முதலமைச்சர் கருணாநிதி 08.09.2010 அன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.இரவு நடந்த பிரமாண்ட தி.மு.க. பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
09.09.2010 அன்று காலை 10 மணி அளவில் திருச்சியில் இருந்து கார் மூலம் புறப்பட்டு பெரம்பலூர் சென்றார்.
முதல்வர் கதை, வசனம் எழுதிய பொன்னர்-சங்கர் படத்தின் படப்பிடிப்பு பெரம்பலூரில் நடந்துகொண்டிருக்கிறது. ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். இருந்தும், தனது படைப்பு எப்படி படமாகிறது என்கிற ஆவலால் முதல்வர் பெரம்பலூரில் படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்றுவிட்டார். படத்தின் நாயகன் பிரசாந்த், படத்தின் இயக்குநர் தியாகராஜன் ஆகியோரை சந்தித்து பேசினார். படப்பிடிப்பு நடைபெறும் விதத்தை பார்த்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டார். பெரம்பலூர் சென்ற முதல்வர் கருணாநிதி, கல்பாடி என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியாரின் சிலையை பார்வையிட்டார். முதல்வர் கருணாநிதியுடன் மத்திய அமைச்சர் ஆ.ராசா, அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் பொன்முடி ஆகியோர் உடனிருந்தனர்.
பெரியார் அமர்ந்தபடி உள்ள இந்த சிலை, 32 அடி உயரம் உடையது. முதல்வர் கருணாநிதி இந்த சிலையை திறந்து வைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து விழுப்புரம் வந்த முதல்வர் கருணாநிதிக்கு திமுகவினர் வரவேற்பு அளித்தனர். பின்னர் விழுப்புரத்தில் திருநாவுக்கரசர் எம்எல்ஏ சகோதரர் இல்ல திருமண விழாவையோட்டி மணமக்களுக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்தார்.விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். அவரை கலெக்டர் பழனிசாமி, டிஐஜி மாசானமுத்து ஆகியோர் வரவேற்றனர்.
No comments:
Post a Comment