கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, September 19, 2010

அரசு வழங்கிய சலுகைகளால் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகின்றன


குணாநிதி அமிர்தம் தயாரிப்பில் செல்வபாரதி இயக்கத்தில் சுந்தர் சி நடிக்கும் முரட்டுக்காளை படம் வெளிவருகிறது. இதன் பாடல் சி.டி. வெளியீட்டு விழா நேற்று நடந்தது. சி.டி.யை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார். நடிகர் விக்ரம் பெற்றுக் கொண்டார்.
விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
வைரமுத்து வாழ்த்தும்போது எந்தெந்த பழைய காலத்துப் படங்களெல்லாம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வந்து வெற்றி பெற்றன என்று பட்டியல் வெளியிட்டார். அந்த பட்டியலில் வள்ளி திருமணம் வந்தது. அபூர்வ சகோதரர்கள் வந்தது. ஆனால் கண்ணகி மாத்திரம் வரவில்லை.
பி.யூ. சின்னப்பா, கண்ணாம்பா நடித்து, இளங்கோவனால் உரையாடல் தீட்டப்பட்ட கண்ணகி பெரும் வெற்றி பெற்றது. அதை பூம்புகார் என்ற பெயரில் நான் எழுதி இயக்குநர் கிருஷ்ணன்&பஞ்சு இயக்குவதாக விளம்பரம் செய்யப்பட்டது. அந்த படத்தை திரும்ப எடுத்தால் வெற்றி பெறுமா என்ற சந்தேகத்தின் காரணமாக சரவணன் தந்தை ஏ.வி.எம்.செட்டியார் என்னை அழைத்து, கதையையே திருப்பிக் கொடுத்து விட்டார்.
எனக்கு, அப்படித் திருப்பி வந்த கதை, பெரிய வெற்றியை சில நேரங்களிலே தந்திருக்கிறது. குண்டலகேசி இலக்கியத்தை திருச்சி வானொலி நிலையத்திற்கு ஓரங்க நாடகமாக எழுதியனுப்பி, அதை ஒலிபரப்புவார்கள் என்று நாள்தோறும் எதிர்பார்த்தேன். ஆனால் அவர்கள் தயங்கி 1940ம் ஆண்டில் வெளியிட மறுத்து விட்டார்கள். அதுதான் மந்திரிகுமாரி என்ற தலைப்பில் எம்.ஜி.ஆர். நடித்து, 1950&51ம் ஆண்டில் வெளிவந்த வெற்றிகரமான படமாகும்.
அந்த வாய்ப்பின் அடிப்படையிலே தான் செட்டியாரிடம் பூம்புகார் தலைப்பிலே நான் எழுதிய கண்ணகி கதை நிச்சயமாக வெற்றிகரமாக வரும் என்று சொல்லியுங்கூட, அவருக்கு சந்தேகம். நீங்கள் அதை எடுத்தே ஆக வேண்டுமென்று கேட்டபோது கூட, நான் அப்படிப்பட்ட அக்னி பரிட்சையிலே இறங்க விரும்பவில்லை எனச் சொல்லி, கதையைத் திருப்பி கொடுத்து விட்டார்.
அது தான் ராஜேந்திரனும், விஜயகுமாரியும் நடித்து பூம்புகார் படமாக வெளிவந்து, இன்றைக்கும் அந்த உரையாடல்களை இளம் தோழர்கள், மாணவர்கள் உச்சரித்துக் கொண்டிருக்கிறார்களே, அந்தப் படம் ஆகும். மறுபதிப்பாக அல்லது மறுவடிவமாக சில திருத்தங்களோடு ஒரு படத்தை திரும்ப எடுத்தால், அது வெற்றியடையாது என்பது உண்மை அல்ல.
எடுப்பவர்களின் திறமை, அவர்களுடைய கற்பனையை மக்களுடைய மனநிலையை அடிப்படையாகக் கொண்டு வெளிவருகிற எந்தப் படமானாலும், அவைகள் ஆண்டாண்டு காலத்திற்கு மக்கள் மனதிலே பதியக் கூடிய அளவிற்கு வெற்றியைத் தரும்.
சுமனை எனக்கு நன்றாகத் தெரியும். இப்படி தமிழ் பேசுகிறாரே அவர் என்ன தமிழ்நாட்டுக்காரரா என்று கேட்டேன். இல்லை, இல்லை ஆந்திராக்காரர் என்றார்கள். வேடிக்கை என்னவென்றால், ஆந்திராக்காரர் பேசுகிற அளவிற்கு நம்முடைய தமிழ் நடிகர்கள் சில பேர் பேசுவதில்லையே என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது.
படத்தினுடைய குறுந்தகடைப் பெற்றுக் கொண்ட சீயான் விக்ரம் எனக்கு நெருங்கிய நண்பர்களிலே ஒருவர். விக்ரம் படங்களை, அதை யார் தயாரித்த படங்களாக இருந்தாலும் சரி, அந்த படம் ஓரளவு பெரிய வெற்றியை பெற்றாலும், பெறாவிட்டாலும், அதிலே விக்ரமுடைய நடிப்பு சரியாக இருக்கும். பாராட்டத்தக்கதாக இருக்கும். அண்மையிலே வெளிவந்த ‘ராவணன்’ படத்தில் அவர் காட்டியுள்ள திறமை, அவருடைய முகபாவங்கள், அவர் அந்த பாத்திரத்திற்கேற்ப அவர் எடுத்துக் கொண்ட முயற்சி இவைகள் எல்லாம் இன்னும் என்னுடைய கண்களிலே நிற்கின்றன. இந்த படத்தை தயாரித்திருப்பவர் என்னுடைய பேரன் குணாநிதி. அவரே ஒரு முரட்டுக்காளை. வீட்டில் முரட்டுக்காளையாக இருந்த அவரை கொஞ்சம் கொஞ்சமாக பயிற்றுவித்து, சாதுவான பசுவாக ஆக்கிய அந்தப் பெருமை அவனுடைய தந்தை அமிர்தத்தை சேரும்.
அமிர்தம் எவ்வளவு பெரிய ஒளிப்பதிவாளர் என்பதும் மறைந்த ராமண்ணா எடுத்த படங்களில் அவர் கையாண்ட ஒளிப்பதிவு டெக்னிக் எல்லாம் எவ்வளவு திறமைமிக்கவை என்பதும், அந்தப் படங்களை இப்போது பார்ப்பவர்களும் புரிந்து கொள்ளலாம். அப்படிப்பட்டவருடைய மகன் குணாநிதி.
சில பேருக்கு கோபாலபுரமே சினிமா உலகமாக ஆகி விடுமோ என்று சொல்லத் தோன்றியுள்ளது. ஆமாம். சினிமா உலகம் தான். சினிமா உலகத்திலேயிருந்து வந்தவர்கள் தான் பல பேர் இன்றைக்கு கோபாலபுரத்திலிருந்து தங்களுடைய புகழ்க் கொடியை நாட்டிக் கொண்டிருக்கிறார்கள். நான் அதற்காக வெட்கப்படவில்லை.
மருமகன் படம் எடுத்து படத் தயாரிப்பாளர், மகன் படத் தயாரிப்பாளர், பேரன் படத் தயாரிப்பாளர் என்றெல்லாம் இன்றைக்கு சில பேர் அரசியல் ரீதியாக கேலி பேசுகிறார்கள், கிண்டல் பேசுகிறார்கள். ஆமாம், என் பேரன் படத் தயாரிப்பாளர் தான். இன்னும் கொஞ்ச நாளைக்குப் பிறகு என்னுடைய கொள்ளுப் பேரன் கூட படத் தயாரிப்பாளராக ஆனால், அதிலே எந்தவிதமான ஆச்சரியப்படவும் தேவையில்லை.
படத் தயாரிப்பு என்பது ஒன்றும் தவறான காரியமல்ல. படத் தயாரிப்பு என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தொழில் தான். இன்றைக்கு பொல பொலவென்று புற்றீசல் போல பல படங்கள் வெளிவருகின்றன. ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளைப் பார்த்தால், விளம்பரப் பகுதியில் ஏதோ ஒன்றிரண்டு படங்கள் பூஜை போட்டிருக்கிறார்கள், அது விரைவிலே வெளிவரும் என்று தான் செய்தி வரும்.
இப்போது சில பத்திரிகைகளுடைய முழுப் பக்கமுமே பத்து, பன்னிரண்டு படங்களின் விளம்பரமாவது வெளிவருவதைக் காணுகிறோம். இது எதனால் என்றால், சினிமா தொழிலை வளர்க்க வேண்டும், சினிமாவிலே வாழ்கிறவர்கள் அந்தத் தொழிலாளர்களும் பாட்டாளிகள் தான்.
அவர்களையும் வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் நாங்கள் பொறுப்பேற்றவுடன் இன்றையதினம் சினிமாத் துறையிலே ஏற்கனவே இருந்த கஷ்டங்களையெல்லாம் போக்கி, தமிழ்நாட்டிலே உள்ள சினிமாப் படங்களுக்கு தமிழிலே தலைப்பு வைத்தால் வரி விலக்கு என்று வரியே இல்லாமல் செய்திருப்பதும் தி.மு.க ஆட்சியிலே தான்.
முன்பெல்லாம் ^100 வசூல் என்றால், ஒரு தியேட்டரில் ^90 வரியாகப் போய் விடும். மிச்சமுள்ள பத்து ரூபாய் தான் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், படத்தை வெளியிடுகிற தியேட்டர்காரர் ஆகியோருக்குக் கிடைக்கும். இப்போது அந்த வரியே இல்லை என்பதால் எல்லோரும் துணிந்து நம்பிக்கையோடு படங்கள் எடுக்கிறார்கள்.
நாம் போற்றத்தக்க, பாராட்டத்தக்க படமாக முரட்டுக்காளை வரும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இதிலே கதாநாயகராக நடிக்கிறவர் சுந்தர் சி. அவர் கதாநாயகனாக நடிப்பது வரவேற்கத்தக்க ஒன்று.
இதிலே விவேக் நடித்த ஒரு காட்சியை பார்த்தோம். திருநங்கைகளுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும், நல்வாழ்வு வழங்க வேண்டுமென்ற எண்ணத்தோடு தி.மு.க. அரசு, மாற்றுத் திறனாளிகளுக்கு மாத்திரமல்ல, இந்தப் பிறவிகளை எடுத்தவர்களுக்கும் பல திட்டங்களைத் தீட்டியிருக்கிறது.
இந்தியாவிலே வேறெங்கும் அவர்களுக்கு ரேஷன் கார்டு கூடக் கிடையாது. ரேஷன் கார்டு மாத்திரமல்ல, அவர்கள் வாக்களிக்கவும் வழி வகை செய்து தந்துள்ள ஆட்சி தி.மு.க. ஆட்சி தான். எல்லா மக்களையும் ஒரே சீராக வைத்து கவனிப்பது இந்த அரசு.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.
முன்னதாக குணாநிதி அமிர்தம் வரவேற்றார். ஏ.வி.எம்.சரவணன், ராமநாராயணன், வி.சி.குகநாதன், பார்த்திபன், ஸ்ரீகாந்த் தேவா, சுந்தர் சி., சுமன், விவேக், வைரமுத்து பேசினார்கள். இயக்குனர் செல்வ பாரதி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment