அமைச்சர் ஆ.ராசா விவகாரத்தில் அதிமுக, பாஜக போன்ற கட்சிகளின் தலித் விரோதப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது என, அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவவன் கூறியுள்ளார்.
இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சர் ஆ. ராசாவை பதவி விலக வலியுறுத்தி நாடாளுமன்ற இரு அவைகளிலும் பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடந்த வாரம் முழுவதும் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தி இரு அவைகளையும் இயங்க விடாமல் முடக்கிப்போட்டனர். தொடர்ந்து நாடாளுமன்ற அவைகளை இயங்க அனுமதிப்பார்களா என்றும் நம்ப முடியவில்லை. 2ஜி அலைக்கற்றைகள் ஒதுக்கீடு விவகாரத்தில் மிகப் பெருமளவில் ஊழல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டி அவரைப் பதவியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று இந்தப் பிரச்சனையை தொடர்ந்து பூதாகரப்படுத்தி வருகின்றனர்.
இந்தியத் தலைமைக் கணக்காயர் தமது அறிக்கையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்த நடைமுறையினால் அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தோராயமான ஒரு மதிப்பீட்டைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். அமைச்சரின் முடிவால் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பைத்தான் சுட்டிக்காட்டியிருக்கிறாரே தவிர, அமைச்சர் ஊழலில் ஈடுபட்டிருக்கிறார் என்று சுட்டிக்காட்டவில்லை. அதாவது, அமைச்சரின் முடிவு அரசின் வருமானத்தில் எத்தகைய இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று இந்தியத் தலைமைக் கணக்காயர் குறிப்பிடுகிறபோது கடந்த காலத்தில் இதே துறையின் அமைச்சர்களாக இருந்த பிரமோத் மகாஜன், அருண்சோரி போன்றவர்களால் ஏற்பட்ட வருவாய் இழப்பையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதாவது தற்போதைய அமைச்சர் மேற்கொண்ட முடிவால் ஏற்பட்டிருக்கிற இழப்பைப் போல இதற்கு முன்பு இருந்த அமைச்சர்கள் எடுத்த முடிவுகளாலும் அரசுக்கு சுமார் 35,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.
முந்தைய அமைச்சர்கள் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் எத்தகைய அணுகுமுறைகளைக் கையாண்டு முடிவெடுத்தார்களோ அவற்றையே பின்பற்றியிருக்கிற இன்றைய அமைச்சர் ஆ. ராசாவை மட்டுமே தனிமைப்படுத்தி அவர் பல லட்சம் கோடி ஊழல் செய்துவிட்டதாக அபாண்டமான குற்றச்சாட்டை வாரி இறைக்கின்றனர். முந்தைய அமைச்சர்கள் பிரமோத் மகாஜன், அருண் சோரி போன்றவர்களின் காலத்தில் ஏற்பட்ட இழப்பைப் பற்றி வாய் திறக்காதவர்கள், குற்றம்சாட்டி விமர்சிக்காதவர்கள், அவர்கள் மீது ஊழல் முத்திரை குத்த முன்வராதவர்கள் இன்று திடீரென நாட்டு நலன் மீது அக்கறை கொண்டிருப்பவர்கள் போல "ஊழல் ஊழல்' என்று கூச்சலிடுகிறார்கள். இது காங்கிரஸ் ஆட்சிக்குத் தருகிற நெருக்கடி என்பதைவிட, தி.மு.க. தலைமைக்குத் தருகிற நெருக்கடி என்பதையும்விட, அமைச்சர் ராசா ஒரு தலித் சமூகத்தைச் சார்ந்தவர் என்கிற ஒரே காரணத்தினால்தான், சாதியவாத சூதுமதிச் சூழ்ச்சியாளர்கள் இவ்வாறு வாய் கிழியக் கூச்சலிடுகின்றனர்.
இந்தியாவின் மிக உயர்ந்த அதிகாரம் வாய்ந்த ஒரு வலிமையான துறையில் தலித் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் திறம்படச் செயலாற்றுவதைச் சகித்துக்கொள்ள முடியாதவர்கள், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும்போதே, "பதவி விலகு!', "பதவியிலிருந்து விலக்கு!' என்று ஆவேசமாய்க் கூச்சலிடுகின்றனர். இதில் இந்த உள்நோக்கத்தைத் தவிர வேறு காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.
நேர்மைத் திறம் உள்ளவர்கள் பிரமோத் மகாஜன் மற்றும் அருண்சோரி காலத்திலிருந்து அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான விவகாரங்கள் அனைத்தையும் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். ஆனால், இந்தியத் தலைமைக் கணக்காயர் சொன்னவற்றில் முந்தைய அமைச்சர்கள் தொடர்பான தகவல்கள் அனைத்தையும் மூடி மறைத்துவிட்டு, தற்போதைய அமைச்சர் ராசா அவர்களை மட்டும் தனிமைப்படுத்தி அவதூறு
இந்நிலையில் காங்கிரசோடு எப்படியாவது கூட்டுச் சேர்ந்தே தீரவேண்டும் என்கிற பதைப்பில் அண்மையில் அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்கள் அமைச்சர் ராசாவை அமைச்சரவையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதற்காக காங்கிரசுக்கு வலிய வந்து உதவப்போவதாகக் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க.வை வெளியேற்ற வேண்டும் என்பதுடன் ராசாவை பதவியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பது அவருடைய தலித் விரோத மனநிலையை வெளிப்படுத்தியிருக்கிறது. அதிமுகவும், பாஜகவும் வேறு வேறல்ல என்பதை தனது அறிக்கையின் மூலம் செல்வி ஜெயலலிதா உறுதிப்படுத்தியிருக்கிறார். அதிமுக, பாஜக போன்ற கட்சிகளின் தலித் விரோதப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment