தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை தடுத்து நிறுத்த முற்றுப்புள்ளி வைக்க நேரடியாக தலையிட வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி தந்தி அனுப்பியுள்ளார்.
தமிழக மீனவர்கள், இந்திய கடல் பகுதிகளில் மீன் பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. பலர் உயிரிழந்துள்ளனர். இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறலைத் தடுத்து தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மத்திய அரசை முதல்வர் கருணாநிதி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்த தாக்குதல் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கின் கவனத்துக்கும் முதல்வர் கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில், ஜனவரி 12ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரபாண்டியன் என்பவர் மீன் பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்படையினரால் சுடப்பட்டு இறந்துள்ளார். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடு¢த்து, இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி நேற்று அனுப்பியுள்ள அவசரத் தந்தியில் கூறியிருப்பதாவது: நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரபாண்டியன் என்ற மீனவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஜகதாபட்டிணம் மீன்பிடி தளத்திலிருந்து 3 மீனவர்களுடன் ஜனவரி 12ம் தேதி மீன்பிடி படகில் பாக் ஜலசந்தி பகுதியில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.
அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், நமது மீனவர்கள் மீது சுட்டதில் வீரபாண்டியன் கொல்லப்பட்டார்.
மத்திய அரசும் இலங்கை அரசும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாது என்று மீண்டும் மீண்டும் உத்தரவாதம் கொடுத்த பின்னரும், இலங்கை கடற்படையின் அராஜகம் குறையாமல் தொடர்ந்து நடக்கிறது.
தற்போது நடந்துள்ள இந்த கொலை சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்காக, இந்த விஷயத்தை மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். இதுபோன்ற கொலை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, இந்த பிரச்னையில் தாங்கள் நேரடியாக தலையிட வேண்டும்.
இவ்வாறு முதல்வர் அனுப்பிய தந்தியில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு முதல்வர் அனுப்பிய தந்தியில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment