வாழ்வில் நான் அடையும் மகிழ்ச்சிக்கு யார் காரணம், எது காரணம்? என்பதை முதல் அமைச்சர் அவர்கள் மதுரையில் நடைபெற்ற துரை.தயாநிதி-அனுஷா மணவிழாவில் விளக்கினார். 18.11.2010 அன்று ஆற்றிய உரை வருமாறு:
திருமணத்தை நடத்தி வைத்து, முதலமைச்சர் கலைஞர் பேசியதாவது:-
இதயம் தொட்ட திருமண நிகழ்ச்சி
நேற்றும், இன்றும் முறையே நம்முடைய இல்லத்தில் நடைபெற்ற மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியிலும் இன்று (நேற்று) நடைபெறுகின்ற இதயம் தொட்ட திருமண நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வாழ்த்திய அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தை, இதயமார்ந்த நன்றியைத் தெரி வித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன். பிரணாப், ப.சிதம்பரம், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள், தளகர்த்தர்கள் அனைவரும் கலந்து கொண்டிருப்பதை வியந்து பாராட்டி, இது தொடர்ந்து நீடிக்க வேண்டும், நீடிக்கும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்திருக் கிறார்கள்.
தயாநிதி-அனுஷா
இந்தியாவின் வளத்தை, வலிமையைப் பெருக்கு வதற்கும், பெற்றுள்ள பெருமையை நிலைப்படுத்து வதற்கும், எப்படி நம்முடைய கூட்டணி பயன் படப்போகிறதோ, பயன்படும் என்று நம்புகி றோமோ, அதைப்போல என்னுடைய அருமை மகன் அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கும், அனுஷாவிற்கும் இடையே உருவாகியுள்ள, அவர்களாகவே ஏற்படுத்திக் கொண்ட இந்த வாழ்க்கைக் கூட்டணி அனைவருடைய வாழ்த்துக்களோடு நிலை பெற்று நீண்டகாலம் தொடரும் என்ற நம்பிக்கையோடு நானும் அவர்களை வாழ்த்துகின்றேன்.
நம் இலட்சியங்கள், கொள்கைகள் எந்தளவுக்கு பரவியிருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டும் மணவிழா. இந்த விழாவிலே பல்லாயிரக் கணக்கிலே குழுமியிருக்கின்ற இந்தக் கூட்டத்தை சித்திரைத் திருவிழாவிற்கும், மற்ற மாநாடு களுக்கும், அருமைத் தலைவர்கள் இங்கே உரையாற்றும்போது ஒப்பிட்டார்கள். நான் அவர்களுக்குக் கூறுவேன்.
தமிழர் தலைவர் கி.வீரமணி சுட்டிக்காட்டியதைப் போல்....
நம்முடைய தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சுட்டிக் காட்டியதைப்போல், ஒரு காலத்திலே தமிழர்களுடைய இல்லங்களில் நடைபெறுகின்ற திருமணங்கள் சுயமரியாதைத் திருமணங்கள் என்ற பெயரால் அல்லது சீர்திருத்தத் திருமணங்கள் என்ற பெயரால் நடைபெற்றபோது, 100 பேர், 200 பேர் வந்திருந்து வாழ்த்துவார்கள்.
இது அந்தக் காலத்திலே இந்தத் திராவிட இயக்கம் தோன்றிய காலத்தில், இந்தக் கொள் கைகள் பரந்து விரிந்து இந்த அளவிற்குச் செல்வாக்கு பெறாத அந்தக் காலத்தில் இருந்த கூட்டம். இன்றைக்கு மணவிழா மாநாட்டு விழா போன்று நடைபெறுவதற்குக் காரணம், நம்முடைய கொள்கைகள், இலட்சியங்கள் எந்த அளவிற்குப் பரவியிருக்கின்றன, இன்னும் பரவ இருக்கின்றன என்பதை எடுத்துக் காட்டுகின்ற அளவிலேதான், இந்த மணவிழா இன்றைக்கு மதுரையிலே நடைபெற்றிருக்கிறது.
அழகிரி-கரும்பு
என்னுடைய மகன் அழகிரியை `அஞ்சா நெஞ்சன் அழகிரி' என்று மதுரை வட்டாரத்தி லேயிருந்து, இன்றைக்கு மாநிலம் முழுவதும் அப்படி அழைக்கிறார்கள். அழகிரி என்றாலே சில பேருக்குப் புன்னகை, சில பேருக்கு ஆத்திரம், சில பேருக்கு வெறுப்பு. நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், அந்த மூன்றும் கலந்த நிலையிலே இருக்கின்ற அழகிரியை, நான் என்னைப் பொறுத்தவரையிலே அவரை ஒரு கரும்பாகத்தான் கருதுகிறேன். கரும்பை ஒரு பக்கத்திலே சுவைத்தால் இனிக்கும். இன்னும் சுவைக்கலாம் என்று மேலும் மேலும் சுவைக்க ஆரம்பித்து, ஒவ்வொரு கணுவாக வெட்டிக் கொண்டே போனால், நுனிக்கு வந்தால் நுனிக் கரும்பு தித்திக்காது, இனிக்காது. நுனிக்கரும்பு துவர்க்கும்.
எல்லா குணங்களையும் கொண்ட மகன்
அதைப்போல, அழகிரியை ஒரு கரும்பாகக் கருதி, இந்த வட்டாரத்திலே உள்ள திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களும், தமிழ்ப் பெருங்குடி மக்களும் எந்த அளவிற்குப் பயன் படுத்திக் கொள்ள வேண்டுமோ, அந்த அளவிற்குத்தான் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அழகிரிதானே? கருணாநிதியின் மகன்தானே என்று நினைத்து நுனிக் கரும்பைக் கடித்தால், நுனிக் கரும்பிலே இருக்கின்ற தழை நாக்கைக் கிழிக்கும், கரிக்கும், உப்புக்கரிக்கும், சுவைக்காது. ஆகவே, எல்லா குணங்களைத் தன்னகத்திலே கொண்ட மகன்தான் என்னுடைய அருமை மகன் அழகிரி. நிமிர்ந்த நெஞ்சு, நேர்கொண்ட பார்வை கொண்ட வராக விளங்கிட அழகிரி என பெயர் சூட்டினேன்.
அவரை `அஞ்சா நெஞ்சன்' என்று இங்கே பலரும் அழைக்கும்போது, நான் பின்பற்றிய சுயமரியாதை இயக்கத் தலைவர் பட்டுக்கோட்டை அழகிரியின் பெயரை அழகிரிக்கு வைத்ததற்குக் காரணமே, அவரைப் போல நிமிர்ந்த நெஞ்சம், நேர்கொண்ட பார்வையும் உள்ளவராக என்னுடைய மகன் விளங்கவேண்டும் என்பதற்காகத்தான். அன்றைக்கு அந்தப் பெயரை அழகிரிக்கு இட்டேன். சில பேர் கேட்பார்கள். ஏன் அழகிரி என்று பெயர் வைத்தீர்கள்? ஏன் முத்து என்று பெயரிட்டீர்கள்? ஏன் ஸ்டாலின் என்று பெயரிட்டீர்கள் என்றெல்லாம் என்னுடைய வீட்டுச் செல்வங்களின் பெயர்களைக் குறிப்பிட்டுக் கேட்கும் போது, நான் அவர்களுக்கு பதில் அளித்திருக்கின்றேன்.
`முத்து வேலர்' என்பது என் தந்தையின் பெயர். அவருடைய பெயரை என்னுடைய மூத்த மகனுக்கு இட்டேன். `அழகிரி' என்னுடைய இயக்கத்தின் தலைவர் அழகிரிசாமியின் பெயர். `ஸ்டாலின்' ரஷ்ய நாட்டினுடைய பொதுவுடைமைத் தத்துவத்தை பாரெங்கும் பரப்ப, தோள் உயர்த்தி நின்ற ரஷ்ய நாட்டுத் தலைவர். ஸ்டாலின் மறைந்த போது பிறந்தவன் இந்தப்பிள்ளை. ஆகவே, `ஸ்டாலின்' என்று பெயர் வைத்தேன்.
ஏராளமான பேரப் பிள்ளைகள்
அதற்குப் பிறகு பிறந்தவர்கள் `தமிழ்' என்றும், `செல்வி' என்றும், `கனிமொழி' என்றும் பெயர் பெற்றிருக்கிறார்கள் என்றால், அவர்கள் எல்லாம் தமிழ் மொழியின் அந்தச் சொல்லைப் பெயராகத் தாங்கியவர்கள். தமிழ் மொழியின்பால் எனக்கிருந்த பற்று, பாசம் - இன்னும் இன்னும் எனக்கு இருக்கின்ற பற்று, பாசம் இவைகளினால்தான் அந்தப் பெயர்களை வைத்தேன்.
இன்று நம்முடைய `சூப்பர் ஸ்டார்' தம்பி ரஜினிகாந்த் அவர்கள் எடுத்துக் காட்டியதைப் போல், ஏராளமான பேரப் பிள்ளைகள் எனக்கு இருக்கின்றார்கள். பேரப் பிள்ளைகள் மாத்திரம் அல்ல, சுயமரியாதை இயக்கத்தின் வீரப்பிள்ளை களாகவும், அவர்கள் இன்றைக்கு இருக்கிறார்கள் என்பதிலே எனக்குத் தனி மகிழ்ச்சி, தனி இன்பம்.
ஒரு குடும்பத்தில் தந்தை, தாய் இவர்களின் சுயமரியாதை உணர்வு உள்ளவர்களாக இருந்து, அவர்களின் வழித்தோன்றல்களாக இருக்கின்ற மகனோ, மகளோ அல்லது பேரன், பேத்தியோ, இவர்களெல்லாம் அந்தக் கொள்கைக்கு விரோத மாக நடந்து கொள்பவர்களாக இருந்தால், அந்தக் குடும்பம் சிறப்புடையதாக எந்த இலட்சியத்திற்காக பாடுபட வேண்டுமென்று தொடங்கப்பட்டதோ, அந்த உணர்வு அது பட்டுப் போனதாக ஆகிவிடும்.
`தெள்ளிய ஆலின் சிறுபழத்தொருவிதை
தெண்ணீர் கயத்து சிறுமீன் சினையிலும்
நுண்ணிதே ஆயினும்
அண்ணல் யானை
அணிதேர்ப் புரவி - ஆட்பெரும்படையோடு
மன்னர்க்கு இருக்க நிழலாகும்மே'
என்ற தமிழ்ப் பாடலுக்கொப்ப, `தெள்ளிய ஆலின் சிறு பழத்தொரு விதை' ஆலமரத்தினுடைய மிகச்சிறிய விதை.
சிறியதாக இருந்தாலும்....
சிறிய மீனின் சினையை விட சிறியதாக இருந்தாலும்கூட, அது மன்னர்க்கு இருக்கிற படைக்கு நிழல் தரக்கூடிய அளவிற்கு ஆலமரமாக விரிந்து பரந்து வளர்ந்திடும். அந்தக் காட்சியை அந்தப் பாடல் மூலமாக நான் மனக்கண் முன்னால் கொண்டுவந்து, நேற்றிரவு இங்கே நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் என்னுடைய மகன்கள், என்னுடைய பேரப்பிள்ளைகள், பேரப் பிள்ளை களுடைய குழந்தைகள், பேத்திகள், சின்னப் பேத்திகள், குட்டிப் பேத்திகள் இவ்வளவு பேரன் பேத்திகளை எல்லாம் காணக்கூடிய ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது என்றால், உள்ளபடியே இங்கே உரையாற்றிய ஒரு நண்பர், எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்று குறிப்பிட்டதைப்போல, எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும், கடவுளுக்கு என்னிடத்திலே நம்பிக்கை உண்டு.
பெரியார் வழி
கடவுளுக்கு எங்களைப் போன்றவர்களிடத்திலே நம்பிக்கை உண்டு என்பதால்தான், என்னுடைய வாழ்க்கையிலே நான் பெற்றிருக்கின்ற இன்பமோ, துன்பமோ கடவுள் அல்ல, சாஸ்திரங்கள் அல்ல, சம்பிரதாயங்கள் அல்ல. இவை எல்லாவற்றையும் நிர்ணயிப்பதும், என்னை வழிநடத்திச் செல்வதும், நான் ஒருவன் கிடையாது. பெரியாருடைய வழியில் நான் நடந்தாலும், பேரறிஞர் அண்ணாவினுடைய அறிவுரைகளை நான் ஏற்று நடந்தாலும், எனக்குப் பக்கபலமாக இங்கே இருப்பது அழகிரி மாத்திரமல்ல. ஸ்டாலின் மாத்திரமல்ல. என்னுடைய கழகத் தோழர்கள் மாத்திரமல்ல. என் அருகிலே இருக்கின்ற பேராசிரியர் மாத்திரமல்ல. எனக்குப் பக்கபலமாக என்னுடைய சேனையாக, நான் வழிநடத்திச்செல்கின்ற பட்டாளமாக இருப்பது தான். இதோ மதுரை மாநகரத்திலே, இந்தத் திடலிலே, இந்தப் பந்தலில் நான் பார்க்கின்ற என் உயிரினும் மேலான உடன்பிறப்புக்களாகிய நீங்கள் (பலத்த கைதட்டல்).
கூட்டணியின் பிணைப்பை உறுதி செய்யும் விழா
நம் கூட்டணியின் பிணைப்பை, உறுதியை நிலைநாட்டிக் காட்டும் விழா. எனவே, உங்களுடைய வாழ்த்துக்களையெல்லாம், தமிழகத் திலேயுள்ள பெரியவர்கள், சான்றோர்கள், கலை ஞர்கள் அனைவரும் தந்த வாழ்த்து என்ற அளவிலே அவைகளையெல்லாம் நான் ஏற்றுக் கொள்கிறேன்.
நம்முடைய கூட்டணியின் முக்கியத் தலைவர்களில் இருவர் இங்கே வந்திருக்கிறார்கள். பிரணாப் முகர்ஜி, அருமை நண்பர் சிதம்பரம் முன்னிலையில் நாம் நம்முடைய இயக்கத்தின் ஒற்றுமையை, நம்முடைய கூட்டணியின் பிணைப்பை, கூட்டணியின் உறுதியை நிலை நாட்டிக் காட்டுகின்ற வகையிலே இன்றைக்கு இந்தத் திருமண விழாவிலும், இது மணவிழா என்றாலும்கூட, இதன்மூலம் நம்முடைய அரசியல் எண்ணங்களை இந்த மணவிழா மூலமாக வெளிப்படுத்தியிருக்கின்றோம்.
அதற்கு காரணகர்த்தாக்களாக விளங்குகின்ற மதுரை மாநகர மக்களை, மதுரையிலே உள்ள கழகத் தோழர்களை, கழக உடன்பிறப்புகளை, எல்லாக் கட்சியினுடைய தொண்டர்களை, அழகிரியின்பால் அன்புகொண்ட உள்ளங்களை, என்பால் பாசமும், பரிவும் கொண்ட உள்ளங்களை, நான் வாழ்த்தி, இந்த மணவிழாவிற்கு நேற்றும், இன்றும், வருகை தந்து மணமக்களை வாழ்த்தி அருளிய அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை, அவர்களுடைய காலடிகளிலே காணிக் கையாக்கி, என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் கலைஞர் பேசினார்.
பேராசிரியர் அன்பழகன்
நிதி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் தலைமை தாங்கி பேசியதாவது:-
`கலைஞர் இல்ல திருமணம் நாடு கொண்டாடுகின்ற திருமணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மதுரை மாநகரமே ஒன்று கூடி நடத்துகின்ற இந்த திருமணம், தென் மண்டல செயலாளர் மு.க.அழகிரி மகன் திருமணம் கலைஞர் இல்லத் திருமணம், கழக இல்லத் திருமணம், லட்சிய இல்லத் திருமணம். இந்த திருமணத்தை பாட்டனார், அரசியல் வாழ்வில் மூத்தவர், கலைஞர் அவர்கள் நடத்திக் கொடுப்பார்கள்.'
இவ்வாறு அன்பழகன் பேசினார்.
No comments:
Post a Comment