தமிழகத்தில் அரசு அமல்படுத்தியுள்ள சமச்சீர் கல்வித் திட்டம் சரியானதே என்று உச்ச நீதிமன்றம் நேற்று திட்டவட்டமாக தீர்ப்பு கூறியுள்ளது. இந்த திட்டத்தை எதிர்த்து தனியார் மெட்ரிக் பள்ளிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது.
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல், 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி திட்டத்தையும், அடுத்த ஆண்டு முதல் மற்ற வகுப்புகளுக்கும் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதுதொடர்பான சட்டத்தையும் இயற்றியது.
இதை எதிர்த்து தனியார் மெட்ரிக் பள்ளிகள் சங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து, ‘சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த தடை இல்லை’ என தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து தனியார் பள்ளிகள், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தன. இதை நீதிபதிகள் சதாசிவம், சவுகான் ஆகியோர் நேற்று விசாரித்தனர்.
தமிழக அரசு சார்பில், மூத்த வக்கீல் கோபால் சுப்பிரமணியம், கூடுதல் அட்வகேட் ஜெனரல் வில்சன், சிறப்பு வக்கீல் சங்கரன் ஆகியோர் ஆஜராகி, “தமிழகத்தில் சமச்சீர் கல்வித் திட்டம் நடப்பாண்டு முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கில் புத்தகங்களை அச்சிட்டு, வெளியிடப்பட்டு மாணவர்கள் அதை படித்து வருகிறார்கள். இதை அனைத்து பள்ளிகளும் ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய
வேண்டும்” என்றனர்.
தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில், மூத்த வக்கீல்கள் ஹரீஸ் சால்வே, அரிமா சுந்தரம் ஆகியோர் ஆஜராகி, “சமச்சீர் கல்வி திட்டத்தால் தனியார் பள்ளிகளுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்” என்றனர்.
இதை கேட்ட நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:
தமிழக அரசு கொண்டு வந்த சமச்சீர் திட்டம் சிறப்பானது. மற்ற மாநிலங்களில் ஒரே மாதிரியான கல்வித் திட்டத்தைதான் அனைத்து பள்ளிகளும் பின்பற்றுகிறது. தமிழக அரசு ஒரே மாதிரியான கல்வி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது மாணவர்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்டது.
தமிழக அரசு சமச்சீர் கல்வி திட்டம் கொண்டு வருவதற்கு முன், மற்ற மாநிலங்களில் உள்ள கல்வி திட்டத்தை ஆராயவும், இத்திட்டத்தை கொண்டு வருவதற்கு ஒரு கமிட்டியும் அமைத்தது. அந்த கமிட்டியில் சிறந்த கல்வியாளர்கள் இடம்பெற்று, அனைத்து தரப்பிலும் கருத்து கேட்ட பிறகுதான் இந்த இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே இதற்கு தடை விதிக்க முடியாது.
ஏற்கனவே சமச்சீர் கல்வி நடப்பு கல்வியாண்டில் இருந்து அமல்படுத்தப்பட்டு வருவதால், இதில் குறுக்கிட விரும்பவில்லை. உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லும். நாங்கள் அதில் குறுக்கிட விரும்பவில்லை. சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்ய முடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.
இவ்வாறு தீர்ப்பு கூறினர்.
No comments:
Post a Comment