கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, September 26, 2010

மக்கள் வாழ்வில் வளம் சேர்க்க நம்மை அர்ப்பணிக்க வேண்டும் - முதல்வர் கருணாநிதி பேச்சு



நாகர்கோவிலில் 20.09.2010 அன்று நடந்த முப்பெரும் விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
நாகர்கோவில் என்பது ஒரு அரசியல் தேர்ச்சி பெற்ற பகுதி. இங்கே தான் நம்முடைய பெருந்தலைவர் காமராஜர் நாடாளுமன்ற தேர்தலில் நின்று எங்கள் எதிர்ப்பை மீறி, ஜனநாயக ரீதியிலான எதிர்ப்பை மீறி வெற்றி பெற்ற இடம். தாய் தமிழகத்தோடு குமரி மாவட்டம் இருந்தே தீர வேண்டும் என்பதற்காக மார்ஷல் நேசமணி தலைமையில் மாபெரும் போராட்டம் நடத்திய தொண்டர்கள் இன்னமும் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் மார்ஷல் நேசமணிக்கு காட்ட வேண்டிய மரியாதையை, அவர் பிறந்து வளர்ந்து தொண்டாற்றி, சிறை புகுந்து தியாகம் செய்த, அவர்கள் கட்சியில் இருந்து எதையும் செய்ய வில்லையே என்ற குறையை தீர்க்க கூடிய ஒருவன் கருணாநிதிதான் என்று வந்ததும், வராததுமாக கோரிக்கை எழுதி கொடுத்தால் மறந்து விடுவேன் என்று அச்சில் ஏற்றி கோரிக்கை அளித்து இருக்கிறார்கள்.
12 அம்ச கோரிக்கையை நான் நிறைவேற்ற வேண்டும் என்பது அவர்களின் உறுதிப்பாடான வேண்டுகோள் என்றாலும்கூட, 1 லட்சம் பேர் கையெழுத்திட்ட இயக்கம் நடத்தி இருக்கிறார்கள். கையெழுத்திட்டவர்களை நான் மதிக்கிறேன். அவர்கள் கையாண்ட ஜனநாயக முறையை மதிக்கிறேன். அதை விட மேலாக யாருக்காக இந்த கையெழுத்தை இயக்கத்தை ஆரம்பித்தார்களோ அந்த நேசமணியை மதிக்கிறேன். பல்லாண்டு காலமாக நான் அவரை அறிவேன். 1957ல் சட்டமன்ற தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக குளித்தலை தொகுதியில் நான் வென்று சட்டமன்றத்துக்குள் சென்ற போது என்னோடு இருந்தவர் மார்ஷல் நேசமணி. அதை மறந்து விடவில்லை.
அவருக்கு ஏன் மார்ஷல் என்று பட்டம் வந்தது. குமரி மாவட்டத்தை யாரும் அபகரித்து விடக்கூடாது என்பதற்காக போராட்டம் நடத்தியதால் மார்ஷல் என்ற மகுடத்துக்கு உரியவர் ஆனார். அவருடைய பெயரால் பஸ் நிலையம் இருக்கலாம். அவருயை பெயரால் சிலை இருக்கலாம். மணிமண்டபம் வேண்டும் என்ற எண்ணம் இந்த மாவட்ட மக்களுக்கு இருக்கிறது என்பதை நான் அறிவேன். இந்த கோரிக்கையை பரிசீலித்துவிட்டு தற்காப்பாக சொல்லி விட்டு விடை பெற விரும்பவில்லை. பரிசீலித்து ஆவன செய்யப்படும். இப்போதே, நாளைக்கே அதற்கான ஏற்பாடுகள் நடைபெறும்.
அதை தொடர்ந்து இங்கு கட்டப்படுகின்ற மார்ஷல் நேசமணி மண்டபத்தை திறக்க வரும் ஜூன் மாதத்தில் நான் வருவேன். ஏனென்றால் மே மாதம் சட்டமன்ற தேர்தல். அந்த நேரத்தில் வந்தால் தேர்தல் கமிஷன் இது தேர்தலுக்கு புறம்பான செயல் என்று சொல்லகூடும். எனவே மே மாதத்தில் தேர்தல் முடிந்து, முடியாமல் இருந்தாலும் கூட, நேசமணி பெயரால் அமைகிற மாளிகைக்கு, அடிக்கல் நாட்டவோ, அல்லது திறப்பு விழா நடத்தவோ இந்த கருணாநிதி நிச்சயம் வருவான் என்ற உறுதிமொழியை நேசமணி பால் அன்பு கொண்ட அன்பர்களுக்கு, காங்கிரஸ் பேரியக்கத் தோழர்களுக்கு தெரிவிக்க கடமைப்பட்டு இருக்கிறேன்.
குஷ்பு குறிப்பிட்டது போல் இந்தியாவிலேயே எத்தனையோ பிரச்னைகள். இங்கு நாம் அமைதியாக அமர்ந்து விழா கொண்டாடுகிறோம். ஆனால் இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சி தலைவர்கள், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஆகியோர் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் கூடி என்ன விடிவுகாலம் என்று ஆலோசனை நடத்துகிறார்கள்.
இந்தியா விடுதலை பெற்ற போது ஆரம்பமான காஷ்மீர் கிளர்ச்சி இன்னும் தொடர்கிறது. ஒவ்வொரு நாளும் காலையில் பத்திரிகைகளை படிப்பதற்கு கைகள் நடுங்குகிறது. இத்தனை பேர் இறந்தார்கள், கொல்லப்பட்டார்கள், காயமுற்றார்கள், இத்தனை வீடுகள் கொளுத்தப்பட்டன என்ற இந்த செய்திகள் இந்தியாவின் ஒரு பகுதியான காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கிறது. அதைப்பற்றி இங்கு கவலைப்படாமல் இன்னமும் மத உணர்வுகளை தீட்டுகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
காஷ்மீரத்திலே மத உணர்வினால் நடைபெறும் கிளர்ச்சி அல்ல. அங்கு நடைபெறுவது அவர்களது மாநில உரிமைக்காக மக்கள் நடத்துகிற போராட்டம். அந்த போராட்டத்தில் இந்தியாவின் கடமை என்ன?. இந்திய பேரரசு எடுக்கிற நிலை என்ன?. இவைகளை பற்றி எல்லாம் கேள்விகள் அடுக்கடுக்காக வந்து கொண்டிருக்கிற இந்த காலகட்டத்தில் நாம் அதைப்பற்றி சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
அதே போல் தான் இன்னொரு பயமுறுத்துகிற பிரச்னை. 24ம் தேதி ராமர் கோவில் பிரச்னை. நீதிமன்றத்திலேயே தீர்ப்பு வருகிற நாள். அந்த நாளில் டெல்லி, அயோத்தியில் என்ன நடக்குமோ, எத்தகைய மத கலவரங்கள் உருவாகுமோ, யார் யார் இதை தூண்டி விடுவார்களோ என்ன அச்சம் ஊசலாடுகிறது.
பிரதமர் மன்மோகன்சிங் வேண்டுகோளின்படி எல்லோரும் அமைதியாக இருக்க வேண்டும். அந்த முடிவுகளை ஏற்றுக் கொள்ள நீங்கள் ஒத்துழைப்புதர வேண்டும் என நானும் கேட்டுக் கொள்கிறேன். எந்த வன்முறை நடைபெற்றாலும் அதை பற்றி கவலைப்படாமல் அந்த வன்முறைகளை தவிர்த்து இந்திய நாட்டின் மக்கள் வாழ்வில் வளம் சேர்க்க நம்மை நாமே அர்ப்பணிக்க வேண்டிய நாள் இது என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இவ்வாறு கருணாநிதி பேசினார்.

No comments:

Post a Comment