முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
திமுக அரசுக்கு எதிராக எங்கேயாவது ஒரு சலசலப்பு தோன்றினாலும், அதை பெரிய பிரளயமாக ஆக்கி இந்த அரசைக் கவிழ்த்துவிட்டு, அந்த இடத்தில் தான் வந்து உட்கார்ந்து விடலாமா என்று கனவு காண்கின்றவர்களில் தலையானவர் ஜெயலலிதா.
சத்துணவு ஊழியர்கள் சில கோரிக்கைகளை வைத்து, அவற்றை பற்றி என்னிடமோ அந்த துறை அமைச்சரிடமோ விவாதிக்க தேவையில்லை, நேரடியாக கோட்டையையே முற்றுகையிடுவோம் என்று ஆர்ப்பரித்து, அதற்காக பல ஊர்களில் இருந்து படையும் திரட்டி, அரசு பாதுகாப்புக்காக எதிர்நடவடிக்கை எடுத்தால் அவற்றை பூதாகாரமாக ஆக்கி புயலைக் கிளப்பலாம் என்று சில கட்சியினர் கண்ட கனவு பலிக்காமல் போய்விடவே, என் மீதும், அரசு மீதும் அர்ச்சனையாக பொழிந்து கொண்டிருக்கிறார்கள்.
இதிலே மார்க்சிஸ்ட் நண்பர்களாவது தாங்கள் ஆரம்பித்த இந்த போராட்டம் இப்படி ஆகிவிட்டதே என்று கவலைப்பட நியாயம் உண்டு. அதற்காக அவர்கள் நம் மீது கனல்கக்கவும் உரிமை உண்டு. ஆனால், இதில் இடையிலே புகுந்து கொண்டு ஜெயலலிதா கூப்பாடு போடுவதற்குத்தான் பொருள் விளங்கவில்லை. சத்துணவு ஊழியர்களை நான் பழி வாங்குகிறேனாம். இவர் ஆட்சியில் அவர்கள் பரவசமடையும் அளவுக்கு, பாதிநாள் வேலைக்கே முழுச் சம்பளம் கொடுத்தவரை போலவும் பசப்புகிறார்.
சத்துணவு ஊழியர்கள் இப்போது என்ன கேட்கிறார்கள்? அரைநாள் அதாவது பகுதி நேரம் வேலை பார்த்து விட்டு, முழு நேரச் சம்பளம் கேட்கிறார்கள். அவர்கள் பணியிலே சேரும்போது, அவர்களுடைய பணி, பகுதி நேரப்பணிதான் என்பதை ஏற்றுக் கொண்டுதானே பணியிலே சேர்ந்தார்கள். அவர்கள் முழு நேரப் பணியாளர்களாக ஆக்கப்படுவார்கள் என்று உறுதிமொழி அரசின் சார்பில் தரப்பட்டுள்ளதா? அவர்கள் பகுதி நேரம் பணியாற்றுபவர்கள் என்பதற்காகத்தான் அந்தந்த பகுதிகளிலே உள்ளவர்களை இந்த பணியிலே அமர்த்தப்பட்டது.
அவர்களை முழு நேரப் பணியாளர்களாக ஆக்க வேண்டுமென்ற கோரிக்கையை அப்படியே ஏற்கலாம் என்று ஜெயலலிதா சொல்கிறாரா? ஜெயலலிதா ஆட்சியிலே இருந்த பத்தாண்டு காலத்தில், இந்த கோரிக்கையை அவரே நிறைவேற்றியிருக்கலாமே? அப்போதும் சத்துணவு பணியாளர்கள் இந்த கோரிக்கையை வைத்துக்கொண்டுதானே இருந்தார்கள்.
எம்.ஜி.ஆருடைய சத்துணவுத் திட்டத்தை மேலும் விரிவாக்கி, அதை உண்மையான சத்துணவாக ஆக்கியது திமுக ஆட்சிதான். சத்துணவு சாப்பிடும் சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் வாரம் 3 முட்டை, முட்டை சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழம் என்றாக்கி, அந்தத் திட்டத்தை மேலும் பலன் உள்ளதாக செய்தது யார்? ஜெயலலிதா ஆட்சியா அல்லது திமுக ஆட்சியா?
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் சூரியமூர்த்தி, இந்த சத்துணவுப் பணியாளர்கள் பற்றி 2 நாட்களுக்கு முன்பு விடுத்துள்ள பத்திரிகைச்செய்தியில், ‘மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா போன்ற கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் மாநிலங்களை போன்ற நிர்வாகக் குறைபாடுகளும், அகவிலைப்படி மற்றும் ஊதியத்தில் பாதிப்பான நிலையும் தமிழ்நாட்டில் ஏற்படவில்லை. சத்துணவு, அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் அரசுடன் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலமாக ஊதிய உயர்வு, பதவி உயர்வு, உள்ளிட்ட பல சலுகைகளைப் பெற்றுள்ளார்கள். இன்னும் பெற வேண்டிய சலுகைகளை ஒற்றுமையாக இருந்து அரசியல் சூழ்ச்சிகளுக்கு பலியாகிவிடாமல் பெற்றுக் கொள்ள முயலவேண்டும்’ என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த சத்துணவுப் பணியாளர்கள் நல சங்கத்தின் மாநிலத் தலைவராக உள்ள மு.வரதராசன் எனக்கு எழுதிய கடிதத்தில், ‘தங்களது பொற்கால ஆட்சியில் பூவெப்போ மலரும் பொழுதெப்போ விடியும் என ஏங்கியிருந்த பல்லாயிரக்கணக்கான சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கட்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி, மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய வேளையில் ஒரு கட்சியின் து£ண்டுதலின்பேரில் ஒரு சங்கம் ஆகஸ்ட் 30ம் தேதி கோட்டை முற்றுகை அறிவித்து அரசியல் ஆதாயம் தேட முயலுகின்ற வேளையில், நன்றி மறப்பது நன்றன்று என நினைக்கும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் நாடு முழுவதிலுமிருந்து திரண்டு தங்களுக்கு நன்றி அறிவிப்பு பேரணி சென்னையில் வரும் 17ம் தேதி நடத்தவுள்ளோம்’ என்று தெரிவித்திருப்பது சத்துணவுப் பணியாளர்கள் அனைவருமே நன்றி கெட்டவர்கள் அல்ல என்பதை எனக்குத் தெரிவித்து ஆறுதல் அடையச் செய்கிறது.
பகுதி நேரம் வேலை பார்ப்பவர்களுக்கு முழு நேரச் சம்பளம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜெயலலிதா ஏற்கிறாரா? அப்படியென்றால் எத்தனை லட்சம் பேருக்கு அந்த ஊதிய உயர்வு தரவேண்டும்? அந்தக் கணக்கையெல்லாம் அவர் பார்த்தாரா? பார்க்காமலேயே நான் ஆட்சிக்கு வந்தால் அவர்களையெல்லாம் முழு நேர ஊழியர்களாக ஆக்குவேன் என்று சொல்கிறார் என்றால், அது ஊரை ஏமாற்றுகின்ற செயல்தானே? ஆட்சியிலே இருந்த பத்தாண்டு காலத்தில் அவர் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றாதது ஏன்? இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment