கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, November 1, 2010

சிரிக்க முடியாதவர்கள் கோர்ட்டுக்கு செல்வார்கள்: கலைஞர் பேச்சு



சென்னை வள்ளுவர் கோட்டம் சாலையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மகளிர்க் சுய உதவிக்குழுக்களுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள அன்னை தெரசா மகளிர் வளாக திறப்பு விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் கைவினைப்பொருட்கள் கையேட்டினை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார்.

இவ்விழாவில் அவர், ’’இந்த இனிய மாலை நேரத்தில், மகளிர் சுயஉதவிக் குழுவினர் தொகுப்பாக ஆற்றியிருக்கின்ற பணிகளையெல்லாம் நினைவு கூர்ந்திடவும், இன்னும் மேலும் ஆற்றவிருக்கின்ற பணிகளுக்கான விதை நடவும்; நாம் இந்த இனிய நேரத்தைப் பயன்படுத்திக் கொள்கின்ற ஒரு வாய்ப்பைப் பெற்று, உங்களுடைய ஆதரவை - உங்களுடைய அன்பை - உங்களுடைய வாழ்த்துக்களைப் பெறுகின்ற ஒரு நிலையில்;

இந்த விழாவிலே கலந்து கொண்டு, இந்த அருமையான - எழில் ததும்புகின்ற மாளிகையை - வளாகத்தை - அதுவும், அன்னை தெரசா பெயரில் அமைந்திருக்கின்ற வளாகத்தை - திறந்து வைப்பதிலே மிகுந்த பெருமையடைகின்றேன்; மகிழ்ச்சியடைகின்றேன்.


இந்த வளாகத்திற்கு என்ன பெயர் வைப்பது என்ற வினா எழுந்தபோது, எனக்கு நினைவுக்கு வந்தது “அன்னை தெரசா” அவர்களுடைய பெயர் என்பதை தம்பி ஸ்டாலின் இங்கே எடுத்துச் சொன்னார். அந்த நினைவுகூட எனக்கு எப்படி வந்தது என்றால்;

அன்னை தெரசாவினுடைய நூற்றாண்டு விழாவை - தமிழகத்திலே நம்முடைய கழக அரசின் சார்பில் கொண்டாட வேண்டுமென்று நானும், அருமை நண்பர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களும் பேசிக் கொண்டிருந்த மறுநாளைக்கு மறுநாள் - இந்தக் கட்டிடத்திற்கான திறப்பு விழா பற்றிய செய்தி வந்த காரணத்தால், அந்தப் பேச்சின் தொடர்ச்சியாக, இந்தக் கட்டடத்திற்கு ஏன் அன்னை தெராசாவினுடைய பெயரையே வைக்கக்கூடாது என்று எழுந்த ஆவலின் காரணமாக, இந்தப் பெயர் இன்றைக்கு அமைந்திருக்கிறது என்பதை நான் மட்டற்ற மகிழ்ச்சியோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.


இந்த விழா, சென்னை மாநகரில் - ஒரு பெரிய கட்டடத்தை அமைத்திருக்கிறோம் என்ற அந்த பெரும் உணர்ச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. என்னைப் பொறுத்தவரையில்,


இங்கே தம்பி தயாநிதி மாறன் எடுத்துக் காட்டியதைப்போல், மறைந்த கழகத்தினுடைய மாமேதைகளிலே ஒருவராகத் திகழ்ந்த தம்பி முரசொலி மாறன் - மகளிர் சுயஉதவிக் குழுக்களை நாம் அமைக்க வேண்டுமென்று எடுத்துச் சொன்னதன் காரணமாக, 1989 ஆம் ஆண்டு தருமபுரியிலே இந்தச் சுயஉதவிக் குழுவிற்கான தொடக்க விழா நடைபெற்று - இன்றைக்கு இங்கே எடுத்துக் காட்டியதைப்போல, ஏறத்தாழ 4 இலட்சத்து 74 ஆயிரத்து 874 மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்படுகின்ற அளவிற்கு வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றோம்.


இந்தக் குழுக்களிலே இருக்கின்ற ஏழை மகளிர் எத்தனை பேர் என்பதை எண்ணும்போது, பெருமையாக இருக்கிறது. 73 இலட்சத்து 60 ஆயிரம் ஏழை மகளிர் குழுக்களிலே உறுப்பினர்களாக இன்றைக்கு இருக்கின்றார்கள்.

இவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களின் விற்பனையை மேம்படுத்திடவும், சென்னை மாநகரில் ஒரு நிரந்தரமான விற்பனை வளாகத்தை அமைத்திட வேண்டும் என்ற நோக்கத்திலும், அன்னை தெரசா மகளிர் வளாகம் உருவாக்கப்பட்டு - உள்ளாட்சி மன்றங்களின் நாளான இந்நாளில் இந்த மாளிகை திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு செய்தியாகும்.

இந்த மன்றங்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை அவ்வப்போது, அரசுப் பொறுப்பிலே இருக்கின்ற நம்முடைய துணை முதலமைச்சர் அவர்கள் சிந்தித்து, செயலாற்றி, இத்தகைய பெருவளர்ச்சியை இந்த மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பெறுவதற்குக் காரணமாக இருந்து இதனை வளர்த்திருக்கிறார்.


சுருக்கமாகச் சொல்லவேண்டுமேயானால், தமிழகத்திலே இன்றைக்கு ஆல்போல் தழைத்திருக்கின்ற மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்குக் காரணமாக - இதற்கு அடிப்படையாக அமைந்திருப்பது இன்றைய துணை முதலமைச்சருடைய உழைப்புதான் (பலத்த கைத்தட்டல்) என்பதை நான் சொல்ல விரும்புகிறேன்.


கழக ஆட்சி மகளிர் முன்னேற்றத்திற்கு - மகளிர் உரிமைகளுக்கு எப்படியெல்லாம் துணை நிற்கும் - துணை நின்றது என்பதை எனக்கு முன்னாலே இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். 1973 ஆம் ஆண்டில், கழக ஆட்சியில் தமிழகக் காவல் துறையில் முதன்முதலாக பெண் காவலர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள். அப்போது அருள் அவர்கள் ஐ.ஜி-யாக இருந்தார்.

அந்த நேரத்திலேதான் பெண்களைக் காவல் துறையிலே சேர்க்க வேண்டும்; அவர்களைப் பயன்படுத்திட வேண்டும் என்று எண்ணம் கொண்டு; அதற்கு ஐ.ஜி. அருள் அவர்களும் தன்னுடைய ஆதரவைத் தந்து, முயற்சி மேற்கொண்டு - அப்போது தமிழகக் காவல் துறை பெண்களை உள்ளடக்கியதாக அமைந்தது. அதனுடைய வளர்ச்சி இன்றைக்கு எங்கே வந்திருக்கிறது என்றால், அந்தத் துறையினுடைய தலைமை இயக்குநராக (டி.ஜி.பி.) ஒரு பெண்மணியே பொறுப்பேற்றிருக்கின்றார்கள்.

அந்த அளவிற்குக் காவல் துறையிலே பெண்களுக்குச் சுதந்திரம்; பெண்களுக்கு உரிமை; பெண்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ள ஆட்சி இந்த ஆட்சி ஆகும்.


காவல் துறையிலே மாத்திரமல்ல; தமிழகத்தைக் காக்கும் துறையான தலைமைச் செயலகத் துறையிலேயே ஒரு பெண்மணிதான் இன்றைக்குத் தலைமைச் செயலாளராக இருக்கிறார்.

(கைதட்டல்) உள்ளபடியே தமிழகத்தில் இது போற்றத்தக்க, புகழத்தக்க ஒரு சம்பவம். தலைமைப் பொறுப்பிலே உள்ள அதிகாரிகள் இரண்டு பேரில் - ஒரு பெண்மணி தலைமைச் செயலாளராகவும், இன்னொரு பெண்மணி காவல் துறைக்குத் தலைமை இயக்குநராகவும் (கைதட்டல்) இருப்பதை எண்ணி எண்ணி நாமெல்லாம் மகிழலாம். மகிழ முடியாதவர்கள் வேண்டுமானால் கோர்ட்டுக்குச் செல்வார்கள்.

அது பெண் மக்கள் முன்னேற வேண்டும் என்கின்ற கருத்துடையவர்களால் செய்யப்படுகின்ற காரியமா என்பதை - அவர்களை ஆதரிக்கின்ற இதழாளர்கள், ஏட்டாளர்கள் எண்ணிப் பார்க்க வேண்டுமென்று, மகளிருக்கான வளாகத்தை - மாளிகையைத் திறந்து வைத்திருக்கின்ற இந்த நேரத்தில் நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

இந்தியாவிலேயே முதன்முதலாக - மற்றவர்கள் யாரும் வருத்தப்படக் கூடாது - இந்தியாவிலேயே முதன்முதலாக என்றால், பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்குக் கோபம் வந்தாலும் வரும்.

ஏனென்றால், ஒரு சிறந்த தேசிய கட்சியைச் சேர்ந்த ஒரு பெருந் தொண்டர் அவர்; திறமை மிக்க முன்னணி வீரர் அவர். அதனால்தான் சொல்கின்றேன். இந்தியாவிலேயே கழக ஆட்சியில்தான் முதல்முறையாக பெண்களுக்குச் சம சொத்துரிமை வழங்கப்பட்டது. (கைதட்டல்) வழங்கியது மாத்திரமல்ல; அதற்கென ஒரு தனிச் சட்டம் நிறைவேற்றி, பெண்களுக்கு ஒரு தனிச் சிறப்பை வழங்கியது.


அதுமாத்திரமல்ல; இந்தியாவிலேயே முதல் முறையாக அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் கழக ஆட்சியிலே நடைமுறைப்படுத்தப்பட்டு; பல்லாயிரக்கணக்கான பெண்கள் அரசு வேலைவாய்ப்பினைப் பெற வழிவகுக்கப்பட்டது என்பதையும் மறந்து விடக்கூடாது.


1996 ஆம் ஆண்டு கழக ஆட்சியில்தான், இந்தியாவிலேயே முதல் முறையாக உள்ளாட்சி அமைப்புகளிலே மகளிர்க்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி அடித்தளம் அமைத்தோம் என்பதையும் - ஏறத்தாழ 40 ஆயிரம் மகளிர், தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்புகளை ஏற்று ஜனநாயகக் கடமைகளை ஆற்றி வருகின்றார்கள் - அரசியல் விழிப்புணர்வையும் பெற்றுவருகின்றார்கள் என்பதையும் நான் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்.


அந்த வகையிலே, இந்த மகளிர் குழுக்கள் எல்லா விதமான பெருமைகளையும் பெற்றுள்ள குழுக்களாகும். நான் இங்கே தரப்பட்ட மலரைப் புரட்டிப் பார்த்தேன். புரட்டிப் பார்த்துவிட்டு, துணை முதலமைச்சர் தம்பி ஸ்டாலினிடத்திலே அதிலேயுள்ள சில படங்களைச் சுட்டிக்காட்டி - “இந்தப் படம் மிக அருமையாக இருக்கிறது;

அது மரத்தால் செய்யப்பட்ட - மகளிர் உழைப்பால் - மகளிர் திறமையால் செய்யப்பட்ட சில படங்கள் - சில கட்டிடங்கள்; சில பொம்மைகள். இவைகளெல்லாம் மகளிருடைய திறமையால், மகளிருடைய உழைப்பால் செய்யப்பட்டவை” - என்று சொல்லிவிட்டு - “மரத்தால் செய்யப்பட்ட இந்தக் கட்டிடத்தினுடைய பொம்மை ஒன்றை நம்முடைய புதிய சட்டப் பேரவைக் கட்டிடத்திலே வைக்க வேண்டும்” (கைதட்டல்) என்றும் நான் தம்பி ஸ்டாலினிடத்திலே சொல்லியிருக்கின்றேன். அவ்வளவு நேர்த்தியாக - அவ்வளவு அழகானதாக - அவ்வளவு மேன்மையுள்ளதாக - அந்தச் சிற்பங்களை அவர்கள் செய்திருப்பதைப் பார்க்கும்போது, நான் உள்ளபடியே வியப்படைகின்றேன்.


இந்தச் சிற்பிகள் பெண்களாக - அதிலும், இந்த மகளிர் குழுக்களைச் சேர்ந்த பெண்களாக இருப்பதை எண்ணும்போது, நான் மிகுந்த மகிழ்ச்சியோடு என்னுடைய வாழ்த்துக்களை அவர்களுக்கெல்லாம் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.


இப்போது ஏறத்தாழ 73 இலட்சம் பேர் தமிழகத்திலே இந்தக் குழுக்களிலே செயல்படுகிறார்கள் என்றால், இந்த 73 இலட்சம் பேரும் சாதாரணமானவர்கள் அல்ல; சாதாரண, சாமான்ய மக்களைச் சார்ந்தவர்கள் என்றாலும்கூட, அவர்கள் இந்தக் குழுவிலே இருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும்போது, அவர்களைத் தனித்தனியாக மகளிர் என்று யாரும் கருதாமல், அவர்களெல்லாம் ஒரு பெரும் சேனை; பெரிய பட்டாளம்; பெரும் படை. அந்தப் படை தமிழ்நாட்டில் பெண்களுடைய முன்னேற்றத்திற்கு - பெண்களுடைய எழுச்சிக்கு - பெண்களுடைய எதிர்காலத்திற்கு

வழிவகுக்கக்கூடிய - எத்தகைய இடையூறுகள் வந்தாலும், அவற்றை வென்று நிற்கக்கூடிய - வலிமை பொருந்திய சேனை என்பதை யாரும் மறுத்து விட முடியாது. அப்படிப்பட்ட படை வலிமையால், இன்றைக்கு இந்த மகளிர் குழு - இவ்வளவு பெரிய அளவிற்கு வளர்ந்திருக்கிறது என்பதையும் - இந்த வளர்ச்சிக்குக் காரணமான தம்பி ஸ்டாலின் உட்பட மற்ற அனைவரையும் நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


நாம் பெண்களை மதிப்பவர்கள்; பெண்களைப் பாராட்டுகின்றவர்கள்; பெண்களுக்கு எல்லாவிதமான உரிமைகளையும் தரக்கூடியவர்கள்; அவர்களுக்கு வணக்கம் தெரிவிக்கக்கூடியவர்கள்; அவர்களை வாழ்த்தக் கூடியவர்கள் என்பதற்கு அடையாளம்தான்; மகளிர் சமுதாயத்திற்காக - பெண்கள் சமுதாயத்திற்காக என்று மாத்திரமல்ல; ஆண்களும் உள்ளிட்ட ஏழையெளியோர் சமுதாயத்திற்காக - நலிவடைந்த மக்களுக்காக - அவர்களுடைய நலனை அடிப்படையாக வைத்து நாளும் தொண்டாற்றிய - மறைந்தும் மறையாத மாதரசு அன்னை தெரசா அவர்களுடைய பெயரால் - அவருடைய நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகின்ற நேரத்தில் - அந்த நூற்றாண்டு நாள் விழா தமிழக அரசின் சார்பாகவே கொண்டாடப்படும் (கைதட்டல்) என்பதையும் நான் இங்கே தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.


அன்னை தெரசா ஒரு தாய்தான். அவர் இந்தியாவிலே பிறக்காத ஒரு தாயாக இருக்கலாம். வெளிநாட்டிலே பிறந்து - இந்திய மக்களுக்குப் பாடுபட்ட ஒரு தாயாக இருக்கலாம். எங்கே பிறந்தாலும், தாய் தாய்தான்.

அப்படிப்பட்ட அன்னைக்கு நாம் ஆற்றவேண்டிய கடமையை ஆற்றுவோம்; ஆற்றுகின்ற நேரத்திலே அவர் வழிநின்று நடப்போம் என்ற சூளுரையை மேற்கொள்வோம் என்பதை இங்கே எடுத்துக் காட்டி; “அன்னை தெரசா வாழ்க! அவருடைய பெயரால் இங்கே அமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டிடத்தில் நல்ல பல காரியங்கள் விளைந்திடுக! அந்தக் காரியங்கள் விளைந்திட ஊக்கத்தோடு செயலாற்றிடுக!” என்று இதற்குக் காரணமான அனைவரையும் பாராட்டி, வாழ்த்தி, இந்த அளவில் என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்’’என்று பேசினார்.

விழாவுக்கு தலைமை தாங்கி துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
ஆசிய வளர்ச்சி வங்கி சார்பில் ரூ.8 கோடியே 29 லட்சமும், தமிழக அரசு சார்பில் றீ7 கோடியே 3 லட்சமும் கொண்டு ரூ.15 கோடியே 32 லட்சத்தில் இந்த வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த குழுக்களின் உற்பத்தி பொருட்கள் சென்னையில் நடந்த கண்காட்சியில் றீ1.87 கோடி அளவில் விற்பனையாகியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கண்காட்சிகள் நடத்தப்பட்டு றீ17 கோடியே 52 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளது. 29 மாவட்டங்களில் வணிக வளாகங்களும் 22 இடங்களில் கூடுதல் வணிக வளாகங்களும் 286 கிராம அங்காடிகளும் இதற்காக பயன்படுத்தப்படுகிறது.
கிராமங்களில் மேலும் 90 அங்காடிகள் கட்டப்பட்டு வருகிறது. அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மாநில அளவில் இந்த வளாகம் கட்டப்பட்டுள்ளது. 2007ல் இதை அறிவித்து, இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கட்டிட திறப்பு விழாவுக்கு முதல்வரிடம் தேதி கேட்ட போது, உடனே தந்ததுடன் அன்னை தெரசாவின் பெயரையும் சூட்டினார். இது எங்கள் துறைக்கு கிடைத்த பெருமையாகும். பெண்களின் முன்னேற்றத்துக்காக பாடுபடும் அரசு இது. இந்த அரசுக்கு தொடர்ந்து நீங்கள் துணை நிற்க வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் பேசியதாவது:

மகளிர் சுய உதவிக் குழு மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. 1989ல் எனது தந்தை முரசொலி மாறன் வங்கதேசத்துக்கு சென்றிருந்தார். அங்கு முகமது யூனுஸ் என்பவர் மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி அது சிறப்பாக செயல்பட்டதையும், அதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதையும் முதல்வர் கருணாநிதியிடம் எனது தந்தை தெரிவித்தார். அதை ஏற்று 1989ல் தர்மபுரியில் மகளிர் சுய உதவிக் குழுவை முதல்வர் கருணா நிதி தொடங்கினார்.
இன்று உலகின் எங்கும் இவ்வளவு குழுக்கள் இருக்க வாய்ப்பில்லை. இன்று உலகிலேயே இல்லாத அளவுக்கு பெரும் இயக்கமாக இது மாறியுள்ளது. இதற்கு காரணம் முதல்வரும், துணை முதல்வரும் தான். அவர்களுக்கு இதற்காக நோபல் பரிசு வழங்க வேண்டும். முதல்வர் கோடு போட்டார். துணை முதல்வர் ரோடு போட்டார். இந்த குழுக்களுக்காக றீ3 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பது தமிழகத்துக்கு பெருமை சேர்க்கிறது.
இவ்வாறு தயாநிதி மாறன் பேசினார்.

விழாவில் மேயர் மா.சுப்பிரமணியன் பேசும் போது, “மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பல்வேறு விழாக்களில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 97 மணி நேரம் மேடையில் நின்று சுழல் நிதி தந்துள்ளார். இது கின்னசில் இடம்பெறும் சாதனையாகும்” என்றார்
ஊரக வளர்ச்சித் துறை செயலர் அலாவுதீன் வரவேற்றார். தலைமை செயலாளர் மாலதி, மேயர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். கைவினை பொ ருள் கையேட்டினை முதல் வர் கருணாநிதி வெளியிட, துணை முதல்வர் மு.க.ஸ்டா லின் மற்றும் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பின்னர் சுய உதவிக் குழுக்களுக்கு றீ2 கோடியை முதல்வர் கருணாநிதி கடனாக வழங்கினார். மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் கோபால் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment