தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் நேற்று (26.11.2010) நடந்தது. கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
"தூத்துக்குடி என்பது தி.மு.க. கோட்டைகளில் ஒன்று. து£த்துக்குடியில் எனக்கு ஒரு தனி கவனம் இருப்பதற்கு முக்கிய காரணமே, தி.மு.கவை 1949ம் ஆண்டு சென்னை ராபின்சன் பூங்காவிலே அண்ணா தொடங்கியபோது, அதையொட்டி தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு சென்று தி.மு.க.வின் இரு வண்ணக் கொடியை ஏற்றி வைப்பதென்றும் தி.மு.க. தொடங்கியதற்கான காரணத்தை ஆங்காங்கு விளக்க வேண்டுமென்றும் அறிவித்து, முதன் முதலாக என்னால் கொடி யேற்றப்பட்ட இடம், தமிழகத்திலே தூத்துக்குடி.
அதனால் தான் அப்படி ஏற்றி வைக்கப்பட்ட அந்தக் கொடி ஒரு அங்குலம் தாழ்ந்தால் கூட என்னால் அந்த வேதனையை தாங்கிக் கொள்ள முடியாது. எனவே தான் தூத்துக்குடியைப் பற்றி நான் சிறப்பான கவனம் செலுத்தி வருகிறேன். அங்கே ஏற்படுகிற மனமாச்சரியங்கள், புகைச்சல்கள், பூசல்கள் இவைகளுக்கு இடம் தராமல், கட்சியை அங்கே எப்படி அமைதியாக, விறுவிறுப்பாக, சுறுசுறுப்பாக நடத்திச் செல்வது என்பதைப் பற்றி சிந்தித்துச் செயல்படுத்த நடைபெறுகிற இந்தக் கூட்டம் மிக முக்கியத்துவம் பெறுகிறது. இங்கே நிறைவாக நான் பேசப் போவதாக ஸ்டாலின் கூறினார். என் பேச்சு எப்போது நிறைவானதாக இருக்க முடியும் என்றால், இங்கு எடுக்கிற நடவடிக்கைகள் ஏதோ காற்றிலே எழுதப்பட்ட கடிதங்களைப் போல, நீரின் மீது எழுதப்பட்ட எழுத்துக்களைப் போல ஆகி விடாமல், அவைகள் எல்லாம் வரவிருக்கிற சட்டப் பேரவைத் தேர்தலில், நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலித்தால் தான் மன நிறைவு ஏற்பட முடியும்.
நான் பல மாவட்ட நிர்வாகிகள் கூட்டங்களில் பேசியதைப் போல, தி.மு.க. தேர்தலுக்காக தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல. இந்த இயக்கம் திராவிட இன மேன்மைக்காக, திராவிடர்களின் சுயமரியாதை உணர்வைப் பாதுகாப்பதற்காக, திராவிட இயக்கத்தின் தன்மானக் கொள்கைகளை பரவச் செய்வதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம். அதனால் தான் அரசியல் பக்கம் அடியெடுத்து வைக்காமல் சமுதாய அளவில் நம்மிடம் கட்டுப்பாடு இருந்தால் போதும் என்று பெரியார் செயல்பட்டார். அதையேற்றுக் கொண்டு அண்ணாவை பின்பற்றி நாங்களும் சமுதாயம் வளர்ச்சி பெற இந்தக் கருத்துக்களையெல்லாம் மைதானங்களிலே பேசினால் மட்டும் போதாது, சட்டமன்றங் களில், நாடாளுமன்றங்களில் பேசினால்தான் பயன் என்ற வகையில், தேர்தலில் ஈடுபடத் தொடங்கினோம்.
ஆட்சியைப் பிடிக்கிறோமோ, இல்லையோ, சமுதாயப் பணிகளை நிறைவேற்ற ஆட்சியில் இருந்து தான் தீர வேண்டுமென்ற நிலை. இதை ஏன் சொல்கிறேன் என்றால், 1957ல் முதன்முதலாக நான் குளித்தலை தொகுதியிலே நின்று சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அவையிலே தரப்பட்ட ஒரு கொள்கை குறிப்பில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பட்டியல் ஒன்று வைக்கப்பட் டிருந்தது. அந்தப் பட்டியலில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இசை வேளாளர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நான் பேசும்போது அப்போது அவையிலே காமராஜர், கக்கன் உட்பட அனைவரும் இருந்தார்கள். அரசின் இந்தக் குறிப்பிலே இசை வேளாளர் என்று ‘ர்’ விகுதி போடப்பட்டுள்ளது. ஆனால் மிகப் பெரிய சமுதாயங்களில் ஒன்றான நாடார் மற்றும் சாணார் சமுதாயம் பற்றி சாணான் என்று ‘ன்’ விகுதி போட்டு, அச்சடிக்கப்பட்டுள்ளதே, இது என்ன நியாயம் என்று கேட்டேன்.
முதலமைச்சர் காமராஜர், அமைச்சர் கக்கனை திரும்பிப் பார்த்து கேட்டார். உடனே கக்கன் எழுந்து, அது தவறு தான், அந்தத் தவறுக்காக வருந்துகிறேன், அந்தத் தவறு நாளைக்கே சரி செய்யப்படும் என்று சொன்னார். நான் அமர்ந்திருந்த காரணத்தால்தான் அன்றைக்கு சாணான் என்ற பெயர் அந்தப் பட்டியலிலே நாடார் அல்லது சாணார் என்று மாற்றக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.
சுயமரியாதை இயக்கம், திராவிடர் இயக்கம், தி.மு.க. என்கிற பெயரால் வளர்ந்த இந்த இயக்கத்திற்கு தேர்தல் வெற்றி மாத்திரம் முக்கியம் அல்ல, தமிழ் இனத்தினுடைய இன உணர்வை வலுப்படுத்துவது தான் நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும். மக்களுக்காகப் பணியாற்றுவதும், திராவிடக் கொள்கைகளை வளர்ப்பதும், ஆட்சி மூலம் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதும் தான் முக்கியம்.
ஆட்சியின் மூலம் தான், தமிழ்நாட்டின் வலிமையை பெருக்குகிற வகையில், செம்மொழி என்கிற சிறப்பு எல்லா விதத்திலும், எல்லா வேலைகளிலும் தமிழன், தமிழ் மொழி ஏதுவாக இருக்கிற ஒரு இயக்கம், அவர்களை எல்லாம் இணைத்திருக்கிறது தி.மு.க. என்பதை மறந்து விடக் கூடாது. அப்படிப்பட்ட கட்சியில் உள்ள நாம் இந்த இயக்கத்தை வளர்ப்பதற்கு ஒவ்வொருவரிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு. திமுக ஒன்றே என்ற குறிக்கோளோடு நாம் பணியாற்றினால், ஒற்றுமையாக இருந்தால், ஒன்றுபட்டிருந்தால் நம்மை யாரும் அசைக்க முடியாது, வீழ்த்த முடியாது என்பதை நாம் நிரூபிக்க முடியும். நாங்கள், உங்களை அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்து மாவட்ட ரீதியாக கலந்து பேசிக் கொண்டிருக்கிறோம். து£த்துக்குடியில் நான் எதிர்பார்த்ததைப்போல சிறுசிறு சண்டைகள், குழுக்கள் இரண்டு மூன்று என்று இருந்தாலும், அவர்களுக்குள் தேவையற்ற பிரச்னைகள் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைபவர்கள் யாரும் இருக்க முடியாது.
மாவட்ட செயலாளர் பெரியசாமி பற்றி உங்களுக்குத் தெரியும். அவரைப் பற்றி அவருக்கும் தெரியும். அவர் கொள்கைப் பிடிப்பு உள்ளவர். கொள்கைகளை விலை கூறாதவர். அப்படிப்பட்டவர் தூத்துக்குடி பெரியசாமி என்பதை நான் நன்கறிவேன். அதே நேரத்தில் அவருக்குத் துணையாக, அனிதா ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் இந்த இயக்கத்திற்கு வந்திருக்கிறார்கள் என்றால், அது நாம் தேடிப் பெற்ற வெற்றி. பெரியசாமி நீண்ட காலமாக இந்த இயக்கத்தில் தொடர்ந்து இருப்பவராக இருக்கலாம். இடையில் வேறு சிலர் வந்து இணையலாம். ஓடிக் கொண்டிருக்கிற ஆற்று வெள்ளத்தில், கிளை நதிகளின் தண்ணீரும் வந்து சேரும் போது இரண்டும் கலந்து ஒரே தண்ணீராக ஆவது போல பெரியசாமியும் அனிதாவும் சேர்ந்து ஜீவநதியாக இந்த இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டும்.
அதைப் போலவே நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றிருக்கின்ற ஜெயதுரையும் அவரை வெற்றி பெறச் செய்ய மாவட்டச் செயலாளர்களும், தோழர்களும் எந்த அளவிற்குப் பாடுபட்டார்கள் என்பதை மனதிலே கொள்ள வேண்டும். தூத்துக்குடி பகுதி தென்பாண்டி கடல் முத்தே தீர்ந்ததோ உந்தன் வாழ்வு என்று என்னால் எழுதப்பட்ட கே.வி.கே.சாமி உலவிய இடம். அப்படிப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்ற சிறு சிறு குறைபாடுகள் இருப்பதைக் கூட என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. உங்களுடைய ஒற்றுமையை உறுதி செய்கிற வகையில், வெளிப்படுத்துகின்ற வகையில் நீங்கள் அனைவரும் உங்கள் கரங்களை உயர்த்திக் காட்ட வேண்டும். உயர்த்திய கரங்களை இங்கே காட்டியதோடு மட்டுமல்லாமல், அதை மனதிலே நிறுத்தி வெளியிலும் அந்தக் கரங்களை இணைத்துப் பிடித்து ஒற்றுமையோடு கட்சியை வளர்க்க வேண்டும்" என்றார். இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மைச்செயலாளர் ஆற்காடு வீராச்சாமி,துணைப்பொதுச்செயலாளர் துரைமுருகன், தூத்துக்குடி மாவட்ட-ஒன்றிய-நகர-பகுதிக்கழக நிர்வாகிகள்ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment