நல திட்டங்கள் நிறைவேற்றுவதிலும் கட்டமைப்பு வசதிகளை செய்து தருவதிலும் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று ஆளுநர் பர்னாலா கூறியுள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் பர்னாலா வானொலி, தொலைக்காட்சியில் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:
நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் சுதந்திரத்துக்காக அனைத்தையும் தியாகம் செய்த தியாகிகளை இந்த நேரத்தில் எண்ணிப் பார்க்க வேண்டும். 1950ல் இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. காந்தி, நேரு போன்ற தலைவர்கள் கண்ட கனவின்படி இந்தியா இன்று தொழில் நுட்பம், கல்வி, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அபரிமித வளர்ச்சி பெற்றுள்ளது. நாட்டை வறுமை, கல்வியறிவு இன்மையிலிருந்து விடுவிக்கும் கடமை அரசுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் உள்ளது. உணவு உற்பத்தியிலும், அறிவியல் துறையிலும் நம் நாடு உயர்ந்த நிலைக்கு சென்றுள்ளது.
இதில் தமிழகத்தின் வளர்ச்சி வரலாற்று சிறப்புக்குரியது. நலத்திட்டங்கள் நிறைவேற்றுவதிலும் கட்டமைப்பு வசதிகளை செய்வதிலும் தமிழகம் முன்னணியில் உள்ளது. தகவல் தொழில் நுட்பம், மோட்டார் வாகன தொழில், மருத்துவ துறையின் முக்கிய கேந்திரமாக தமிழகம் விளங்குகிறது. உலகின் புகழ் பெற்ற 30க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இங்கு அமைந்துள்ளன. கணினிப் பொருள் ஏற்றுமதியில் தமிழகம் முன்னணியில் உள்ளது. 57 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன.
இலவச கல்லூரி கல்வி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு இதன் மூலம் 3.75 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். திருவாரூரில் மத்திய பல்கலை கழகமும், திருச்சியில் ஐ.ஐ.டியும் நிறுவப்பட்டுள்ளன. கிராமங்கள் பயன் பெறும் வகையில் 11 புதிய பொறியியல் கல்லூரிகள், 3 மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏழை மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். இலவச வண்ண தொலைக்காட்சி, இலவச எரிவாயு இணைப்புடன் அடுப்பு, நிலமற்ற விவசாயிகளுக்கு இலவசமாக நிலம், பெண்கள் நல திட்டங்கள் போன்ற சமூக நல கட்டமைப்பில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. உணவு உற்பத்தியிலும் முன்னணி பெற்று தமிழ்நாட்டில் 95.6 லட்சம் டன் உணவு தானியங்கள் உற்பத்தியாகி உள்ளது. விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க் கடன்கள் வழங்கப்படுகின்றன.
மக்கள் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்ட அரசு வருமுன் காப்போம், நலமான தமிழகம், குழந்தைகள் இதய பாதுகாப்பு திட்டம், உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கும் கலைஞர் காப்பீட்டு திட்டம் போன்ற திட்டங்களிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. நம் நாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமைய அனை வரும் பாடுபடுவோம். இந்த நாளில் சுதந்திரம் பெற்று தந்த தியாகிகளை நினைவு கூருவோம்.
இவ்வாறு பர்னாலா பேசினார்.
இவ்வாறு பர்னாலா பேசினார்.
No comments:
Post a Comment