முதல்வர் கருணாநிதியை இன்று (18.01.2011) அவரது இல்லத்தில், மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி சந்தித்தார். அப்போது தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். மேலும், சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ராஜீவ் பெயர் சூட்ட அறிவித்ததற்கும் நன்றி தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உடனிருந்தார்.
பின்னர் நாரயணசாமி கூறியதாவது:
இந்த சந்திப்பின் போது அரசியல் ஏதாவது பேசினீர்களா? தற்போது மத்திய அமைச்சரவையில் மாற்றம் என்றெல்லாம் செய்திகள் வருகின்றனவே?
அதுபற்றி எனக்கொன்றும் தெரியாது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து?
இது ஒரு முக்கியமான பிரச்னை. தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள். இது குறித்து முதல்வர் பிரதமருக்கு பல கடிதங்களை எழுதி, இலங்கை அரசுடன் பேசி இதுபோன்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். அதன் அடிப்படையில் டெல்லிக்கு ராஜபக்சே வந்திருந்தபோது, அவரிடம் பிரதமர் இதுகுறித்து பேசி தாக்குதல் சம்பவங்கள் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
மேலும், இலங்கைக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணாவை அனுப்பி, அங்கு பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நிவாரண பணிகளை கண்காணிக்கவும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து பேசவும் செய்தார். மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார பணிகளை மேற்கொள்ள 2200 கோடி ரூபாய் அளவிற்கு நிதியுதவியும் அளிக்க மத்திய அரசு முன்வந்திருக்கிறது.
வேதாரண்யம், கன்னியாகுமரி பகுதிகளிலுள்ள மீனவர்கள்தான் பெரும்பாலும் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். இதுகுறித்து இந்திய அரசின் சார்பிலேயும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொட ராமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இலங்கை மீனவர்கள் இங்கே பிடிக்கப்ப டும்போது, அவர்களை மன்னித்து விடுதலை செய்கிறோம். பெரும்பாலும், கடல் எல்லைகள் தெரியாத நிலையில்தான் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து விடுகின்றன.
தேர்தல் கூட்டணி குறித்து?
பிரதமர் மன்மோகன் சிங் சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தபோது, முதல்வர் கருணாநிதியை சந்தித்த பின்னர் அளித்த பேட்டியில், “திமுக&காங்கிரஸ் கூட்டணி வலிமையாக இருக்கிறது” என்று கூறியுள்ளார். அதையே முதல்வரும் சொல்லியிருக்கிறார். பிரதமரும்&முதல்வரும் அதை தெளிவுபடுத்திய பிறகு நான் அது குறித்து கருத்து எதுவும் கூற விரும்பவில்லை. கூட்டணி வலுவாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment