கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, January 15, 2011

கவர்னர் உரை - 2011



தமிழ்நாட்டின் அனைத்து நகராட்சிகளிலும் குடிநீர், சாலைகள், கழிவுநீர் வசதி, திடக்கழிவு, மேலாண்மை, மின் விளக்கு போன்ற அடிப்படை வசதிகளை அடுத்த 5 ஆண்டுகள் ரூ.15,000 கோடியில் நிறை வேற்றப்படும்.
உண்ண உணவு, உடுக்க உடை, உறையுள் இவை மூன்றிலும் அயரா கவனம் செலுத்தி அயல்நாட்டினர் வியக்கும் அளவுக்கு தமிழகத்தை தலைநிமிரச் செய்வோம் என்று ஆளுநர் உரையில் சுர்ஜித் சிங் பர்னாலா கூறியுள்ளார். 07.01.2011 அன்று புதிய தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரை வருமாறு:


மாண்புமிகு சட்டப் பேரவை உறுப்பினர் களே, வணக்கம். தமிழ்நாட்டின் பதின்மூன் றாவது சட்டப் பேரவையின் பதினைந்தாவது கூட்டத்தொடராகவும், 2011ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடராகவும் அமைந்துள்ள இக்கூட்டத்தொடரைத் தொடங்கி வைத்து, ஒன்பதாவது முறையாக இச்சட்டமன்றத்தில் தொடக்க உரை ஆற்றும் வாய்ப்பினை, தமிழக மக்கள் எனக்கு வழங்கியதை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்.

தைத்திங்கள் முதல்நாள் தமிழாண்டின் தொடக்கம்

2.மனிதகுல வரலாற்றில் மூலாதார இடம்பெற்ற திராவிடப் பண்பாட்டைக் கட்டிக்காப்பதில் தன்னிகரற்ற தலைவராகத் திகழும் கலைஞர், அய்ந்தாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுத் தமிழகத் தின் முன்னேற்றத்திற்கு அயராது பாடுபட்டு வருவதும், தமிழ் இனப்பண் பாட்டு அடையா ளங்களைப் பேணுவதற்கு அவர் தொடர்ந்து எடுத்து வரும் முயற்சிகளும் பாராட்டுக் குரியவை. அவற்றுள் முக்கிய நிகழ்வாக, தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவினைக் கொண்டாடும் தைத்திங்கள் முதல் நாளைத் தமிழ் ஆண்டின் தொடக்கமாக 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் நாளன்று அறிவித்தார். இந்த ஆண்டு அனைத்துத் தரப்பு மக்களும் மனமகிழ் வோடு தமிழ்ப்புத்தாண் டைத் தமிழர் திருநாளாம் பொங்கல் திரு நாளன்று கொண்டாட அரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் அடங்கிய பொங்கல் பையை அனைத்துக் குடும்பங்களுக்கும் பரிசாக வழங்கி வருவதைப்பாராட்டுவதுடன், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளையும், தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துகளையும் அருமைத் தமிழக மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழரின் பாரம்பரிய அடையாளம்

3.முதலமைச்சர் கலைஞர் அவர்கள், தமிழ் மொழியின் தொன்மையையும் தனித்தன்மை யையும் காத்திட, காலத்திற்கு ஏற்றாற்போல் அதைச் செழுமைப்படுத்தும் நோக்குடன், தமிழ் மொழியைச் செம்மொழியாக்கி அதன் முதல் மாநாட்டை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடாகக் கோவையில், கடந்த ஆண்டு சூன் மாதம் 23 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையில் சீரோடும் சிறப்போடும் நடத்தி யுள்ளார். உலகம் முழுவதும் விரவிப் பரவி யிருக்கும் தமிழ்ச் சமுதாயம் மட்டுமன்றி, அனைத்துத் தரப்பு மக்களும் இதை வியந்து பாராட்டியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தமிழ்மொழியின் ஆக்கபூர்வமான வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமிட எடுக்கப்பட்ட முயற்சிகளில், குறிப்பாக தமிழ்வழிக் கல்வி பயின்றோர்க்கு அரசுப் பணியில் முன்னுரிமை, சிந்து சமவெளி நாகரிகத் தொடர்புகள், கடல் கொண்ட குமரி, பூம்புகார் பற்றிய ஆய்வுகள் செய்வதற்காக எடுக்கப்பட்டுவரும் தொல்லியல் ஆய்வு முயற்சிகள், மதுரையில் நூறு கோடி ரூபாய் நிதியுதவியுடன் விரைவில் தொடங்கப்பட உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி தொல்காப்பியர் பேரவை, சென்னையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் நாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களால் திறக்கப்பட்ட செம்மொழிப் பூங்கா, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகம், தமிழ்நாட்டின் அய்வகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றில் தாவர, விலங்கியல் உயிர்ப்பன்மை மரபுரிமைச் செறிவைப் பாதுகாக்க ரூபாய் 32 கோடி செலவில் அமையவிருக்கும் மரபணுப் பூங்காக்கள் போன்றவை தமிழரின் பாரம்பரிய அடையாளங்களை நிரந்தரமாகப் பதிவு செய்திட எடுக்கப்பட்ட பெருமுயற்சிகளாகும்.

மீண்டும் மேலவை

4.தமிழ்நாட்டில் மீண்டும் சட்டமன்ற மேலவையைக் கொண்டுவரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அறிவித்ததற்கு இணங்க, 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவைக்கான சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியத் தேர்தல் ஆணையம் சட்டமன்ற மேலவைத் தேர்தல் நடத்துவது தொடர்பான நடவடிக்கைகளை முறையாக மேற் கொண்டுள்ளது.

5.ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டப் பேரவை, மேலவை மற்றும் தலைமைச் செயலகம் கட்டி அமைத்திட இதுவரை 910 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 13.3.2010 அன்று புதிய சட்டப்பேரவைக் கட்டடம் மாண்புமிகு இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களால், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் திருமதி சோனியா காந்தி முன்னிலையில், தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களின் தலைமையில் திறக்கப்பட்டு, புதுப் பொலிவுடன் விளங்கும் இந்தச் சட்டப்பேரவையில் தற்போது சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறுவது நமக்கெல்லாம் பெருமை அளிப்பதாக உள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தத் தலைமைச் செயலகத்தின் இரண்டாம் கட்டப் பணிகளும், ரூபாய் 60 கோடியே 86 இலட்சம் செலவில் புதிய கலைவாணர் அரங்கம் கட்டும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல் உலகத்தரம் வாய்ந்த நூலகம் சென்னையில் ரூபாய் 178 கோடியே 78லட்சம் செலவில் அண்ணா நூற்றாண்டு நினைவாகக் கட்டப்பட்டு, நிதியமைச்சர் பேராசிரியர் தலைமையில் முதலமைச்சர் கலைஞர் அவர்களால் 15.9.2010 அன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றி...

6.இந்த அரசு, பொதுமக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றி; அத்துடன் மனநிறைவு கொண்டு விடாமல் தொடர்ந்து பல்வேறு புதிய ஆக்கபூர்வமான திட்டங்களையும் உருவாக்கி, செயல்படுத்தியுள்ளது. அண்ணா வழியில் அயராது உழைத்திடும் இந்த அரசு ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்பதை உறுதி செய்யும் வகையில், சமூக நீதியை நிலைநாட்டும் பணியாகப் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை முன்னிலைப்படுத்திச் செயல்படுத்துவதுடன், நிலையான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய எண்ணற்ற பல திட்டங்களையும் அவற்றால் ஏற்படும் பயன்களையும் பரவலாக, பலதரப்பட்ட மக்களுக்கும் சென்றடையக் கூடிய வகையில் நிறைவேற்றி வருகிறது.

7.சட்டம் ஒழுங்கைப் பேணுவதில் தமிழக அரசு மிகச் சிறப்பாகச் செயல்படுவதன் விளைவாக தமிழகத்தில் அமைதியான சூழல் தொடர்ந்து நிலவி வருகிறது. மூன்றாவது காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று காவல் துறையினை நவீனமயமாக்கி, காலிப் பணியிடங்களை நிரப்பி, புதிய காவல் நிலையங்கள், காவலருக்கான குடியிருப்புகள் எனப் பல்வேறு கட்டமைப்பு வசதிகளையும் சிறப்பாக ஏற்படுத்தியதன் காரணமாகத் தமிழகத்தில் காவல் துறை நாள்தோறும் நல்ல பணியைச் செய்திட வழிவகை ஏற்பட்டுள்ளது. சமுதாய நல்லிணக்கம் பேணி, சாதி சமய பேதமற்ற சமுதாயத்தை நிலைநிறுத்த இந்த அரசு தொடர்ந்து முயற்சிகள் செய்து வருகிறது.

இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை

8.சிந்திய கண்ணீரும், செத்து மடிந்த உயிர்களும் போதாது என்று இன்னமும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் முள்வேலி முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதும்; முகாம்களிலிருந்து சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்ட தமிழர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள் முழுமை அடையாமல் இருப்பதும்; நீண்ட காலமாகப் பேசப்பட்டு வரும் அரசியல் தீர்வுக்கான ஆரம்பகட்ட முயற்சிகள்கூட இதுவரை மேற்கொள்ளப்படாமலிருப்பதும்; தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும் தமிழக அரசுக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது. தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவும், இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் களைந்திடவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று இந்த அரசு வலியுறுத்துகிறது.
(ஆளுநர் உரையிலிருந்து 7.1.2011)

9.இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து பெய்து, இதுவரை சராசரி மழையளவான 945 மில்லி மீட்டரைக் காட்டிலும் கூடுதலாக, அதாவது, 1,169 மில்லி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வெள்ளச் சேதத்தை ஏற்படுத்தியது. இந்தப் பெருமழையினால் 203 பேர் உயிரிழந்துள்ள வேதனையும் நிகழ்ந்துள்ளது. அவர்களின் குடும்பங்களுக்கு இந்த அவையோர் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இதனால் ஏற்பட்ட உயிர்ச்சேதம், உடைமைகளுக்கு ஏற்பட்ட சேதம், பயிர்ச்சேதம், சாலைகள், குளங்கள் ஆகியவற்றிற்கு ஏற்பட்ட சேதங்கள் கணக்கிடப்பட்டு, விரைவான நிவாரண நடவடிக்கையை இந்த அரசு மேற்கொண்டது. வெள்ளச்சேதத்தை அமைச்சர்கள், உயரதிகாரிகள் நேரில் தொடர்ந்து ஆய்வு செய்து நிவாரணம் வழங்குவதையும், சீரமைப்புப் பணிகள் மேற்கொள்வதையும் கண்காணித்து வருகின்றனர். முதலமைச்சர் அடிக்கடி ஆய்வுகளை மேற்கொண்டு உடனடி நிவாரணத்திற்கு ரூபாய் 500 கோடியை வழங்கியுள்ளார். இது தவிர, மேலும் ரூபாய் 500 கோடியை நிரந்தர நிவாரணப் பணிகளுக்காகவும் தமிழக அரசு அனுமதித்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து உதவ மத்திய அரசிடம் ரூபாய் 1,832 கோடி நிதியுதவி கோரியதன் பேரில் மத்திய ஆய்வுக்குழுவினர் உடனடியாக தமிழகத்திற்கு வந்து ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர். மத்திய அரசு இதற்கான நிதி உதவியை விரைவாக வழங்கும் என நம்புகிறேன். பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கு நிவாரணமாகப் பகுதி பாதிப்பிற்கு ரூபாய் 1,000 என்றும், முழுமையான பாதிப்பிற்கு ரூபாய் 2,000 என்றும் ஏற்கெனவே இருந்ததை மாற்றி; பகுதி பாதிப்பிற்கு ரூபாய் 2,500 என்றும், முழுமையான பாதிப்பிற்கு ரூபாய் 5,000 என்றும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. குடிசைகள் அல்லாத வீடுகளுக்கும் அவை ஓரளவு பாதிக்கப்பட்டிருந்தாலும் தலா ரூபாய் 1,500 என்றும், கடுமையான பாதிப்பிற்கு தலா ரூபாய் 5,000 என்றும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு, நபர் ஒன்றிற்கு தலா ரூபாய் 1 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், கூடுதலாக ரூபாய் 1 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து சேர்த்து தலா ரூபாய் 2 லட்சம் என வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் வெள்ளத்தால் நெற்பயிர் பாதிக்கப்பட்டதால் நெல்பயிர் சேதத்திற்கு ஹெக்டேருக்கு ரூபாய் 7,500 என்ற நிவாரணத்தொகையை ரூபாய் 8000 ஆக இந்த அரசு உயர்த்தியது. இதைத் தொடர்ந்து எழுந்த வேண்டுகோளை ஏற்று முதலமைச்சர் அவர்கள் நெல்லுக்கு வெள்ள பாதிப்பிற்கான நிவாரணத் தொகையை ஹெக்டேருக்கு ரூபாய் 10,000 ஆக உயர்த்தி வழங்க ஆணையிட்டார். இதேபோல் மானாவாரி பயிர்க்கும், அதன் சேதத்திற்கு நிவாரணத் தொகையாக ஹெக்டேருக்கு ரூபாய் 2,000 லிருந்து ரூபாய் 4,000 ஆக உயர்த்தி வழங்கவும், நெல் அல்லாத மற்ற பாசனப் பயிருக்கு ரூபாய் 7,500 என்று வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. மழை வெள்ளம் காரணமாக போதுமான வடிகால் வசதியின்றி பயிர்ச்சேதமும், பொருள் சேதமும் அடிக்கடி ஏற்படும் நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் கடலூர் மாவட்டங்களில் முறையான வடிகால் வசதிகள் ஏற்படுத்தி வெள்ளப் பாதிப்பை நிரந்தரமாகத் தடுத்திட சிறப்பு வெள்ள மேலாண்மைத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

மூன்று ஆறுகளை ஒன்றிணைத்து....


10.வடகிழக்குப் பருவ மழை அதிக அளவில் பெய்யும் பொழுது சரபங்கா நதி, திருமணிமுத்தாறு மற்றும் அய்யாறு ஆகிய உபநதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. இந்த மூன்று ஆறுகளையும் ஓர் இணைப்புக் கால்வாய் மூலம் இணைத்து வறட்சிப் பகுதிகளில் விவசாயத்திற்குப் பயன்படும் வகையில் இந்த ஆறுகள் பாய்ந்தோடும் சேலம், நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களிலுள்ள கண்மாய்கள் மற்றும் குளங்களுக்கு வெள்ள நீரைத் திருப்பி விட்டு, இப்பகுதிகளில் நிலத்தடி நீரைச் செறிவூட்டும் வகையில் ஒரு சிறப்புத் திட்டத்தைத் தீட்டி நிறைவேற்ற உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப் படும்.

11.தமிழ்நாட்டில் முக்கிய உணவுப் பயிரான நெல் உற்பத்திப் பெருக்கத்திற்காக, இராஜராஜன் 1,000 செம்மை நெல் சாகுபடி முறையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்து அதைப் பரவலாக்கிச் செயல்படுத்தி வருவது பாராட்டத்தக்க முயற்சியாகும். பயறுவகைகளின் உற்பத்தியையும், உற்பத்தித் திறனையும் அதிகரிக்க சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் துல்லிய பண்ணை முறை, சிக்கன நீர்ப்பாசனம், இயந்திரமயமாக்கல் போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, செலவைக் கட்டுப்படுத்தி, உற்பத்தித்திறனை உயர்த்தி வருவாயைப் பெருக்குவதுடன் உயர் தொழில்நுட்பத்தை விவசாயிகளிடம் பரவலாக்கவும் வழி செய்யப் பட்டுள்ளது. இத்தகைய சீரிய முயற்சிகளின் பயனாக 2008-2009இல் 71 லட்சம் டன்னாக இருந்த உணவு உற்பத்தி 2009-2010ஆம் ஆண்டில் 84 லட்சம் டன் அளவை எட்டியுள்ளது. நடப்பு ஆண்டில் மொத்த சாகுபடி பரப்பளவு சென்ற ஆண்டு பரப்பளவை விட 13.80 சதவிகிதம் உயர்ந்து 60.19 லட்சம் ஹெக்டேர் அளவை எட்டியுள்ளது. பயறு வகைச் சாகுபடி சென்ற ஆண்டைக் காட்டிலும் 36.70 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் பெய்துள்ள மழையால் சில மாவட்டங்களில் வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ள போதிலும் சென்ற ஆண்டைக் காட்டிலும் உணவு உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

12.பயிர்க் கடன்களுக்கு 7 சதவிகிதமாக இருந்த வட்டியை உரிய நேரத்தில் திரும்பச் செலுத்துவோருக்கு படிப்படியாகக் குறைத்து 2008-2009 முதல், நாட்டிலேயே முதல் மாநிலமாக, வட்டியில்லா பயிர்க் கடன் வழங்கும் திட்டம் இந்த அரசினால் தொடங்கப்பட்டது. இதனால் கூட்டுறவு வங்கிகளின் மூலமாக பயிர்க்கடன் வழங்குவது ஆண்டுக்காண்டு அதிகரித்து நடப்பு ஆண்டில் ரூபாய் 2,500 கோடி என்ற அளவில் குறியீடு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூபாய் 2,092 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் குறு விவசாயிகளும் உயரிய தொழில் நுட்பத்தைக் கடைப்பிடிக்கவும், உற்பத்தித் திறனைப் பெருக்கவும் ஒரு புதிய திட்டமாக அறிவிக்கப்பட்ட விவசாயக் கூட்டுப் பொறுப்புக்குழுக்கள் திட்டம் நல்ல பலனை ஏற்படுத்தியுள்ளது. வரும் காலத்தில் இத்திட்டம் மகளிர் சுய உதவிக் குழுக்களைப் போன்று ஓர் இயக்கமாக மாறி விவசாய உற்பத்தியில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.

விவசாயிகள் நலன்

13.தென்னை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தென்னை விவசாயிகள் நலவாரியத்தையும் இந்த அரசு அண்மையில் அமைத்துள்ளது. பனை, தென்னை விவசாயிகளின் நலன் கருதி பனைநுங்குச் சாறும், தென்னை இளநீரும் பக்குவப்படுத்தப்பட்டுத் தயாரிக்கப்படுகிற சுவைநீர், காதி கிராமத்தொழிற்சங்கங்கள் வாயிலாக விற்பனை செய்யப்படும். தென்னை விவசாயிகள் நலவாரியம் மூலம் தேங்காயைக் கொள்முதல் செய்து கொப்பரை தயாரிக்கவும், இந்த வாரியம் மூலம் தயாரிக்கப்படுகின்ற தேங்காய் எண்ணையைச் சத்துணவுத்திட்டத்தில் தற்போது வழங்கப்படும் பாமாயிலுக்குப் பதில் பயன்படுத்தவும், கூட்டுறவு அங்காடிகள் மூலம் விற்பனை செய்யவும் இந்த அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.


