வீரன் நடராஜன் இறுதிச் சடங்கு 5-12-1938இல் இந்தி எதிர்ப்பில் கலந்து இந்து தியாலாஜிகல் பள்ளியின் முன் மறியல் செய்து நீதிபதி கனம் அப்பாஸ் அலியால் தண்டிக்கப்பட்ட (தண்டனை காலம் 6-மாதம். அபராதம் ரூ.50 கட்டத்தவறினால் ஆறுவாரம்) சென்னை 11ஆம் டிவிஷன் பண்ணைக் கார ஆண்டியப்பன் தெரு 2/2 நெ. இல்லத்தில் இருக்கும் ஆதிதிராவிட தோழர் லட்சுமணன் அவர்களின் ஒரே குமாரனாகிய தமிழ் வீர இளங்காளை எல். நடராஜன் சென்னைச் சிறையில் பலநாள் நோய்வாய்ப்பட்டிருந்து, சிறை ஆஸ்பத்திரி யில் குணம் காணாமல் 30-12-1938இல் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டு நேற்று 15-01-1939 தேதி பகல் சுமார் 2.45 மணிக்கு உயிர் நீத்தார்.
உடல்நிலை, தன் குடும்ப நிலை முதலியவைகளையொன்றும் கருதாமல், மன்னிப்புக் கேட்க மறுத்தும் சிறைக் கைதியாகவே இருந்து, தாய்மொழியாம் தமிழ் மொழிக்காகவே உலகோர் தெரிய உயிர் நீத்த தீரனின் பிரேதத்தை மாலை 5 மணிக்குச் செட்டிநாட்டு குமாரராஜா முத் தையா செட்டியார் அவர்களின் விருப்பப் படி ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து காரில் வைத்து கருப்புக்கொடிகளுடன் ஒரு பெரும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பட்டது.
இன்று (16-1-1939) காலை 9 மணிக்குப் பிரேதம் புட்பப்பல்லக்கில் வைக்கப்பட்டு தங்கசாலை வீதி வழியாகப் புறப்பட்ட சமயத்தில் பத்தாயிரம் நபர் களுக்கு மேல் சவஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
தெருவின் இருமருங்கிலும், மாடிகளின் மேலும் ஆண்கள், பெண்கள் கூடி ஊர்வலக் காட்சியைக் கவனித்தனர். பிரேத ஊர்வலம் புறப்படும்போது போலீசா ரால் நல்லவிதமான பந்தோபஸ்துகள் செய்யப்பட்டிருந்தன. பொதுமக்கள் பத்தாயிரம் பேர்களில் அய்ந்தாயிரம் பேர்களுக்கு மேலிட்ட மக்கள் ஒவ்வொரு வரும் கையில் கருப்புக் கொடிகள் தாங்கிச் சென்றனர். தாய்மார்களும், தலைவர்களும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
பலர் வழிநெடுக ஊர்வலத்தை நிறுத்தி, பிரேதத்திற்கு மலர்மாலைகள் சூட்டினர். ஊர்வலம் அரைமைல் நீளத்திற்கு மேல் அமைதியாகவும், இந்தி எதிர்ப்பு வாக் கியங்களை முழங்கிக்கொண்டும் பகல் 11.30 மணிக்கு மயானத்தை அடைந்தது. வழிநெடுக இருமருங்கிலும் நின்ற மக்கள் கண்ணீர் வடித்தனர்.
பிரேத ஊர்வலம் மயானம் அடைந்ததும் கார்ப்பரேஷன் அங்கத்தினர் தோழர் ஆல்பர்ட் ஜேசுதாசன் தலைமையில் அனுதாபக் கூட்டம் நடைபெற்றது. தொண் டரின் மன உறுதியைக் குறித்தும், காங் கிரஸ்காரர்கள் போக்கைக் கண்டித்தும் தோழர்கள் அண்ணாதுரை, பொன்னம் பலனார், காஞ்சி பரவஸ்து ராஜகோபா லாச்சாரியார், வேலூர் அண்ணல் தங்கோ, டாக்டர் தர்மாம்பாள், நாராயணி யம்மை முதலியவர்கள் பேசினார்கள்.
- குடிஅரசு, 22.1.1939
No comments:
Post a Comment