மதுரை அமெரிக்கன் கல்லூரி பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பதற்காக, தலைமைச் செயலாளர் எஸ்.மாலதி தலைமையில் ஒரு குழு அமைத்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, தமிழக அரசு 08.01.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
மதுரை அமெரிக்கன் கல்லூரி பிரச்னை குறித்து அரசுக்கு வந்துள்ள முறையீடுகளை அடுத்து, சம்பந்தப்பட்டவர்களோடு கலந்தாலோசனை செய்து, சுமூகத் தீர்வு காண்பதற்காக தலைமைச் செயலாளர் எஸ்.மாலதி தலைமையில் ஒரு குழு அமைத்து முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார். உள்துறை முதன்மைச் செயலாளர் ஞானதேசிகன் மற்றும் உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கணேசன் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெறுவார்கள்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குழு அமைக்கப்பட்டதற்கு வரவேற்பு:
அமெரிக்கன் கல்லூரி பொறுப்பு முதல்வர் மற்றும் செயலாளர் மோகன் அறிக்கை: அமெரிக்கன் கல்லூரியில் வகுப்புகள் கடந்த ஜன. 5 முதல் சுமூகமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் சிலரது தூண்டுதலின் பேரில் ஒரு சில ஆசிரியர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்தும், மாணவர்களை வகுப்புகளுக்கு செல்லவிடாமல் இடையூறு செய்து வருகின்றனர்.
கல்லூரி சட்டவிதிமுறைகளின்படி ஓய்வுபெற்ற சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமாருக்குப் பின், கல்லூரி ஆட்சிமன்றக்குழு பரிந்துரைப்படி நான் பொறுப்பு முதல்வராக கடந்த 1.12.2010 முதல் நியமிக்கப்பட்டேன். எனது நியமனத்திற்கு கல்லூரி கல்வி இயக்குநரகமும் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலர் தலைமையில் அமைதிக் கண்காணிப்புக் குழுவை தமிழக முதல்வர் ஏற்படுத்தியுள்ளதை கல்லூரி நிர்வாகம் வரவேற்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டு காலம் சின்னராஜ் ஜோசப் முதல்வராக இருந்தபோது மாணவர்களுடைய கல்விக்கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் ஆகியவற்றை ரொக்கமாக வசூல் செய்த கல்லூரிப்பணத்தை மீட்டுத்தருமாறும், பழிவாங்கும் நோக்கோடு டிஸ்மிஸ் செய்யப்பட்ட மற்றும் பணி ஓய்வு பெற்று இன்னமும் ஓய்வூதியம் பெறாமல் உள்ள ஆசிரியர் மற்றும் ஊழியர்களின் இன்னல்களை தீர்க்கவும் இக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் சின்ராஜ்ஜோசப், சுயநிதிப்பிரிவு டீன் தரப்பினர் கூறுகையில், ‘அரசு சார்பில் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்’ என்றனர்.
No comments:
Post a Comment