மதுரை மாநகராட்சி இடைத்தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட திமுக வேட்பாளர் முருகேஸ்வரி கவுன்சிலராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தார்.
மதுரை மாநகராட்சி 45வது வார்டு இடைத்தேர்தலில் திமுக சார்பில் முருகேஸ்வரி, மார்க்சிஸ்ட் சார்பில் சந்திரசேகரன் உள்பட 4 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர். வேட்புமனு பரிசீலனையின் போது மார்க்சிஸ்ட் வேட்பாளரின் மனுவும், ஒரு சுயேட்சை வேட்பாளரின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டன. திமுக மாற்று வேட்பாளர் மனுவை வாபஸ் பெற்றார்.
இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் ஏற்கப்பட்டு வரும் 10ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திமுக வேட்பாளர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷனின் அறிவிப்பிற்கு தடை விதிக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதித்தும், ஏற்கனவே உள்ள அட்டவணையின்படி தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டார்.
அதன்படி திமுக வேட்பாளர் மட்டுமே களத்தில் உள்ளார். எனவே 10ம் தேதி தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை எழவில்லை. இதன் அடிப்படையில் 07.01.2011 அன்று தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையாளர் செபாஸ்டின், திமுக வேட்பாளர் முருகேஸ்வரியை போட்டியின்றி கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து மேயர் தேன்மொழி முன்னிலையில் 07.01.2011 அன்று காலை 11 மணிக்கு முருகேஸ்வரி கவுன்சிலராக பதவிப்பிரமாணமும் உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டார்.
அப்போது ஆணையாளர் செபாஸ்டின், உதவி தேர்தல் அதிகாரி முருகேசன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ்பாபு, மாநகராட்சி மண்டல தலைவர்கள் குருசாமி, இசக்கிமுத்து, திமுக பகுதி செயலாளர்கள் முபாரக் மந்திரி, கோபிநாதன், இளைஞர் அணி செயலாளர் ஜெயராமன் ஆகியோர் உடன் இருந்தனர். இதுகுறித்து முருகேஸ்வரி கூறுகையில், பதவியேற்றதும் டெலிபோனில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியிடம் வாழ்த்து பெற்றேன்’ என்றார்.
No comments:
Post a Comment