சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு நிலங்களை குத்தகைக்கு வழங்கியதில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 08.11.2010 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
திருவான்மியூர் மற்றும் கொட்டிவாக்கம் பகுதிகளில் 2006ம் ஆண்டு அக்டோபரில் 49.19 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக ஒதுக்கியதில், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இது குறித்து சட்டப் பேரவையில் மே 11ம்தேதி விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கணக்கு மற்றும் தணிக்கைத் துறை சுட்டிக்காட்டியுள்ள தணிக்கைக் குறிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டவையோ, இறுதியானவையோ அல்ல. அவற்றிற்கு தமிழக அரசின் சார்பில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டு, அது அத்துறையின் பரிசீலனையில் உள்ளது.
டி.எல்.எப். நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்ட 26.64 ஏக்கர் நிலம் கொட்டிவாக்கம், திருவான்மியூர் பகுதிகளில் உள்ளன. இவற்றின் வழிகாட்டி மதிப்பு சதுர அடிக்கு 3 ஆயிரம் ரூபாய். ஆகவே, அந்தப் பகுதிக்கு நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பீட்டின் அடிப்படையிலேயே டிட்கோ நிறுவனத்தால் ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. 23 நிறுவனங்களில் 12 நிறுவனங்கள் முன்வந்தன.
அதில் 4 நிறுவனங்கள் இறுதியாக விலைப்புள்ளிகளைச் சமர்ப்பித்தன. சதுர அடி ஒன்றுக்கு 5757 ரூபாய் வழங்க முன்வந்த டி.எல்.எப். நிறுவனம், சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்கு டிட்கோ நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாகச் செயல்பட அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இத்தேர்வு முற்றிலும் முறையாக நடைபெற்றது. டி.எல்.எப். மற்றும் டாட்டா ரியாலிட்டி நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு வழங்கப்பட்ட நிலங்கள் 1.5 கி.மீ. இடைவெளியில், வெவ்வேறு பகுதிகளில் அமைந்துள்ளன. இதில் டாட்டா ரியாலிட்டி நிறுவனத்திற்கு குத்தகைக்குக் கொடுக்கப்பட்ட நிலமானது, ராஜீவ் காந்தி சாலையில் 138 மீட்டர் சாலை முகப்புடன், செவ்வக வடிவில் அமைந்துள்ள பகுதியாகும். டி.எல்.எப். நிறுவனத்திற்குக் குத்தகைக்குக் கொடுக்கப்பட்ட நிலமானது, ராஜீவ் காந்தி சாலையிலிருந்து 500 மீட்டர் தொலைவில், தரமணி சாலையில், 18 மீட்டர் சாலை முகப்புடன், இரண்டு பிரிவுகளாக ஒழுங்கற்ற வடிவில் அமைந்துள்ளது. இந்நிலத்தின் மேற்பரப்பில் பறக்கும் ரயில் பாதை செல்கிறது. எனவே, இரண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களின் மதிப்பை சமமாகக் கருத இயலாது.
1975ம் ஆண்டைய அரசாணையின்படி, 10 ஆண்டுகளுக்கு மேல் நல்ல முறையில் செயல்பட்டுவரும் தொழில் நிறுவனங்களுக்கு, நில ஒப்படை செய்யும்போது, இரண்டு மடங்கு சந்தை மதிப்பு வசூலிக்கப்பட வேண்டும்; ஏனைய தொழில் நிறுவனங்களுக்கு ஒரு மடங்கு சந்தை மதிப்பு மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், டி.எல்.எப். நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிலம் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டதே தவிர; ஒப்படை செய்யப்படவில்லை. ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளி மூலம் குத்தகைக்கு விடப்படும் நிலத்திற்கு இரு மடங்கு சந்தை மதிப்பு வசூலிக்கப்பட வேண்டும் என்ற கருத்து பொருந்தாது. எனவே, இதில் எவ்வித முறைகேடும், விதிமீறலும் இல்லை. இவ்வாறுமு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்
No comments:
Post a Comment