தமிழகத்தில் மேலும் பல தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, சீனா, தென்கொரியா நாடுகளுக்கு பயணமாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (27.09.2010) புறப்பட்டுச் சென்றார்.
சீனாவில் உள்ள ஷாங்காய் நகருக்குச் ஸ்டாலின் செல்கிறார். அங்கு உலக வர்த்தக கண்காட்சி நடக்கிறது. அதில், பல்வேறு நாடுகள் ஒரு லட்சம் சதுர அடி பரப்புக்கு பிரமாண்டமான அரங்குகளை அமைத்துள்ளன. தமிழக தொழில்துறை அமைச்சர் என்ற விதத்தில் அவர் அதனை பார்வையிடுகிறார். அவற்றை பார்வையிட்டு, எத்தகைய ஆலைகளை தமிழகத்தில் அமைக்கலாம் என்று ஆய்ந்தறிகிறார். தமிழகத்தை சேர்ந்த, சீனாவில் தொழில் நிறுவனத்தை தொடங்கியுள்ள லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தின் (எல்.எம்.டபிள்யூ.) முதல் தயாரிப்புப் பொருளை, சீன நிறுவனத்துக்கு வழங்குகிறார்.
பிறகு, ஷாங்காயில் இருந்து தென்கொரியா புறப்படுகிறார். அந்நாட்டில் அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய நாட்கள் பல்வேறு நிகழ்வுகளில் அவர் பங்கேற்கிறார். ஹூண்டாய், சாம்சங் போன்ற பெரிய நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த நிறுவனங்கள் சார்பில் எத்தகைய விரிவாக்கத் திட்டங்களை தமிழகத்தில் தொடங்கலாம் என்பது பற்றி விவாதிக்கிறார்.
அங்கு பல்வேறு தொழில் நிறுவனத்தினரை அழைத்து, தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் என்ற கருத்தரங்கையும் அவர் நடத்துகிறார். அதில், தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு தமிழக அரசு என்னென்ன உதவிகளை வழங்கும் என்பது பற்றியும், தமிழகத்தில் நிலவும் தொழில் அமைதி பற்றியும் விளக்கமாக பல்வேறு தொழில் நிறுவனத்தினருக்கு எடுத்துரைக்கிறார்.
சீயோல் நகரில், சென்னையின் கூவம் நதியை போல் அழுக்கு நிறைந்த நதி ஒன்று இருந்தது. அதனை புதிய தொழில்நுட்பம் மூலமாக, தூய்மையான நதியாக மாற்றி இருக்கிறார்கள். அதனை பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன், அந்நதியை தூய்மைப்படுத்த கையாண்ட உத்திகளை பற்றியும் விவாதிக்கிறார். இவ்வாறு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அக்டோபர் 5ந் தேதி தமிழகம் திரும்புகிறார்.
No comments:
Post a Comment