ஜெயலலிதாவிற்கு வந்த மிரட்டல் கடிதம் குறித்த விசாரணைக்குப்பிறகு காவல் நிலையத்திலிருந்து வெளியேறி ரோட்டில் நடந்து சென்ற திமுக பிரமுகர் மீது சரமாரியாக சோடாபாட்டில், கற்கள் வீசப்பட்டன. இதில் காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவரை மத்திய அமைச்சர் மு.க. அழகிரி சந்தித்து ஆறுதல் கூறினார்.
மதுரை 70வது வார்டு திமுக இளைஞரணி செயலாளர் முத்துப்பாண்டி. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு வந்த மிரட்டல் கடிதம் குறித்து மதுரை வந்த சென்னை தனிப்படை போலீசார் முத்துப்பாண்டியிடம் நேற்று விசாரணை நடத்தினர். இதன்பிறகு மாலையில் தேனி மெயின்ரோட்டில் நடந்து சென்ற அவர் மீது ஒரு கும்பல் சோடாபாட்டில், கற்களை வீசியது. இதில் காயமடைந்த அவர் மதுரை பெரியார் பஸ்நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். அவரது புகாரின்பேரில் கரிமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
முத்துப்பாண்டி நிருபர்களிடம் கூறுகையில், ‘எனக்கு மனைவி இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மதுரை ரேஷன் கடையில் விற்பனை உதவியாளராக உள்ளேன். மூன்றாம் வகுப்புவரை மட்டுமே படித்துள்ளேன். கையெழுத்து மட்டுமே போடத்தெரியும். எழுத்துக்கூட்டி வாசிப்பேன். தற்போதுள்ள ஜெயலலிதா பேரவை நிர்வாகி பசும்பொன் பாண்டியன் முன்பு திமுக,வில் இருந்தார். பின்னர் மதிமுக,விற்கு தாவினார். பிறகு தானே ஒரு புதுக்கட்சி துவக்கினார். 2ஆண்டுக்கு முன்பு அதிமுக,விற்கு வந்தார். என்னைப் பார்க்கும்போதெல்லாம் மு.க.அழகிரிக்கு வேலை செய்யாதே என்று கண்டிப்பார். இதில் எங்களுக்குள் அடிக்கடி தகராறு வரும். என்னை வழக்கில் சிக்க வைக்க, ஜெயலலிதாவிற்கு அவரே மிரட்டல் கடிதம் எழுதி எனது பெயரில் அனுப்பி இருக்கிறார். மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இதுகுறித்து நான் புகார் தெரிவித்ததால், அவருக்கு ஆத்திரம் மேலும் அதிகரித்தது.
இந்த மிரட்டல் கடிதம் குறித்து கரிமேடு காவல்நிலையத்தில் சென்னை தனிப்படை போலீசார் என்னை விசாரித்தனர். உரிய விளக்கம் அளித்ததால் விடுவித்தனர். மாலையில் தேனிமெயின்ரோட்டில் நடந்து வந்தபோது பசும்பொன் பாண்டியனின் தம்பி வல்லத்தரசு மற்றும் 4பேர் காரில் வந்து, என்னை மறித்தனர். பசும்பொன் பாண்டியன் மீதே புகார் தெரிவிக்கிறாயா என மிரட்டி திட்டிவிட்டு, காரில் சென்று வல்லத்தரசு அமர்ந்து கொண்டார். மற்ற நால்வரும் திடீரென என் மீது கற்களையும், உடைந்த சோடாபாட்டில்களையும் அடுத்தடுத்து வீசினர். இதில் முகம், கழுத்து, தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. மயங்கி விழுந்த என்னை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர்’ என்றார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முத்துப்பாண்டியை மத்திய அமைச்சர் மு.க. அழகிரி நேற்று மாலை சந்தித்து நலம் விசாரித்து சம்பவம் குறித்து கேட்டறிந்தார். மாவட்ட செயலாளர்கள் தளபதி, மூர்த்தி, மேயர் தேன்மொழி, துணைமேயர் மன்னன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயராமன், தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ், 4ம் பகுதி திமுக இளைஞரணி செயலாளர் வேல்முருகன் ஆகியோரும் உடன் சென்றனர்.
No comments:
Post a Comment