கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, November 22, 2010

ஜெயலலிதாவின் ராஜதந்திரங்கள் தோல்வியில்தான் முடிந்துள்ளன - முதலமைச்சர் கலைஞர்


முதல்வர் கருணாநிதி 15.11.2010 அன்று வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கை:
அமைச்சர் ராஜாவை நீக்கினால் நிபந்தனையற்ற ஆதரவை மத்திய அரசுக்குத் தெரிவிப்போம் என்று அழையா விருந்தாளியாக ஜெயலலிதா கூறியது மக்கள் நலனைப் பாதுகாக்க உதவாது என்று மார்க்சிஸ்ட் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது பற்றி?
அது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். என்றாலும் அம்மையாரின் மனம் நோகக்கூடாது என்பதைப் போல, மத்திய அரசையும், ஆதரவாகவுள்ள தி.மு.க அரசையும் தேவையில்லாமல் குறை கூறியிருக்கிறார்கள். அவர்களது நோக்கம், அ.தி.மு.க. தலைவியைக் குறை கூற வேண்டும் என்பதைவிட, மத்திய மாநில அரசுகளையும் தாக்க வேண்டும் என்பதுதான்.
காங்கிரசோடு சேர வேண்டும் என்பதற்காக எப்படியெல்லாம் அறிக்கை விடுகிறார் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளாமல், ஏதோ கண்டிக்கிறோம் என்ற அளவிற்காவது அறிக்கை விட முன் வந்த மார்க்சிஸ்ட் தீர்மானம் ஓரளவிற்கு மனதுக்கு ஆறுதலாகவே உள்ளது.
ஆனால், மார்க்சிஸ்ட்களின் மனச்சாட்சிக்கு நிறைவானதாக இருக்குமா என்பது சந்தேகம்தான். நல்ல முடிவு தான், ஆனால் நழுவுகிறதே எங்கேயோ. ஏனெனில், இன்றைய தி.மு.க. ஆட்சி மீது அவர்கள் சொல்கிற குறைகள், கடந்த கால ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்ற குறைபாடுகள், முறைகேடுகளுடன் ஒப்பிடும்போது, முறையே அது கடுகளவு & இது மலையளவு என்றுதான் கூற முடியும்.
ராஜாவை பதவி விலகுமாறு செய்த பிறகும் ஜெயலலிதா அவரை கைது செய்ய வேண்டும், வழக்கு தொடர வேண்டும் என்றெல்லாம் சொல்லியிருக்கிறாரே?
எதிர்க்கட்சி என்றால் எதையாவது சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். ஒரு விரலை எதிரி முன்னால் காட்டும் போது மற்ற விரல்கள் அவர்களை நோக்கித்தான் இருக்கின்றன என்பதை மறந்து விடக் கூடாது. அ.தி.மு.க. தலைவி மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டு தீர்ப்பு கூறப்பட்ட பின்னரும் 4 இடங்களில் தேர்தலில் போட்டியிட்டு, அவைகள் செல்லாது என்று கூறப்பட்ட பின்னரும் & ஆளுநரை வலியுறுத்தி பதவிப் பிரமாணம் செய்துகொண்டு, அதுவும் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட வரலாற்றை மக்கள் மறந்திருப்பார்கள் என்று அவர் எண்ணுகிறார்.
கட்சிக் கட்டுப்பாட்டினை ஏற்று பதவி விலகிய ராசா, தன் மீது எந்தத் தவறும் இல்லை என்றும், எல்லாமே சட்டப்படி தான் நடந்துள்ளது என்பதை உரிய முறையில் நிரூபிப்பேன் என்றும் கூறியிருப்பதையும் மறந்து விடக் கூடாது.
இன்னும் சொல்லவேண்டுமேயானால், அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை முதல்வராக பதவிப் பொறுப்பில் ஜெயலலிதா இருந்தபோது குறைந்த விலைக்கு வாங்கியது பற்றிய வழக்கு உச்ச நீதிமன்றம் வரை நடந்தது. நீதிபதிகள் கூறும்போது, ‘பொதுத் துறைக்குச் சொந்தமான நிலங்கள் ஜெயலலிதா பங்குதாரராக உள்ள கம்பெனிகளுக்கு, அவர் முதல்வராக பதவியில் இருந்த காலத்தில் விற்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. டான்சி நிறுவனத்தின் விதிமுறைகளின்படி அதை விற்பனை செய்வதற்கு முன்பு அரசிடமிருந்து ஒப்புதல் பெற்றாக வேண்டும். அதுவரை விற்பனை முழுமை அடைந்ததாகாது. விற்பனை ஆவணங்களில் ஜெயலலிதா தன்னைச் சம்பந்தப்படுத்திக் கொள்ளாவிட்டாலும், அந்த அனுமதியினை அரசு இயந்திரம் உடனடியாக வழங்கியுள்ளது. நீதிமன்ற நடவடிக்கை காரணமாக ஏலத்திற்கு வருகின்ற சொத்துக்களை ஏலம் போடுகின்ற ஒரு சாதாரண அதிகாரியோ, கால்நடைகளை அடைத்து வைத்து அதனைப் பாதுகாக்கும் அதிகாரியோ, ரயில்வே சொத்துக்களைப் பராமரிக்கும் அதிகாரியோ அவர்களுடைய அதிகாரத்திலே உள்ள சொத்துக்களை விலைக்கு வாங்க முடியாது.
வழக்கு சம்பந்தப்பட்ட சொத்துக்களின் மதிப்பு குறித்து எங்களின் முடிவு எதுவாக இருந்த போதிலும், அதிலே ஜெயலலிதாவிற்கு லாபம் இருந்ததா இல்லையா என்பதைவிட, முதல்வரே அரசின் சொத்துக்களை வாங்க எத்தனித்துவிட்ட நிலையில், அதிகார வர்க்கம் அளவுக்கு மீறி அதிலே ஆர்வம் காட்டி இந்த விற்பனையை சுமூகமாக முதல்வர் ஜெயலலிதா விரும்பும் விலைக்கே முடித்திருக்கிறார்கள் என்பதை எங்களால் தெரிந்துகொள்ள முடிகிறது.
எந்த நிலையிலும், ஜெயலலிதாவின் இந்தச் செயல்கள் நடத்தை விதிகளின் உட்பொருளுக்கு விரோத மானதாகும். நியாயமாக பேச வேண்டுமென்றால், அரசின் சாதாரண அதிகாரிகளுக்காக ஒரு சட்டமும், முதல்வருக்காக ஒரு சட்டமும் இருக்க முடியுமா? இதுபோன்ற நிலைகளில், நன்னடத்தை விதி என்பது அருங்காட்சியகத்திலே வைக்கப்பட வேண்டிய வெறும் ஆடம்பர பொருள் மட்டும்தானா? அது கடைபிடிக்கப்பட வேண்டிய ஒன்றல்லவா.
இவைகள்தான் எங்களுடைய மனச்சாட்சியைத் துன்புறுத்துகிறது. முதல் குற்றவாளியான ஜெயலலிதா தான் வழக்கிலிருந்து தப்பிக்க, டான்சி நிலப் பத்திரத்திலே உள்ள, அவருடைய ஆடிட்டரும் அரசு அதிகாரிகளும் ஏற்றுக்கொண்ட அவருடைய கையெழுத்தையே இல்லை என்று மறுக்கக்கூடிய அளவிற்குச் சென்றிருக்கிறார்” இந்த அளவிற்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறப்பட்ட பிறகும் ஜெயலலிதா என்ன செய்தார் என்பதை மறந்துவிட்டு, தற்போது அறிக்கை விடுவதில் என்ன நியாயம் இருக்கிறது என்பதை நாட்டு மக்கள்தான் சிந்திக்க வேண்டும்.
ராஜா ராஜினாமா செய்த பிறகும், நாடாளுமன்றக் கூட்டுக்குழு வேண்டுமென்று எதிர்க் கட்சிகள் வலியுறுத்தியதால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதே?
ஸ்பெக்ட்ரம் விவகாரம், உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருப்பதால் வேறு யாரும் இறுதி முடிவெடுத்து விட முடியாது. மத்திய கணக்கு தணிக்கை தலைமை அதிகாரியின் அறிக்கையை பொது கணக்குக் குழு பரிசீலனை செய்யவுள்ளது. அதன் பிறகு அந்தக் குழு தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அதன் மீது விரிவான விவாதம் நடைபெறலாம். பொது கணக்குக் குழுவின் தலைவராக தற்போது பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க.வைச் சேர்ந்த முரளிமனோகர் ஜோஷிதான் இருந்து வருகிறார்.
நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என்று கோருவதின் மூலம் எதிர்க்கட்சியினருக்கு முரளி மனோகர் ஜோஷி மீது நம்பிக்கை இல்லையா? அல்லது நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் செய்ய வேண்டும் என்பதற்காகவே கையாளுகின்ற யுக்தியா? பொது கணக்குக் குழு என்பது நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை விட அதிகாரம் மிக்கதாகும். நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் தலைவராக ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் தான் இருப்பார். இந்த விவரங்களைத்தான் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சால், உள்துறை அமைச்சர் நண்பர் ப. சிதம்பரம் ஆகியோர் விளக்கியிருக்கிறார்கள்.
2011 தமிழகச் சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் தாங்கள் சென்னை அருகே கொளத்தூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக செய்தி வெளியாகி உள்ளதே?
கடந்த 3 பொதுத் தேர்தல்களில் தொடர்ந்து சென்னை&சேப்பாக்கம் தொகுதியில் நின்று வென்றவன் நான். 2011 தேர்தலில், எந்தத் தொகுதியில் நான் போட்டியிடப் போகிறேன் என்று பல்வேறு வகையான யூகங்களை பத்திரிகைகள் வெளியிடுகின்றன. அந்த யூகங்கள் அனைத்தும் உள்நோக்கம் கொண்டவை. கற்பனையானவை. எவ்வித அடிப்படையும் இல்லாதவை. பத்திரிகைச் சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அவரவர் யூகங்களை செய்திகளாக்குவதில் தீவிரம் காட்டுவது, ஜனநாயக வளர்ச்சிக்கு உகந்ததல்ல.
காங்கிரசுக்கு ஆதரவு என்று ஜெயலலிதா அறிவித்தது, ‘‘ராஜதந்திரம்’’ என்றும், அந்த அறிவிப்பு ‘‘பிரம்மாஸ்திரம்’’ போன்றதென்று செய்தி வெளியிடப்பட்டிருந்ததே?
ஜெயலலிதா வலிய வந்து அறிவித்ததை ஏற்க முடியாதென்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடமில்லை யென்றும், அம்மையார் அறிவித்த 24 மணி நேரத்திற்குள் காங்கிரஸ் கட்சி பதிலளித்து கதவை மூடிவிட்டது. ஜெயலலிதா பேசுவதற்கும், அறிவிப்பதற்கும் பின்னணிப் பொருள்தேடி அலைவதற்கும் அவற்றில், ஏதோ பெரிய பின்னணி இருப்பதை போன்ற, மிகைப்படுத்தப்பட்ட பிரமையை பொதுமக்கள் மனதில் ஏற்படுத்துவதற்கும், தமிழகத்தில் சிலபேர் இருக்கிறார்கள்.
ஜெயலலிதாவின் தற்போதைய அறிவிப்பு, எந்தவித முகாந்திரமும் இன்றி, தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும், குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற தீயநோக்கத்துடன் வலியவந்து செய்யப்பட்ட அறிவிப்பாகும். அந்த அறிவிப்புக்கு பொருளுமில்லை, பொருத்தமுமில்லை.
எனினும், அந்த அம்மையாரை தலையில் வைத்து ஆடிக் கொண்டிருப்போர், அது Òராஜதந்திர அறிவிப்புÓ என்றும்; Òபிரம்மாஸ்திரம்Ó என்றும் Òமோகனாஸ்திரத்தால்Ó மயக்கி, அதைப் படிப்பவர்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். நிச்சயம், இதற்குப் பிறகும் அ.தி.மு.க. தொண்டர்கள் கூட ஏமாற மாட்டார்கள்.
1999 நாடாளுமன்றத் தேர்தலில், கூட்டணி அமைத்து, போட்டியிட்டு பல அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த ராஜதந்திரமும் வெற்றி பெறவில்லை. தமிழகத்தில் திமுக கூட் டணியே வெற்றி பெற்றது.
2006 சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தலிலும், ஜெயலலிதா என்னென்னவோ சொல்லிப் பிரச்சாரம் செய்தார். அவர் ராஜதந்திரம் என்று நினைத்துக் கொண்டு சொன்ன எதுவும் எடுபடவில்லை. திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெற்றது.
2007ம் ஆண்டு தேசிய அளவில் 3வது அணி ஒன்றை அமைத்து, அதற்கு, தான் தலைவியாக வேண்டும் என்ற எண்ணத்தில் சாகசங்களை யெல்லாம் செய்து பார்த்தார். எல்லாம் தோல்வியிலேயே முடிந்தது. அப்போதெல்லாம் வெற்றி பெறாத அவரது ராஜதந்திரமும், பிரம்மாஸ்திரமும் வலியவந்து இப்போது அவர் செய்திருக்கும் அறிவிப்பாலா வெற்றி பெறப் போகின்றன? ‘‘பொய் நெல்லைக் குத்தியே, பொங்க நினைத்தவன், கை நெல்லை விட்டானம்மா’’ என்ற முடிவுதான், அவரது ராஜதந்திரத்திற்கும், பிரம்மாஸ்திரத்திற்கும் ஏற்படப் போகிறது.
கடல்கொண்ட பூம்புகார் நகரின் எழில்மிகு தோற்றத்தை புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூட ஓவிய விரிவுரையாளர் ராஜராஜன் ஓவியமாகத் தீட்டியுள்ளாரே?
அந்த ஓவியத்தை நானும் கண்டேன். ஓவியர் ராஜரா ஜன், அழகாகத் தீட்டியுள்ளார்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment