சென்னை மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகே தமிழக அரசு சார்பில் குடியரசு தினவிழா இன்று (26.01.2011) நடைபெற்றது. முதலமைச்சர் கருணாநிதி காலை 7.48 மணிக்கு விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார். 7.52 மணிக்கு கவர்னர் பர்னாலா விழா மேடைக்கு வந்தார். அவரை முதலமைச்சர் கருணாநிதி வரவேற்றார்.
கவர்னருக்கு முப்படை தளபதிகளை அறிமுகம் செய்து வைத்தார். காலை 8 மணிக்கு கவர்னர் தேசிய கொடியேற்றி வைத்தார். அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மலர் தூவியது.
கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் அணி வகுப்பு நடந்தது. முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து மகிழ்ந்தனர். இதையடுத்து ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கும், புதுடெல்லியில் நடந்த 19-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பதக்கம் பெற்ற வீரர்கள்-வீராங்கனைகளுக்கும் முதலமைச்சர் கருணாநிதி ஊக்கத்தொகையும் பதக்கங்களும் வழங்கினார். வீர தீரச்செயல் புரிந்தவர்களுக்கு அண்ணா பதக்கம், மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது, காந்தியடிகள் காவலர் பதக்கங்களையும் முதலமைச்சர் கருணாநிதி வழங்கினார். சென்னையில் நடந்த குடியரசு தினவிழாவில் அலங்கார வண்டிகளின் அணிவகுப்பு நடந்தது.
அரசு துறையை சார்ந்த 24 அலங்கார வண்டிகள் இதில் அணிவகுத்து வந்தன. அரசு திட்டங்களையும், சாதனைகளையும் விளக்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டிருந்தன. அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பினை, ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பார்த்து மகிழ்ந்தனர்.
ரயிலில் அடிபட இருந்த சிறுவனை, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய மதுரை மாவட்டத்தை சேர்ந்த ரயில்வே ஊழியர் ரே.விவேகானந்தன், மதம் கொண்ட யானையிடம் இருந்து 7 பேரின் உயிரை காப்பாற்றிய கோவையைச் சேர்ந்த வனத்துறை ஓட்டுனர் ஜெ.ரவி, பயணிகளுடன் சென்ற பஸ்சை விபத்திலிருந்து காப்பாற்றிய டெப்போ ஓட்டுனர் கன்னியாகுமரியை சேர்ந்த செ.ராஜகோபால், கடலூர் தலைமை அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு பிரிவில் ஏற்பட்ட தீயை அணைத்து நோயாளிகளை காப்பாற்றிய கடலூர் தா.ராஜேஷ்குமார் ஆகியோருக்கு ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள அண்ணா பதக்கத்தையும், ரூ.25 ஆயிரம் காசோலையையும் முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுப்பதில் சீரிய பணியாற்றும் காவலர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, தர்மபுரி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் ப.சரவணன், சென்னை மாவட்ட உதவி ஆணையர் ஆர்.கஜேந்திரகுமார், தர்மபுரி மாவட்ட காவல் ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கமும், ரூ.20 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.
செம்மொழி பூங்கா, வனத்துறை, தோட்டக்கலை சார்பில் மலர்களால் அமைக்கப்பட்டிருந்த யானை, சுகா தாரத்துறை சார்பில் வந்த படகு போன்ற வாகனங்கள் வித்தியாசமாக இருந்தன. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் இரண்டு அலங்கார வண்டிகள் குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் கலைஞர் வீடு வழங்கும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டம், அண்ணா மறு மலர்ச்சி திட்டம் போன்றவற்றை விளக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன.
இதற்கு முதல் பரிசு கிடைத்தது. தமிழக பண்பாட்டை விளக்கிய செய்தி மக்கள் தொடர்பு துறை வாகனத்துக்கு 2 வது பரிசு அறி விக்கப்பட்டது. கலைஞர் காப்பீட்டு திட்டம், 108 இலவச ஆம்புலன்ஸ் போன்ற திட்டங்களை விளக்கும் மக்கள் நல்வாழ்வு துறை வாகனம் 3 வது பரிசுக்கு தேர்வு பெற்றது.
விழாவில் இடம்பெற்ற பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் நடன நிகழ்ச்சிகளுக்கும், பரிசுகள் அறிவிக்கப்பட்டன. கிராமிய நடனம் ஆடிய சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் வெங்கடசுப்பாராவ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதல் பரிசுக்கு தேர்வு பெற்றனர். தமிழ் கலாச்சார நடனத்துக்காக நுங்கம்பாக்கம் சென்னை மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு 2 வது பரிசும், பரதநாட்டியம் மற்றும் கிராமிய நடனத்துக்காக முருக தனுஷ்கோடி மகளிர் பள்ளிக்கு 3 வது பரிசும் கிடைத்தது.
சூளைமேடு ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆறுதல் பரிசு பெற்றது. நிகழ்ச்சியில் தேசிய ஒருமைப்பாட்டு நடனம் ஆடிய பாரதி மகளிர் கல்லூரி மாணவிகள் முதல் பரிசுக்கு தேர்வு பெற்றனர். ஒயிலாட்டம் ஆடிய செல்லம் மாள் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு 2 வது பரிசு கிடைத்தது.
தமிழக பாரம்பரிய நடனம் ஆடிய எத்திராஜ் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு ஆறுதல் பரிசு அறிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment