இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சில கோரிக்கைகளை முன்வைத்து பிப்ரவரி 1 ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். இதுகுறித்து முதல் அமைச்சர் கருணாநிதி அறிவுரையின் பேரில் அலுவலர் சங்க பிரதிநிதிகளுடன் கடந்த 28 மற்றும் 29 ந் தேதிகளில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
அதன்படி, முதல் அமைச்சர் கருணாநிதி உத்தரவின் பேரில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் ஆகியோருக்கான சம்பள விகிதம் மாற்றியமைக்கப்பட்டு அவர்களின் தர ஊதியத்தை தற்போது வழங்கப்படும் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரத்து 400 ஆக உயர்த்தியும், உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3 ஆகியோரின் ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்பட்டு தற்போது வழங்கப்படும் தர ஊதியத்தை ரூ.2 ஆயிரத்து 400 ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 800 ஆக உயர்த்தியும், துணை வட்டாட்சியர்களுக்கு மாதம் ரூ.500 தனி ஊதியமும், வட்டாட்சியர்களுக்கு மாதம் ரூ.1,000 தனி ஊதியமும் வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்த திருத்தப்பட்ட ஊதிய உயர்வு பிப்ரவரி 1 ந் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்படும்.
இதுதவிர 11 சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த வட்டங்களில் வரவேற்பு பணிக்காக ஒரு துணை வட்டாட்சியர் நிலையில் வரவேற்பு அலுவலர் பணியிடத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும், வருவாய் ஆய்வாளர்களுக்கு ஒரு அலுவலக உதவியாளர் பணியிடம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையும் அரசால் ஏற்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் முதல் அமைச்சர் கருணாநிதியை நேற்று தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்ததுடன், தங்களது போராட்டத்தையும் கைவிடுவதாக அறிவித்தனர்.
முதல் அமைச்சர் கருணாநிதியை, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் அதன் மாநிலத் தலைவர் டிழூக் பொன்னுராஜ், பொதுச்செயலாளர் கே.முருகன், பொருளாளர் ஜி.இளங்கோவன், துணைத்தலைவர்கள் கே.சி.ராம்குமார், என்.சுந்தரமூர்த்தி, எஸ்.சிவக்குமார், கே.சுந்தரபாண்டியன், மாநிலச் செயலாளர்கள் ஏ.கில்பாட்ராஜ், த.சிவஜோதி, என்.தட்சிணாமூர்த்தி, பொ.ஆறுமுகம், என்.ஜீவகாருண்யம் ஆகியோர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்வின்போது தலைமைச்செயலாளர் எஸ்.மாலதி, நிதித்துறை முதன்மைச்செயலாளர் க. சண்முகம், வருவாய் நிர்வாக ஆணையர் ந.சுந்தரதேவன், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர் கே.என்.வெங்கட்ராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment