தெற்கு ஆஸ்திரேலியாவுடன், தமிழக அரசின் தொழில் வர்த்தக தொடர்புக்கான ஒப்பந்தம், முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தானது.
தெற்கு ஆஸ்திரேலியாவுடன் தமிழக அரசு சுற்றுலா, கல்வி, திரைப்படத்துறை, விளையாட்டு, விவசாயம், மோட்டார் வாகன தொழில், கலாசார பரிவர்த்தனை மற்றும் தொழில் வர்த்தகம் செய்வதற்காக 3 ஆண்டுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், கடந்த 31&10&2006ல் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின் கால அளவு முடிவடைந்ததால், புதிய ஒப்பந்தம் நேற்று தலைமைச் செயலகத்தில் கையெழுத்தானது. தமிழக முதல்வர் கருணாநிதி, தெற்கு ஆஸ்திரேலியா முதல்வர் மைக்ரான் முன்னிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலர் மாலதி, தெற்கு ஆஸ்திரேலியா வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் துறை தலைமை நிர்வாகி லான்ஸ் வாரல் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
அப்போது, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, நிதித் துறை செயலர் சண்முகம், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை செயலர் அனிதா பிரவீன், பொதுத்துறை செயலர் ஜோதி ஜெகராஜன், இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பீட்டர் வர்கீஸ், தெற்கு ஆஸ்திரேலிய முதன்மை வர்த்தக ஆணையர் தாரீன், தெற்கு ஆஸ்திரேலிய முதல்வரின் ஆலோசகர் எத்னே லாங்கே ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர், தெற்கு ஆஸ்திரேலிய முதல்வர் மைக்ரான் கூறுகையில், ‘‘தமிழக அரசு உடனான ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம், இருநாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் வலுவடையும். இந்தியா, சீனாவில் இருந்து 6,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் படிக்கிறார்கள். அவர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
No comments:
Post a Comment