14.இயற்கைச் சீற்றத்தால் பயிரிழப்பு ஏற்படும்பொழுது விவசாயிகள் அதன் தாக்கத்திலிருந்து மீண்டு எழுவதற்கு பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை ஒரு முக்கியத் திட்டமாக இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் 2001-2006 ஆம் ஆண்டில் 2,38,036 விவசாயிகள் மட்டுமே ரூபாய் 145 கோடி அளவிற்கு இழப்பீட்டுத் தொகை பெற்றிருந்தனர் என்ற நிலை மாறி, கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த ஆட்சியில் 9,01,643 விவசாயிகள் ரூபாய் 974 கோடி இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுப் பயன் அடைந்துள்ளனர்.

கடலில் சென்று வீணாகும் நீரை சேமிக்க...


15.நிலத்தடி நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழக அரசு 2008 ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ரூபாய் 550 கோடி மதிப்பீட்டில் தடுப்பணைகள் அமைக்கும் பெருந்திட்டம் ஒன்றினைத் தொடங்கிச் செயல்படுத்தி வருகிறது. உலக வங்கி உதவியுடன் ரூபாய் 2,547 கோடி மதிப்பீட்டில் 2007ஆம் ஆண்டு முதல் 6.17 லட்சம் ஹெக்டேர் பயன்பெறத்தக்க நீர்வள நிலவளத் திட்டமும் (IAMWARN செயல்படுத்தப்பட்டு வருகிறது. வெள்ள நீரைத் தடுத்துப் பயன்படுத்தும் நோக்குடன் காவிரி ஆற்றின் குறுக்கே ரூபாய் 189 கோடி செலவில் மாயனூரில் கட்டளை கதவணை; ரூபாய் 369 கோடி செலவில் கன்னடியன் கால்வாயிலிருந்து தாமிரபரணி ஆற்றினை நம்பியாற்றுடன் இணைக்கும் திட்டம் போன்றவை தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதியில் வெள்ளப் பெருக்கு தடுக்கப்படுவதுடன் கடலில் சென்று வீணாகும் நீர் முறையாகச் சேமிக்கப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுவதற்கு வழிவகை` ஏற்படும்.

வனவளத்தைப் பாதுகாக்க ரூ.686 கோடி

16.தமிழ்நாட்டில் வனவளத்தைப் பாதுகாக்க ரூபாய் 686 கோடி மதிப்பீட்டில் ஜப்பான் பன்னாட்டு நிதி நிறுவன உதவியுடன், தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமைத் திட்டத்தினை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

17.மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையான நாட்டுப் படகுகளுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, ஒரு படகுக்கு 200 லிட்டர் வீதம் மாதம் 3200 கிலோ லிட்டர், மானிய விலையில் வழங்க உத்தரவிடப்பட்டு நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, அரசு ஆண்டுக்கு ரூபாய் 80 கோடி மானியம் வழங்குகிறது.

18.தொழில் முதலீட்டுக்கு உகந்த முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு கருதப்படுகிறது. இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு ரூபாய் 50,615 கோடி முதலீடு கொண்ட 43 பெரிய தொழில் திட்டங்கள் ஈர்க்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், இந்திய எண்ணெய் நிறுவனத்துடன் இணைந்து ரூபாய் 10,000 கோடி முதலீட்டில் எண்ணூருக்கு அருகில் 5 மில்லியன் டன் திறன் கொண்ட எரிவாயு இறக்குமதி முனையம், எரிவாயுக் குழாய் அமைப்பு மற்றும் மின்நிலையம் ஆகியவற்றை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி

இதனால், தொழில் வளர்ச்சிக்குப்போதுமான அளவு எரிசக்தி கிடைப்பது உறுதி செய்யப்படும். தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் முயற்சியின் விளைவாக மானாமதுரையில் வீடியோகான் தொழிற்சாலை, மேலூரில் தமிழ்நாடு கனிம வளநிறுவனம் மூலம் கிரானைட் கற்கள் பட்டை தீட்டும் தொழிற்சாலை, திருநெல்வேலி மாவட்டத்தில் ஏ.டி.சி. டயர் தொழிற்சாலை, திண்டுக்கல் மாவட்டத்தில் செட்டிநாடு சிமென்ட் நிறுவனத்தின் இரண்டாவது விரிவாக்கத் திட்டம், நிலக்கோட்டையில் பென்னர் இந்தியா போன்ற பல்வேறு நிறுவனங்கள் தொழில் தொடங்க உள்ளதால், இப்பகுதியில் பெரும் சமூகப் பொருளாதார மாற்றம் ஏற்பட வாய்ப்பு அதிகரித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் வாடிப் பட்டியில் ரூபாய் 100 கோடி முதலீட்டில் ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா 18.12.2010 அன்று தொடங்கப் பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டிற்குப் பிறகு யூரியா, அமோனியம் சார்ந்த உரஉற்பத்தியை நிறுத்தி வைத்திருந்த, தூத்துக்குடியிலுள்ள ஸ்பிக் நிறுவனம், மத்திய இரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் அவர்களின் தொடர் முயற்சியால் கடந்த நவம்பர் மாதம் முதல் வாரத்திலிருந்து யூரியா உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளது. இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி வருவதன் காரணமாகத் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியும் வேலைவாய்ப்புகளும் கணிசமாகப் பெருகி வருகின்றன.

ரூ.450 கோடியில் சுற்றுலா மேம்பாடு திட்டம்

19.இந்த அரசு சுற்றுலா வளர்ச்சிக்குப் பெரும் முக்கியத்துவம் வழங்கி வருகிறது. மருத்துவச் சுற்றுலா, இயற்கைச் சுற்றுலா, ஊரகச் சுற்றுலா, வீரதீரச் சுற்றுலா, விருந்தினர் போற்றுதும் போன்ற புதுமையான உத்திகளைக் கையாண்டதால் வெளிநாட்டுப் பயணிகளை ஈர்ப்பதிலும், மருத்துவச் சுற்றுலாவிலும் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்திலும், உள்நாட்டுப் பயணிகளைக் கவர்வதில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. கிழக்குக் கடற்கரை மற்றும் தென்னகச் சுற்றுலா மய்யங்களை அழகுபடுத்தவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் ஆசிய வங்கியின் நிதியுதவியுடன் ரூபாய் 450 கோடி செலவில் ஒரு சிறப்புச் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

20.பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்திட சாலைகளை அகலப்படுத்துதல், புதிய சாலைகள் மற்றும் பாலங்கள் அமைத்தல், சாலைகளின் தரத்தை மேம்படுத்துதல் போன்றபணிகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. நெடுஞ்சாலைத் துறை மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் சாலைக் கட்டமைப்பிற்குச் செலவிடப்பட்ட தொகை ரூபாய் 8,716 கோடியாகும். 2010-2011ஆம் நிதியாண்டில் சாலை மேம்பாட்டுக்காகச் செலவிடப்படும் தொகை ரூபாய் 3,358 கோடியாகும். உலக வங்கி நிதியுதவியுடன் செயல்பட்டுவரும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்த ஆண்டு ரூபாய் 282 கோடி கூடுதல் நிதிக்கு அனுமதி கிடைத்துள்ளது.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க...

சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூபாய் 1,081 கோடியில் ஆறுவழிகள் கொண்ட சென்னை புற வட்டச் சாலை, சிங்கப்பெருமாள் கோவில் முதல் ஒரகடம் வழியாக திருப்பெரும்புதூர் வரை அமைக்கப்பட்டு வரும் 24.6 கிலோமீட்டர் நீளமுள்ள நான்கு வழிச்சாலை போன்ற பணிகள் மிக முக்கியமானவை. கோவை நகரில் 26 கி.மீ துரத்திற்கு நான்கு வழிச் சாலையாக அமைக்கப்பட்டு வரும் கோவை மேற்கு புறவழிச்சாலை, கோயம்புத்தூரி லிருந்து மேட்டுப்பாளையம் வரையிலான நான்குவழிச் சாலை என எண்ணற்ற சாலைப் பணிகளை இந்த அரசு தொடர்ந்து மேற் கொண்டுள்ளது.

21.சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து பாதுகாப்பான விரைவான பயணத்திற்கு வழி செய்ய, ரூபாய் 14,600 கோடி செலவில் 45 கிலோ மீட்டர் துரத்திற்கு ஜப்பான் நாட்டு நிதி உதவியுடனும், மத்திய அரசு நிதி உதவியுடனும் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் அனுமதிக்கப்பட்டு மிக விரைவாகச் செயல் படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த மெட்ரோ ரயில் இணைப்பு ரூபாய் 3,001 கோடி மதிப்பீட்டில் திருவொற்றியூர் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு மத்திய அரசும் தொடர்ந்து நிதியுதவிகளை நல்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மூலக்கடை - திருமங்கலம், மூலக்கடை - திருவான்மியூர், லஸ் - அய்யப்பன்தாங்கல் வழியாக பூவிருந்தவல்லி வரை பாதைகள் அமைப்பது பற்றியும் திட்ட ஆய்வு மேற்கொள்ளப்படும்.

22.அரசுப் பேருந்து வசதிகளை மேம்படுத்த கடந்த நான்கு ஆண்டுகளில் 12,137 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. 2010-2011 ஆம் ஆண்டில் மேலும் 3,000 புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பேருந்துகளின் சராசரி வயது 4.41 ஆண்டாக தற்போது குறைக்கப்பட்டு சேவைத்தரம் உயர்த்தப் பட்டுள்ளது. அதி நவீன சொகுசுப் பேருந்துகள், தாழ்தளப் பேருந்துகள், குளிர்சாதனப் பேருந்துகள் போன்ற சிறப்புவகைப் பேருந்துகளும் இந்த அரசால் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. இத்தகைய முயற்சிகளால் நாளொன் றுக்குச் சராசரியாக அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 2006-2007 ஆம் ஆண்டில் 177 இலட்சமாக இருந்தது, 2009-2010 ஆம் ஆண்டில் 205 இலட்சமாக உயர்ந்துள்ளது.

23.பெருகி வரும் தொழில் வளர்ச்சியினாலும், பொருளாதார வளர்ச்சியினாலும் மின்சாரத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2005-2006 ஆம் ஆண்டு இறுதியில் 8209 மெகாவாட்டாக இருந்த மின்சாரத் தேவை 2010-2011 ஆம் ஆண்டில் 11,000 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் மூலமாக மின் உற்பத்தி இதே காலகட்டத்தில் 5383 மெகாவாட்டிலிருந்து 5572 மெகாவாட்டாக மட்டும் உயர்ந்துள்ளது. மின் உற்பத்தித் திட்டங்கள் நீண்டகாலத் திட்டங்கள் என்பதால் பெருகிவரும் தேவையை நிறைவு செய்ய உரிய தொலைநோக்குத் திட்டங்கள் கடந்த காலத்தில் தீட்டப்படவில்லை. இந்த அரசு பொறுப்பேற்றபின் பல திட்டங்களைத் தொடங்கிப் பணிகள் நடை பெற்று வருகின்றன. வடசென்னையில் ரூபாய் 4,600 கோடி செலவில் 1200 மெகாவாட் அனல் மின் திட்டம், மேட்டூரில் ரூபாய் 3,100 கோடி செலவில் 600 மெகாவாட் அனல் மின் திட்டம், சென்னைக்கு அருகில் வல்லூரில் மத்திய அனல் மின் நிறுவனத்துடன் இணைந்து ரூபாய் 9,000 கோடி செலவில் 1500 மெகாவாட் அனல் மின் திட்டம், தூத்துக்குடியில் ரூபாய் 4,909 கோடி செலவில் 1000 மெகாவாட் அனல் மின்திட்டம், உடன்குடியில் பாரத மிகுமின் நிறுவனத்துடன் (BHEL) இணைந்து ரூபாய் 9,000 கோடி செலவில் 1600 மெகாவாட் அனல் மின் திட்டம் ஆகியவை நடைபெற்று வருகின்றன. பவானி மற்றும் பெரியார் அணைகளில் ரூபாய் 1,285 கோடி செலவில் கூடுதலாக 93 மெகாவாட் புனல் மின் உற்பத்தி செய்ய பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 12 கூட்டுறவு மற்றும் அரசு சர்க்கரை ஆலைகளில் ரூபாய் 1,126 கோடி முதலீட்டில் 183 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தமிழ்நாடு உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. தனியார் முதலீட்டிலும் சில திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றின் பயனாக 2010-2011 ஆம் ஆண்டில் மட்டும் 900 மெகாவாட் மின் உற்பத்தி கூடுதலாகக் கிடைக்கும். பதினோராவது அய்ந்தாண்டு திட்டக் கால இறுதியில் தமிழ்நாட்டுக்குத் தேவையான மின்சாரம் 14,224 மெகாவாட்டாகவும், உற்பத்தியாகும் மின்சாரம் 16,425 மெகா வாட்டாகவும் இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் 2012இல் தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை முழுமையாக நீங்கி உபரி மின்சாரம் உள்ள மாநிலமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைவர்க்கும் கல்வி

24.அனைவருக்கும் கல்வி என்ற குறிக்கோளை அடைய மத்திய அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தில் செயல்வழிக் கற்றல் போன்ற புதுமையான கல்வி முறைகளைப் புகுத்தி மாணவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்த்து, கற்கும் திறனை இந்த அரசு அதிகரித்துள்ளது. அரசு செயல்படுத்தி வரும் சிறப்பான கல்வித் திட்டத்தின் பயனாகத் தொடக்கப்பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் 2004-2005 ஆண்டில் 3.81 சதவிகிதமாக இருந்தது; கடந்த ஆண்டில் 1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. அதேபோல் இடைநிலைப் பள்ளிகளில் 2004-2005 ஆண்டில் 7.58 சதவிகிதமாக இருந்த இடைநிற்றல் விகிதம் கடந்த ஆண்டில் 1.79 சதவிகிதமாக குறைந்துள்ளது. 2008-2009 ஆம் ஆண்டு தேசிய கல்வி திட்டமிடுதல் மற்றும் நிருவாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பள்ளிக் கல்வியின் தரத்தைக் குறிப்பிடும் கல்வி வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு அய்ந்தாம் இடத்தில் உள்ளது. அதேபோல், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 2008இல் மேற்கொண்ட ஆய்வின்படி, கணிதம், மொழித்திறன் பாடங்களில் மாணவர்களின் திறன் தமிழ்நாட்டில்தான் முதல் நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

25. ஏழை எளிய மாணவர்களும் உயர் கல்வியைத் தடையின்றி பெறும் வகையில் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியலில் முதுகலை பட்டம் பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடப்பாண்டில் ஓர் உன்னத முயற்சியாக பட்டதாரியே இல்லாத குடும்பங்களிலிருந்து தொழிற் கல்வி பயில ஒற்றைச் சாளர முறையில் ஒதுக்கீடு பெறும் மாணவ மாணவியருக்கு அரசால் அனுமதிக்கப்பட்ட முழு கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்கும் என உத்தரவிடப்பட்டு இந்த ஆண்டு 80,450 தொழிற்கல்வி படிக்கும் முதல் தலைமுறை மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.

26.திருச்சி, கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் புதிதாக இந்த அரசினால் தொடங்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் பொறியியல் கல்லூரிகள் அமைக்கும் நோக்குடன் 12 புதிய பொறியியல் கல்லூரிகளை அமைத்ததுடன், 12 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும் இந்த அரசு அமைத்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் - ராஜீவ்காந்தி சாலைக்கும், கிழக்கு கடற்கரைச் சாலைக்கும் இடையில் உள்ள நெம்மேலியிலும்; தூத்துக்குடி மாவட்டம் - நாகலாபுரத்திலும்; தருமபுரி மாவட்டம் -அரூரிலும்; விழுப்புரம் மாவட்டம் - கள்ளக்குறிச்சியிலும்; விருதுநகர் மாவட்டம் - திருச்சுழியிலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் புதிதாகத் தொடங்கப்படும். கீவளூரில் புதிய விவசாயக் கல்லூரி வேளாண்மைத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள விவசாயிகள் நிறைந்த நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் பெரிதும் பயன்பெற வேண்டுமென்ற எண்ணத்தோடு, நாகை மாவட்டத்தில் உள்ள கீவளூரில் இந்த ஆண்டு புதிதாக விவசாயக் கல்லூரி ஒன்று தொடங்கப்படும். அண்மையில் நடைபெற்ற வேளாண்மை அலுவலர்கள் மாநாட்டில் முதலமைச்சர் கலைஞர் அறிவித்ததற்கு இணங்க, இந்தியாவிலேயே முதன் முதலாக கால்நடைப் பல்கலைக் கழகத்தையும், கோவையில் வேளாண்மை பல்கலைக்கழகத்தையும் தொடங்கிப் பெருமை சேர்த்த இந்த அரசு, வேளாண்மையின் எதிர்காலம் என்று கருதப்படும் தோட்டக்கலைக்கெனத் தனியே தோட்டக்கலைப் பல்கலைக்கழகம் ஒன்றைக் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இந்த ஆண்டில் தொடங்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சரின் அரிய முயற்சியால் மத்திய அரசு மத்திய பல்கலைக்கழகத்தைத் திருவாரூரிலும், இந்திய மேலாண்மைக் கழகத்தைத் திருச்சியிலும் அமைத்துள்ளது. உலகத்தரம்மிக்க பல்கலைக்கழகத்தைக் கோவையில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அறிவியல் பெருநகரம்

27. கடந்த வாரம் சென்னை மாநகருக்கு வருகை தந்து 98வது இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய நமது பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள், இந்திய அறிவியல் அரங்கில் தமிழகம் தனிச் சிறப்புப் பெற்றுள்ளது. இந்தியாவின் நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியரான சர்.சி.வி. இராமன் சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்றவர். நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் எஸ். சந்திரசேகரும் சென்னை வாசிதான். உலகப்புகழ் பெற்ற கணிதமேதை இராமானுஜமும் தமிழகத்தைச் சேர்ந்தவர்தான். இத்தகைய காரணங்களால் இந்திய அறிவியல் அரங்கில் தமிழகம் தனிச் சிறப்புடன் விளங்குகிறது என்று கூறியது நாமெல்லாம் தலை நிமிர்ந்து மகிழக் கூடிய பாராட்டுரையாகும். முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சென்னை தொழில்நுட்ப நிறுவனத்தில் (எம்.அய்.டி) 1990 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் நாள் அன்று ஆற்றிய உரையில் சென்னையில் அண்ணா பல்கலைக் கழகம் அமைந்திருக்கின்ற இடத்தையும், அதைச் சுற்றியுள்ள அறிவு நிலையங்களையும், அவற்றைப் போல அறிவியல் புதுமைகளைச் செய்கின்ற இடங்களையெல்லாம் இணைத்து இந்தப் பகுதியையே ஓர் அறிவியல் நகரமாகச் சென்னை மாநகரத்திலே உருவாக்க வேண்டும் என்று அறிவித்தார். அவர் கருதிப் பார்த்தவாறு, அறிவியல் நகரம் அமையவில்லை என்பது ஒரு பெருங்குறையாகவே உள்ளதால், சென்னையில், அண்ணா பல்கலைக்கழகம், இந்திய தொழில்நுட்ப நிறுவனம் போன்ற 69-க்கும் மேற்பட்ட உயர்கல்வி ஆய்வு நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, உயர் அறிவியல் ஆய்வுக்கு உகந்த வசதிகளை உள்ளடக்கி இளைய தலைமுறையினரின் அறிவு வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் தூய்மைப் பகுதியாக விளங்கிட உலகத்தரம் மிக்க அறிவியல் பெருநகரம் அமைக்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-7.1.2011 ஆளுநர் உரையிலிருந்து

28.படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் 2006-2007இல் அறிவிக்கப்பட்டு, இதுவரை 4,01,704 இளைஞர்களுக்கு ரூபாய் 284 கோடி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு தேர்ச்சியுறாத, வேலையற்ற இளைஞர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது ஒரு நிரந்தரத் தீர்வல்ல என்பதை உணர்ந்து வேலையில்லாத் திண்டாட்டத்தை முழுமையாக அகற்ற பல்வேறு முயற்சிகளை இந்த அரசு எடுத்து வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து அரசுத் துறைகளில் மட்டும் 5,05,314 பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

29.வேலைவாய்ப்பை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு பயிற்சித் திட்டங்களை அரசு செயல்படுத்தினாலும், தொழில் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் தகுதியின் தன்மைக்கும், கல்லூரிகள், பள்ளிகளில் படித்து வெளிவரும் இளைஞர்களின் திறமைக்கும் உள்ள வேறுபாட்டின் காரணமாக உயர்கல்வி படித்த மாணவர்கள் கூடப் படிப்பினை வெற்றிகரமாக முடித்த பின்பு வேலைவாய்ப்பைப் பெற இயலாத நிலையைத் தவிர்த்து ஒரு நிரந்தரத் தீர்வு காண தொழில் நிறுவனங்களே படித்த இளைஞர்களை நேரடியாகத் தேர்வு செய்து பயிற்சி அளித்து, வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் ஒரு புதிய திட்டமாக படித்த இளைஞர்களுக்கான பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு திட்டம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் நாள், சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் கலைஞர் அவர்களால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், முதற்கட்டமாக திருவள்ளூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகைதந்த 49,495 இளைஞர்களில் 17,600 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புப் பயிற்சிக்கான பணி, மற்றும் பணி நியமன ஆணைகள் வழங்கப் பட்டுள்ளன. தொடர்ந்து, இத்திட்டத்தில் மற்ற மாவட்டங்களிலும் முகாம்கள் நடத்தப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ஒரு இலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மேற்கொண்டு வரும் பயிற்சியுடன் கூடிய இந்த வேலைவாய்ப்புத் திட்டத்தின் அடுத்த கட்டமாகப் பள்ளிகள், கல்லூரிகளுடன் தொழில் நிறுவனங்களின் நேரடித் தொடர்பை ஏற்படுத்தி, அந்தத் தொழில் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் வகையில் மாணவ மாணவியர்க்குப் பயிற்சிகள் அளித்திடும் கல்வித் திட்டங்களை உரியவாறு மாற்றியமைத்து, மொழியாற்றல் போன்ற கூடுதல் திறன் வளர்ப்புப் பயிற்சியையும் கல்வி நிறுவனங்களிலேயே வழங்கிப் பட்டம் பெற்றவுடன் இளைஞர்கள் பணியில் அமரக் கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்படும்.


30.இது தவிர, சமூக ஆர்வலர்களும், தமிழ் மய்யம் போன்ற தனியார் அமைப்புகளும், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களின் உதவியுடன் நாகர்கோவில், காரியாப்பட்டி, வேலூர், உதகமண்டலம், விருதுநகர், கடலூர், திருச்சி, திருநெல்வேலி, துத்துக்குடி ஆகிய நகரங்களில் வேலைவாய்ப்பினைத் தேடித்தரும் முகாம்களை நடத்தின. இந்த முகாம்களில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 712 வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, அவர்களில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 998 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. இத்தகைய முயற்சிகளை இந்த அரசு வரவேற்பதுடன், இந்த அமைப்புகள் ஆற்றிவரும் அரும்பணிகளையும் பாராட்டுகிறது.

நலமான தமிழகம்

31.உடல்வலிமையும், சுகாதாரமான வாழ்வும் மனிதவள மேம்பாட்டுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் அடிப்படை என்பதைக் கருத்தில் கொண்டு அடித்தட்டு மக்களும் உடல் நலத்தோடும், வளத்தோடும் வாழ சிறப்பான மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. உலக வங்கி உதவியுடன் ரூபாய் 506 கோடி செலவில் செயல்படுத்தப்பட்ட தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் இரண்டாம் கட்டத்திற்கு நீட்டிக்கப்பட்டு கூடுதலாக ரூபாய் 627 கோடி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம், தொற்றுநோய் அல்லாத பிற நோய்களான இதய நோய், நீரிழிவு நோய், மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பை வாய்ப்புற்றுநோய் ஆகிய நோய்களைத் தடுத்தல், கண்டறிந்து சிகிச்சை அளித்தல் போன்ற பணிகள் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் பங்களிப்புடன் மாநில அரசினால் செயல்படுத்தப்படும் 108 ஆம்புலன்ஸ் சர்வீஸ் அவசர கால சிகிச்சை பெற ஒரு உன்னதத் திட்டமாகக் கருதப்படுகிறது. அதேபோல் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் தேசிய ஊரக நல்வாழ்வுத் திட்டத்திற்கு 2010-2011 ஆம் ஆண்டிற்கு ரூபாய் 776 கோடியே 46 இலட்சம் அனுமதிக்கப்பட்டு, நலமான தமிழகம் உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால் இந்த நிலையங்களில் மகப்பேறு வசதி பெற்ற தாய்மார்களின் எண்ணிக்கை 2005-2006 ஆம் ஆண்டைக் காட்டிலும் 2009-2010ஆம் ஆண்டில் 277 சதவிகிதம் அதிகரித்துள்ளது. பச்சிளங்குழந்தைகளின் இறப்பு விகிதம் 2006 ஆம் ஆண்டில் ஆயிரம் பிறப்புகளுக்கு 37 லிருந்து 2010 ஆம் ஆண்டில் 31 ஆகவும் பேறு காலத்தில் பெண்களின் இறப்பு இதே காலகட்டத்தில் லட்சத்திற்கு 111 என்பதிலிருந்து 79ஆகவும் குறைந்துள்ளது. பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை மேலும் குறைத்து, பிறந்த குழந்தைகள் அனைவரையும் காத்திட உதவும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவ மனைகளின் உதவியோடு ஒரு வயது வரையுள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர அவசர சிகிச்சைத் திட்டம் என்னும் புதிய திட்டத்தினை இந்த ஆண்டில் ரூபாய் 10 கோடி செலவில் அறிமுகம் செய்திடவும், அடுத்த ஆண்டில் இத்திட்டத்தினை ரூபாய் 15 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்திடவும் இந்த அரசு முடிவெடுத்துள்ளது. திறன் மிக்க மருத்துவர்களை உருவாக்க இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர் திருவாரூர், தருமபுரி, விழுப்புரம், ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கியுள்ளது. பின்தங்கிய மாவட்டங்களான சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி


மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி என்னும் இந்த அரசின் நோக்கத்தைத் தொடர்ந்து நிறை வேற்றிடும் வகையில்; அடுத்தபடியாக இராமநாதபுரம், கடலூர் மற்றும் திண்டுக்கல்லிலும் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும். இதன் மூலம் வருங்காலத்தில் தகுதியுடைய மருத்துவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் கணிசமாக உயர வாய்ப்புள்ளது. சித்த மருத்துவத்தின் தாயகம் என கருதப்படும் தமிழகத்தில்தான் இந்தியாவிலேயே சித்த, ஆயுர்வேத, யுனானி, யோகா இயற்கை மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆகிய அய்ந்து பிரிவுகளுக்கான மருத்துவத்திற்கான கல்லூரிகளை அரசே நடத்தி வருகின்றது. பாரம்பரியம் மிக்க இந்திய மருத்துவத்தையும் மற்றும் ஓமியோபதி மருத்துவத்தையும் வளர்த்தெடுக்க தற்போதுள்ள ஆறு அரசு இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி கல்லூரிகளையும், இதுபோன்ற 26 தனியார் கல்லூரிகளையும் உள்ளடக்கி தனியாக இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி பல்கலைக்கழகம் ஒன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடங்கப்படும்.

32.அனைவருக்கும் சுகாதாரம் என்ற குறிக்கோளை எட்டும் நோக்குடன் ஏழை எளிய மக்களும் எளிதில் பயன்பெறத்தக்க வகையில் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத்திட்டம் அறிவிக்கப்பட்டு, இந்த அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 1.34 கோடி குடும்பத்தினர் இதுவரை உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கான பங்குத் தொகையை அரசே செலுத்தியுள்ளது. இக்காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் இதுவரை 2,55,744 நபர்கள் ரூபாய் 667 கோடி அளவிற்குச் சிகிச்சை பெற்றுப் பயனடைந்துள்ளர். தமிழகம் முழுவதும் இத்திட்டம் ஒரு பெரும் சுகாதாரப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டம் நாட்டுக்கே வழிகாட்டும் திட்டமாகவும், இந்த அரசின் திட்டங்களில் தலைசிறந்த ஒன்றாகவும் கருதப்படுகிறது.

33. நலிந்த மக்களுக்கான சமூகப்பாதுகாப்புத் திட்டங்களில் மிகவும் முக்கியமானது ஆதரவற்ற முதியோர், விதவைகள், விவசாயக் கூலிகள், மாற்றுத்திறன் படைத்தோர் போன்றோருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டமாகும். ஆதரவற்ற நிலையில் உள்ள இத்தகைய மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர உதவித் தொகையான ரூபாய் 200 என்பது செப்டம்பர் 2006 முதல் ரூபாய் 400 எனவும், 24.11.2010 அன்று நடந்த விவசாய அலுவலர்கள் மாநாட்டில் முதலமைச்சர் கலைஞர் அறிவித்தவாறு 2010 ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ரூபாய் 500 எனவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது பயன்பெறும் மொத்தப் பயனாளிகள் 22,26,850 பேர் ஆகும்.

34.அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக விவசாயத் தொழிலாளர் நல வாரியம், கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம், மீனவர் நல வாரியம் உள்ளடக்கிய 37 நல வாரியங்கள் அமைக்கப்பட்டு அதில் 2.11 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப் பட்டுள்ளனர். இவர்களில் மாதாந்திர முதியோர் உதவித் தொகை பெற்று வருபவர்களுக்கு, அந்த உதவித் தொகை மாதம் ரூபாய் 400 என்று இருந்ததை ரூபாய் 500 ஆக உயர்த்தி வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு இந்த நல வாரியங்கள் மூலமாக ரூபாய் 876 கோடிக்கான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

வெளிநாடுவாழ் தமிழர் நலவாரியம்

35.தமிழ்நாட்டிலிருந்து சென்று வெளிநாட்டில் பணிபுரியும் தமிழர்களின் நலனுக்காக வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம் ஒன்றை அமைக்க இந்த அரசு உத்தரவிட்டுள்ளது.

36.சமூகப்பாதுகாப்புத் திட்டங்களில் மேலும் ஓர் உன்னதத் திட்டமாக உணவுப் பாதுகாப்பு வழங்கும் பொதுவிநியோகத் திட்டம் உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் இத்திட்டம் அனைவருக்குமான பொது விநியோகத்திட்டமாக செயல்படுத்தப்பட்டு; ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், கோதுமை மாவு போன்றவற்றுடன் 10 மளிகைப் பொருள்கள் அடங்கிய பைகளையும் பொது மக்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் மானிய விலையில் தொடர்ந்து வழங்கும் மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. இதனால், விலைவாசியின் தாக்கத்திலிருந்து ஏழை மற்றும் நடுத்தர மக்களைப் பாதுகாக்கும் பணியை இந்த அரசு செவ்வனே செய்து வருகிறது.

37. சத்துணவு மய்யத்தில் பயன்பெறும் குழந்தைகளுக்கு வாரத்திற்கு மூன்று முட்டை என்பதை வாரத்திற்கு அய்ந்து முட்டையாக அதிகரித்து ஆணையிட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கும் அந்த அய்ந்து நாள்களிலும் வாழைப்பழம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் அரிசி, எண்ணெய் மற்றும் காய்கறிகளின் அளவையும் கூடுதலாக்கி அதற்கான உதவித் தொகையையும் உயர்த்தியுள்ளது. இத்தகைய முயற்சிகளின் வாயிலாகக் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் போதிய சத்துணவைப் பெற்று நல்ல கல்வி அறிவைத் திறம்பட வளர்த்துக் கொள்ளவும் எதிர் காலத்தில் இதனால் ஒரு வளமான தலைமுறை உருவாகும் வாய்ப்பினையும் தமிழகம் பெற்றுள்ளது.

38.உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு பெண்களுக்கு வழங்கி, அவர்களை அதிகாரம் பெற்றவர்களாக மாற்ற இந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசும் இதுபோன்று பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு முறையை உறுதிப்படுத்த அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு செய்ய வேண்டுமென இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.

39.பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவும் சுய உதவிக் குழுக்களின் இயக்கம் இம்மாநிலத்தில் வலுப்பெற்று இதுவரை 5,54,538 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களிடம் தற்போது உள்ள சேமிப்புத் தொகை ரூபாய் 3,214 கோடியாகும். இவர்களுக்குக் கடந்த அய்ந்து ஆண்டுகளில் மட்டும் வழங்கப்பட்ட சுழல் நிதி ரூபாய் 529 கோடி. இவர்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட கடன் உதவி ரூபாய் 9,032 கோடியாகும். பெண்களின் மேம்பாட்டிற்காக அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை விற்பனை செய்ய ஒரு பொலிவான வணிக வளாகத்தை சென்னையில் ஏற்படுத்தி அதை மிகப் பொருத்தமாக அன்னை தெரசா அவர்களின் பெயரிலேயே அமைத்து 2010 நவம்பர் முதல் நாளன்று தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்தார்கள். ஏழைகளுக்காகவே வாழ்ந்த அன்னை தெரசாவின் புகழைப் போற்றி எழுப்பப்பட்ட இந்த நினைவுக் கட்டடத்தோடு அவர்களின் நூறாண்டு பிறந்த நாள் விழாவினையும் இந்த அரசு 2010 டிசம்பர் நான்காம் நாளன்று கொண்டாடியது ஒரு சிறப்புமிக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகள்

40.மாற்றுத் திறனாளிகள் பல்வேறு அரசு உதவிகளைப் பெறுவதற்கு வருமான உச்ச வரம்பை இந்த அரசு முழுமையாக நீக்கியுள்ளது. அரசுக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அவர்களுக்கான கல்விக் கட்டணம், சிறப்புக் கட்டணம் போன்றவை ரத்து செய்யப்பட்டுள்ளன. தசைச் சிதைவு (Muscular Dystropy) நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு முறையான சிகிச்சை அளித்து நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவிலேயே முதன் முதலாக நமது மாநிலத்தில் 6 மாவட்டங்களில் பகல் நேர பராமரிப்பு மய்யங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. செவித்திறன் பாதிக்கப்பட்ட, மனவளர்ச்சி குன்றிய, பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட 6 வயது வரையுடைய மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்து அக்குழந்தைகளைச் சாதாரண பள்ளிகளில் சேர்த்திட உதவியாக, அகில இந்திய அளவில் முதல் முறையாக தமிழகத்தில் ஆரம்பநிலை பயிற்சி மய்யங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன. 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் அனைவரையும் இயல்பான மற்றும் உள்ளார்ந்த கல்விமுறைத் திட்டங்களில் சேர்ப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 95,128 மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் இந்த ஆண்டு சேர்க்கப்பட்டுள்ளனர். அரசு அலுவலர்களாக உள்ள மாற்றுத் திறனாளிகள் அலுவலகங்களுக்கு வந்து செல்வதற்கான போக்குவரத்துப்படி மாதம் ரூபாய் 300 என்று இருந்ததை இந்த அரசு ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கியுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திட வழிகாட்டும் திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்தியா விலேயே முதன் முறையாக மாற்றுத் திறனாளிகள் நலம் காக்க தனி நல வாரியம் அமைக்கப்பட்டு, தனித் துறையும் ஏற்படுத்தப்பட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே முன்வந்து அந்தத்துறையைத் தன் தலைமையிலே ஏற்றுச் செயல்படுவது சிறப்புக்குரியதாகும்.


41.மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள அடித்தட்டு மக்களாம் அருந்ததியர்களின் நலன் காக்க அவர்களுக்கு 3 சதவிகித உள் ஒதுக்கீட்டினை வழங்கியதன் பயனாக இந்த ஆண்டு மருத்துவக் கல்லுரிகளில் அருந்ததிய இனத்தைச் சார்ந்த 91 மாணவர்களும், பொறியியல் கல்லுரிகளில் 1,771 மாணவர்களும் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

பஞ்சமி நிலங்கள் பற்றி...

42. தமிழகத்தில் பல்லாண்டு காலத்திற்கு முன்பு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை பஞ்சமர்கள் அல்லாதவர்கள் பட்டா மாறுதல் செய்து வைத்திருப்பதாகவும் காலப்போக்கில் அவற்றைப் பல்வேறு தரப்பினர் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வருவதாகவும் ஆக்கிரமிப்பு செய்த நிலங்கள் பலவற்றில் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டுள்ளதாகவும்; ஒப்படை நிபந்தனைகள் மீறப்பட்டு, கிரயம் செய்யப்பட்டு பலருக்குக் கைமாற்றப்பட்டுள்ளதாகவும்; அடிக்கடி அரசுக்கு முறையீடுகள் வருவதோடு, ஏடுகளிலும் செய்திகள் வருகின்றன. பஞ்சமி நிலம் தொடர்பான பல்வேறு பிரச்சினை களையும் சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டு, பரிசீலனை செய்து, அவர்களிடமே திரும்ப ஒப்படைக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வு செய்து, அரசுக்குப் பரிந்துரைகள் வழங்குவதற்கு, உயர்நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதியரசர் ஒருவர் தலைமையில் குழு அமைப்பதென அரசு முடிவு செய்துள்ளது.


43.நகர்ப்புறத்திற்கு இணையான அடிப்படை வசதிகளை ஊரகப் பகுதிகளிலும் ஏற்படுத்துவதை ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டு இணைப்புச் சாலைகள், தெரு விளக்குகள், குடிநீர் வசதி, வடிகால் வசதி, நூலகங்கள், குளம், விளையாட்டுத் திடல், மயானம் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கு அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தினை உருவாக்கி அதன் மூலம் 12,618 கிராம ஊராட்சிகளிலும் அய்ந்து ஆண்டுகளில் ரூபாய் 2,549 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கிராமப்புறச் சாலைகளை மேம்படுத்த ஒரு சிறப்பு ஒதுக்கீடாக நபார்டு வங்கியின் உதவியை எதிர்நோக்கி ரூபாய் 320 கோடி உடனடியாக அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது தவிர மத்திய அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டுவரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் 2010-2011 ஆம் ஆண்டில் இதுவரை 21.42 கோடி மனித நாட்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு, ரூபாய் 1,847 கோடி ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 2010இல் பொதுநல வழக்கு ஒன்றை விசாரித்த உச்ச நீதி மன்றம் இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திய மாநிலம் தமிழ்நாடு என்றும் இதை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வறுமை ஒழிப்புத் திட்டத்திலேயே ஒரு புது முயற்சியாக உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ் நாட்டில் வாழ்ந்து காட்டுவோம் என்ற திட்டம் 16 மாவட்டங்களில் உள்ள 2,509 ஊராட்சிகளில் ரூபாய் 717 கோடி செலவில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் மேலும் 10 மாவட்டங்களுக்கு ரூபாய் 950 கோடி செலவில் இந்த ஆண்டு விரிவுபடுத்தப் பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள 1,661 ஊராட்சிகளில் வாழும் 9.6 இலட்சம் ஏழைக் குடும்பத்தினர் பயன்பெறுவர். இத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வந்த உலக வங்கியின் இந்தியாவிற்கான இயக்குநர், உலக வங்கியின் நிதியுதவியுடன் உலகின் பல்வேறு நாடுகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம்தான், அதன் திட்ட வடிவமைப்பிலும், செயல்முறைப்படுத்துவதிலும் தலைசிறந்த திட்டமாக மதிப்பிடப்பட்டுள்ளது எனப் பாராட்டியுள்ளது மிகுந்த மன மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

கழிவுநீர்-மழைநீர்

44.2001ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 44 சதவிகிதம் மக்கள் நகர்ப்புரங்களில் வசிக்கின்றனர். இதனால், நகர்ப்புர மக்களின் தேவையை நிறைவு செய்யவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், பல்வேறு திட்டங்களை இந்த அரசு முனைப்போடு செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் திட்டமான ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் குடிநீர், கழிவுநீர் அகற்றுதல், மழைநீர் வடிகால் வசதிகளை ஏற்படுத்துதல், திடக் கழிவு மேலாண்மை, வீட்டு வசதி, போக்குவரத்து போன்ற பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தோடு, உலக வங்கியின் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டம்-3, ஜப்பான் நாட்டின் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு அமைப்பு மற்றும் ஜெர்மனி நாட்டின் கே.எஃப்.டபிள்யூ போன்ற வெளிநாட்டு நிதி உதவி நிறுவனங்கள் மூலம் கூடுதல் நிதி ஆதாரத்தைத் திரட்டி அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வருகின்றது. நகர்ப்புர உள்ளாட்சிகளில் சாலைகள் மேம்பாட்டிற்காக இந்த அரசு சிறப்பானதொரு திட்டத்தை இந்த ஆண்டு அறிவித்து ரூபாய் 1,051 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியைக் கொண்டு நகர உள்ளாட்சி அமைப்புகளுக்குட்பட்ட 3,500 கிலோ மீட்டர் சாலைகளை மேம்படுத்தும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.


45.சென்னை நகரும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் வேகமாக வளர்ந்து வருகின்றன. இதேபோல் கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி போன்ற பிற நகரங்களும் வளர்ந்து வருகின்றன. இத்தகைய வளர்ச்சியினால் புதிதாக உருவாகிவரும் புறநகர் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியமாகிறது. சென்னை மாநகராட்சி மற்றும் அதன் எல்லையை ஒட்டி அமைந்துள்ள புறநகர்ப் பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வளர்ச்சி மய்யமாகச் செயல்படும் முக்கிய நகரங்கள் மற்றும் அவற்றை ஒட்டியுள்ள பகுதிகளிலும், மதுரை, கோவை, திருச்சி, நெல்லை போன்ற மாநகராட்சிகள், ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி போன்ற புதிதாக அமைக்கப்பட்ட மாநகராட்சிகள் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நகராட்சிகளிலும் குடிநீர், சாலைகள், கழிவு நீர் வசதி, திடக் கழிவு மேலாண்மை, மின்விளக்கு போன்ற பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர அடுத்த 5 ஆண்டுகளுக்கு சுமார் ரூபாய் 15 ஆயிரம் கோடி தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஆதாரத்தை மாநிலத்தின் நிதி ஆதாரத்திலிருந்தும், சர்வதேச நிதியுதவி அமைப்புகளிடமிருந்து நிதியுதவி பெற்றும் தரம் மிக்க அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும்.

46.இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு குடிநீர் வசதிக்காக பல்வேறு பெரும் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வருகின்றது. குடிநீர் வசதியற்ற இராமநாதபுரம் போன்ற மாவட்டங்கள் பயன் பெறும் வகையில் ரூபாய் 616 கோடி செலவில் ஒரு சிறப்பு கூட்டுக் குடிநீர்த் திட்டம் இந்த அரசால் தொடங்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. ஃபுளூரைடு பிரச்சினையால் வெகுவாக பாதிக்கப்பட்ட தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பயன்பெறத்தக்க வகையில் இந்த அரசு எடுத்த பெரு முயற்சியின் பயனாக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூபாய் 1,929 கோடி செலவில் தொடங்கப்பட்டு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் டிசம்பர் 2012இல் நிறைவுபெறும். இத்திட்டத்தினால் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 30 இலட்சம் மக்களின் குடிநீர்ப் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படும். இதேபோல், மதுரை, சேலம், கோவை, திருப்பூர், விருதுநகர், நாகப்பட்டினம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள 42 இலட்சம் மக்கள் பயன் பெறும் வகையில் ரூபாய் 1,882 கோடிக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. வேலுர் மாநகராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரூபாய் 1,295 கோடி செலவில் சுமார் 25 இலட்சம் மக்கள் பயன் பெறத்தக்க வகையில் ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் விரைவில் தொடங்க நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டுள்ளது. சென்னை நகருக்கான குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்த மீஞ்சூரில் ஒரு நாளைக்கு 100 மில்லியன் லிட்டர் வழங்கக்கூடிய, கடல் நீரை நன்னீராக்கும் திட்டம், பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதேபோல் மத்திய அரசு நிதியுதவியுடன் ரூபாய் 533 கோடி மூலதனச் செலவில் கடல் நீரை நன்னீராக்கும் திட்டப் பணிகள் நெமிலியில் நடைபெற்று வருகின்றன. இது தவிர, பல்வேறு சிறு மற்றும் இடைப்பட்ட அளவிலான திட்டங்களைத் தொடர்ந்து இந்த அரசு செயல்படுத்தி வருவதன் காரணமாகத் தமிழ்நாட்டில் கடந்த அய்ந்து ஆண்டுகளில் குடிநீர்ப் பிரச்சினை எந்த அளவிலும் தலைகாட்டாத நிலை உள்ளது.

கலைஞர் வீடு வழங்கும் திட்டம்

47.உண்பது நாழி ; உடுப்பது இரண்டே என்னும் சங்கப் பாடலுக்கு ஏற்ப உணவு, உடை, உறையுள்-இவை மக்களின் அடிப்படைத் தேவைகளாகும். குடிசைகளில் வாழும் இலட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து பல இன்னல்களைச் சந்தித்து வருவதைக் கருத்தில் கொண்டு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தமிழகத்தை குடிசைகளற்ற மாநிலமாக மாற்ற கலைஞர் வீடு வழங்கும் திட்டம் என்னும் ஓர் உன்னதமான மனித நேயத் திட்டத்தை இந்த அரசு அறிவித்தது. குடிசைகளே இல்லாத தமிழகத்தைக் காண வேண்டுமென்ற நமது முதலமைச்சர் கலைஞர் அவர்களின் கனவு நனவாக கிராமப்புறங்களில் உள்ள ஓலைக்குடிசை வீடுகளின் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டு தமிழகத்திலே உள்ள 21 லட்சம் குடிசைகளையும் ஆறாண்டு காலத்தில் கான்கிரீட் வீடுகளாக மாற்றி அமைத்திடத் திட்டமிட்டு அதற்காக அரசின் சார்பில் வீடு ஒன்றுக்கு 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது. அந்தத் தொகை போதுமானதாக இல்லை என்ற வேண்டுகோள் எழுந்ததன் காரணமாக அந்தத் தொகையை வீடு ஒன்றுக்கு 75 ஆயிரம் ரூபாய் என்று அரசு உயர்த்தியது. முதல் கட்டமாக இந்த ஆண்டு தொடங்கப்பட்ட மூன்று லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் நிலையிலுள்ளன. 2010-2011 ஆம் ஆண்டிற்கு இதற்கென ரூபாய் 2,250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இன்னமும் ஒரு சாரார் இந்த 75 ஆயிரம் ரூபாயும் போதாது, குடிசைவாசிகள் மேலும் கடன் பெற்று வீடுகளைத் தங்கள் வசதிக்கேற்ப கட்ட வேண்டிய நிலை உள்ளது என்று தெரிவித்துவருவதால், 75 ஆயிரம் ரூபாயில் தாங்கள் விரும்புவது போல் வீடுகளை கட்டிக்கொள்ள முடியாத நிலையில் கூடுதல் நிதி தேவைப்படுபவர்களுக்கு மட்டும் மேலும் 20 ஆயிரம் ரூபாய் வரை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடனாகப் பெற்றுக் கொள்ள இந்த அரசு தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த 20ஆயிரம் ரூபாய் கடனை அவர்கள் தவணை முறையில் திரும்பச் செலுத்திக் கொள்ளலாம். இந்த மூன்று லட்சம் பயனாளிகள் தவிர, மற்ற தகுதியான பயனாளிகளுக்கும் வீடுகள் பெறுவதற்கான அடையாள அட்டைகள் வழங்கப் பட்டுள்ளன. நடப்பாண்டில் மேற்கொள்ளப் பட்டுள்ள கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி வேகமாக நடைபெற்று வருவதால், அடையாள அட்டை வழங்கப்பட்ட பயனாளிகளில் முதல் கட்டமாக மூன்று இலட்சம் பேருக்கு வீடுகள் கட்டி முடிப்பதன்னியில் அடுத்த கட்டமாக இந்த ஆண்டிலேயே மேலும் மூன்று லட்சம் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டும் பணிகளைத் தொடங்க அனுமதியளிக்கப்படும்.

48.தமிழ்நாட்டில் குடிசைகளற்ற கிராமங்களை உருவாக்குவது போல் குடிசைப்பகுதிகளற்ற நகரங்களையும் உருவாக்க இந்த அரசால்தான் 1970 ஆம் ஆண்டில் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் தொடங்கப்பட்டது. இதுவரை இந்த வாரியம் மூலம் ஒரு இலட்சத்து 6 ஆயிரம் வீடுகள் கட்டப் பட்டுள்ளன. இந்த முயற்சியைத் தீவிரப்படுத்த 2011-2012 ஆம் ஆண்டில் தொடங்கி அடுத்த அய்ந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பேரூராட்சிகளிலும் உள்ள சுமார் இரண்டரை லட்சம் குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற இந்த அரசு உரிய நடவடிக்கைகளைத் தொடங்கி யுள்ளது.

49.மாறிவரும் பொருளாதாரச் சூழ்நிலையில், நகர்ப்புரத்தை நாடிவரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதன் காரணமாக அவ்வாறு வருபவர்கள் நிரந்தரமாகத் தங்குவதற்கு வசதியான வீடுகள் போதுமான எண்ணிக்கையில் இல்லாததால் சுமார் 8 லட்சம் குடும்பங்கள் குடிசைப் பகுதிகளில் வாழ்வதாக 2001ஆம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய குடும்பங்கள் சுகாதாரமற்ற, பாதுகாப்பற்ற சூழலில் உள்ளதாகவும், இதில் பெரும்பாலானோர் ஆட்சேபனைக்குரிய புறம்போக்குப் பகுதியில் வசிப்பதாகவும் கண்டறியப் பட்டுள்ளது. இவர்களுக்குப் பாதுகாப்பான வீடுகள் கட்டித்தர மேலும் பல ஆண்டுகள் தாமதமாகும் என்பதால், ஒரு சிறப்புத் திட்டம் தயாரித்து இத்தகைய திட்டத்திற்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் நிதியுதவியைப் பெற்றுக் கூடுதலாகத் தேவைப்படும் முழுத் தொகையையும் மாநில அரசே ஏற்று 2017ஆம் ஆண்டுக்குள் நகர்ப்புர குடிசைப்பகுதிகளில் உள்ள அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்ற பகுதிகளில் பாதுகாப்பான வீடுகள் கட்டி வழங்கப்படும். இத்திட்டத்திற்கான கணக்கெடுப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்கு அடையாள அட்டை வழங்கியதுபோல் இத்திட்டத்திற்கும் அடையாள அட்டை வழங்கி 2011-2012 ஆம் ஆண்டில் வீடுகள் கட்டும் முதற்கட்டப் பணிகள் தொடங்கப்படும். இதன்மூலம், தமிழகமெங்கும் குடிசைகளே இல்லாத கிராமங்களும், குடிசைப்பகுதிகளே இல்லாத நகரங்களும் உருவாக்கப்பட்டு அனைவருக்கும் பாதுகாப்பான வீடுகள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

50.கிராமப்புறங்களில் ஏழைக் குடும்பங்கள் பாதுகாப்பான வீடுகள் கட்டுவதற்கு மத்திய நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகின்ற இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் தொகுப்பு வீடுகள் கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இத்திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் சில இடங்களில் பெருமளவில் சேதமடைந்துள்ள நிலையில் அதில் குடியிருக்கும் ஏழைக் குடும்பங்கள், அத்தகைய வீடுகளைத் தங்களால் சீரமைத்துக் கொள்ள போதிய நிதி வசதி இல்லையென்றும், அதனால் அரசு உதவ வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இவர்களின் கோரிக்கையை இந்த அரசு ஏற்று, 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி பெருமளவில் பாதிப்படைந்துள்ள வீடுகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு அந்தப் பயனாளிகளே அவற்றை சீரமைத்துக் கொள்ளும் வகையில் வீடு ஒன்றுக்குத் தலா ரூபாய் 15,000 தமிழக அரசு நிதியுதவியாக வழங்கப்படும்.

51.அதிகரித்து வரும் நகர்ப்புற வளர்ச்சியின் காரணத்தால் மாநகர் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பெறும் மக்கள், சொந்தமாகக் குடியிருப்பு வீடுகள் வாங்க பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உணர்ந்துள்ள தமிழக அரசு சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் மற்றும் கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, ஈரோடு, ஓசூர் உள்ளிட்ட நகரங்களிலும் வீட்டுவசதி வாரியத்திற்குச் சொந்தமான 1,100 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவினரின் வாங்கும் திறனுக்கேற்ப, இலாப நோக்கின்றி குடியிருப்புகள் மற்றும் மனைகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தரமான கட்டுமானத்துடன், அடிப்படைக் கட்டமைப்புகளுடன் கூடிய மனைகள், குடியிருப்புகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் உருவாக்கு வதற்கான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பல ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்து வரும் அரசின் விருப்புரிமையில் வீடுகள் மற்றும் மனைகள் ஒதுக்கீடு செய்யும் முறை இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது.

வள்ளலாரின் கருத்தை உள்ளத்தில் பதித்து...

52. இவ்வாறு வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று பாடிய வடலூர் வள்ளலாரின் கருத்தை உள்ளத்தில் பதித்து பயிர் வாடுவது போல் மனித உயிரும் வாடக் கூடாது எனும் மனித நேய உணர்வுடன், மக்கள் தொண்டே மகேசன் தொண்டு எனும் நிலையான நினைப்புடன் - அடித்தளத்து மக்களுடன் அனைத்து மக்களுக்கும், அத்தியாவசியத் தேவையான வாழ்ந்திட உறையுள், வயிறார உணவு, உடை ஆகியவற்றில் அயராக் கவனம் செலுத்தி அயல் நாட்டினர் கூட வியக்குமளவிற்கு இந்தியத் திரு நாட்டின் திலகமாக விளங்கும் நமது தாய்த் தமிழகத்தைத் தரணியில் தலை நிமிர வைக்க மகேசன் தொண்டும், மக்கள் தொண்டுக்கு ஈடில்லை எனும் உறுதியுடன்-ஆட்சிப் பொறுப்பை வாய்மையோடு நிறைவேற்றும் இந்த அரசுக்கு இனிய தமிழ் மக்களின் பேராதரவு இன்று போல் என்றும் தொடரும் என்ற நம்பிக்கையோடு தமிழர் திருநாளாம் புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துக்களைக் கூறி நிறைவு செய்கிறேன்.

நன்றி வணக்கம்.-

இவ்வாறு ஆளுநர் உரையாற்றினார்.

முன்ன தாக பேரவைக்கு வருகை தந்த தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னா லாவை தமிழக சட்டப் பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன், தமிழக சட்டப் பேர வைச் செயலாளர் மா. செல்வராஜ் ஆகியோர் வரவேற்றனர். பேரவைக்கு வருகை தந்த தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா வுக்கு தமிழக முதலமைச் சர் கலைஞர், துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நிதியமைச்சர் பேராசிரியர் க. அன்ப ழகன் மற்றும் அமைச்சர் பெரு மக்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அனை வரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். தமிழ்த் தாய் வாழ்த் துக்குப் பின்னர் ஆளுநர் தனது உரையை நிகழ்த் துகையில், தமிழ்நாட் டின் பதின்மூன்றாவது சட்டப் பேரவையின் பதினைந்தாவது கூட்டத் தொடராகவும், 2011ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடராகவும் அமைந்துள்ள இக்கூட் டத் தொடரைத் தொடங்கி வைத்து, 9-ஆவது முறை யாக இச்சட்டமன்றத்தில் தொடக்க உரை ஆற்றும் வாய்ப்பினை, தமிழக மக்கள் எனக்கு வழங் கியதை எண்ணிப் பெரு மிதம் கொள்கிறேன் என்று தனது ஆங்கில உரையில் குறிப்பிட்டார். பின்னர் ஆளுநரின் ஆங்கில உரையை சட் டப் பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன் தமிழில் வாசித்தார். பின் னர் ஆளுநர் அனைவரி டமும் விடை பெற்றுச் சென்றார்.

அதிமுக, மதிமுக உறுப்பினர் குண்டுக் கட்டாக வெளியேற்றம்

ஆளுநர் தனது உரையை நிகழ்த்தத் தொடங்கியபோது, அதி முகவைச் சேர்ந்த சட்ட மன்ற உறுப்பினர்கள் மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக ஒலி முழக்கம் எழுப்பியவாறு அவைக் கும் குந்தகம் ஏற்படும் வகையிலும், ஆளுநர் உரைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதா லும், ஆளுநரின் அனு மதியுடன் அவர்களை வெளியேற்ற பேரவை யின் விதி 286-இன்படி பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன் அவைக் காவலர்களுக்கு உத்தர விட்டார். அதன் படி அவர்களை அவைக் காவலர்கள் குண்டுக் கட்டாக தூக்கி வெளி யேற்றினர். அதேபோன்று ஆளுநர் உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந் திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.


No comments:

Post a Comment