தஞ்சை பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா கடந்த 22ம் தேதி துவங்கியது. 4ம் நாளான 25.09.2010 அன்று மாலை பெரிய கோயில் வளாகத்தில் நந்தி மண்டபம் முன்பு நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. அனைத்திந்திய பரதநாட்டிய கலைஞர் சங்க தலைவர் பத்மா சுப்பிரமணியம் மற்றும் தஞ்சை டாக்டர் வரதராஜன் தலைமையில் இயங்கும் பிரகன் நாட்டிய அறக்கட்டளை சார்பில் இந்நிகழ்ச்சி நடந்தது.
ராஜராஜனின் ஆன்மிக குரு கரூர் தேவர் பாடிய திருவருட்பாவின் 11 பாடல்களையும், சிவபஞ்சாட்சர சுதியையும், மரபுவழி வந்த கணபதி கடிகத்தையும் வைத்து நடன நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது. இதில் தமிழகம் மட்டுமின்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்தும், மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் பெண்கள் கலந்து கொண்டு நடனமாடினர். முதல்வர் கருணாநிதியின் பேத்தியும், முரசொலி சொர்ணம்&அருள்மொழி மகளுமான முத்தரசி மகள் பவித்ரா, அமிர்தம் பேத்தி இலக்கியா ஆகியோரும் நடனமாடினர். இந்நிகழ்ச்சியை 16 நடன ஆசிரியர்கள் தொகுத்தனர். 7.30 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி, 8.15க்கு முடிந்தது. இந்த பிரமாண்ட நாட்டிய நிகழ்ச்சியை தனி மேடையில் இருந்து முதல்வர் கருணாநிதி கண்டு களித்தார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் கருணாநிதி பேசியதாவது:
தஞ்சையில் பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கோயில் பின்னணியில் 1,000 நடன மங்கைகள் நடனமாடியது மேலும் சிறப்பு சேர்த்திருக்கிறது. இந்த நடனத்தை பத்மா சுப்பிரமணியம் குழுவினர் நடத்திக்காட்டினர் என்றால் அது பொருந்தாது. பத்மா சுப்பிரமணியத்தின் சேனையினர் நடனமாடி காட்டி இருக்கிறார்கள். அவர்கள் ஆடிக்காட்டிய கருத்துக்கள் முழுமையாக ஏற்கத்தக்கது அல்ல என்றாலும், அவர்களின் ஆர்வம், நம்பிக்கை, பற்று இவைகள் எல்லாம் வியக்கத்தக்க வகையில் இருந்தது.
இந்நிகழ்ச்சியை 150 நாடுகளில் இருந்து மக்கள், அறிஞர்கள், சான்றோர், விஞ்ஞானிகள் ஆகியோர் கண்டுகளித்துள்ளனர். ஆயிரமாவது ஆண்டு விழாவில் இந்த ஆயிரம் கலைஞர்களின் நாட்டிய நிகழ்ச்சி மிக அற்புதமாக இருந்தது. நிகழ்ச்சி நடத்த ஆயிரம் பேரை சேர்த்து ஒத்திகை பார்க்க வேண்டுமே. அது சாத்தியமா என்று பத்மா சுப்பிரமணியத்திடம் கேட்டேன். அதற்கு அவர் ஒவ்வொருவரும் எப்படி ஆட வேண்டும் என்று அனைவருக்கும் தனித்தனி சிடி அனுப்பி உள்ளேன் என்றார். அவர் சிடி அனுப்பினாரோ, இல்லையோ. நான் சிஐடி போட்டு அவர்கள் நன்றாக ஆடுவார்களா என்று விசாரித்தேன். இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய பத்மா சுப்ரமணியன் குழுவினருக்கு நன்றியையும், பாராட்டையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.
பின்னர், முனைவர் நாகசுவாமி எழுதிய ராஜராஜன் காலத்து நடன மங்கைகள் குறித்த ஆங்கில நூலை முதல்வர் கருணாநிதி வெளியிட, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரை முருகன், கோ.சி.மணி, உபயத்துல்லா, செ.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மத்திய அமைச்சர்கள் ராசா, பழனிமாணிக்கம், காந்தி செல்வன், கனிமொழி எம்.பி, பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன், உள்ளிட்டோரும் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
பட்டு சட்டை, வேட்டியில் முதல்வர்
நடன நிகழ்ச்சியை பார்வையிட முதல்வர் பட்டு வேட்டி, சட்டை அணிந்து வந்தார். இதுகுறித்து அவரிடம் இல.கணேசன் கேட்டபோது, ‘இது நம்ம ஊர் நிகழ்ச்சி. அதுதான்’ என்று முதல்வர் கூறினார்.
No comments:
Post a Comment