இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் திருவாரூர் மாவட்டம் மேலப்பெருமழை கிராமத்தில் 1909ஆம் ஆண்டில் பிறந்தவர். அவர் பண்டிதமணி கதிரேசன் செட்டியார், விபுலானந்த அடிகள், சோமசுந்தர பாரதியார் போன்ற தமிழ் அறிஞர்களிடம் பயின்று, ஆழ்ந்த தமிழ்ப் புலமை பெற்று, திருவாசகம், நற்றிணை, அகநானூறு, குறுந்தொகை, கலித்தொகை, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி போன்ற 21 நூல்களுக்கு உரை எழுதியதுடன், செங்கோல், மானனீகை முதலிய நாடக நூல்களையும் இயற்றிய தமிழறிஞர்.
அவரது நூல்கள் பல்கலைக்கழகங்களில் பாடமாகக் கற்பிக்கப்படும் சிறப்பினையும் பெற்றுள்ளன. இத்தகைய சிறப்புகள் பலவற்றைக் கொண்டு, தமிழ்த் தொண்டாற்றிய திருமகன் பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் 1972ல் இயற்கை எய்தினார். அவரது மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பம் சிரமங்களுக்கு ஆளாகி, தற்போது அவருடைய வாரிசுசுள் வறுமையில் வாடுவதாகப் பத்திரிகைகள் வாயிலாக முதல்வர் கருணாநிதியின் கவனத்திற்குச் செய்திகள் வந்துள்ளன.
இச்செய்திகள் குறித்து, மிகுந்த பரிவோடு பரிசீலனை செய்து, இவரது நூல்களை அரசுடைமையாக்குவதில் பிரச்சினைகள் இருப்பதால்; தற்போதுள்ள சூழலில் இவரது குடும்ப நிலை கருதி; அதற்காக உதவி புரியும் நோக்குடன் இவர் குடும்பத்திற்கு உதவி நிதியாக பத்து லட்சம் ரூபாய் அரசின் சார்பில் வழங்கலாம் என முதல்வர் கருணாநிதி இன்று (17.9.2010) ஆணையிட்டுள்ளார். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment