முதல்வர் கருணாநிதி 12.01.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசுக்கு எதிராக தொடர்ந்து உண்மைக்கு மாறான செய்திகளை சில இதழ்கள் வெளியிட்டு வருகின்றன. உண்மைக்கு மாறானவை என்றும் அவை நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் ஒரு பத்திரிக்கையில், தன் குடும்ப தொலைக்காட்சிகளுக்கு மட்டும் விளம்பரங்கள் தரப்பட்டுள்ளன என்றும் இலவச ஆம்புலன்ஸ் திட்டத்தைத் தொடங்கியதற்குக் காரணமே சுய நலம்தான் என்பதைப் போலவும் எழுதப்பட்டுள் ளது.
108 இலவச ஆம்புலன்ஸ் சேவையினால் பயன் பெறும் ஏழையெளிய தமிழ் நாட்டு மக்கள் அந்தத் திட்டத்தைப் பற்றி அன்றாடம் மனம் திறந்து பாராட்டுகிறார்கள்.
அந்தத் திட்டம் எந்த அளவிற்கு வெற்றிகரமாக நடைபெறுகிறது என்பதைப் பற்றியும் தாங்கள் உயிர் பிழைக்க அந்தத் திட்டம் எந்த அளவிற்கு உதவியாக இருந்தது என்பதைப் பற்றியும் பல ஏடுகளில் பல கட்டுரைகள் வாயிலாக வெளி வந்திருக்கின்றன. குந்தி தேவிக்கு முன்பாக தனக்குக் குழந்தை பிறந்து விட வேண்டுமென்று ஆத்திரப்பட்ட காந்தாரி அம்மிக் குழவியை எடுத்து அடி வயிற்றிலே குத்திக் கொண்டாள் என்று பாரதத்திலே ஒரு உபகதை உண்டு. அதைப் போல எப்படியாவது இந்தத் திட்டத்திற்கு ஒரு ஊனம் வந்து விடக்கூடாதா என்று சிலர் நினைக்கின்றனர்.
செய்தியைப் பார்த்து விட்டு நான் சும்மாயிருந்து விடவில்லை. உடனடியாக அது பற்றிய முழு விவரமும் எனக்கு வரவேண்டும் என்று கூறினேன். அவசர மருத்துவ ஊர்தி 108 இலவச சேவைத் திட்டத்தின் உதவி அதிக அளவில் குறிப்பாகக் கிராமப்புற ஏழை மக்களுக்குக் கிடைத்திட வேண்டும் என்பதற்காக இத்திட்டம் தொடர்பான விளம்பரங்கள் மக்கள் விரும்பிப் பார்க்கும் பல்வேறு தொலைக் காட்சிகளுக்கும் அளிக்கப்படுகின்றன என்று விளக்கம் கூறினார்கள்.
பல்வேறு தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் தரப்படுகிறது என்றால் எந்தெந்த தொலைக் காட்சிகள் என்று விவரம் கேட்டேன். இந்த விளம்பரங்கள் சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி ஆகியவைகளுக்கு மட்டுமல்லாமல், பொதிகை தொலைக்காட்சி, தூர்தர்ஷன், விஜய் தொலைக்காட்சி, மெகா தொலைக்காட்சி, எஸ்.எஸ். மியூசிக் ஆகிய தொலைக்காட்சிகளுக்கும் அளிக்கப்படுவதாகக் கூறினார்கள்.
இவ்வாறு தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்யப்பட்ட காரணத்தினால்தான் 108 ஊர்தியை அழைப்பவர்கள் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 14 ஆயிரம் என்பது தற்போது 30 ஆயிரம் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. இதே செய்தியை வைத்து இன்னொரு நாளிதழில் தலையங்கம் எழுதப்பட்டது.
பிரதான எதிர்க் கட்சியோடு கூட்டணி வைத்துக் கொள்ளத்துடிக்கும் கட்சி இதழின் தலையங்கத்தில் மேலும் கூர்மையோடு கவனித்த போதுதான் இந்த விளம்பரங்களை இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மட்டுமே தந்துள்ளார் என்பது தெரிந்தது என்று எழுதியிருக்கிறார்கள். இந்த இரண்டு தொலைக்காட்சிகளைத் தவிர மற்ற தொலைக்காட்சிகளுக்கும் விளம்பரம் தரப்பட்டதாக அரசின் சார்பில் தெரிவித்திருக்கிறார் களே, அது உண்மையா, பொய்யா?
சில ஏடுகள் தற்போதெல்லாம் செய்திகளைத் தங்கள் வசதிக்குத் திசை திருப்பக் கூடிய வகையில் வெளியிடுவதும் அதுவும் இந்த அரசைக் குறை கூறக் கூடிய செய்திகள் என்றால், குதூகலத்தில் துள்ளிக் குதித்து, அதற்கு கண்வைத்து, மூக்கு வைத்து பூதாகாரமாக அதனை ஆக்கி முதல் பக்கத்திலே கொட்டை எழுத்துக்களில் வெளியிடுவதும் நியாயம்தானா? பத்திரிகை தர்மம்தானா? என்ற கேள்விகள் பத்திரிகையாளர்களுக்காக அடுக்கடுக்கான சாதனைகளை நிறைவேற்றியவன் என்ற முறையில் என்மனதில் எழுவது நியாயந்தானே?
No comments:
Post a Comment