இலங்கை தமிழர்கள் கவுரவமாக வாழ நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு 24.11.2010 அன்று எழுதியுள்ள கடிதத்தில் கருணாநிதி கூறியிருப்பதாவது:
நீங்கள் இலங்கைக்கு செல்லவிருப்பதாக அறிகிறேன். இலங்கை தமிழர்கள் தொடர்பான பின்வரும் பிரச்னைகள் குறித்து உயர்மட்ட அளவில் எடுத்து செல்ல வேண் டும் என கேட்டு கொள்கிறேன்.
இந்திய வெளியுறவு செயலரின் இலங்கை பயணத்தின்போது 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள், அரசு முகாம்களில் தங்கியிருப்பதை பார்த்துள்ளார். தமிழக மக்களுக்கும் எனக்கும் இது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. இது முக்கிய பிரச்னையாகும். இந்தப் பிரச்னை குறித்து கடந்த காலங்களில் இலங்கை அரசுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்திய பிறகும், திருப் திகரமான முறையில் பிரச்னை இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.
இடம்பெயர்ந்த தமிழர்களை மறுகுடியமர்த்தல் மற்றும் மறுவாழ்வு அளித்தல் குறித்து இந்திய அரசு தீவிர முயற்சி எடுத்து பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அதன்பிறகும் இந்த விஷயத்தில் இலங்கை அரசு முழு அக்கறை செலுத்தாமல் இருக்கிறது. இலங்கை அரசு நடத்தி வரும் முகாம்களில் இருந்த சுமார் 3 லட்சம் தமிழர்களில் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இருப்பினும் அவர்கள் கவுரமான வாழ்க்கையை அங்கு தொடங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் சொல்ல முடியாத அவலங்களை சந்தித்து வருவதாகவும் அறிகிறேன். இடம்பெயர்ந்த தமிழர்கள் அனைவருக்கும் அமைதியான கவுரமான வாழ்க்கை கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
இடம்பெயர்ந்த தமிழர்களுக்காக 50 ஆயிரம் வீடுகளை கட்டிக் கொடுக்க இந்திய அரசு முன்வந்துள்ளது. இந்த திட்டத்தை குறித்த காலத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை தமிழர்கள் பிரச்னைக்கான அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு குறித்து நீண்டகாலமாக பேசப்பட்டு வருகிறது. இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் இருக்கிறது. எனவே, இலங்கை தமிழர்கள் நல்வாழ்வுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் மேற்கண்ட பிரச்னைகள் குறித்து உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment