பல்வேறு துறைகளில் 5 லட்சத்து 5,344 பேருக்கு நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
படித்து வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பயிற்சி, பணி நியமனம் பெறுவதற்கான ஆணைகள் வழங்கும் விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் 05.01.2011 அன்று மாலை நடந்தது. இதில், 5 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி, பணி நியமனங்களுக்கான ஆணை, சிறந்த தனியார் நிறுவனங்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
கடந்த 15&8&2010ல் சுதந்திர தின நாளில் கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றினேன். அப்போது, ஐ.நா.அமைப்பு இந்த ஆண்டை இளைஞர் ஆண்டாக அறிவித்ததால், இளைஞர்கள் வேலை பெற பயிற்சி வழங்கும் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று கூறினேன்.
அதன்படி, நடப்பாண்டில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க ரூ.53 கோடி ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் ஆலோசகராக, இந்திய தொழில் கூட்டமைப்பு நிறுவனம் பொறுப்பு ஏற்றது. 15 அரசு துறைகளை கண்டறிந்து பணிக்குழு அமைக்கப்பட்டது. திட்ட செயல்பாட்டை கண்காணிக்க துணை முதல்வர் தலைமையில் அமைச்சர் தா.மோ.அன்பரசனை துணைத்தலைவராக கொண்டு முக்கிய துறைகளின் செயலாளர்கள் கொண்ட குழுமம் 25.9.2010ல் அமைக்கப்பட்டது.
மாவட்ட அளவில் தேர்வு முகாம்கள் அமைக்க திட்டமிட்டு, திருவள்ளூரில் முதல் முகாம் நடந்தது. இதில், 13,445 இளைஞர்களும், 83 தனியார் நிறுவனங்களும் பங்கேற்றன. 5,216 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அடுத்து, நெல் லையில் நடந்த முகாமில் 7,210 பேரும், 60 நிறுவனங்களும் பங்கேற்றன. 2,335 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
திருவாரூர், நாகையில் நடந்த முகாமில் 12,550 இளைஞர்களும், 54 நிறுவனங்களும் பங்கேற்றன. 4,730 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர், கிருஷ்ணகிரி, தர்மபுரியில் நடந்த முகாமில் 16,218 பேரும், 77 நிறுவனங்களும் பங்கேற்றன. 5,346 பேர் தேர்வு செய்யப்பட்டனர். 6 முகாம்களில் 49,495 பேர் பங்கேற்றனர். 17,600 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு, பயிற்சி, பணி நியமன ஆணைகள் இன்று வழங்கப்படுகின்றன.
அடுத்தக் கட்டமாக அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடத்தப்படும். கடந்த தேர்தலின் போது, திமுக தேர்தல் அறிக்கையில் கூறியவாறு படித்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்று கூறி னோம். அந்த தேர்தல் அறிக் கையை மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் 'தேர்தலின் கதாநாயகன்’ என்றார்.
அதன்படி, 4 லட்சத்து 1,704 படித்த இளைஞர்களுக்கு 31.12.2010 வரை 284 கோடி ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வளவு பேருக்கு வேலை இல்லையே என்ற பெருமூச்சும், இவ்வளவு உதவித் தொகை வழங்கி உள்ளோமே என்ற பெருமகிழ்ச்சியும் ஏற்படுகிறது.
அதிமுக ஆட்சியில் பணி நியமன தடைச் சட்டம் கொண்டு வரப்பட் டது. அதை அகற்றுவோம். அரசு வேலைக்கான வயது உச்சவரம்பை தளர்த்துவோம் என்றோம். அந்த உறுதி மொழிகளை அரசு நிறைவேற்றியது. இதில் எனக்கு முழு மனநிறைவு இல்லை. தமிழ்நாட்டில் ஒரு இளைஞன் கூட வேலைவாய்ப்பு இன்றி இல்லை என்று உருவாகும் நாள்தான் முழு மகிழ்ச்சியை அளிக்கும்.
இந்த ஆட்சியில் சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கும், அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 26,354 பேருக்கும், ஆசிரியர் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஒரு லட்சத்து 43 ஆயிரம் பேரும் நியமிக்கப்பட்டனர். தொகுப்பூதியம் பெற்று வந்த 2 லட்சத்து 93 ஆயிரம் பேர் காலமுறை ஊதியம் பணி நிரந்தரம் பெற்றனர். கருணை அடிப்படையில் 14,966 பேர் வேலைவாய்ப்பு பெற்றனர். ஆக, பல்வேறு துறைகளில் 5 லட்சத்து 5,344 பேர் நிரந்தர வேலைவாய்ப்பு பெற்றனர்.
இது முற்று பெறவில்லை; முற்றுப்பெற வேண்டிய காலம் இன்னும் இருக்கிறது. இந்த அரசு, வேலை வாய்ப்பை வழங்கிக் கொண்டே இருக்கிறது. இந்த திட்டம் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும்.
இதுதவிர, மாவட்டங்களில் அமைச்சர்கள், கலெக்டர்களுடன் கனிமொழி இணைந்து வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வருகிறார். இந்த முகாம்களில் 2 லட் சத்து 33,712 பேர் பங்கேற்று 1 லட்சத்து 33,998 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்போடும் போது, அது எந்த நாடு என்றாலும், நான் அவர்களிடம் பெறும் உறுதி மொழி, வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் வேண்டும். உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் என்று கூறுவேன். அந்த உறுதியை பெற்றுத்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவேன். அதைப்போன்ற உறுதி மொழியை தொழில் துறை பொறுப்பேற்றிருக்கும் துணை முதல்வர் ஸ்டாலினும் பெற்றுத்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்.
தமிழ்நாட்டில் தொழில் களை நடத்துவதற்கான வசதி வாய்ப்புகள் பெருகிக்கொண்டே போகிறது. தொழில், வசதிவாய்ப்பு பெருகினால்தான் ஒரு நாடு முழுமையான நாடாக உருவாக முடியும். தமிழகத்தில் பல பகுதிகள் முன் னேறி இருந்தாலும், இன்னும் முன்னேற வேண்டிய பகுதி நிறைய உள்ளது. அதையும் நிறைவு செய்ய வேண்டும். அதற்கு நான், இளைஞர்களைத்தான் நம்பி இருக்கிறேன். இளைஞர்களால் தான் நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியும். உருவான எதிர்காலத்தை கட்டிக்காக்க முடியும். அதற்கு இளைஞர்கள் தங்கள் ஆர்வத்தை தொடர்ந்து காட்ட வேண்டும்
இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.
விழாவுக்கு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். தலை மைச் செயலாளர் மாலதி முன்னிலை வகித்தார். வேலைவாய்ப்பு துறை செய லாளர் அசோக் டோங்ரே வரவேற்றார். கனிமொழி எம்.பி., இந்திய தொழில் கூட்டமைப்பு நிர்வாகி மாணிக்கம் ராமசாமி ஆகியோர் பேசினர். முடிவில், வேலைவாய்ப்புத் துறை இயக்குனர் சந்தோஷ் மிஸ்ரா நன்றி கூறினார்.
முன்னதாக, இந்த திட்டம் பற்றிய குறும்படத்தை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார். இந்த திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் கருணா நிதி முன்னிலையில் கையெழுத்தானது. இதில், தமிழக வேலை வாய்ப்புத்துறை இயக்குனர் சந்தோஷ் மிஸ்ரா, இந்திய தொழில் கூட்டமைப்பு தென்மண்டல திறன் பணிக்குழு தலைவர் மாணிக்கம் ராமசாமி கையெழுத்திட்டனர்.
No comments:
Post a Comment