முதல்வர் கருணாநிதி 14.01.2011 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில், சி.பி.ஐ. விசாரணை புஸ்வாணம் ஆகி விட்டது என்று ஜெயலலிதா அறிக்கை விட்டுள்ளாரே; இது என்ன புதுக் கதை?
“சீச்சீ“ இந்தப் பழம் புளிக்கும் என்ற கதை தான்! 2&1&2011 அன்று பிரதமர் சென்னைக்கு வந்தபோது நான் அவரைச் சந்தித்த பிறகு, நிலைமை மாறி விட்டது என்றும் ஜெயலலிதா தனது அறிக்கையிலே முக்கியமாகச் சொல்லியிருக்கிறார். உண்மையில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைப்பதற்காக ஜெயலலிதா எந்த அளவிற்கு முயற்சி செய்தார், யார் மூலமாக முயற்சி செய்தார், ராஜாவை கைது செய்தால் மத்திய அரசுக்கு எந்தவிதமான நிபந்தனையுமின்றி அ.தி.மு.க. ஆதரவளிக்கும் என்றெல்லாம் சொன்னார். அவர் பேசும் கட்சி நிகழ்ச்சிகளிலே காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியை உறுதியாக்கி விடுவேன் என்பதைப் போல சவால் விட்டுப் பேசினார். நல்ல செய்தியை எதிர்பாருங்கள் என்று குடுகுடுப்பை அடித்தார். ஆனால் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவரும், பிரதமரும் தி.மு.கவோடு கூட்டணி வலுவாக உள்ளது என்று தெரிவித்த பிறகு ஜெயலலிதாவின் “குட்டு“ அம்பலமாகி விட்டது! உடனே அடுத்த நிமிடமே மத்திய அரசைத் தாக்குகின்ற முயற்சியிலே ஈடுபடத் தொடங்கி விட்டார்.
இந்திய மீனவர் ஒருவரை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொன்றதைப் பற்றி பிரதமருக்கு தாங்கள் கொடுத்த தந்தியின் மீது மத்திய அரசு எடுத்த நடவடிக்கை?
மத்திய அரசு டெல்லியில் உள்ள இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசத்தை வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கே அழைத்து இந்திய அரசு சார்பில் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். இலங்கை கடற்படையினர் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும். மீனவர்களைத் தாக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் இந்திய அரசு சார்பில் கண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கைத் தலைநகர் கொழும்பில் உள்ள இந்தியத் தூதர் அசோக் காந்தா மூலம் இந்தச் சம்பவம் பற்றி இலங்கை அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. இலங்கை அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பேரீசிடம் கொழும்பில் உள்ள இந்தியத் தூதர் இந்த நிகழ்ச்சி குறித்து எடுத்துச் சொல்லியிருக்கிறார். 2008ம் ஆண்டு இரண்டு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்துக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டுமென்று இலங்கை அரசுக்கு இந்திய அரசின் சார்பில் பல முறை எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, இலங்கை அரசின் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் 2008ம் ஆண்டு 1,456 என்ற எண்ணிக்கையில் இருந்தது 2009ம் ஆண்டில் 127 என்ற அளவிற்கும், 2010ல் 30 என்ற அளவிற்கும் குறைந்துள்ளது. இதற் கிடையே தமிழக மீனவரை சுட்டுக் கொன்றது இலங்கை கடற் படையினர் அல்ல என்று இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தக் கூடாது, அவர்களைத் தாக்கக் கூடாது என்று இலங்கை கடற்படையினருக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச எல்லையைக் கடந்து வந்தாலும் கூட தாக்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்தோம். இருப்பினும் இந்தச் சம்பவம் குறித்து இந்தியா அதிகாரப் பூர்வமாக இலங்கை அரசுக்கு தெரிவித்திருப்பதால், இது குறித்து இலங்கை அரசு விசாரணை நடத்தும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க பொது நுழைவுத் தேர்வு நடத்த இந்திய மருத்துவக் கவுன்சில் அறிக்கை வெளியிட்டதும், ஜெயலலிதா உங்களைக் கடுமையாகத் தாக்கி, நீங்கள் அதிலே எதுவுமே செய்யவில்லை என்பதைப் போல அறிக்கை விடுத்திருந்தாரே?
பொது நுழைவுத் தேர்வு கூடாது, மாணவர்கள் அதனால் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பது தான் தி.மு.க.வின் கருத்து. இந்த அரசின் கருத்து. மீண்டும் பொது நுழைவுத் தேர்வு வந்து விடக் கூடாது என்பதில் இந்த அரசு கண்ணும் கருத்துமாக இருக்கிறது. அதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. மத்திய அரசுடன் அதற்காக தொடர்ந்து பேசி வருவதோடு, நீதிமன்றத்திலும் அதற்கான தடையாணை பெற்றுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் பொது நுழைவுத் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன, எனவே தங்கள் அனுமதியில்லாமல் வெளியிடப்பட்ட அறிவிக்கை செல்லாது என்றும், அந்த அறிவிக்கையை வாபஸ் பெற வேண்டும் என்றும் மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட்டது. மேலும் மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே பொது நுழைவுத் தேர்வு விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபிலும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஐதராபாத்தில் மத்திய மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்களின் மாநாட்டினைக் கூட்டியிருந்தார். அந்த மாநாட்டில் 16 மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்கள் மற்றும் மாநில அரசுகளின் செயலாளர்கள் கலந்துகொண்டனர். அந்த மாநாட்டில் மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக நிறுத்தி வைப்பது என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். தற்போது இதுதான் நிலை.
சென்னையில் குடிசைப் பகுதி மக்கள் வாழ்ந்து வரும் நிலத்தை ரியல் எஸ்டேட் நடத்துவோர் சிலருக்குக் கொடுத்து விட தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், அதனால் 7 ஆயிரம் குடும்பங்கள் வாழும் இடத்தை இழந்து விடப் போகின்றன என்றும் ஒரு ஆங்கில நாளேடு பெரிய அளவில் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறதே?
அந்த இதழில் எழுதியிருப்பதைப் போல தனியாருக்காக வணிக மேம்பாட்டிற்கு 67 சதவீதம் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது உண்மைக்கு மாறான செய்தியாகும். மேலும், கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் வணிக வளாகங்கள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் திரையரங்குகள் போன்றவை அமைக் கப்படும் என்பதும்; சீனிவாசபுரம் பகுதியில் 15 ஏக்கர் பரப்பளவில் பூங்கா உருவாக்கப்பட உள்ளது என்பதும் எவ்வித அடிப்படையும் இல்லாத தவறான தகவலாகும்.
நாமக்கல் மாவட்டத்தில் கலியனுலீர் அமானி கிராமத்தில் தீண்டாமை சுவர் எழுப்பியுள்ளதாக மார்க்சிஸ்ட் கட்சியின் நாளிதழ் முதல் பக்கத்தில் பெரிய அளவில் பிரசுரித்துள்ளதே?
கலியனுலீர் அமானி கிராமத்தில் 42 அருந்ததியர்கள் சுமார் 12 ஆண்டுகளாக 58/2 பி.1 என்ற சர்வே எண்ணில் குடிசை வீடு கட்டி வாழ்ந்து வருகிறார்கள். இந்த இடம் அவர்களுக் காக சட்டப்படி ஆர் ஜிதம் செய்யப்பட்ட நிலமாகும்.
இந்த இடத்திற்குப் பக்கத்தில் உள்ள சொந்த பட்டா நிலத்திற்கு உரிமையுடைய ஒருவர், தனது பட்டா நிலத்தில் ஒரு சுற்றுச் சுவர் எழுப்பியுள்ளார். இந்த சுவரால் அருந்ததிய மக்களுக்கு எவ்விதமான இடையூறும் இல்லை என்றும், அதனை தீண்டா மைச் சுவர் என்று சொல்லுவதே தவறு என்றும் அருந்ததிய மக்களே எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். அந்த நாளிதழில் எழுதியிருப்பதைப் போல அருந்ததிய மக்களை தனிமைப்படுத்தியோ அல்லது தள்ளி வைத்தோ இந்தச் சுவர் கட்டப்பட வில்லை என்பது தான் உண்மை.
No comments:
Post a Comment