கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, September 10, 2010

திருச்சியில் நான் போட்டிக்கூட்டம் நடத்தவில்லை: கலைஞர் பேச்சு



முதல்வர் கருணாநிதி 08.09.2010 அன்று காலை திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.

’’திருச்சி நகரத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சி என்று குறிப்பிடப்பட்டாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புதியக் கட்டிடம் என்பதை விட, முதல் கட்டிடம் தொடங்கப்படுகிறது - திறக்கப்படுகிறது என்று சொன்னால்தான் அது பொருத்தமாக இருக்கும் என்பதை நீங்களெல்லாம் அறிவீர்கள். ஏனென்றால் நான் அறிந்த பல ஆண்டு காலமாக திருச்சி மாவட்டத்திற்கு ஆட்சித் தலைவர் கட்டிடம் என்று ஒன்று இல்லை.

அந்தக் கட்டிடத்தை உருவாக்கி அதைத் திறந்து வைக்கின்ற இந்த வைபவத்தில் பல்லாயிரக் கணக்கிலே குழுமியிருக்கின்ற உங்களையெல்லாம் காணும்போது, நான் மெத்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் என்று ஒன்று இல்லாவிட்டாலும் கூட, அன்றைக்கு அந்த அலுவலகத்தினுடைய பணிகளை இங்குள்ள நம்முடைய நண்பர்கள் - பொது வாழ்வில் அக்கறை கொண்டுள்ள தோழர்கள் மக்களிடத்திலே தொடர்பு கொண்டு அவர்களுடைய தேவைகளுக்கு முதலிடம் கொடுத்து உழைத்து இந்த வட்டாரத்தினுடைய தேவைகளை அவ்வப்போது நிறைவேற்றியதன் மூலம் - அமைப்பு ரீதியாக நிறைவேற்றியதன் மூலமாக ஒரு கட்டிடம் இல்லாத குறை தெரியாமலே செய்து வந்தார்கள்.


அதில் குறிப்பாக இன்றைக்கு மாலையிலே நான் திறந்து வைக்கப்போகின்ற அருமை நண்பர் அன்பில் தர்மலிங்கம் அவர்களுடைய சிலை இருக்கிறதே; அந்த சிலைக்குரிய நண்பர் அன்பில் தர்மலிங்கம் அவர்கள் திருச்சி மாவட்டத்திலே மாவட்ட ஆட்சித் தலைவர் இல்லாத குறையை போக்கிக் கொண்டிருந்தவர். அந்த குறை தெரியாமல் பாடுபட்டுக் கொண்டிருந்தவர்.

எந்தப் பிரச்சினையானாலும்- திருச்சி நகரத்து பிரச்சினையானாலும், நகரத்தைச் சுற்றி இருக்கின்ற கிராமப்புறத்து மக்களுடைய பிரச்சினையானாலும், லால்குடியிலே உள்ள பிரச்சினையானாலும், அன்பில் கிராமத்திலே இருக்கின்ற பிரச்சினையானாலும், திருவரங்கத்திலே உருவாகிற பிரச்சினையானாலும் , எந்தப் பிரச்சினையானாலும் அடிமட்டத்திலே இருக்கின்ற தோழர்கள், அவர்கள் எந்தக் கட்சிக்காரர்களாக இருந்தாலும் - அவர்கள் யாரை சந்தித்தால் இந்த பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்று எதை எதிர் பார்க்கிறார்களோ, அப்படி அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நண்பர்களில் ஒருவராக மக்கள் தொண்டர்களில் ஒருவராக விளங்கியவர் இன்று மாலையிலே நாம் விழா நடத்தி, சிலையை திறந்து வைக்கின்றோமே அந்தச் சிலைக்குரிய அன்பில் தர்மலிங்கம் அவர்கள்.

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், மாவட்ட ஆட்சித் தலைவர் இருந்தாலும் இல்லா விட்டாலும், மாவட்டத்திலே உருவாகின்ற பிரச்சினைகளை மக்களுடைய தேவைகளை உணர்ந்து, அறிந்து அதற்காக பாடுபடுகின்றவர்கள் இருந்தால் தனியாக ஒரு கட்டிடம் தேவையில்லை.

அமைப்புத் தேவையில்லை. இருந்தாலும்கூட இவையெல்லாம் சீர்பட, செம்மைப்பட, அமைப்பு ரீதியாக கட்டுப்பாட்டோடு நடைபெறுவதற்கு ஒரு அலுவலகம், அந்த அலுவலக அமைப்பை நேர்படுத்த ஒரு கட்டிடம். அந்தக் கட்டிடத்திற்கு தேவையான நிதி உதவி, இவ்வளவும் இருந்தால்தான் மாவட்ட ஆட்சித் தலைவருடைய அலுவலகம் உருவாக முடியும்.


தம்பி ஸ்டாலின் இங்கே எடுத்துக்காட்டியதைப் போல, நான் எண்ணிப் பார்க்கிறேன். கடந்த காலத்திலே மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகமே இல்லாத மாவட்டங்கள் பல இருந்த குறையை நீக்கி, எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் ஆட்சித் தலைவர் அலுவலகம் இருந்தே ஆக வேண்டும். அதற்கு எத்தனை கோடி ரூபாய் செலவானாலும் பரவாயில்லை என்று திட்டமிட்டு அதை நிறைவேற்றி வருகின்ற அரசாகத்தான் இன்றைக்கு இருக்கின்ற தி.மு.கழக அரசு இருக்கிறது என்பதை நான் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.


அரசு அல்லது அரசுக்கு துணையாக இருக்கக் கூடிய அதிகாரிகள், அவர்கள் தங்கி பணியாற்றுகின்ற அலுவலகங்கள் இவைகளெல்லாம் சீராக, செம்மையாக இருந்தால்தான் ஆட்சிப் பரிபாலனம் முறையாக நடைபெற முடியும். இங்கே இத்தனை கோடி ரூபாயில் இவ்வளவு கட்டிடங்களை கட்டி யிருக்கிறோம் என்றெல்லாம் அடுக்கடுக்காக புள்ளி விவரங்களை இங்கே உரையாற்றியவர்கள் சொன்னார்கள்.

நானும் எங்கெங்கே என்னென்ன கட்டிடங்கள் கட்டப்பட்டன என்ற பட்டியலை உங்களுக்கு படித்துக் காட்ட முடியும். ஆனால் கட்டிடங்கள் அல்ல முக்கியம், இங்கே ஒரு கட்டிடத்தை திறந்து வைத்துவிட்டோம், அதில் அமர்ந்து பணியாற்றுகின்ற அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பு தான் முக்கியம்.

அந்த தொடர்பு தூய்மையானதாக, அந்த தொடர்பு பொதுநல நோக்கம் கொண்டதாக இருந்திட வேண்டும் என்பதை, நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஏறத்தாழ 12 கோடியே 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த புதிய கட்டிடம் கட்டப்பட்டிருக்கின்றது.

12 கோடியா, 13 கோடியா அல்லது 22 கோடியா என்பது அல்ல முக்கியம். அதில் பணியாற்றுகின்ற அலுவலர்கள் , அதிகாரிகள் சிப்பந்திகளிலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவராக இருக்கின்றவர்கள் வரையில் மக்களிடத்திலே எந்த அளவிற்கு தொடர்பு கொண்டு அவர்களுக்கு மரியாதை தந்து, அவர்களோடு அன்பு காட்டி, இந்த அரசுக்கு நல்ல பெயரை வாங்கித் தருவது மாத்திரமல்ல, அவர்களும் நல்ல பெயர் வாங்கி, தாங்கள் ஆற்றுகின்ற கடமைகளால் நாடு வாழவும், நலிவு தீரவும், நன்மைகள் பெருகவும் பயன்படுமேயானால் கட்டிடத் திறப்பு விழா அல்ல முக்கியம், இவைகளெல்லாம் ஒரு நகரத்தில் அல்லது ஒரு நாட்டின் சில பகுதிகளை அலங்கரிக்கக்கூடியதாக இருக்கலாம். ஆனால் அங்கே நடைபெறுகின்ற காரியங்கள்தான் முக்கியம்.

ஒரு மாவட்ட ஆட்சித் தலைவருடைய அலுவலகம் அழகாக இருக்கிறது என்று சொன்னால் மாத்திரம் போதாது.

அருமையாக அங்கே பணி நடைபெறுகிறது என்கின்ற புகழைப் பெற வேண்டும். நிறைவேற்றிட வேண்டும். அப்படிப்பட்ட புகழையும், பெயரையும் பெற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாத்திரமல்ல, மாநிலத்தினுடைய ஆட்சித் தலைமையகத்திலே இருக்கின்ற அமைச்சர்களானாலும் சரி, செயலாளர்களானாலும் சரி, அவர்களுக்கு கீழே பணியாற்றுகின்ற அலுவலர்களானாலும் சரி, அவ்வளவு பேரும் தங்களுடைய கடமையை உணர்ந்து நடத்தினால்தான் இந்த பணிகளில் சிறப்பதற்கு இப்படிப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏற்படுகின்ற மகிழ்ச்சிக்கு அர்த்தம் உண்டு.

எந்த காரியத்திற்காக வட்டாட்சியர் அலுவலகம் ஆனாலும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் ஆனாலும், மாவட்டத்திலே பல்வேறு திட்டங்களானாலும், பள்ளிகளானாலும், கல்லூரிகளானாலும், பல்கலைக்கழகங்களானாலும் - இவைகளெல்லாம் நிர்மாணிக்கப்படுகின்றன.

இவைகளெல்லாம் திட்டங்கள் தீட்டி அதற்காக பணத்தை ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில், கோடிக்கணக்கிலே ஒதுக்கி அதைச் செலவிட்டு அவைகளுக்கு திறப்பு விழா நடத்தி, “எங்கள் நகரத்தில் பார், பார்! எவ்வளவு பளபளப்பான வீதிகள்! எவ்வளவு பளபளப்பான மின்னுகின்ற கட்டிடங்கள்!” என்று சொல்வதிலே இருக்கின்ற பெருமையைவிட, பட்டினி இல்லாத மக்கள், பசி இல்லாத மக்கள், பாடுபடுகின்ற மக்களுக்கு உணவு கிடைக்கின்ற அளவிலே திருப்தியாக வாழுகின்ற மக்கள் என்ற அந்த நிலைதான் ஒரு நாட்டில் எல்லோராலும் போற்றப்படக்கூடிய, பாராட்டப்படக்கூடிய நிலையாகும்.


அந்த நிலையை எய்திட தி.மு.கழக அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாகத்தான் இன்றைக்கு இங்கே இந்தக் கட்டிடங்களுடைய திறப்பு விழாக்கள், திட்டங்களுடைய தொடக்க விழா என்றெல்லாம் நிறைவேறி இருக்கின்றது.

மேலும் இந்தத் திட்டங்கள் தொடரும். தொடர்ந்தால் மாத்திரம் போதாது. அதை நடத்துகின்றவர்கள் நல்லவர்களாக, வல்லவர்களாக - அதே நேரத்தில் எந்தவிதமான ஊழலுக்கும், எந்தவிதமான தவறுக்கும் குற்றச்சாட்டுக்கும் உரியவர் அல்லாதவர்களாக இருக்கவேண்டும்.

மக்களுடைய நன்மை ஒன்றையே, மாநகரத்தினுடைய நலன் ஒன்றையே, நாட்டின் நன்மை ஒன்றையே, சமுதாயத்தின் நன்மை ஒன்றையே எண்ணுகிறவர்களாலேதான் எவ்வளவு கோடி செலவழித்தாலும் அதற்கான பயனை நாம் பெற முடியும் என்பதை இந்த நேரத்திலே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.


திருச்சி நகரம் எனக்குப் புதிதல்ல. காலையிலே பத்திரிகைகளிலேகூட, கருணாநிதி ஏதோ போட்டிக் கூட்டம் நடத்துவதற்காக வந்திருக்கிறார் என்று போடப்பட்டிருப்பதைப் பார்த்தேன். கருணாநிதிக்கும் திருச்சிக்கும் எவ்வளவு காலமாக தொடர்பு என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். (கைதட்டல்)

அன்பில் தர்மலிங்கம் காலத்திற்கு முன்பிருந்தே திருச்சிக்கும் எனக்கும் தொடர்பு உண்டு. ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால், அன்பிலுக்கு மூத்தவர் தோழர் பராங்குசம். பொன்மலையிலே தொழிற்சங்கத்தை நடத்திய பராங்குசத்திலே இருந்து அண்மையிலே மறைந்து போன தோழர் காமாட்சி வரையில் எனக்கு நன்றாகத் தெரியும்.

நான் தோழர் காமாட்சி அவர்களை பற்றிக் கூறும்போது எனக்கு ஒரு நினைவு; நானும், அன்பிலும், பராங்குசமும், தோழர் காமாட்சியும் ஒரு போராட்டத்திலே திருச்சி நகரத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டோம். மறுநாள் காலையில் பத்திரிகையில், “கருணாநிதியுடன் ஒரு `ஸ்ரீ’ உட்பட 10 பேர் கைது ” என்று செய்தி வந்தது.

எனக்கு ஆச்சரியம். ஆச்சரியத்தை விட பயம். ஒரு `ஸ்ரீ’ உட்பட 10 பேர் கைது என்று போட்டிருக்கிறார்களே, நமக்குப் பரவாயில்லை, வீட்டிலே என்ன நினைப்பார்கள் என்று பயம். பிறகு யார் அந்த `ஸ்ரீ’ என்று விசாரித்தபோது, நிருபர் விளக்கினார். அவர்தான் காமாட்சி. அவருடைய பெயர் காமாட்சி சுந்தரம். எல்லோரும் அவரை காமாட்சி, காமாட்சி என்று அழைத்து அப்படியே பழகிவிட்டது. பத்திரிகை நிருபர்கள், காமாட்சி என்றதும், அவர் ஒரு பெண்தான் போலும் என்று, ``ஒரு ஸ்ரீ உட்பட கருணாநிதியுடன் 10 பேர் கைது’’ என்றெல்லாம் எழுதினார்கள்.


அப்படி எனக்கு பழக்கப்பட்ட ஊர் திருச்சி. இந்தத் திருச்சியிலேதான் என்னுடைய அரசியல் பொது வாழ்வு ஆரம்பமாயிற்று. இந்த திருச்சி மாவட்டத்திலேதான், குளித்தலை தொகுதியில் 1957-ல் தி.மு.கழக வேட்பாளராக நின்று வெற்றி பெற்றேன். 57லே வெற்றி பெற்று இதுவரையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்றுக் கொண்டே இருக்கிறேன். (கை தட்டல்)

அது திருச்சியினுடைய வரலாறு. அந்த வரலாற்றில் என்னுடைய வரலாறும் இணைந்திருக்கிறது. இந்த திருச்சி மாவட்டத்திலேதான் கல்லக்குடி போராட்டத்திலே ஈடுபட்டு, 6 மாத காலம் கடுங்காவல் சிறை என்று திருச்சியிலே சிறைப்பட்டிருந்தேன்.

ஆனால், திருச்சிக்கு நான் இப்பொழுதுதான் முதல் முதலாக வருகிறேன் என்று ஒரு பத்திரிக்கைக்காரர் எழுதுகிறார் என்றால், அவர் திருச்சி நகரத்தினுடைய வரலாற்றையோ, அல்லது என்னுடைய வரலாற்றையோ ஒழுங்காகப் படிக்காதவர் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? திருச்சிக்கு இன்று நான் வருவது 100-வது தடவையோ, 101 -வது தடவையோ!

``வெற்றிகரமாக நூறாவது நாள்’’ என்று சினிமாப் படங்களுக்கு விளம்பரம் செய்கிறார்களே, அதைப்போல, ``வெற்றிகரமாக 100-வது கூட்டம்’’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு நான் திருச்சிக்கு வந்துகொண்டே இருக்கின்றேன்.

ஆனால், திருச்சிக்கும் எனக்கும் உள்ள சொந்தத்தை, திருச்சிக்கும் எனக்கும் உள்ள உறவை , திருச்சிக்கும் எனக்கும் உள்ள நட்பை, திருச்சிக்கும் எனக்கும் உள்ள கடமையை உணராதவர்கள் அப்படி எழுதியிருக்கிறார்கள். திருச்சியிலே என்னுடைய நண்பர்கள் எவ்வளவு பேர் என்பதை அறியாதவர்கள், திருச்சியிலே என்னை வாழ்த்தி வழியனுப்பி கல்லக்குடி போராட்டத்துக்கு அனுப்பி வைத்தவர்கள் யார் யார் என்பதை எல்லாம் அறியாதவர்கள் வேண்டுமானால் - மன்னிக்க வேண்டும், கல்லக்குடி என்றால் என்ன என்றே தெரியாதவர்கள் இதைச் சொல்லலாம், இதை எழுதலாம். ஆனால் திருச்சிக்குப் பழக்கப்பட்டவன் என்கின்ற முறையிலே நான் , திருச்சியின் தேவைகளை உணருகிறேன். என்னென்ன குறைகள் என்பதை அறிகிறேன். அந்தக் குறைகளையெல்லாம் ஈடுசெய்வதில் , நிவர்த்தி செய்வதில் அக்கறை காட்டுகின்றேன். இன்னும் அக்கறை காட்டுவேன், காட்டிக்கொண்டே இருப்பேன்!

தம்பி சிவா இங்கே பேசும்போது சொன்னார், நான் வந்தவுடனேயே தங்கியிருக்கும் இடத்திலேயே சொன்னார் - மேஜர் சரவணன் இந்த ஊர்க்காரர். கார்கில் போராட்டத்திலே உயிரிழந்தார். அவருடைய பெயரால் ஒரு சாலைக்குப் பெயர் வைக்க வேண்டும் என்று சொன்னார். அதிலே எந்தவிதமான மறுப்பும் இல்லை.

நான் அதற்கான அனுமதியை யாருக்குத் தரவேண்டுமோ அவர்களுக்குத் தருவேன். (கை தட்டல்) ஆனால், எந்தச் சாலை பிரச்சினை எதுவும் வராத அளவிற்கு உள்ள சாலையாக இருக்கிறதோ, அந்தச் சாலையை அவர்கள் எனக்கு தெரிவிப்பார்களேயானால், நகராட்சியிடமோ, மாநகராட்சி மன்றத் தலைவரிடத்திலோ, மற்றவர்களிடத்திலோ எடுத்துச் சொல்லி, ``மேஜர் சரவணன் சாலை’’ என்ற அந்தச் சாலை உருவாக என்னுடைய ஒத்துழைப்பைத் தருவேன் என்று கூறிக்கொண்டு - திருச்சி நகரத்தை ஒரு சோலையாக ஆக்கியவன் நான், ஒரு சாலைதானா முக்கியம். இதையா செய்ய மாட்டேன்? என்பதை எடுத்துக் கூறி, சோலைவனமாக திருச்சியும் மாறும்! சாலைக்குப் பெயரும் வரும்! என்பதை எடுத்துக் காட்டி, மாலையிலே சந்திப்போம்’’ என்று பேசினார்.



No comments:

Post a Comment