற்காக உணவு மானியமாக 4000 கோடி ரூபாய் அரசு செலவிடுகிறது.

கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்காக 2250 கோடி ரூபாய் செலவிடுகிறது. மின் வாரியத்திற்காக 1674 கோடி ரூபாய் மானியமாக செலவிடுகிறது. முதியோர் உதவித் தொகைக்காக 1419 கோடி ரூபாய் செலவிடுகிறது.

சத்துணவுத் திட்டத்திற்காக 1185 கோடி ரூபாயும் - கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திற்காக 765 கோடி ரூபாயும் - கர்ப்பிணிகளுக்கு தலா ஆறாயிரம் ரூபாய் வீதம் நிதி உதவி அளிப்பதற்காக 360 கோடி ரூபாயும் - திருமண உதவித் திட்டத்திற்காக 302 கோடி ரூபாயும் - பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்காக 240 கோடி ரூபாயும் - பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க பயிற்சித் திட்டத்திற்காக 276 கோடி ரூபாயும் அரசின் சார்பில் மக்களுக்கு வழங்கிட வேண்டுமென்ற எண்ணத்தோடு செலவிடப்படுகிறது.

இவற்றையெல்லாம் சேர்த்தால் ஓர் ஆண்டிற்கு 17,921 கோடி ரூபாய் அரசின் சார்பில் செலவழிக்கப்படுகிறது.

இந்தத் திட்டங்களையெல்லாம் அரசு நடை முறைப்படுத்தாமல் - மக்கள் எப்படி வாழ்ந்தால் என்ன என்று இருந்தால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக செலவே ஏற்பட்டிருக்காது. இந்த 17 ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு என்று யாராவது கூற முடியுமா?

மத்திய அரசை எடுத்துக் கொண்டால் 2010-2011ஆம் ஆண்டில் உணவு மானியமாக 55 ஆயிரத்து 578 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறது. உர மானியத்திற்காக மத்திய அரசு தரக்கூடிய தொகை 49 ஆயிரத்து 980 கோடி ரூபாய். கல்வி வளர்ச்சிக்காக 29 ஆயிரத்து 483 கோடி ரூபாய். இவைகள் எல்லாம் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு களா?

நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் முன் விசாரணைக்காக ஆஜரான தலைமை தணிக்கை அதிகாரி ஆதாரம் ஏதுமின்றி அனு மானத்தின் அடிப்படையிலேயேதான் இந்த இழப்பைச் சொல்லியிருப்பதாக உறுதிப் படுத்தினார்.

வெவ்வேறு கோணத்தில் இழப்பு ஏதேனும் ஏற்பட்டிருக்குமா என்றுதான் கணக்குப் போட்டுப் பார்த்ததாகவும்-அதிலே ஒரு கோணத்தில்-வெறும் 57 ஆயிரத்து 666 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே அரசுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாகத் தெரியவந்தது என்றும் தணிக்கை அதிகாரி கூறியிருக்கிறார். தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த அருண் ஷோரி அவர்கள், வெறும் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குத்தான் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்றும் சொல்கிறார்.

(Arun Shourie, Former Union Minister for Communications advised the media not to run after the “hypothetical figure of loss (Rs. 1.76 lakh crore) to the exchequer” mentioned by the CAG. Te realistic figure, he said, could be around Rs.30,000 crores- The Hindu dated 19.12.2010)

இந்த இழப்பினை எப்படி வெவ்வேறு வித மாக ஒவ்வொருவரும் கணக்கிடுகிறார்கள்? 2 ஜி அலைக்கற்றை வரிசையை - தற்போது 3 ஜி அலைக் கற்றை வரிசையை ஏலம் விட்டது போல, ஏலம் விட்டிருந்தால் எவ்வளவு கிடைத்திருக்கும் என்று கணக்கிட்டு - அந்த அடிப்படையில் கூறுவதுதான் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்பது ஒரு வாதம்! இந்த உரிமத்தை 1650 கோடி ரூபாய் வீதம் கொடுத்ததற்கு மாறாக, எனக்குக் கொடுத் திருந்தால் நான் 6 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத் திருப்பேன் என்று ஒருவர் சொல்கிறார்.

அதைக் கணக்கிலே கொண்டு பார்த்தால், அப்போது 58 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கும். இப்படி வெவ்வேறு முறைப்படி கணக்கிட்டுப் பார்த்துத்தான் இழப்புத் தொகை வெவ்வேறாகச் சொல்லப்படுகிறது!

அதனால்தான் தணிக்கை அதிகாரியின் அறிக்கை யின் இறுதியில் - இழப்பு எவ்வளவு என்பது It can be debated என்று அதாவது இது விவாதத்திற்குரியது என்று கூறப்பட்டுள்ளது.

3 ஜி அலைக்கற்றை வரிசையைப் போல - 2 ஜி அலைக்கற்றை வரிசையிலும் ஒரே அளவிற்கு வருவாய் கிடைத்திருக்கும் என்று அனுமானம் செய்கிறார்களே, இரண்டு அலைக்கற்றை வரிசைகளும் ஒரே மாதிரியானதா என்றால் இல்லை. 2 ஜி அலைக்கற்றை வரிசையில் செல் தொலை பேசியில் பேசும்போது ஒலி மட்டும்தான் கேட்கிறோம்.

ஆனால் 3 ஜி அலைக்கற்றை வரிசை செல்போனை உபயோகிக்கும் போது நீங்கள் யாருடன் பேசுகிறீர்களோ அவர்களின் முகங்களே நேரில் தெரியும். அதிலே வீடியோ பார்ப்பது போல பார்க்கலாம். 2 ஜி அலைக்கற்றை 4.2 மெகா ஹெர்ட்ஸ் வேகம் கொண்டது; ஆனால் 3 ஜி.யோ 6.4 மெகா ஹெர்ட்ஸ் வேகம் கொண்டதாகும். 2 ஜி அலைக் கற்றை வரிசையைவிட உயர்வானது 3 ஜி அலைக்கற்றை என்பதையும் மறந்துவிடக் கூடாது, மறைத்துவிடக் கூடாது.

நாடாளுமன்ற உறுப்பினர் குழுவால் பலன் உண்டா?

நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஒன்றுதான் முடிவு என்று பா.ஜ.க.வும், ஜெயலலிதாவும் கூறுகிறார்கள். 1992ஆம் ஆண்டு ராணுவத்திற்கு தளவாடங்கள் வாங்கியது பற்றிய ஊழல் - 1992ஆம் ஆண்டு சவப்பெட்டி வாங்கியது - 2001ஆம் ஆண்டு நடந்த பங்கு மார்க்கெட் ஊழல்- 2003ஆம் ஆண்டு கோகோ கோலாவில் பூச்சி மருந்து தொடர்பான குற்றச்சாற்று போன்றவைகளுக்காக நாடாளுமன்ற கூட்டுக் குழு தான் விசாரணை நடத்தியது. எந்தப் பலனும் அப்போது ஏற்படவில்லை.

தற்போது பொதுக் கணக்குக் குழு ஸ்பெக்ட்ரம் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கின்றது. பொதுக் கணக்குக் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான். கூட்டுக் குழுவின் உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப் பினர்கள்தான். பொதுக் கணக்குக் குழுவிற்குத் தலைவர் எதிர்க் கட்சியான பா.ஜ.க.வைச் சேர்ந்தவர். கூட்டுக் குழு அமைக்கப்பட்டால் அதற்குத் தலைவ ராக ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்தான் இருப்பார்.

ஆனால் பா.ஜ.க.வும், ஜெயலலிதாவும் கூட்டுக் குழுதான் விசாரிக்க வேண்டும், பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் தலைவராக உள்ள பொதுக் கணக்குக் குழு விசாரணை தேவையில்லை என்கிறார்கள். மேலும் இதுவரை தணிக்கைக் குழு அறிக்கையின் மீதான விசாரணையை பொதுக் கணக்குக் குழுதான் விசாரிக்கும். அந்த நடைமுறையை மீறி தற்போது வேண்டுமென்றே தனியாகக் கூட்டுக் குழு வேண்டுமென்று கோருகிறார்கள்.

ஒரு காலத்தில் இந்தச் செல்போன் அறிமுகப் படுத்தப்பட்டபோது இந்தக் கருவியின் விலை 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தது. இப்போது முனியன், முத்தன் என்று சாதாரணமானவர்கள் கூட செல்போன் வைத்திருக்கிறார்கள். ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் ரூபாய்க்கே செல் போன்கள் கிடைக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன் தம்பி ராஜா பதவியேற்ற போது செல்போன்களைப் பயன்படுத்தியவர்கள் எண்ணிக்கை 30 கோடி பேர். தற்போது பயன்படுத்துவோர் எண்ணிக்கை 73 கோடி பேர். தொடக்கத்தில் செல்போன்களை ஒருவர் பயன்படுத்தினால் அதாவது முன்பு ஒரு முறை பேசினால் - அழைப்பவர் 16 ரூபாய் கட்ட வேண்டும் - அழைக்கப்பட்டவர் 8 ரூபாய் செலுத்த வேண்டும். இப்போது ஒரு நிமிடம் பேசினால் 40 காசு, 30 காசு என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது மேலும் குறையக் கூடும் என்று சொல் கிறார்கள்.பொதுமக்கள்தானே பயன் அடை கிறார்கள். உதாரணமாக செல்போன் உபயோ கிக்கும் ஒவ்வொருவரிடமிருந்தும் செல்போன் நிறுவனங்கள் பெறும் வருவாய் மாதம் ஒன்றுக்கு ரூபாய் 340 ஆக இருந்தது, தற்போது ரூபாய் 120 ஆகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக செல்போனை உபயோகிக்கும் ஒவ்வொருவருக்கும் மாதம் ஒன்றுக்கு 220 ரூபாய் அளவிற்கு சேமிப்பு கிடைக்கின்றது. அதாவது பொது மக்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு மட்டும் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 720 கோடி ரூபாய் சேமிப்பாகும். இதுவும் ஒரு அனுமானம்தான்!

தொலைத் தொடர்புத் துறை சார்பாக எடுக் கப்பட்ட முடிவு 2011ஆம் ஆண்டுக்குள் 600 மில்லியன் மக்களுக்கு இந்தத் தொலைத் தொடர்பு பயன் சென்றாக வேண்டும் என்பதாகும். ஆனால் இதற்குள் தொலைத் தொடர்பு பயன் கிடைத் திருக்கும் மக்களின் எண்ணிக்கை 720 மில்லியன் என்பதாகும்.

ஏலம் ஏன் விடவில்லை என்று ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. ஏன் ஏலம் விடப்படவில்லை என்றால் ஏலம்விடத் தேவையில்லை என்று தொலைத் தொடர்புத் துறைக்கு ஆலோசனை கூறுகின்ற அதிகாரத்தில் உள்ள டிராய் என்ற அமைப்பு சொல்லியிருக்கிறது.

பா.ஜ.க ஆட்சியில்...

1994ஆம் ஆண்டு, இந்திய அரசு ஒரு புதிய தொலைத் தொடர்புக் கொள்கையை வகுத்தது. அதன்படி ஏல முறையில்தான் இந்த உரிமம் வழங்கப்பட்டது. அதிகத் தொகைக்கு சிலர் ஏலம் எடுத்தார்கள். ஆனால் அவர்களால் அதனை நடத்த முடியவில்லை. மக்களுக்கு தொலைத் தொடர்பு வசதியும் சரியாகக் கிடைக்கவில்லை. எனவே பா.ஜ.க. ஆட்சியில், 1998ஆம் ஆண்டு அமைச் சர்கள் குழு ஒன்றை அமைத்து புதிய தொலைத் தொடர்புக் கொள்கை ஒன்றை வகுத்தார்கள்.

அந்தக் கொள்கையில், இனி இது மாதிரி ஏலம் விட வேண்டாம், மக்களுக்கு தொலைத் தொடர்புச் சேவை கிடைக்க வேண்டும், எனவே முதலில் வருபவர்களுக்கு முதலில் உரிமம் வழங்கலாம் என்ற முடிவினை எடுத்தார்கள். எனவே இந்த முடிவினை தம்பி ராஜாவே தன்னிச்சையாக எடுத்துச் செயல் படுத்தினார் என்பது தவறான வாதமாகும். 2001-க்குப் பின்பு, ராஜா பதவியேற்ற மே 2007 வரை ஏல முறை எந்த அமைச்சராலும் பின்பற்றப் படவில்லை.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற வகையில் ராஜா உரிமங்களைக் கொடுத்து விட்டார் என்பது ஒரு குற்றச்சாட்டு. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்னும் கொள்கை பா.ஜ.க. ஆட்சியில் வகுக்கப்பட்ட தேசிய தொலைத் தொடர்புக் கொள்கையின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டதாகும். அப்போது அமைச்சராக இருந்தவர் பிரமோத் மகாஜன் அவர்கள். அவரைத் தொடர்ந்து அருண்ஷோரி அவர்கள். அவர்கள் எல்லாம் எந்த முறையைப் பின்பற்றி இந்த உரிமங்களை வழங்கினார்களோ, அதே நடைமுறைதான் தொடர்ந்து கடைப் பிடிக்கப்பட்டது.

பொதுமக்களை ஏமாற்றும் வேலை

உடன்பிறப்பே, இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் இதையெல்லாம் மறைத்துவிட்டு, கண்ணை மூடிக்கொண்டு ஸ்பெக்ட்ரம், ஒரு லட்சத்து 76 ஆயிரம்கோடி ரூபாய் ஊழல் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்ற நினைக் கின்றார்கள். இதிலே இந்தத் துறையின் அமைச்ச ராக இருந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக தம்பி ராஜா மீது பழியைப் போடுகிறார்கள்.

இந்தப் பிரச்சினை எழுந்தபோதே செய்தியாளர்கள் 8-12-2010 அன்றே அதைப் பற்றி என்னிடம் கேட்ட போது, ராஜா குற்றவாளி என்று நிரூபிக்கப் பட்டால், அதற்குப் பிறகு கட்சி தயவு தாட்சண்யம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கும் என்று கூறியிருக்கிறேன். இந்த அளவிற்கு தி.மு.கழகம் உறுதியாக இருக்கும்போது, வேறு எந்தக் குற்றச்சாட்டுகளும் தி.மு. கழகத்தின் மீது சாற்று வதற்கு இல்லாத காரணத்தால் இதை ஒன்றையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக் கிறார்கள். மக்களை எப்படியாவது குழப்பத்தில் ஆழ்த்த முடியாதா என்று எண்ணுகிறார்கள்.

ஆனால் அவர்களின் எண்ணம் ஈடேறாது.

அன்புள்ள,
மு.க.

No comments:

Post a Comment