கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, November 15, 2010

முல்லை பெரியாறு அணை பராமரிப்பு பணியை திரித்து கூறுவதா? - முதல்வர் கருணாநிதி


முல்லைப் பெரியாறு அணையில் நடக்கும் வழக்கமான பராமரிப்பு பணியை திரித்து கூறுவதா என்று கேரள அரசுக்கு முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதி 13.11.2010 அன்று வெளியிட்ட அறிக்கை:
முல்லைப் பெரியாறு பிரச்னையில் ஒவ்வொரு கட்டத்திலும் தமிழக அரசின் சார்பில் உரிய விளக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், விளக்கங்களை புரிந்தோ புரியாமலோ அல்லது வேண்டுமென்றோ, கேரள தரப்பில் திசை திருப்பும் நோக்கத்தோடு, அதிர்ச்சி அளிக்கக்கூடிய பதில்களை வெளியிடுவது வழக்கமாகி விட்டது. கேரள பதில்களை, தமிழகத்திலே உள்ள சில நாளேடுகள் உள்நோக்கத்தோடு, மிகைப்படுத்தியும், திரித்தும் வெளியிடுகின்றன.
தமிழக அரசு உச்சநீதி மன்றத்தின் உத்தரவுப்படி தொடர்ந்து அணை பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகளைதான், கேரள மாநிலத் தரப்பினர் திரித்து, வசதிக்கேற்றவாறு கதை கட்டி விடுகின்றனர். பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வது குறித்து, கேரள அரசின் ஆட்சேபனை எனது கவனத்திற்கு வந்தவுடனேயே, நான் 7&11&2010ல் ''அணையில் வழக்கமான பராமரிப்புப் பணியைத் தமிழக அரசு மேற்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றமே தெளிவுபடுத்தியுள்ளது. அவ்வப்போது சிறுசிறு பராமரிப்புப் பணிகளைத் தமிழக அரசு மேற்கொள்வது வழக்கம். இது ஒன்றும் புதிதல்ல. புதிது போலவும் ஏதோ அடிப்படை இருப்பதை போலவும் கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் விமர்சித்திருப்பது தவறு” என்று பதிலளித்தேன்.
எனினும், மேலும் தெளிவுபெற வேண்டும் என்பதற்காக, அது தொடர்பான சில செய்திகளை வெளியிடுவது இன்றைய நிலையில் பொருத்தமாக இருக்கும்.
முல்லைப் பெரியாறு பிரதான அணை மற்றும் சிற்றணை ஆகிய இரண்டு அணைகளின் உறுதித் தன்மை குறித்து உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் 2000ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு வல்லுநர் குழுவை அமைத்தது. அக்குழு அணையின் பாதுகாப்புப் பற்றி அனைத்துக் கோணங்களிலும் ஆய்வு நடத்தி, நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்தலாம் என்று பரிந்துரை செய்தது
இதற்கிடையே, கேரள அரசு பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிலையம் வாயிலாக அணை நில அதிர்வுகளைத் தாங்கக்கூடியதாக இல்லை என்று ஓர் அறிக்கையை 2001ல் அளித்தது. அந்த அறிக்கையில் கொய்னா மற்றும் உத்தரகாசி ஆகிய இடங்களில் ஏற்பட்ட நில அதிர்வுகளை எடுத்துக் கணக்கிட்டிருந்தனர். அந்த கணக்கீடுகள் முல்லைப் பெரியாறு அணைக்குப் பொருந்தாது என்று மத்திய நீர்வளக் குழுமம் நிராகரித்தது. இது குறித்து ஒரு பிரமாண அறிக்கையை மத்திய நீர்வளக் குழுமம் உச்ச நீதிமன்றத்தில் 2004ல் தாக்கல் செய்தது.
இதற்கு முன்பும் இம்மாதிரி சில நில அதிர்வுகள் ஏற்பட்டதாகக் கேரளா கூறியதின் பேரில், அப்போதைய மத்திய நீர்வளக் குழுமம் 7&2&2001ல் ஒரு நிபுணரை அனுப்பி, அணையைச் சோதித்தது. அவர் அணைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனத் தெரிவித்தார். இதுபோல 2004ல் நில அதிர்வுகள் அணைப் பகுதியில் ஏற்பட்டுள்ளது எனக் கேரள அரசு கூறியதின் பேரில், மத்திய நீர்வளக் குழுமத்தின் தலைமைப் பொறியாளர் டாக்டர் ஜீ. ஆண்டணி பாலன், அணையை 9&7&2004ல் பார்வையிட்டு அணையில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று அறிக்கை கொடுத்தார். அவற்றை எல்லாம் கருத்தில் கொண்டுதான் உச்ச நீதிமன்றம் 27&2&2006ல் அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்தலாம் என ஆணையிட்டது.
தீர்ப்பு வந்த பிறகு, மீண்டும் கேரள அரசு நில அதிர்வு ஏற்பட்டால் அணை பாதுகாப்பாக இருக்காது என 30&3&2007ல் உச்ச நீதிமன்றத்தில், ஒப்புதல் வாக்குமூலத்தில் தெரிவித்தது. அதற்காக தமிழக அரசு, அணையின் பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்ய ஒரு பிரத்யேகமான வல்லுநர் குழுவை 4 அனுபவமிக்க பொறியாளர்களை உறுப்பினர்களாக கொண்டு 2007ல் அமைத்து ஆய்வு செய்தது.
இந்த வல்லுநர் குழு, பிரதான அணை மற்றும் சிறிய அணைகளின் பாதுகாப்பு பற்றி தேவையான எல்லா ஆய்வுகளையும் இந்திய தர நிர்ணயம் வகுத்துள்ள முறைகள்படி செய்து, நில அதிர்வுகளையும் கணக்கில் கொண்டு அணை உறுதியாக உள்ளது என அறிக்கை அளித்தது. அந்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஓர் ஆவணம் ஆகும்.
இவ்வாறு, கேரள அரசு பலமுறை எழுப்பிய நில அதிர்வுகள் பற்றிய கருத்துகள் எல்லாம் நிராகரிக்கப்பட்டதால், மீண்டும் 2008ல் ரூர்க்கியில் உள்ள ஐ.ஐ.டி. நிறுவனத்திடம் நில அதிர்வு ஏற்பட்டால் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யக் கோரியது. அந்நிறுவனம் ஆய்வு செய்து அளித்த அறிக்கையைக் கேரள அரசு, ஓர் ஆவணமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அதில் அணைப் பகுதியில் நில அதிர்வு இந்திய தர நிர்ணயம் குறிப்பிட்டுள்ளதைவிட மிக அதிகமாக இருக்கும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், அந்த அறிக்கையை தயாரித்த டாக்டர் டி.கே. பால் மற்றும் டாக்டர் எம்.கே.சர்மா இருவரும் தம் ஆய்வு முடிவை நிரூபிக்கும் வகையில் விசாரணைக்கு வந்து கலந்து கொள்ளவில்லை.
அவர்களின் அறிக்கையை உறுதி ஆவணமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கேரள அரசின் பிரதிநிதி எம்.கே.பரமேசுவரன் நாயர், அந்த அறிக்கையைப் பற்றிய குறுக்கு விசாரணையில் சரியான விவரங்களையும் தகவல்களையும் தெரிவிக்கவில்லை. எனவே, அந்த அறிக்கை ஒரு நிரூபிக்கப்படாத ஆவணமாகும்.
அதன்பிறகு, 2009ல் சாட்சிகளின் குறுக்கு விசாரணை முடிந்து இறுதி வாதங்கள் நடந்து வரும் தருணத்தில் டாக்டர் டி.கே.பால் இரண்டாவது அறிக்கையைத் தயாரித்துக் கேரள அரசுக்குக் கொடுத்துள்ளார். அந்த அறிக்கையை ஓர் ஆவணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் கேட்ட போது, அதனை 4&11&2009ல் நிராகரித்து ஆணையிட்டது.
உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாத டி.கே.பால் அறிக்கையில், அணையின் நீர் மட்டம் 136 அடியாக இருக்கும்போதும் நில அதிர்வுகள் ஏற்பட்டால், அணை பாதுகாப்பாக இருக்காது எனத் தெரிவிக்கப் ட்டுள்ளது. ஆனால், அவருடைய அறிக்கையை மீண்டும் தற்போது உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட அதிகாரமுள்ள குழுவிடம் ஓர் ஆவணமாகக் கேரள அரசு அளித்துள்ளது.
இந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ளக் கூடாதென தமிழக அரசு கோரியுள்ளது. இதுபற்றி எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லையென 15&10&2010ல் அந்த குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் டாக்டர் டி.கே. பாலின் அறிக்கை, ஒரு நிரூபிக்கப்படாத அறிக்கை என்பது உறுதியாகிறது. மேலும், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அந்த அறிக்கையில் உள்ள பல குறைபாடுகளை இங்கே சுட்டிக்காட்ட முடியாது.
பலப்படுத்தப்பட்ட பிரதான அணை, மற்றும் சிற்றணைகளிலிருந்து மாதிரிகள் எடுத்து சோதித்து, இந்திய தர நிர்ணயம் வகுத்துள்ள விதிமுறைகளின்படி, நீரைத் தேக்கவும், நில அதிர்வுகள் ஏற்பட்டால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் 2001ல் வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.
அணை கட்டுமானப் பொருட்களின் பளு தாங்கும் தன்மையைச் சோதித்த பின்புதான் வல்லுநர் குழு அறிக்கையைத் தந்துள்ளது. ஆனால், அணை கட்டுமானப் பொருட்களின் பளு தாங்கும் தன்மையைப் பற்றி ஆதாரமற்ற செய்திகள் பத்திரிகையில் வந்துள்ளன.
மேலும், இந்திய தர நிர்ணயம், 2003ல் நிர்ணயித்துள்ள நில அதிர்வு வரைபடத்தின்படி பெரியார் அணை மூன்றாவது பகுதியில் உள்ளது. அதன்படி, இப்பகுதியில் மிக அதிகமாக ஏற்படக்கூடிய நில அதிர்வுகள் (ரிக்டர் அளவுகோல் 6 வரை) கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
அணையின் நீர்மட்டம் 142 அடியாக இருக்கும் போது நில அதிர்வு ஏற்பட்டாலும், அணைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் வல்லுநர் குழு தெரிவித்துள்ளது. அதனை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் அன்றாடப் பராமரிப்புப் பணிகளை நிறைவேற்றுவதற்குக் கூட, கேரள அரசின் அலுவலர்கள் இடையூறு செய்து வந்துள்ளனர். ஓருமுறை அணையின் நீர்மட்ட அளவுகோல் பலகையை சரி செய்தபோது கூட மறுப்பு தெரிவித்து, அதை எடுத்து விட்டனர். அது மீண்டும் சரி செய்யப்பட்டது. இவற்றை எல்லாம் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் 2009 நவம்பரில் தெரிவித்தது.
உச்சநீதிமன்றம் 10&11&2009ல் அளித்த ஆணையில் மராமத்து பணிகள் மற்றும் சிறு பணிகள் செய்வதற்கு எந்த தடையும் இல்லை எனக் கூறியுள்ளது. ஆனால், இம்மாதிரி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இம்மாதிரி பணிகள் இப்பொழுதுதான் நடைபெறுகின்றன எனப் பத்திரிகைகளில் வந்துள்ள செய்திகள் சரியானவை அல்ல.
மண் அணை மற்றும் வழிந்தோடிகளில் புதர்களை அகற்றுவது, அணைக் கதவுகள் மற்றும் அணைப் பகுதிகளில் வர்ணம் பூசுதல், சேதமடைந்த பகுதிகளைச் சரிசெய்தல் போன்ற பணிகள் எல்லா அணைகளிலும் செய்வது போல் இந்த அணையிலும் அவ்வப்போது செய்யப்படும் பணிகளாகும். எனவே, அணையில் செய்யப்படும் பணிகள் அனைத்தும் மராமத்துப் பணிகளே. ஏதோ மூடி மறைத்துச் செய்யப்படும் பணிகள் என்று கூறுவது தவறானதாகும்.
மேலும் அணையினைச் செயலிழக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகப் பத்திரிகையில் கொடுக்கப்பட்டுள்ள காரணங்கள் யாவும் சரியானவை அல்ல. ஓர் அணை பழமையானதாக இருந்தாலும், நன்கு ஆய்வு செய்து அணை செறிவூட்டப்பட்டாலோ அல்லது வலுப்படுத்தப்பட்டாலோ அதன் ஆயுட்காலம் மீண்டும் புது அணைபோல் இருக்கும்.
அணையின் வடிநிலம் அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால், நீர்ப் பரப்புப் பகுதியில் மண் படிதல் மிகமிகக் குறைவாக உள்ளது. மேலும், இந்த நீர்த்தேக்கத்தில் உபயோகப்படுத்த முடியாத நீர்மட்ட அளவு 104 அடியாகும். ஆகையால், மண்படிதல் இந்த நீர்தேக்கத்தைப் பொறுத்தவரையில் ஒரு பொருட்டாகாது. எனவே, அணையைச் செயலிழக்கச் செய்ய இதை ஒரு காரணமாகக் காட்ட முடியாது.
2003ல் மத்திய சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு அணையின் நீர்மட்டத்தை முழு கொள்ளளவு உயரமான 152 அடிக்கு நீரை உயர்த்தினாலும் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் வராது. வன விலங்குகளுக்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இதனை உச்ச நீதிமன்றமும் அதன் 27&2&2006ல் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டு ஆணையிட்டுள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, உச்சநீதிமன்றம் ஏற்கனவே ஏற்றுக் கொண்ட கருத்துகளுக்கு மாறுபட்ட கருத்துகளைப் பத்திரிகை வாயிலாக கேரள அரசின் சார்பில் தெரிவிப்பதும்; தமிழகத்திலே உள்ள சில ஏடுகள் மட்டும், கேரள அரசின் கருத்துகளை பெரிதுபடுத்தி வெளியிடுவதும் நீதிக்கும், நியாயத்திற்கும் நல்லதல்ல. தமிழகத்தின் பொதுநலனை பாதிக்கும் தமிழகத் திற்கு எதிரான செய்திகளை, பத்திரிகையில் அச்சியற்றி தமிழகத்திலேயே அவற்றை விற்பனை செய்து, தொழில் நடத்தும் ஒருசில பத்திரிகைகளின் முகத்திரையை அகற்றி தமிழக மக்கள், அவற்றை முழுமையாகப் புரிந்து கொள்ளும் காலம் வெகுதொலைவில் இல்லை.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment