தமிழகத்தில் சிபிசிஐடி தொடங்கப்பட்டது முதல் இதுவரை நடைபெற்ற புலனாய்வு வழக்கு விவரங்கள் கொண்ட “குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை ஒரு பின்னோக்கம் (1906 - 2010)” என்னும் நூலை காவல் துறை உருவாக்கியுள்ளது.
இந்த நூலை முதல்வர் கருணாநிதி நேற்று (27.01.2011) புதிய தலைமை செயலகத்தில் வெளியிட்டார். உள்துறை செயலர் ஞானதேசிகன், டிஜிபி லத்திகா, கூடுதல் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம், ஐஜி மஞ்சுநாதா, டிஐஜி கண்ணப்பன், எஸ்பி ராஜேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த நூலில் கடந்த காலம் மற்றும் நிகழ்காலம், கொலைகள், மோசடி, இனக் கலவரம், தீவிரவாதம், பயங்கரவாதம், கணினிக் குற்றங்கள், கள்ளநோட்டு குற்றங்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சிலை, தொல்பொருள் பற்றிய வழக்குகள், சிறப்பு வழக்குகள், அகில இந்திய காவலர் பணித் திறன் போட்டி ஆகிய 11 தலைப்புகளில் விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்த நூல் பயிற்சியில் உள்ள அதிகாரிகளுக்கு அரிய கருவூலமாகும். அதிகாரிகளின் புலனாய்வுத் திறமையை மேபடுத்தும் நூலாகவும் இது அமைந்துள்ளது. இந்த நூல் மற்ற மாநிலங்களின் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட உள்ளது.
221 வழக்குகளின் தொகுப்பு கொண்ட இதில் 1911ம் ஆண்டு மணியாச்சி கொலை, வழக்கு, 1972ல் நடந்த 38 விஷ ஊசி கொலைகள் பற்றிய வழக்கு, சான்சி கும்பல் கொள்ளை, கொலைகள், 1987ல் நடந்த ஆட்டோ சங்கர் செய்த கொலைகள், பிரேமானந்தா கொலை வழக்கு, எம்.கே.பாலன், ஜெயகுமார் கொலை வழக்கு, நந்தகோபால் சாவு, பத்மினி கற்பழிப்பு சம்பவம் போன்றவை இதில் இடம் பெற்றுள்ளன.
எம்.ஜி.ஆர். சுடப்பட்ட வழக்கு, எல்.ஐ.சி. ஸ்பென்சர் கட்டிடங்கள் தீ விபத்து, நீலகிரியில் நடந்த சட்டவிரோத சுரங்கம், ஸ்ரீரங்கம் ஜீயர் காணாமல் போன வழக்கு, மற்றும் 1953 முதல் நடந்த அகில இந்திய காவல் துறை விளையாட்டு போட்டிகள் போன்றவையும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
இந்த தகவல்களை அரசு செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
இந்த தகவல்களை அரசு செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment