2ஜி ஸ்பெக்ட்ரம் என்ற போர்வையில் பார்ப்பன - முதலாளித்துவ சக்திகள் கூட்டு சேர்ந்து தி.மு.க. ஆட்சியை ஒழித்திட முனைந்துள்ளதன் முகத்திரையைக் கிழித்துக் காட்டி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
அய்ந்தாம் முறை தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி, தமிழ்நாட்டின் அசோகரான தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் தலைமையில், இந்தியாவே கண்டு வியக்கத்தக்க வகையில் நடைபெற்று பீடுநடை போடுகிறது.
சொன்னதையெல்லாம் செய்து முடித்த ஆட்சி என்ற பெருமையோடு, சொல்லாததையும் செய்து - 108 கலைஞர் உயிர் காக்கும் திட்டம், குடிசைகளற்ற தமிழகம் என்ற இலக்குடன் இயங்கும் கலைஞர் வீட்டுவசதித் திட்டம் போன்றவைகளால் மற்ற கட்சிகளால் எட்ட முடியாத சரித்திர சாதனையின் சிகரத்திற்கே சென்று பெருமை கொண்டுள்ளது தி.மு.க. ஆட்சி!
மத்தியில் அய்.மு. கூட்டணியில் தனது பங்கை சிறப் புடனும், சுருதி பேதமின்றியும், கூட்டணித் தலைமையுடன் சுமுக உறவு கொண்டு, முன்பு அவர்கள் தமிழ்நாட்டில் தவ றான கூட்டணியில் சிக்கி அனுபவித்த தலைவலி எதுவும் இன்றி ஒருங்கிணைந்த முன்னேற்றத்தை ஏற்படுத்தும் ஆட்சியாக தி.மு.க. ஆட்சி நடைபெறுவது உலகறிந்த ஒன்று.
இதைக்கண்டு பொறுக்காத பார்ப்பனர்கள், விபீட ணர்கள், பதவி இழந்த விரக்தியாளர்கள், நாள்தோறும் தி.மு.க. ஆட்சியின் ஒளி மேலும் தகத்தகாய ஒளியாவது கண்டு ஓடி ஒளியும் நிலை ஏற்பட்டுள்ளது. வீழ்த்த சதிவலை பின்னுகிறார்கள்.
கற்பனை அனுமானம்
இந்நிலையில், திடீரென்று அவர்களுக்கு ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை (CAG அறிக்கை) - 2 ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினை கிடைத்துவிட்டதை ஏதோ ஒரு புதையல் கிடைத்ததைப்போல எண்ணி, இதைப் பெரிதாக ஊதி ஊதி, மயிரைச் சுட்டுக் கரியாக்கக் கனவு கண்டு வருகின்றனர்!
2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினை - இழப்பு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்றெல்லாம் கூறுகின்றனரே - என்ன நடந்துவிட்டது? அத்தொகையை யாராவது எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்களா?
இப்படி.... செய்ததற்குப் பதில், இப்படி ஏலம் விட்டிருந்தால், அப்படிச் செய்திருந்தால், இந்தப்படி முறை மாறியிருந்தால் இவ்வருமானம் வந்திருக்குமே என்ற கற்பனை அனுமானத்தின் மீது கணக்குப் போட்டு, கூறப்பட்ட ஒரு தகவல் அறிக்கையே தவிர, அது ஒன்றும் ஆராய்ந்து நீதிமன்றத்தாலோ, வேறு விசாரணை அமைப்புகளாலோ நிறுவப்பட்ட உண்மை அல்ல. தீர்ப்பு அல்ல!
தி.மு.க. மீது - அதன் திறமைமிகு அமைச்சர்களில் ஒருவரான ஆ.இராசாமீது சேற்றை வாரி இறைத்து, குற்றமற்ற அவரை வெளியேறச் செய்து, அதன்மூலம் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை முறித்து, பார்ப்பன ஜெயலலிதாவுக்கு வரும் தேர்தலில் புனர்வாழ்வு தந்து - ஊழல் வழக்குகளிலிருந்து கரையேற்றவேண்டும் என்பது பார்ப்பன ஊடகங்களின் பேராசை பதவிக் காய்ச்சல்! (பன்றிக் காய்ச்சலைவிட கொடுமையான பதவிக் காய்ச்சலுக்கு ஆளான பலர் - விபீடணர்களும் சேர்ந்து இன்று தலை துள்ளி குதிக்கின்றனர்).
பா.ஜ.க.வின் உள்கட்சிச் சண்டை!
கலகலத்துவரும் கட்சி - உள்கட்சி சண்டையில் நாளும் உளுத்துவரும் பா.ஜ.க., எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று தெரியாமல் எதை எதையோ நாளும் செய்து வருகின்றது.
நாடாளுமன்றம் மக்களின் பிரதிநிதிச் சபை - ஜன நாயகத்தின் பாசறை - அங்குதான் எந்தப் பிரச்சினையும் விவாதித்துத் தீர்வு காணுவது மக்களாட்சியின் மாண்பு.
அதை கடந்த 9 நாள்களாக நடத்தவிடாமல் முடக் கிடும், சண்டித்தனம் - சந்தைக் கூச்சல் போடுவது - கலைவது என்று - வாக்களித்தோர் வெட்கப்படும் நிலையில், கண்ட உருப்படி பலன் என்ன?
யாரோ அரசியல் தரகர் போன்ற ஒருவர் ஒரு கடிதம் எழுதி ஒரு பொறுப்பு வாய்ந்த அமைச்சரை பிராசிகியூட் செய்ய அனுமதி கேட்டால், உடனே அடுத்த தபாலில் பிரதமர் எக்ஸ்பிரஸ் பதில் எழுதி அனுப்பி விடுவாரா? ஏன் காலதாமதம் என்று கேட்பதே சரியான கேள்வியா? நியாயமானதா?
இதன்மூலம் ஒரு சில ஆதிக்க சக்திகள் பிரதமரையும், அவரது நேர்மை, நாணயம்பற்றி கறைபடுத்துவதற்கு முயற்சித்து மூக்கறுபட்டுள்ளனர்.
மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் அட்டர்னி ஜெனரல் - வாகனாவதி இப்படி ஒரு கடிதம் பிரதமருக்கு சு.சாமி எழுதியதே தவறு என்று ஓங்கி அடித்துவிட்டார் நீதிபதிகள் முன்பு - பிறகு பிரதமர்பற்றி பிரச்சினையே இதில் அடிபட்டுவிடவில்லையா?
உண்மைகள் நிச்சயம் வெளிச்சத்திற்கு மெல்ல வந்து கொண்டுள்ளன.
பார்ப்பன சக்திகள்- முதலாளிகளின் கூட்டணி!
இதற்காகவே சில ஊடகங்கள், பார்ப்பன ஆதிக்கச் சக்திகள், ஏகபோகத்தை இழந்த முதலாளிகள், கூட்டணி சேர்ந்து தங்களிடம் உள்ள சில நாளேடுகள், வார ஏடுகள், தொலைக்காட்சி ஊடகங்களை பிரச்சார கருவிகளாக்கி தி.மு.க. அமைச்சர் ஆ.இராசாமீது வேட்டையாடி நாளும் கடித்துக் குதறி வருகின்றன!
அவரது ராஜினாமா பெற்றுவிட்ட பின்பு, நாடாளுமன் றத்திற்கு வந்து விவாதங்களில் கலந்து, தங்களிடம் உள்ள ஊழல் களஞ்சியங்களையெல்லாம் அவிழ்த்துக் கொட்டி விவாதிக்க வேண்டியதற்குப் பதிலாக, 8 நாள்களாக ஏன் விவாதம் நடத்த முன்வர பயப்படுகின்றனர்? சரக்கு இல்லை அவர்களிடம்.
நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் இதுவரை ஏற்பட்ட பலன் என்ன?
பா.ஜ.க.வின் மூத்த தலைவர் முரளிமனோகர் ஜோஷி தலைமையில் உள்ள பொதுக்கணக்குக் குழு (PAC) விசாரணை என்பதையேகூட ஏற்க மறுத்து - இல்லாத ஊருக்குப் போகாத பாதையைக் காட்டுகின்றனர்!
J.P.C. (Joint Parliamentary Commitee) விசாரணை ஏற்கெனவே நடைபெற்றதே - அதனால் ஏற்பட்ட பலன் என்ன?
1. போஃபர்ஸ் பீரங்கி வாங்கிய ஊழல் - 1987 ஆம் ஆண்டு
2. பங்குச் சந்தை ஊழல் - அர்ஷத் மேத்தா 1992
(ரூ.1000 கோடி ஊழல் - அனுமானம் அல்ல, நடந்தது)
3. பங்குச் சந்தை தரகர் கேதன் பராக் 1999 முதல் 2001 வரை
4. பூச்சி மருந்து கோக்கோகோலா ஊழல் - 2004
(ஜே.பி.சி. - விசாரணையால் எந்தத் தீர்வாவது கிடைத்ததா?)
இவை எல்லாம் நடந்தவை.
2ஜி ஸ்பெக்ட்ரம் என்பது ஊழலே அல்ல; அனுமான கற்பனை. இப்படி செய்திருந்தால், அப்படிக் கிடைத்திருக் குமே என்ற ஒரு புள்ளி விவரக் கணக்கு. இதனை வைத்துப் பாமரர்களை ஏமாற்ற ஒரு லட்சம் 76 ஆயிரம் கோடி ரூபாய் உலகிலேயே உண்டா என்ற முதலைக் கண் ணீர் வெள்ளம் என்று ஏமாற, மக்கள் எல்லாம் முட்டாள் களா? ஏமாளிகளா? பாமரர்கள் சரியாக இருக்கின்றனர் - படித்த தற்குறிகள்தான் குழப்பமடைந்துள்ளனர்.
தி.மு.க. மீண்டும் ஆறாவது முறையாக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கான மனுவாதிகளின் மகத்தான சதித் திட்டமே இது!
பிரச்சாரப் படை திரளட்டும்!
இதனை மக்களிடம் தி.மு.க. உடனடியாகத் தெரு முனைப் பிரச்சாரம் தொடங்கி, சிற்றூர்கள், பேரூர்கள் வரை தி.மு.க. பிரச்சாரகர்களை விட்டு தீவிரமான பிரச்சாரத்தை உடனடியாக முடுக்கிவிடவேண்டும்; அதன்மூலம் அதன்மீது தூற்றப்படும் பழி - மலைபோல் வந்தாலும், பனிபோல் கரைய கால தாமதமின்றி உடனடியாக - முன்பு நீதிபதி ஜெயின் கமிஷன் தி.மு.க.மீது பழிபோட்டதை எதிர்த்து உண்மை விளக்கங்களை, கூட்டங்களை நாடு தழுவிய அளவில் நடத்தியதுபோல், தனது பிரச்சார யந்திரத்தை உடனடியாக முடுக்கிவிட வேண்டும் என்பது நமது அன்பான, உரிமையுடன் கூடிய வேண்டுகோளாகும்.
இது நமது கருத்து மட்டும் அல்ல; தி.மு.க. ஆட்சியினர், நலம் விரும்பிகள், நடுநிலையாளர்களின் கருத்தும்கூட - பலர் நம்மிடம் தெரிவித்த கருத்தும்கூட!
எதிர்ப்புகள் தி.மு.க.வுக்குப் புதியனவா?
தி.மு.க. வரலாற்றில் எத்தனையோ இடர்ப்பாடுகளைக் கண்டிருக்கிறது!
தி.மு.க.வைப் பிளந்து கட்சியை ஒழிக்க நினைத்தது உள்பட எத்தனையோ சோதனைகள் வந்தன!
அவற்றை படிகட்டுகளாக்கி, சாதனைகளாக்கும் ஆற்றல் ஒப்பற்ற அதன் தலைவர் மானமிகு கலைஞர் அவர்களுக்கு உண்டு!
எனவே, கூட்டங்கள் நடத்தி, மக்களுக்கு இதனை எடுத்துச் சொல்லவேண்டும்!
நாடாளுமன்றத்தினை திட்டமிட்டே 8 நாள்கள் புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு விவாதிக்க போதிய சரக்கு இல்லை.
பதிலடி தருவதற்கு ஆளுங்கூட்டணி தயாராக இருக்கையில், அங்கே வரத் தயங்குவது ஏன்? மக்களிடம் சொல்லுவோம்.
இதுதான் ஜனநாயகக் கடமையா? அமைச்சர் ஆ.இராசா பெயர் எந்தக் குற்றப் பத்திரிகையிலாவது இருக்கிறதா? இருந்ததா? இருந்தும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அண்ணாவின் வழியிலும், பிரதமருக் குத் தர்மசங்கடத்தை உருவாக்கவேண்டாம் என்பதற் காகவே, செய்யாத குற்றத்திற்கு ஜென்மதண்டனையை அமைச்சர் இராசா ஏற்று, தி.மு.க. தனது கூட்டணி தர்மத் தைக் காத்தது என்பது மக்களுக்கு விளக்கப்படவேண்டும்.
வெறும் ஊடகங்களால் ஆட்சிக்கு வந்த கட்சி அல்ல தி.மு.க. - ஊர்மக்கள் ஆதரவால் வந்த இயக்கம்; வளர்ந்துவரும் மக்கள் இயக்கம் என்பதைக் கோடிட்டுக் காட்டவேண்டும்.
தி.மு.க. பயந்துவிட்டது என்று சில உளறுவாயர்கள் கூறுவதை - ஆப்பு அடித்து - நெருக்கடியை எதிர்த்து நின்ற இயக்கம் அது! பயமா? அதன் அகராதியிலா?
1971 மீண்டும் திரும்பும்!
2011 - மனுதர்மத்திற்கு மறு பிறவி அல்ல; 1971- வெற்றி வாகையை மீண்டும் சூடும் வீர வரலாற்றின் தொடர்ச்சி என்று காட்டவேண்டும் என்று மிகுந்த அன்புடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்! சிந்திப்பார்களாக!
தலைவர்,
திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment