சென்னை கோட்டூர்புரத்தில் ஏறத்தாழ 200 கோடி ரூபாய் மதிப்பில் உருவாகியுள்ள அண்ணா நூற் றாண்டு நூலகத்தை, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான 15.9.2010 அன்று மாலை முதல்வர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்துப் பேருரையாற்றினார். முதல்வர் கலைஞர் ஆற்றிய உரை வருமாறு :- அண்ணா நூற்றாண்டு நூலகத்தைத் திறந்து வைக்கின்ற இந்த மகத்தான விழாவில் உங்களை யெல்லாம் சந்திக்கின்ற வாய்ப்புப் பெற்றமைக்காக நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். நூலகம் அண்ணா பெயரால் அமைய வேண்டும் என்ற எண்ணம் இப்போது ஏற்பட்டதல்ல. கடந்த நிதி நிலை அறிக்கையில் சொல்லப்பட்ட கருத்தின் செயலாக் கம் மட்டும் அல்ல இது. அண்ணா பெயரால் - தந்தை பெரியார் பெயரால் - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெயரால் நூலகங்களை, வாசக சாலைகளை அமைத்து, தமிழகத்தின் வீதி தோறும், ஊர்தோறும், குக்கிராமம் தோறும் இயக்கத்தினுடைய கருத்துகளை எடுத்துச் சொல்ல வேண்டுமென்ற வழிமுறையிலேதான் இப்போதும் ஒரு நூலகத்தை அமைப்பதென்றால், அது அண்ணா பெயரிலே அமைய வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குத் தோன்றி அதை அறிவித்து, இன்றைக்குச் செயல்படுத்தி உங்களுடைய வாழ்த்து களையெல்லாம் பெற்றிருக்கிறோம். அண்ணா 1948 இல் பேசிய தலைப்பு அண்ணா அவர்கள் 1948ஆம் ஆண்டு வானொலி யிலே பேசினார்கள். தலைப்பு நூலகம் என்பதுதான். அப்போதெல்லாம் வானொலியிலே பேச நம்மவர் களை யாரும் அழைப்பதில்லை. வானொலி ஒரு சாராருக்கே உரியது, ஒரு சாராருடைய விளம்பரத் திற்கே அது கருவியாக இருக்கக் கூடியது என்ற நிலையில் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த யாரையும் அழைத்துப் பேசச் சொல்வதும் இல்லை, அங்கே நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிப்பதும் இல்லை. கலைத்துறையிலே பெரிய வெற்றியைத் தந்த மந்திரிகுமாரி படம் என்னுடைய அனுபவத்தையே சொல்ல வேண் டுமேயானால், எல்லோரும் நாடகங்களை, ஓரங்க நாடகங் களை எழுதி வானொலிக்கு அனுப்பி, வானொலி நாடகமாக நடத்தப்பட்ட அந்தக் கால கட்டத்தில் 1940 என்று கருதுகிறேன் - அப்போது நான் குண்டலகேசி இலக்கியத்தை அடிப்படை யாகக் கொண்டு ஓரங்க நாடகம் ஒன்றை எழுதி திருச்சி வானொலி நிலையத்திற்கு அனுப்பி வைத் திருந்தேன். அது வெளியிடப்படவும் இல்லை, திரும்பி வரவும் இல்லை. திரும்பி வந்திருந்தால் நிம்மதி அடைந்திருப்பேன். ஆனால் வரும் வரும் என்று காத்திருந்து அது வராமலே நின்று விட்டது. அதற்குப் பிறகு அதை விரிவுபடுத்தி மந்திரி குமாரி என்ற பெயரில் நாடகமாக எழுதி, கே.என். ரத்தினம் என்ற நண்பருக்கு -அவருடைய நாடகக் குழுவிற்கு அதைத் தந்தேன். அவர்கள் அந்த நாடகத்தை குடந் தையிலே நடத்திய போது, அதைக் கண்ணுற்ற பிரபல இயக்குநர் சேலம் டி.ஆர். சுந்தரம் அவர்கள், அந்த நாடகத்தைப் பார்த்து வியந்து - இந்தக் கதையை யார் எழுதியது என்று கேட்டு - அருகிலே இருந்த என்னுடைய அருமை நண்பர்கள் கா.மு. ஷெரீப், மருதகாசி போன்றவர்கள் எல்லாம், நான் எழுதியது என்று சொன்ன பிறகு, அவர்கள் என்னை அழைத்து இதை நாங்கள் படமாக ஆக்குகிறோம், தருவீர்களா என்று கேட்டார்கள். ஒப்புக் கொண் டேன். அதுதான் எம்.ஜி.ஆர். நடித்த மந்திரிகுமாரி - இது உங்களுக்கெல்லாம் தெரியும். அந்தப் படம் எவ்வளவு பெயர் பெற்றது, புகழ் பெற்றது, வசூலை அள்ளிக் கொடுத்தது என்பதெல்லாம் கலைத் துறையிலே உள்ள நண்பர்களுக்கு நன்றாகத் தெரியும். அதைப் பார்த்த ரசிகர்களிலே பலருக்கும் நன்றாகத் தெரியும். எந்தக் கதை தெரியுமா? திருச்சி வானொலி நிலையத்திலிருந்து திருப்பிக் கூட அனுப்பப்படா மல், அங்கிருந்த குப்பைக் கூடைக்குப் போன அந்த குண்டல கேசி கதை அவ்வளவு பெரிய வெற்றியை கலைத் துறையிலே தந்தது. இதை நான் சொல் வதற்குக் காரணம், அந்த அளவுக்கு நம்முடைய இயக்கக் கருத்துகளை இந்த இயக்கத்திலே ஈடுபாடு கொண்டவர்களை அலட்சியப்படுத்துகின்ற ஒரு நிறுவனமாக அப்போது வானொலி இருந்தது. ஆனால் அந்த வானொலிதான் 1948ஆம் ஆண்டு வீட்டுக்கு ஒரு புத்தகசாலை என்ற தலைப்பிலே சிலரை அழைத்துப் பேசச் சொன்ன போது, அந்தப் பேச்சாளர்களில் ஒருவராக அறிஞர் அண்ணாவை யும் அழைத்து, அண்ணா பேசினார். அண்ணா குரலைக் கேட்க... அண்ணா வானொலியிலே பேசப் போகிறார் என்று கேள்விப்பட்டதும், அந்தச் செய்தி வந்ததும் ஒவ்வொரு ஊரிலும் அங்கேயிருக்கின்ற கடைகளில், ஓட்டல்களில், எங்கெங்கே வானொலிகள் இருந் தனவோ அங்கெல்லாம் நின்று பத்து பேர், நூறு பேர், இருநூறு பேர் என்று வானொலியில் அண்ணாவின் உரையைக் கேட்டோம். வானொலியில் அண் ணாவின் குரலைக் கேட்பதென்றால் சாதாரணமா என்ற அந்த வியப்போடு அதைக் கேட்டோம். அப்போது அண்ணா பேசியதில் ஒரு பகுதியை மாத்திரம் படித்துக் காட்ட விரும்புகிறேன். வீடுகளில் மேஜை நாற்காலி, சோபாக்கள் இருக்கும். பீரோக்கள் இருக்கும். அவைகளில் வெள்ளித் தாம்பாளமும் விதவிதமான வட்டில்களும், பன்னீர்ச் செம்பும் இருக்கும். பித்தளைப் பாத்திரங்கள் இருக்கும். உடைகள் சிறு கடையளவு இருக்கும். மருந்து வகைகள் சிறு வைத்தியசாலை அளவுக்குக் கூட இருக்கும். அப்படிப்பட்ட வசதியுள்ள வீடு களிலேயும் கூட புத்தகச் சாலை இராது - இருக்க வேண்டுமென்று எண்ணம் வருவதே இல்லை. அவசியமும் தோன்றுவதில்லை. இந்தச் செப்புக் குடம் சீரங்கத்தில் வாங்கியது. தேவர் கல்யாணத்தின் போது திருப்பதியில் வாங்கினோம். இந்தத் தாம் பாளத்தைப் பெல்லாரிக்குச் சென்றோமே பெண் பார்க்க, அப்போது வாங்கினோம். இந்த இரத்தின ஜமுக்காளத்தைக் கார்த்திகை தீபத்தின்போது திரு வண்ணாமலையில் வாங்கினோம். சிதம்பரத்திலே ஆருத்திரா தரிசனத்தின்போது, இதை வாங்கினோம் என்று நமது வீடுகளில் பல சாமான்களைக் காட்டுவர். சாமான் ஒவ்வொன்றுக்கும் ஒரு சரித் திரமே கூறுவார்கள். ஆனால், பத்து நல்ல புத்தகங் களைக் காட்டி இன்ன சந்தர்ப்பத்தில் இவைகளை வாங்கினோம் என்று யாரும் கூறமாட்டார்கள். வீட்டின் அலங்காரத்தையும், விசேஷகால உபயோகத்திற்கான சாதனங்களையும் கவனிப்பது போல வீட்டிற்கோர் புத்தகச்சாலை, சிறிய அளவிலாவது அமைக்க நிச்சயமாக கவனம் செலுத்த வேண்டும்; அக்கறை காட்ட வேண்டும். அறிவு ஆயுதமாகிவிட்ட நாட்களிலே வாழும் நாம் இனியும் இந்தக் காரியத்தைக் கவனியாதிருப்பது நாட்டுக்கு மறைமுகமாகச் செய்யும் துரோகச் செயலாகும். வீட்டிற்கோர் புத்தகச்சாலை நிச்சயமாக வேண் டும். வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் அலங்காரப் பொருள்களுக்கும், போகபோக்கியப் பொருள்களுக்கும் தரப்படும் நிலைமாறி, புத்தகச் சாலைக்கும் அந்த இடம் தரப்படவேண்டும். உணவு, உடை, அடிப்படைத் தேவை-அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தானதும், ஒவ்வொரு வீட்டிலும் முதல் இடம் புத்தகச் சாலைக்குத் தரப்பட வேண்டும். -எனப் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் நூலகம் அமைய வேண்டும் என்று வானொலி உரையில் வலியுறுத்தியுள்ளார். அண்ணாவின் கனவு நிறைவேறியுள்ள காட்சி! தமிழ்நாட்டிலே கூட உணவு, உடை போன்ற அடிப் படைத் தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்து வருகின்ற ஒரு அரசு தான் ஒவ்வொரு வீட்டிலும் புத்தக சாலை வேண்டும் என்று அண்ணா சொன்னாரே, அதைப் போல ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங் களிலும் ஒரு புத்தக சாலை வேண்டும் என்ற அந்தக் கொள்கையின் அடிப்படையில் இன்றைக்கு இந்த நூலகம் அமைக்கப்பட்டிருக்கின்றது என்பதை இது அண்ணாவின் கனவு நிறைவேறியுள்ள காட்சி என்பதை நான் எடுத்துக்காட்ட விரும்பு கிறேன். 1948இல் அண்ணா அப்படிப் பேசினார். அந்தக் கால கட்டத்திலேதான் - பேராசிரியர் அவர்களுக்கு நன்றாகத் தெரியும் - திருவாரூரில் மாணவர் அமைப்பு ஒன்றை நிறுவி, தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்று அதற்குப் பெயரிட்டு அதை நாங்கள் இயக்கிக் கொண்டிருந்த போது அந்த மன்றத்தின் சார்பாக பாரதிதாசன் வாசக சாலை, பெரியார் படிப்பகம், அண்ணா நூலகம் என்றெல்லாம் பெய ரிட்டு பொழுதுபோக்குக்காக அல்ல, கருத்துக்களை மக்களுக்கு எடுத்துப் பரப்புகின்ற அந்தப் பணிக்காக வீதி தோறும் ஊர்தோறும் அந்தக் காரியங்களை நாங்கள் நடத்தி வந்தோம். அப்படிப்பட்ட அந்த அடிப்படை உணர்வும், முயற்சிகளும் வேரோடு, உயிரோடு கலந்திருந்த காரணத்தினால்தான் இன் றையதினம் இவ்வளவு பெரிய வெற்றியை இங்கே அண்ணா பெயரால் ஒரு நூலகத்தை உருவாக்க எங்களால் பெற முடிந்தது என்பதை மிகுந்த பொறுப்புணர்வோடு நான் சொல்லிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். அண்ணாவினுடைய இறுதிவரை - அண்ணா விற்கு பெருமை சேர்த்து விட்டு - அவருடைய சிலை யைப் பார்க்கும்போதும் - அவருடைய பெயரால் அமைந்துள்ள இந்த நூலகக் கட்டிடத்தின் உயரத்தை அண்ணாந்து பார்க்கும்போது நெஞ்சில் எழுகின்ற அந்தத் துன்ப அலைகள் விழி வழியாக வழிகின்ற அந்த நிலையைத் தடுக்க முடியவில்லை. மன்னிக்க வேண்டும். இடையிடையே அதன் காரணமாக என்னுடைய பேச்சின் கோர்வை அறுந்து விடுமேயானால் மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டு தொடருகிறேன். அண்ணா அவர்கள் எதை நினைத்தாரோ இல்லையோ இறுதி நாள் வரையில் புத்தகத்தையே நினைத்துக் கொண்டிருந்தார். அவருடைய முடிவு மருத்துவர்களால் கணிக்கப்பட்டு, அமெரிக்கா சென்று திரும்பிய பிறகு, அடையாறு மருத்துவ மனையிலே கடைசியாக செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைக்காக அவருடைய அறையிலிருந்து அவர் அழைக்கப்பட்ட போது கூட, துழாவி, துழாவி தலையணைக்கு கீழேயிருந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டுதான் சென்றார். அறுவை சிகிச்சை முடிந்து இரண்டொரு நாள் அவர் ஓய்வெடுக்க வேண்டு மென்று மருத்துவர்கள் வலியுறுத்திய நேரத்தில்கூட படித்துக் கொண்டுதான் இருந்தார். ஒரு வேளை நம்ப வேண்டுமேயானால் - காலன் என்று ஒருவன் இருந்து - அவன் அண்ணாவின் உயிரையெடுக்க வந்தால் - அந்தக் கற்பனையைச் செய்து பார்த்தால் காலனே, இரு வருகிறேன், இன்னும் இந்தப் புத்தகத்தில் இத்தனை பக்கங்கள் பாக்கியிருக்கின்றன என்று சொல்லிவிட்டு ஒருவேளை அவனோடு சென்றிருப்பாரோ என்று எண்ணுகின்ற அளவிற்கு புத்தகத்திலே இறுதி நாள் வரையிலே ஆழ்ந்திருந்தவர் அண்ணா. அவர் படிக்காத நேரம் இல்லை. இரவு 12 மணிக்கு காஞ்சிபுரம் சென்று கதவைத் தட் டினால், அண்ணா எங்கேயென்று கேட்டால், உள்ளேயிருக்கிறார் என்று சொன்னால், புத்தகமும் கையுமாகத் தான் அண்ணா படுக்கையிலே இருப் பார். அப்படி புத்தகமும் கையுமாக இருந்த அண் ணாவை சிலை வடிவில், புத்தகமும் கையுமாக சிலை வடிவிலே இங்கே உருவாக்கி வைத்திருக்கிறோம். அந்த அண்ணாவின் நினைவாக நாம் உருவாக்கியிருக்கின்ற இந்த எழில் மாளிகை தம்பி தென்னரசு அவர்களின் உழைப்பால், முயற்சியால் இங்கே உருவாக்கப்பட்டுள்ளது. யாரிடத்திலே எந்தக் காரியத்தை ஒப்படைக்க வேண்டுமென்று சிந்தித்து ஒப்படைக்கும்போது, அப்படி என்னைப் பொறுத்த வரையில், எங்கள் மாவட்டக் கழகச் செயலாளர்களில் இது போன்ற காரியங்களை விரைந்து, வியந்து போற்றும் வண்ணம் படைப்பவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் தம்பி தென்னரசின் தந்தை தங்கபாண்டியன் ஆவார். (கைதட்டல்) அந்தத் தங்கபாண்டியன் பெற்ற செல்வம், தந்தைக்கு நிகராக (கைதட்டல்) எங்கள் பால் அன்பு செலுத்தியது மாத்திர மல்ல, நாங்கள் ஆற்றுகின்ற பணிக்கு உதவியாகவும் இருந்து நான் கடிந்தால் வருந்தாமல், நான் வாழ்த்தினால் அதை ஊக்கமாகப் பெற்று இன்றைக்கு இந்தப் பெரும் பணியை ஆற்றி முடித்திருக்கிறார். என் சார்பாகவும், நம்முடைய பேராசிரியர் சார்பாகவும், நாளை முதல் நம் நூலகத்திற்கு வந்து நூல்களை வாங்கிச் செல்வோர், படிப்போர் அத்தனை பேர் சார்பாக அவருக்கு வாழ்த்துக்களைக் கூறிக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இவர் தென்னரசு செகண்ட். (கைதட்டல்) தென்னரசு என்று ஒருவர் இருந்தார். அவர் மறைந்து விட்டாரே என்ற கவலை எனக்குண்டு. அந்தக் கவலையைப் போக்குகின்ற அளவிற்கு (கைதட்டல்) இந்தத் தென்னரசு காரியமாற்றி யிருக்கிறார். அது தான் இந்த அண்ணா நூலகம் என்பதை நான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன். அண்ணாவின் நினைவாக... இந்த அண்ணா நூலகத்தினுடைய திறப்பு விழாவில் இரண்டொரு அறிவிப்புகளை அண்ணாவின் நினைவாக வெளியிட விரும்புகிறேன். அறிவிப்பு 1 - அண்ணா நூற்றாண்டு நூலகத்தைத் திறந்து வைக்கின்ற இந்த நேரத்தில் இதனை மாணவர்கள் பெரிதும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்களைப் பற்றி நினைக்கும் போது அவர்கள் சம்பந்தப்பட்ட ஒரு அறிவிப்பினை இங்கே அளிக்க விரும்புகிறேன். மாணவர்களுக்கு சத்துணவு அளிக்கும் திட்டம் கடந்த காலத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சியால் தொடங் கப்பட்டு, அதனை வரவேற்று அது மேலும் சத் துள்ள உணவாக இருக்க வேண்டுமென்ற எண் ணத்தோடு, நமது திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு - 3-6-1989 முதல்; 2 வயதிலேயிருந்து 15 வயது வரை உள்ள குழந்தைகள், மற்றும் மாணவர்களுக்கு வாரத்திற்கு ஒரு முட்டையென வழங்கப்பட்டு வந்தது. கழகம் அய்ந்தாவது முறையாக 2006ஆம் ஆண்டு பதவிப் பொறுப்புக்கு வந்த பிறகு - ஜூலை 15ஆம் நாள் முதல் அதாவது காமராஜர் பிறந்தநாளை யொட்டி அவர் நினைவாக வாரம் ஒன்றுக்கு இரண்டு வேக வைத்த முட்டைகள் வழங்கப்பட்டன. 15-7-2007 முதல் வாரம் இரண்டு முட்டைகள் என்பது; வாரம் மூன்று முட்டைகள் என்ற அள விற்கு வழங்கப்பட்டு வருவதோடு, முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப்பழம் அதற்குப் பதிலாக வழங்கப்பட்டு வருகிறது. பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு நினைவாக இந்த பிரமாண்டமான நூலகத்தைத் திறந்து வைக்கும் இந்த நேரத்தில் - பள்ளியில் பயிலும் ஒவ்வொரு சிறுவர், சிறுமியர்க்கும் - வாரத்தில் பள்ளிக்கூடம் நடைபெறும் ஐந்து நாட்களிலும் - வேக வைத்த முட்டைகள் வழங்கப் படும் என்று மகிழ்ச்சியோடு அறிவிக்கின்றேன். (பலத்த கைதட்டல்) இது முதல் அறிவிப்பு. இரண்டாவது அறிவிப்பு - அரசு அலு வலகங்கள், அரசு சார்புடைய நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் தினக் கூலி அடிப்படையில் அல்லது தொகுப்பூதியத்தில் பணி புரியும் துப்புரவுத் தொழிலாளர்கள் தற்போது தற்காலிகமாக பணி புரிந்து சுமார் ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து அய்நூறு ரூபாய் வரை மாத ஊதியமாகப் பெற்று வருகிறார்கள். காலம்கால மாக அடித்தளத்தில் இருந்து பணி புரிகின்ற இந்தத் துப்புரவுப் பணியாளர்களின் வாழ்வாதாரம் மேலும் வலிவுடன் அமைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு - அந்தத் துப்புரவுத் தொழிலாளர் களில் மூன்று ஆண்டுகள் பணி முடித்தவர் களுக்கு- இனி; மாதம் ரூ. 1300 - 3000 என்ற ஊதிய விகி தத்தில், அகவிலைப்படியுடன் சேர்த்து மாதம் ஒன் றுக்கு தொடக்க நிலையில் ரூ. 2,320 கிடைத்திடும் வகையில் ஊதியமாக உயர்த்தி வழங்கப்படும். (கைதட்டல்) இத்துடன் அவ்வப்போது வழங்கப் படும் அகவிலைப் படி உயர்வினையும், ஆண்டு தோறும் மூன்று சதவிகிதம் கூடுதல் ஊதியப்படி யினைப் பெறும் தகுதியையும் இந்தத் துப்புரவுத் தொழிலாளர்கள் பெறுவார்கள் என்பதை அடித் தட்டு மக்களுக்காகவே தன் வாழ்நாள் முழுவதும் எழுதி - பேசி - உழைத்த பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான இன்று அறிவிப்பதில் மெத்தவும் மகிழ்ச்சியடைகின்றேன். (பலத்த கைதட்டல்) இந்த அறிவிப்புகள் உடனடியாகக் செயல்படுத் தப் படும் என்பதைத் தெரிவித்து இந்த நூலகத்திற்கு வருவோர், போவோர், நூல்களை எடுத்துச் செல் வோர் - இவர்கள் எல்லாம் இந்த நூலகத்தின் தூய்மை கருதியும், இதனுடைய பெருமைகளைக் கருதியும் இதைப்பற்றி இங்கே பேசிய நம்முடைய பேராசிரியர் அவர்களும் மற்றவர்களும் கருதுகின்ற வகையில் இதை நம்முடைய நூலகமாகக் கருதிக் காப்பாற்ற வேண்டும், பாதுகாக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொண்டு, இந்த நுலகத்திற்கு தொலைவிலிருந்து வருகின்ற வர்கள், பேருந்துகளிலே வருகின்றவர்களுக்குக் கூட - இந்த நூலகத்திற்கு என்று குறிப்பிட்ட பேருந்து களிலே வந்தால் அந்தக் கட்டணத்தைக் கூட ஓரளவு குறைத்து அதை அமல்படுத்தலாமா என்ற கருத்தும் இருக்கிறது. எனவே எல்லா வகையிலும் அண்ணா பெயரால் அமைந்துள்ள இந்த நூலகத்தினுடைய திறப்பு விழாவிலே இந்த அறிவிப்புகள் பொருந்தும் என்று கருதி உங்களுடைய அன்பான ஆதரவுக்கும், உங்களுடைய இனிய வருகைக்கும் என்னுடைய வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்து விடைபெற்றுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார். |
About Me
- DMK Thondan
- Madurai, Tamilnadu, India
- " இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,
Search This Blog
Friday, September 17, 2010
நள்ளிரவிலும் புத்தகமும், கையுமாக இருப்பார் அண்ணா! - முதலமைச்சர் கலைஞர் உணர்ச்சிகர உரை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment