மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அரசு நேற்று (25.11.2010) வெளியிட்ட அறிக்கை:
மழையினால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் கோட்டையில் நேற்று (25.11.2010) நடந்தது. மழையால் நெல்லை மாவட்டம் பாபநாசம், மணிமுத்தாறு மற்றும் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைகள் தவிர, தமிழகத்தில் உள்ள எல்லா அணைகள், குளங்கள், ஏரிகள் பெருமளவுக்கு நிரம்பியுள்ளன. இதுவரை மதுரை, தர்மபுரி, கடலூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. நீர் வடிந்த பிறகு பயிர்ச்சேதம் குறித்து மதிப்பீடு செய்து, உரிய நிவாரணம் வழங்கலாம் என்று மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
548 குடிசைகள் முழுமையாகவும், 1438 குடிசைகள் பகுதியாகவும் மொத்தம் 1,986 குடிசைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டுள்ள குடிசைவாசிகளுக்கும், மழையின் காரணமாக உயிரிழந்த 179 கால்நடைகளுக்கும் உரிய நிவாரண நிதியை மாவட்ட கலெக்டர் கள் வழங்கி வருகிறார்கள்.
40 ஆண்கள், 27 பெண்கள், 21 குழந்தைகள் என மொத்தம் 88 பேர் மழையின் காரணமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்ச ரூபாயும், முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாயும் என ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கிட முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.
மழையினால் பாதிப்புக்குள்ளான சாலைகள், பாலங்களை பொறுத்தவரை, தற்காலிக சீரமைப்பு பணிகள் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த சாலைகளை நிரந்தரமாக சீரமைப்பதற்கு தேவையான மதிப்பீடுகள் தயாரித்திட அறிவுறுத்தப்பட்டு, விரைவில் பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்கும் முதல்வர் உத்தரவிட்டார்.
தலைமை செயலாளர் மாலதி, நிதித்துறை முதன்மை செயலாளர் சண்முகம், வருவாய் துறை செயலாளர் தனவேல், பொதுப்பணி துறை முதன்மை செயலாளர் ராமசுந்தரம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் அசோக்வர்தன் ஷெட்டி, வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ராமமோகனராவ், வேளாண்மை துறை ஆணையர் கோசலராமன் மற்றும் நெடுஞ்சாலை துறை முதன்மை பொறியாளர் ஹரிராஜ் உட்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment