கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, November 28, 2010

கல்வி செல்வத்தை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - முதல்வர் கருணாநிதி


‘ஏழை மக்களும் பசியாறி படிக்க தொடர்ந்து செய்வோம், தொடருவோம். கல்விச் செல்வத்தை மாணவர்கள் பாழாக்கிவிடக் கூடாது. பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று திருவள்ளுவர் பல்கலைக்கழக புதிய கட்டிட திறப்பு விழாவில் முதல்வர் கருணாநிதி பேசினார்.
அவர் பேசியதாவது:
வேலூர் அருகே திருவள்ளுவர் பல்கலைக்கழக புதிய கட்டிடத்தை நேற்று (27.11.2010) முதல்வர் கருணாநிதி திறந்துவைத்து பேசியதாவது:
இந்த விழாவுக்கு வருவதற்காக சென்னையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டும்கூட இங்கு வருவது வரை வழியெங்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொடுத்த வரவேற்பை கடந்து வருவதில் தாமதமாகிவிட்டது. அந்த கவலையை போக்கும் வகையில் இங்கேயும் மக்கள் வெள்ளம்போல திரண்டிருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது.
இங்கு பேசிய எம்எல்ஏ ஞானசேகரன் பல்கலைக்கழகத்தில் தற்காலிகமாக பணிபுரிந்து வரும் 84 ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கைவிடுத்தார்.
நிரந்தரமாக்க ஒரு முறை உள்ளது. அதன்படி வெகு விரைவில் 84 பேருக்கும் ஒரு தேர்வு வைத்து தேர்ச்சி பெறுபவர்கள் நிரந்தர ஊழியர்களாக்கப்படுவார்கள். பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களுக்கான விடுதியும் அமைக்கப்படும். வேலூரில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் முதல் இப்போதும் ஆபீசர்ஸ் லைன் என்று இருப்பதை அண்ணா சாலை எனவும், லாங்கு பஜார் என்பதை கிருபானந்தவாரியார் சாலை எனவும் பெயர் மாற்றம் செய்ய வேலூர் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி முன்மொழிவு அனுப்பப்பட்டு உள்ளது.
அதன்படி அண்ணா சாலை எனவும் கிருபானந்தவாரியார் சாலை எனவும் மாற்றி இங்கேயே ஆணை பிறப்பிக்கிறேன்.
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் மக்கள் குறைதீர்வு அலுவலக கட்டிடத்துக்கு காயிதேமில்லத் பெயர் சூட்டப்படுகிறது.
இங்குள்ள கூட்டம் தமிழகமே திரும்பி பார்க்கும் வகையில், டிவிகளில் பார்த்து வியக்கும் வகையில் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லூரிகளில் இருந்து ஆயிரக்கணக்கில் திரண்டு வந்துள்ளார்கள். இந்த ஆட்சியில் கல்வி எந்த அளவு உயர்வு பெற்றுள்ளது, வரவேற்பு பெற்றுள்ளது என்பதை அறிவேன்.
காமராஜர் முதல்வராக இருந்தபோது மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனைப் பார்த்து, ‘ஏன் பள்ளிக்கு செல்லவில்லை?’ என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவன், ‘படிக்கலாம், ஆனால் சாப்பாட்டுக்கு வழியில்லையே’ என்றான்.
அதைக் கேட்ட காமராஜர் சாப்பாடு போட்டால் படிக்க வைக்கலாம் என நினைத்து அதிகாரிகளை அழைத்து, ‘அந்த திட்டத்தை ஏன் செயல்படுத்தக் கூடாது’? என்று கேட்டார்.
அதற்கு சுந்தரவடிவேலு என்ற அந்த அதிகாரியும் செயல்படுத்தலாம் என்று கூறி அதற்கான திட்டத்தை தயாரித்து காமராஜரிடம் கொடுத்தார்.
அதுதான் ஏழை மாணவர்களுக்கான மதிய உணவு திட்டம். பசிபோக்கினால் படிப்பு வரும் என்று அந்த திட்டத்தை கொண்டு வந்து, அதன் பிறகு முதல்வராக வந்த எம்ஜிஆர் அதை சத்துணவு திட்டமாக மாற்றினார்.
அவரது மறைவுக்கு பிறகு அண்ணாவால் உருவாக்கப்பட்ட ஆட்சி வந்ததும், சத்துணவு திட்டத்தை அதிக சத்துணவுள்ளதாக மாற்ற ஒரு முட்டை வழங்கப்பட்டது.
ஒரு முட்டைகூட கிடைக்காத ஏழை பிள்ளைகள் பசிக்கு மட்டுமல்ல, சத்தோடு அறிவுக்கு தேவையான உணவும் வழங்கப்பட்டது. இப்போது வாரத்துக்கு ஒவ்வொரு நாளும் ஒரு முட்டை போடுவது என்று மாற்றப்பட்டுள்ளது.
கிராம மக்கள் மட்டுமின்றி பட்டினத்து ஏழை மாணவர்களும் பசியாறி அறிவாற்றலோடு படிக்க தொடர்ந்து செய்வோம், தொடருவோம், தொடர்ந்து செய்வோம். இதை புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொண்டால் சரி.
தமிழில் படிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் மசோதா கடந்த சட்டமன்றத் தொடரில் கொண்டு வரப்பட்டு, இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
100 பேரில் 20 பேர் தமிழில் படித்திருந்தால் அவர்களுக்கு வேலைக்கு உத்தரவாதம் உண்டு என்று கொண்டு வந்துள்ளோம்.
கிராமங்களை இணைக்கிற அளவுக்கு இன்றைக்கு பல்கலைக்கழகங்கள் உருவாகி இருப்பதை எண்ணிப்பார்க்கவே மகிழ்ச்சி அளிக்கிறது. அதுவும் இந்த ஆட்சியிலே ஏற்பட்டது என்பது பெருமை.
கல்விக்காக ஆண்டுதோறும் தமிழகத்தில் ஒதுக்கும் நிதியை மாணவர்கள் ஒழுங்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆன்றோர், சான்றோர், பெரியவர்கள், பெற்றோர் வழங்கிய கல்விச் செல்வத்தை மாணவர்கள் பாழாக்கிவிடக்கூடாது, பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதனால்தான் திருவள்ளுவர் கல்வியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கூறி உள்ளார். ‘கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக’ என்றார். படியுங்கள், படித்ததை நினைவில் கொள்ளுங்கள், படித்தபடி நடக்க வேண்டும் என்பது பொருள். படித்தவர் நமது மொழியை, தமிழை வளர்க்க, தன் நிலையை உயர்த்த, சமுதாயத்தை உயர்த்த எந்த போராட்டத்திலும் இறங்கலாம்.
நல்லவைகளுக்காக உறுதியாக இருப்போம். நல்லவற்றை செய்வோம். இதை மாணவ செல்வங்கள் மனதில் அழுத்தமாக பதியச்செய்ய வைத்து அதன்படி நடக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment