சட்டப் பேரவையில் 11.11.2010 அன்று நடந்த விவாதத்தில் மகேந்திரன் மார்க்சிஸ்ட்) பேசியதாவது:
அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கும் ஆன் லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். சமீபத்தில் டெல்லியில் நடந்த கூட்டத்தில் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். அதற்காக அவருக்கு நன்றி.
சமீபத்தில், பாக்ஸ்கான் நிறுவனத்தை கண்டித்து, சிஐடியு பொதுச் செயலாளர் சவுந்தரராஜன் தலைமையில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவரை கைது செய்து கைவிலங்கு மாட்டி வேலூர் சிறைக்கு அழைத்து சென்றார்கள். இது கண்டிக்கத்தக்கது.
அமைச்சர் தா.மோ.அன்பரசன்:
கைவிலங்கு போடவில்லை. இது தவறான தகவல்.
முதல்வர் கருணாநிதி:
உறுப்பினர் தொழிற்சங்கத்திற்காக வாதாடுவது, தொழிலாளர்களுக்காக பரிந்து பேசுவது இவற்றில் எனக்கு எந்தவிதமான கருத்து மாறுபாடும் இல்லை. தொழிலாளர்களுடைய வாழ்வுதான், நாட்டின் நல்வாழ்வு என்பதை எங்களுக்கெல்லாம் உணர்த்தியவர் எங்கள் தலைவர் அண்ணா. ஆகவே, தொழிலாளர்கள் பற்றி புதிதாக எங்களுக்கு யாரும் வகுப்பு நடத்த வேண்டிய அவசியமில்லை.
ஆனால் இந்த போராட்டத்தில் கைவிலங்கிட்டு அழைத்து சென்றதாகச் சொல்லப்பட்ட செய்தியை கேள்விப்பட்டதும், நானே பதைத்துப் போய் அதைப்பற்றி விசாரித்த போது, அப்படி நிச்சயமாக அந்தத் தலைவருக்கு கைவிலங்கு போடப்படவில்லை என்பதை என்னிடத்திலே நிரூபித்திருக்கிறார்கள்.
தொழிற்சங்க தலைவர்கள் என்னை சந்தித்தபோது, நானும் அதைப்பற்றி அவர்களிடத்தில் விளக்கியிருக்கிறேன். அவர்களும் அதை மறுத்துப் பேசாமல் ஒப்புக் கொண்டனர்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்.
No comments:
Post a Comment