கலைஞர் அரசு ஆதிதிராவிடர் நலனுக்காக சிறப்புத் திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றி வருகிறது என்றும், ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி உரிய முறையில் அவர்களுக்கு மட்டுமே செலவிடப்படுகிறது எனவும் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள தவறான செய்திக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்த அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-
தமிழ் நாளிதழ் (தினமலர்) ஒன்றில் ஆதிதிராவிடர் களுக்கான நிதி இலவசத் திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது என ஒரு தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் சமுதாயத்தினர் எழுச்சிபெற வேண் டும், ஏனைய சமுதாயங்களைச் சார்ந்த மக்களுக்கு இணையாக அவர்கள் முன்னேற்றம் அடைந்திட வேண்டும் என்பதற்காகச் சிறப்பான பல திட்டங்கள் உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட வேண்டும் எனும் முனைப்போடு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையோடு இணைந்திருந்த ஆதிதிராவிடர் நலத்துறையை, 1969ஆம் ஆண்டில் தனியே பிரித்து, ஆதிதிராவிடர் நலனுக்காகவே செயல்படும் நிலையை உருவாக்கிய தி.மு.க. அரசு, 1971ஆம் ஆண்டில் ஆதிதிராவிடர் நலனில் மேலும் சிறப்புக் கவனம் செலுத்திட வேண்டி, தனியாக, ஆதிதிராவிடர் நல அமைச்சகத்தையும் உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து ஆதிதிராவிடர் நலனுக்காக மேற் கொள்ளப்பட்ட பல திட்டங்கள் இன்றளவும் அவர்கள் முன்னேற்றத்தைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. ஆதிதிராவிடர் துணைத் திட்டம், தமிழகத்தில் மிகவும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டமானது, ஆதிதிராவிட மக்கள் தொகை விகிதாச் சாரத்திற்கேற்ப ஆண்டுத் திட்ட நிதியில் (Anual Pla Outlay) ஒதுக்கீடு செய்து நடைமுறைப் படுத்தப்படு வதாகும். 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் ஆதிதிராவிடர் மக்கள்தொகை 19 விழுக்காடு ஆகும். இத்திட்டம், தமிழகத்தில் 1980-81ஆம் ஆண்டு முதல் ஆதிதிராவிட மக்களின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டினை உயர்த்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 2005-2006ஆம் ஆண்டில், 554 கோடியே 82 லட்சம் ரூபாயாக இருந்த நிதிஒதுக்கீடு, 2010-2011ஆம் ஆண்டில் 3 ஆயிரத்து 828 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது இந்த ஆண் டின் மொத்த ஆண்டுத் திட்ட ஒதுக்கீட்டில் 19 விழுக்காடு ஆகும். இத்தொகையானது, துணைக் கணக்குத் தலைப்பு 789இன் கீழ் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்நிதியை வேறு திட்டத்திற்கு மாற்ற இயலாது. இத்தொகை முழுதும் ஆதிதிராவிட மக்களுக்கே செலவிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டங் களின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களைக் கண்காணிக்க தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில், மாநில அளவிலான கண்காணிப்புக் குழு 6.10.2010 அன்று அமைக்கப்பட்டு, அக்குழுவின் முதல் கூட்டம் 9.12.2010 அன்று கூடி ஆதிதிராவிடர் நலனுக் காகச் செயல்படுத்தப் படும் திட்டங்களை ஆய்வு செய்தது. அந்த ஆய்வின் போது தெரிவிக்கப்பட்ட திட்டச் செயலாக்கத்தில் உள்ள சில திட்டங்களில் ஏற்பட்டிருந்த குறைந்த அளவு முன்னேற்றம் குறித்து, 23.12.2010 அன்று மீண்டும் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரைகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டு, பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
இதுவரை 2 ஆயிரத்து 89 கோடிரூபாய் செலவிடப்பட்டுள்ளது
நடப்பாண்டில், இத்துணைத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 3 ஆயிரத்து 828 கோடி ரூபாயில், நவம்பர் 2010 வரை, 2 ஆயிரத்து 89 கோடி ரூபாய், அதாவது 55 சதவிகிதத் தொகை ஆதிதிராவிடர் நலனுக்காக மட்டுமே செலவிடப்பட்டுள்ளது; வேறெந்தப் பணிகளுக்கும் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எஞ்சிய தொகை இந்நிதியாண்டிற்குள் முழுவதுமாகச் செலவிடப்பட்டுவிடும். மேலும், ஆதிதிராவிடர் நலத் துறைக்கு 2010-2011இல் ஒதுக்கப்பட்ட நிதியில், 81 விழுக்காடு நிதியான 720 கோடியே 44 இலட்சம் ரூபாய் கல்விசார்ந்த திட்டங்களுக்காக மட்டுமே செலவிடப்பட்டு வருகிறது. இதில், 200 கோடி ரூபாய்க்கு மேலாக உயர் கல்விக்கான (Post Matric) உதவித் தொகையாக வழங் கப்படுகிறது. இந்நிலையில், மொத்த நிதியில் ஆதிதிரா விடர் உயர் கல்விக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி வெறும் 22 கோடி ரூபாய்தான் என்பது மிகவும் தவறான தகவலாகும். தமிழகத்தில், ஆதிதிராவிடர் துணைத்திட்டம் மற்றும் பழங்குடியினர் துணைத்திட்டங்களின் செயல்பாடுகளில் மனநிறைவு கொண்ட மத்தியத் திட்டக் குழுவானது, இத் திட்டங்களின் செயலாக்கத்திற்குத் தற்போது நடை முறையில் உள்ள மத்திய திட்டக்குழுவின் வழிகாட்டுதல் களை மறு ஆய்வு செய்வதற்காக 2010-2011இல் ஏற்படுத்தியுள்ள சிறப்புப் பணிப்பிரிவில் இடம் பெற்றுள்ள நான்கு மாநிலங்களில், தமிழகத்தின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஆதிதிராவிடர்களுக்குச் செலவிடப்பட்டுள்ள நிதி குறித்த புள்ளி விவரங்கள் மத்திய திட்டக்குழுவிற்குத் தெரிவிக்கப்படவில்லை என்ற செய்தி, உண்மைக்கு முற்றிலும் மாறுபட்டதாகும். 18.2.2010 அன்று தேசிய ஆதிதிராவிடர் ஆணைய (National Commission for Scheduled Castes) துணைத் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், ஆதிதிராவிடர் துணைத்திட்ட நிதியானது தமிழகத்தில் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக எந்த கட்டத்திலும் குறிப்பிடப் படவில்லை. மேலும், கோரப் பட்ட அனைத்துத் தகவல் களும், புள்ளிவிவரங்களுடன் ஏற்கனவே தேசிய ஆதிதிராவிடர் ஆணையத் திற்கு தமிழக அரசினால் அனுப்பி வைக்கப்பட்டு, ஆணையமும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளது.
உள்நோக்கம் கொண்ட செய்தி
ஏழை எளியோர்க்காகவே செயல்படுத்தப்படும் இலவசத் திட்டங்களுக்கெனத் தனித்தனியே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்நிலையில், ஆதி திராவிடர் நலனுக்காகத் தொடர்ந்து சிறப்புத் திட்டங்கள் பலவற்றை நிறைவேற்றிவரும் இந்த அரசு மீது அவப்பெயர் ஏற்படும் வகையில், ஆதிதிராவிடர்களுக் கான நிதி இலவசத் திட்டங்களுக்கு மாற்றப்படுவதாக வெளியிடப்பட்டுள்ள செய்தி முற்றிலும் தவறானது; உள்நோக்கம் கொண்டது; இதில் எள்ளளவும் உண்மையில்லை.
இவ்வாறு அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment