தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக மாலதி நேற்று பொறுப்பேற்றார்.
கடந்த 2008 செப்டம்பர் 1ம் தேதி முதல், தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இருந்த ஸ்ரீபதி நேற்றுடன் ஓய்வு பெற்றார். விஜிலென்ஸ் கமிஷனராக இருந்த மாலதியை புதிய தலைமைச் செயலாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, மாநிலத்தின் 39வது தலைமைச் செயலாளராக அவர் நேற்று மாலை பொறுப்பேற்றார். இவர் 2வது பெண் தலைமைச் செயலாளர். ஏற்கனவே 2002ம் ஆண்டு முதல் 2005 வரை லட்சுமி பிரானேஷ் தலைமைச் செயலாளராக பதவி வகித்தார். மாலதிக்கு ஸ்ரீபதி மற்றும் அனைத்து துறை செயலாளர்கள், உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஓய்வு பெற்ற ஸ்ரீபதி கூறுகையில், ‘தலைமைச் செயலாளராக நான் பதவி வகித்த காலம் மிகமிக இனிமையானது. எல்லோருடைய ஒத்துழைப்பாலும் சிறப்பாக செயல்பட முடிந்தது. உலகத் தமிழ் மாநாடு நடத்தும் பணியில் பங்கேற்றதை மிகுந்த பெருமையாக கருதுகிறேன். அனைவரின் கூட்டு முயற்சியால் மாநாட்டை சிறப்பாக நடத்த முடிந்தது’ என்றார். ‘தலைமை தகவல் ஆணையராக எப்போது பொறுப்பேற்பீர்கள்’ என நிருபர்கள் கேட்டதற்கு, ‘எனக்கு இன்னும் நியமன ஆணை கிடைக்கவில்லை’ என்றார்.
கூடுதல் பொறுப்பு: தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு ஆணைய தலைவர் கிருஸ்துதாஸ் காந்திக்கு கூடுதல் பொறுப்பாக திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையில் முதன்மை ஆணையர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment