ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டி குடியிருப்போரின் மனைகளை வரைமுறைப்படுத்தும் திட்டம் மேலும் ஓராண்டு காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
‘’அரசு புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகள் கட்டிக் குடியிருப்போருக்கு அந்நிலங்கள் அரசின் உபயோகத்திற்குத் தேலையில்லையெனில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு அக்குடியிருப்புகளைப் புலத்தணிக்கை செய்து உள்ளாட்சி அமைப்புகளின் தீர்மானங்களைப் பெற்று வீட்டுமனைப் பட்டா வழங்கி வரன்முறைப்படுத்திட 30.12.2006 அன்று ஆணையிட்ட முதலமைச்சர் கருணாநிதி,
இந்தச் சிறப்புத் திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனை பெறுவதற்கான வருமான வரம்பினைப் பின்னர் இரத்து செய்ததுடன், ஐந்தாண்டுகளுக்கு மேல் வீடுகள் கட்டிக் குடியிருப்பவர்களுக்கும் இத்திட்டம் பொருந்துமெனவும் ஆணையிட்டார்.
இத்திட்டத்தின்கீழ், கடந்த நான்காண்டுகளில் 2 இலட்சத்து 27 ஆயிரத்து 595 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மற்ற திட்டங்களில் வழங்கப்பட்டுள்ள 5 இலட்சத்து 29 ஆயிரத்து 307 இலவச வீட்டுமனைப் பட்டாக்களுடன் இதுவரை மொத்தம் 7 இலட்சத்து 56 ஆயிரத்து 902 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், அதிக அளவில் பயனாளிகள் பயனடைய வேண்டும் என்பதற்காக மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்திடவும் ஆணையிடப்பட்டு, 30.9.2010 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விடுபட்டுள்ள ஏழை எளிய மக்கள் பயன் அடையும் வகையில், இத்திட்டத்தினை மேலும் ஓராண்டு காலத்திற்கு, அதாவது 30.9.2011 வரை நீட்டித்து முதலமைச்சர் கருணாநிதி இன்று உத்தரவிட்டுள்ளார்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment