கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, January 17, 2011

சட்டப்பேரவை தொடர் முழுவதும் 9 அதிமுக எம்எல்ஏ நீக்கம்


ஆளுநர் உரையின்போது பேரவையில் ரகளையில் ஈடுபட்ட 9 அதிமுக எம்எல்ஏக்களை கூட்டத் தொடர் முழுவதும் நீக்கம் செய்து சபாநாயகர் ஆவுடையப்பன் உத்தரவிட்டார்.
பேரவை 10.01.2011 அன்று காலை கூடியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பேரவைத் தலைவர் கூறியதாவது:
சட்டப்பேரவை விதி 17ன் படியும், அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு 175, 176 ஆகியவற்றின் கீழும் அவையில் ஆளுநர் உரை நிகழ்த்தும்போது, உறுப்பினர்கள் எழுந்து நின்றோ, ஆளுநர் உரைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலோ, அதற்கு இடையூறு ஏற்படும் வகையிலோ செயல்படக் கூடாது. 7ம் தேதி ஆளுநர் உரை நிகழ்த்தி கொண்டிருக்கும்போது அதிமுக, மதிமுக, மார்க்சிஸ்ட், இ.கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் ஆளுநரின் உரைக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
ஆளுநரின் அனுமதி பெற்று அவையை விட்டு அவர்களை வெளியேற்றுமாறு காவலர்களுக்கு உத்தரவிட்டேன். காவலர்கள் அவர்களை வெளியேற்ற வந்தனர். அப்போது பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள், காவலர்களிடம் வாக்குவாதத்திலும் அவர்களைத் தாக்கும் செயல்களிலும் ஈடுபட்டனர். காவலர்கள் தன் மீது வரம்பு மீறி செயல்பட்டதாக பொள்ளாச்சி ஜெயராமன்
என்னிடம் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாருக்கு ஆதாரமில்லை. எனவே விதி 17ன்படி அதிமுக உறுப்பினர்களின் செயல்பாடுகள் நடவடிக்கைக்கு உரியதாகும். இது குறித்து அவை முன்னவர் தீர்மானத்தை கொண்டு வருகிறார் என்று கூறினார்.
இதையடுத்து அவை முன்னவர் அன்பழகன் தீர்மானத்தை கொண்டு வந்து கூறியதாவது:
ஆளுநர் அவையில் உரையாற்ற தொடங்கும்போது அதிமுக, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து கூச்சலும் குழப்பமும் விளைவித்தும், அமைச்சர்களை நோக்கி ஆபாச மொழிகளில் உரத்த குரலில் பேசியும் ஆளுநர் உரையாற்ற முடியாமல் குந்தகம் விளைவித்துக் கொண்டிருந்தனர்.
அந்த உறுப்பினர்களை அவையை விட்டு வெளியேற்றுமாறு பேரவைத் தலைவர் அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார். காவலர்கள் தங்களை நோக்கி வந்தபோதும், அவையை விட்டு வெளியேறாமல் குழப்பம் விளைவித்த உறுப்பினர்களை காவலர்கள் வெளியேற்ற முற்பட்டபோது அவர்களை பேரவையின் இறையாண்மையையும் அதிகாரத்தையும் பாதிக்கும் வகையில் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமர்ந்து, கூச்சல் எழுப்பி குழப்பம் விளைவித்தனர். அதிமுக உறுப்பினர்களில் வெளியேற எதிர்ப்பு தெரிவித்த சிலர் அவைக் காவலர்களைத் தாக்கினர்.
பொள்ளாச்சி ஜெயராமன் அவைக் காவலர்கள் வெளியேற்ற முயற்சிக்கும்போது, அவர் காவலர்களை கையை ஓங்கி அடித்ததும், காவலர் ஒருவரின் தொப்பியினைத் தட்டிப் பறித்ததும், அவர் முகத்திலும் முதுகிலும் மீண்டும் வெறியுடன் தாக்கியதும், அவைக் காவர்களிடம் கடுஞ்சொல்லால் அச்சுறுத்தியதும் இப்பேரவையில் நடைபெற்ற கண்டனத்துக்குரிய செயல்களாகும்.
அதிமுக கட்சியைச் சேர்ந்த டி.ஜெயக்குமார், சு.ப.வேலுமணி, கோ.அரி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எல்.ரவிச்சந்திரன், வே.செந்தில் பாலாஜி, கு.பாண்டுரங்கன் ஆகியோர் சட்டமன்ற நெறிமுறைகளுக்கும் அவையின் கண்ணியத்திற்கும் ஒழுங்குக்கும் மாறாக நடந்து கொண்டதோடு அவையில் உள்ளே காய்கறிகளை தட்டில் கொண்டு வந்தும், மாலையாக அணிந்து கொண்டு வந்தும் அவற்றை அவையின் நாலாபக்கமும் வீசி எறிந்தனர். மேலும், தொடர்ந்து கோஷங்களையும், குழப்பத்தையும் ஏற்படுத்தினார்கள். சி.வி.சண்முகம் ஆளுநர் உரையின் நகலைக் கிழித்து அவையினர் மீது வீசினார். அதிமுக உறுப்பினர்களும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அவையில் இவ்வாறு சட்டப் பேரவை நெறிமுறைகளையும் மாண்பினையும் சற்றேனும் மதிக்காமல், முன்கூட்டியே திட்டமிட்டு வந்து, வெறுக்கத் தக்க வகையில் செயல்பட்டதை இப்பேரவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும், பத்திரிகையாளர் மாடத்திலிருந்து அனைவரும் கண்டுகொண்டிருந்தனர்.
அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலராகவும் பேரவையின் இறையாண்மையின் சின்னமா கவும் விளங்கும் ஆளுநர் இப்பேரவைக்கு உரையாற்ற வருகை தரும்போது பேரவை உறுப்பினர்கள் அனைவரும் மதிப்பையும் மரியாதையையும் வழங்குவதோடு கண்ணியமான முறையில் உறுப்பினர்கள் அனைவரும் நடந்து கொள்வதும் மிகவும் முக்கியமானது. பேரவையில் இத்தகைய விரும்பத்தகாத நிகழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த உறுப்பினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தண்டனை அளிப்பதும் அவையின் கண்ணியத்தையும் இறையாண்மையையும் காப்பதாகும் என்று இப்பேரவை கருதுகிறது.
எனவே, அரசியலமைப்புச் சட்டத்திற்கிணங்க ஆளுநருக்கு அளிக்கப்பட வேண்டிய மதிப்பையும், மரியாதை யையும், கண்ணியத்தையும் அளிக்கும் கடமையை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு, அவையின் நடவடிக்கைகளில் குந்தகம் விளைவித்து அவைக் காவலர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்ததுடன் அவர்களைத் தாக்கியும், கூச்சலும், குழப்பமும் விளைவித்த பொள்ளாச்சி ஜெயராமன், கோ.அரி, கு.பாண்டுரங்கன், சு.ப.வேலுமணி, டி.ஜெயக்குமார், எல்.ரவிச்ந்திரன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வே.செந்தில் பாலாஜி, சி.வி.சண்முகம் ஆகிய அதிமுக உறுப்பினர்கள் 9 பேரையும் இந்த அவையில் இருந்தும், சட்டப் பேரவை உறுப்பினர்களின் உரிமைச் செயல்பாடுகள் அனைத்திலிருந்தும் இப்பேரவைக் கூட்டத் தொடர் முழுவதும் நீக்கிவைப்பது என்று இந்த அவை தீர்மானிக்கிறது என்று இந்த தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து, இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
அதைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் கூறியதாவது: அவை முன்னவரின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, பொள்ளாச்சி ஜெயராமன், கோ.அரி, கு.பாண்டுரங்கன், சு.ப.வேலுமணி, டி.ஜெயக்குமார், எல்.ரவிச்சந்திரன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வே.செந்தில் பாலாஜி, சி.வி.சண்முகம் ஆகிய 9 அதிமுக உறுப்பினர்கள் இந்த பேரவைக் கூட்டத் தொடர் முழுவதும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
பேரவை உறுப்பினர்களின் உரிமைச் செயல்பாடுகள் அனைத்திலிருந்து அவர்கள் நீக்கிவைக்கப்படுகிறார்கள். அவைக் காவலர்கள் அவர்களை வெளியேற்றுமாறு உத்தரவிடுகிறேன். இவ்வாறு பேரவைத் தலைவர் கூறினார். (அப்போது, அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கூச்சல் எழுப்பினர்)
இதையடுத்து, பேரவை முடிவை அறிவித்த பின்னர் எழுந்து நிற்கக் கூடாது. வெளியேறுகிறீர்களா, வெளியேற்றவா என்று பேரவைத் தலைவர் எச்சரித்தார். அப்போது, பேரவை காவலர்கள் அவைக்குள் வந்தனர்.
இதையடுத்து, அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

No comments:

Post a Comment